வெள்ளி, 17 நவம்பர், 2017

மாலை சூடும் மணநாள்:திருமணத்தடை நீக்கும் கோயில்களின் தொகுப்பு



மாலை சூடும் மணநாள்:திருமணத்தடை நீக்கும் கோயில்களின் தொகுப்பு
           

திருமணம் - அது இளமையின் ஏக்கத் தீர்வு மட்டுமல்ல... எதிர்காலத் தனிமையை, ஆதரவின்மையைத் தவிர்க்க மேற்கொள்ளும் பந்தமும்கூட. எங்கோ பிறந்து, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த இரண்டு பேரை காலம் பிணைத்து வைக்கும் வித்தை. அந்த மண வாழ்க்கை கைகூடுவதற்குள்தான் எத்தனை பிரச்னைகள் ?

காதல் திருமணம் என்றால் மனம் திறப்பதில் தவிப்பு. பெற்றோர் ஆசி கிடைக்கும்வரை போராட்டம்.

பெரியவர்கள் பேசி முடிக்கும் திருமணங்களில் வேறுவித சிக்கல்கள். ஜாதகப் பொருத்தம், அந்தஸ்து, மனப் பொருத்தம், விசாரிப்புகள்... என தடைக்கற்கள் நிறைய!

ஆனால், கடவுள் அருள் இருந்தால் எந்தத் திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது போலவே நடக்கும். அப்படி அருளும் ஆன்மிகத் தலம் *திருமணஞ்சேரி.*

Ⓜ *மணநாள் வாராதோ ?*Ⓜ

கைநிறைய சம்பாதிக்கிறான், லட்சணமாகவும் இருக்கிறான். இவனுக்கு ஒரு பெண் அமையவில்லையே, எங்கே பிறந்திருக்கிறாளோ என்று பிள்ளை வீட்டார் கலங்குவது ஒரு பக்கம்.

கண்ணுக்கு அழகாய் இருக்கிறாள்; நல்ல படிப்பு, நல்ல குணம், அடக்கமான பெண், இத்தனை இருந்தும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையே, எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டுமோ என்று பெண்வீட்டார் கலங்குவது இன்னொரு பக்கம்.

உரிய காலத்தில் மணவாழ்க்கை அமைந்திடாவிட்டால், குடும்பத்தில் அமைதி ஏது?

இவர்கள் குறை தீர்த்திடவே, இறைவன் திருமண வரம் அளிக்கும் எம்பெருமானாக, மணக்கோல நாதராக, அவர் தம் தேவியுடன் திருமணஞ்சேரியில் எழுந்தருளி இருக்கிறார்.

🅱 *கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரர்:*🅱

திருமணஞ்சேரி திருக்கோயிலுக்குள் நுழையும்போதே, ஓர் இனிய உணர்வு மேனியெங்கும் பரவுகிறது. கோயிலுக்குள் நுழைந்த உணர்வே இல்லை. உறவினர் அல்லது நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளப்போகும் பரவசம்தான் மனதைச் சூழ்கிறது. கோயிலிலும் கல்யாணக்களை !

யாருக்கு கல்யாணம் நடக்கிறது அங்கே... இறைவனுக்கா? இல்லை, பல ஜோடி பக்தர்களுக்கு!

இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்தக் கோயில் நாயகரைத் தரிசிப்போமா?

*காண்போரைக் கட்டிப் போடும் கவினோடு விளங்குகிறார் மூலவர். இவர் மணக்கோலநாதர். வடமொழியில், உத்வாகநாதர். திருமண நம்பிக்கை தரும் பேரொளி அவர்.*

*பக்கத்திலேயே இறைவி ‘கோகிலாம்பிகை’. பதினாறு வயதுப் பருவக் குமரியாக, அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.* அம்பிகையின் தரிசனம், நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

Ⓜ *ஐயனும் அம்பிகையும் இங்கே வந்தது எப்படி ?*Ⓜ

ஒரு முறை சிவபெருமான் உமையவளோடு ஊடல் கொள்கிறார். தன்னை அலட்சியப்படுத்திய அம்பிகையை பசுவாகப் பிறக்குமாறு சாபமிடுகிறார். ஆனாலும், பிரிவு வேதனை அவருக்கு மனவருத்தம் தந்தது. அதே சமயம், அன்னைக்கு சாபவிமோசனம், அவளுடைய சகோதரனாலேயே கிடைக்கும் என்று ஆறுதலும் அளித்தார். ஆனால், அந்த சாபம் அன்னையைப் பல இடங்களுக்கு அலைக்கழித்தது.

தேரெழுந்தூரில் சாபம் பெற்ற உமையவள், காட்டில் அலைந்து திரிந்து, கோமல் என்ற தலத்தை அடைந்தாள். அங்கே திருமால், மாடு மேய்ப்பவனாக வந்து, தன் பசுக்களோடு அவளைப் பாதுகாத்தார். திருக்கோழம்பத்தில் அந்த பசுவின் வருடலை ஏற்றார் திருமால். பிறகு, திருவாவடுதுறையில் அந்தப் பசுவிற்கு சாப விமோசனம் அளித்தார்.

குத்தாலம் என்ற திருத்தலத்தில், பசு உருவம் நீங்கி, பரத மகரிஷியின் வேள்வியில், மீண்டும் உமையம்மையாக தோன்றுகிறாள் அம்பிகை. அதையடுத்து, திருவேள்விக்குடியில் கங்கணதாரணம் செய்து கொண்டு, குறுமுலைப்பாடி மற்றும் எதிர்கொள்பாடி வழியே சென்றபோது, மணக்கோல நாதராக அவளை இறைவன் எதிர்கொண்டார். திருமணஞ்சேரியில் அவளை மணஞ் செய்து கொண்டு, கல்யாணசுந்தரராக அருள்பாலிக்கிறார் இறைவன். அம்பிகை இந்தத் தலத்தில் கோகிலாம்பிகையாக அருளாட்சி புரிகிறாள்.

எம்பெருமானின் திருமண வைபவத்தைக் காண ஏழு கடல்களும் மாலையாக மாறி வந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இந்த கடல்மாலைகள், கோயிலைச் சுற்றி இப்போது அகழியாகக் காட்சியளிக்கின்றன.

திருமணம் கூட்டுவிப்பது மட்டுமல்ல, மனவேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரையும் மனம்திருந்தி, இணைந்து வாழச் செய்யும் அற்புதத் தலம் இது.

🅱 *மகாதேவன் முன்னே மாலை மாற்றி...:*🅱

திருமணத் தடையால் மனவேதனை அடைந்தவர்கள், திருமணஞ்சேரியில் கல்யாணசுந்தரரை மனமுருகி வழிபட, உடனே திருமணம் நிச்சயமாகிவிடும் அதிசயம், ஆனந்தத்தைத் தருகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மனதிற்கிசைந்தபடி மணவாழ்க்கை அமைந்த தம்பதியர் மீண்டும் இங்கு வருகிறார்கள். திருமணம் கைகூடிய அவர்கள், கல்யாணசுந்தரர் முன்னிலையில் மீண்டும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

மனிதர்கள் சாட்சியாக நடந்த திருமணத்திற்கு, இப்போது தெய்வ சாட்சி. யாருடைய அருளால் அந்தத் திருமணம் கைகூடியதோ, அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு வழிதான் இது. இப்படி பல ஜோடிகள் தினமும் நன்றி செலுத்துவது கண்கொள்ளாக் காட்சி.

கல்யாணசுந்தரர் மணக்கோலத்தில், மண்டபத்தில் எழுந்தருளி இருக்கிறார். அருகே கோகிலாம்பிகை நாணத்தில் தலைகுனிந்தபடி நிற்கிறாள். அவளது வலக்கரம் பற்றியபடி அருள்பாலிக்கிறார் மாப்பிள்ளைச் சாமி!

*‘மணமாலை’* வேண்டி வழிபடுவோர் ஏக்கத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒரு வரிசையாக எதிரே அமர்ந்திருக்கிறார்கள். திருமணம் நடந்தேறியதற்காக நன்றி வழிபாடு நடத்தும் தம்பதிகள் நம்பிக்கையோடும் முகம்கொள்ளா மகிழ்ச்சியோடும் இன்னொரு வரிசையாகவும் அமர்ந்திருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த தம்பதிகளின் கண்களில்தான் எத்தனை குதூகலம்! இந்த பக்தர் வெள்ளத்தால் வெள்ளிக் கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமண மண்டபம் நிரம்பி வழிகிறது.

சரி, திருமணம் தெய்வ சங்கல்பத்துடன் இனிதே நடந்து முடிந்தது. ஆனால், இனிமையான மணவாழ்க்கை அமைந்தும்கூட, ராகு தோஷத்தால் பாதிப்புக்குள்ளானவர்களும் இருப்பார்களே... அவர்கள் தோஷம் நீங்கி, மன அமைதி பெறவும் இங்கு வழி இருக்கிறது.

அவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள், இங்கே உள்ள சப்த சாகர திருக்குளத்தில் நீராடி, திருக்கோயிலின் உள்ளே உள்ள மங்கள ராகுவிற்கு பாலபிஷேகம் செய்து, பால் பொங்கல் படைக்கிறார்கள். அந்த பிரசாதத்தை பக்தியுடன் உட்கொண்டால், சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Ⓜ *குறையொன்றும் இல்லை...*Ⓜ

வைசியர் குலத்தில் பிறந்த இரண்டு பெண்கள் இணைபிரியாத தோழிகள். தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கிடையே திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள உறுதி எடுக்கிறார்கள்.

ஒருத்தி அழகிய பெண்மகவைப் பெறுகிறாள். மற்றவளுக்கோ ஆமை வடிவத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. இருவரும் மண வயதை அடையும் நேரத்தில், அந்த ஆமை இளைஞனுக்கு பெண் தர மறுத்து விடுகிறாள் பெண்ணைப் பெற்றவள். என்றாலும், இந்த ஒப்பந்தத்தை அறிந்த இளம் பெண், தாயின் தடையையும் மீறி, ஆமை வடிவினனை மணக்க முன்வருகிறாள். அவன் மறுக்கிறான். அவள் அவனை அன்புடன் வற்புறுத்தி திருமணஞ்சேரி கூட்டி வருகிறாள். கல்யாண சுந்தரரை வேண்டுகிறாள். அவளுடைய உறுதியைக் கண்டு வியந்த இறைவன், அவனது ஆமை உருவம் போக்கி, இயல்பாக மாற்றுகிறார்.

ஆழ்ந்த பக்தியினால், இறைவனிடம் எதை யாசித்தாலும் பெறலாம் என்பதற்கு உதாரணம் இந்தக் கதை.

திருமணத்துக்குத் தடையாக உள்ள உடற்குறை நீங்கும் அல்லது அந்தக் குறையைப் பொருட்படுத்தாத வாழ்க்கைத் துணை அமையும் என்பதே இக்கதை சொல்லும் நீதி.

ஊடலால் பிரிந்திருந்த இறைவனுக்கும் தேவிக்குமே திருமணம் நடந்த ஊர் ஆதலால் திருமணஞ்சேரி என்ற பெயர் பெற்றது.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் குத்தாலத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. பயணித்தால் திருமணஞ்சேரியை அடையலாம்.

மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு. குத்தாலத்திலிருந்து ஆட்டோ, டாக்ஸி வசதிகள் நிறையவே உண்டு.

திருமணஞ்சேரியில் தங்கும் வசதிகள் இல்லை. மயிலாடுதுறையில் தங்கலாம். இத்தலத்தில் உணவு விடுதிகள் அவ்வளவாக இல்லை.

இங்கே கெட்டிமேள ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Ⓜ *திருமணத்தடை நீக்கும் மேலும் சில கோயில்கள்:*Ⓜ

திருமணஞ்சேரி மட்டும்தானா திருமணத்தடை நீக்கும் திருத்தலம் ? நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் இங்குதானா வர வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

தமிழகமெங்கும் இப்படி பல திருத்தலங்கள் உண்டு. அவற்றில் சில:

Ⓜ *திருப்பைஞ்ஞீலி:* Ⓜ

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வழியே 17 கி.மீ. பயணித்து இந்தத் தலத்தை அடையலாம். *‘ஞீலிவாழை’* என்ற தலமரமான ஒருவகை வாழைமரத்தடியில், சிறப்பு வழிபாடுகள் நடத்தி வேண்டிட திருமணம் கைகூடும். தலத்தின் *இறைவன் நீலகண்டேசுவரர். இறைவி விசாலாட்சி.*

🅱 *திருமழபாடி:*🅱

அரியலூர் அருகே உள்ள தலம். இங்கு நந்திதேவர் திருமணத்தை தரிசிப்போருக்கு திருமணம் முந்தி வரும் என்பது வாக்கு.

Ⓜ *அழகிய மணவாளன்:*Ⓜ

 திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள தலம். அழகிய மணவாளப் பெருமாள், திருமணத் தடை நீக்கி, சேவை சாதிக்கிறார்.

🅱 *திருவிடந்தை:*🅱

சென்னை - மாமல்லபுரம் சாலையில், கோவளம் அருகில் உள்ள தலம். பூமிதேவியை மடியில் அமர்த்தியவாறு, சேவை சாதிக்கிறார் நித்யகல்யாணப் பெருமாள். சக்தி வாய்ந்த திருமணத் தடை நீக்கத் தலம் இது.

Ⓜ *அரசர் கோயில்:*Ⓜ

சென்னை - திண்டிவனம் சாலையில், படாளம் கூட்டுரோடுக்கு கிழக்கே, 5 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கமல வரதராஜப்பெருமாள், சுந்தரவல்லித் தாயார் சந்நதிகள் திருமணத் தடைநீக்கத்திற்கு உகந்தவை.

🅱 *திருவீழிமிழலை:*🅱

கும்பகோணம் - நன்னிலம் சாலையில் உள்ள திருத்தலம். *கல்யாணசுந்தரர்* உற்சவத் திருமேனியும், கருவறையில் உள்ள அரசாணிக்காலும், வழிபட வேண்டியவை ஆகும்.

Ⓜ *கோனேரிராஜபுரம்:*Ⓜ

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் 18 கி.மீ. பயணித்து எஸ்.புதூர் வழியே இந்தத் தலத்தைச் சென்றடையலாம். கல்யாணசுந்தரர் சிறப்பு மூர்த்தி.

🅱 *பந்தநல்லூர்:*🅱

மயிலாடுதுறை - குத்தாலம் வழியில் வடமேற்கில் 10 கி.மீ. பயணித்து இந்தத் திருத்தலத்தை அடையலாம். இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கிட, திருமணம் கைகூடும்.

Ⓜ *திருமழிசை:*Ⓜ

பூந்தமல்லிக்கு அருகில் உள்ள திருத்தலம். மூலவர் கருவறையில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய வடிவில் இருக்கிறார்.

*திருவேள்விக்குடி, குத்தாலம், தாமிரபரணி ஆற்றின் கரையில் பாபநாசம், பஞ்ச கல்யாணித் தலங்களான அம்பை, கடையம், சிவசைலம், குமரி மாவட்டம்-அகத்தீசுவரம், விழுப்புரம் மாவட்டம்- ரிஷிவந்தியம் ஆகியவையும் திருமணத் தடையை நீக்கும் திருத்தலங்கள்..* ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக