வியாழன், 18 ஜனவரி, 2018

யார் இந்த விநாயகி?


யார் இந்த விநாயகி?

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன என்று விநாயகப் புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு யுகத்திலும், விநாயகர் பல வடிவங்கள் தாங்கி அருள்புரிந்திருக்கிறார்.

அந்த வகையில் தான் ஏற்ற பெண் வடிவத்தால் அவர் விநாயகி என்றே அழைக்கப்பட்டார். இந்த விநாயகிக்கு, வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன தமிழகத்திலும் சில கோயில்களில் கோயில் மண்டபத்தூண்களில், பெண் உருவில் காட்சி தரும் விநாயகரைக் காணலாம். பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி கஜானனி, ஜங்கினி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.

சமணர்களும், வைணவ சமயத்தினரும் இந்த விநாயகி திருவுருவத்தை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. நாகர் கோயில் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள தூண் ஒன்றில் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசிக்கலாம். யானைமுகமும், துதிக்கையும் கொண்ட ஒரு பெண் உருவம். அபயவரத முத்திரைக் காட்டும் முன்னிருகரங்கள். மழுவும், பாசமும் வைத்திருக்கும் பின்னிருகரங்கள் இடப்புறம் வளைந்த திருக்கோலத்தில் துதிக்கை, பின்கையில் பாசம் உள்ளது. தலையில் கிரீடம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் வலப்புறமுள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு மண்டபத்தூணில், விநாயகத்தாரணி எனப்படும் (பெண்) விநாயகியைக் காணலாம். இவரது பாதம் புலியின் கால்களைப் போல் இருக்கும். எனவே இவரை வியாக்ர பாத விநாயகி என்று கூறுவர். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள் இவர், யானை முகம் கொண்டு மார்பகங்களுடன் வளைந்து நெளிந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்குப் பாவாடை அணிவிப்பார்கள. இவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, வழிபட்டால் பெண்களுக்குத் திருமணத்தடை களத்திர தோஷம் மற்றும் பல பல தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலிலும் இத்தகைய பெண் வடிவில் அருள் புரியும் விநாயகி உள்ளார். இங்கு பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க வேண்டி பிரார்த்தனை செய்வர். விநாயகரின் இடது மடியில் சக்தி அமர்ந்திருக்கும் தோற்றத்தைத் தமிழகத்தில் சக்தி கணபதி என்று சொல்லப்படுகிறது. அதே போல் அவரது வலது இடது புறத்தில் அமர்ந்திருக்கும் தேவியர்களையும் தரிசிக்கலாம். இத்திருவுருவை சித்தி - புத்தி கணபதி என்று போற்றுவர். தமிழகத்தில் சில கோயில்களின் முகப்பில் சித்தி - புத்தியுடன் விநாயகர் சுதை வடிவில் இருப்பதைக் காணலாம். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலுக்கு நுழையும் பிரதான வாசலில், மாணிக்க விநாயகர் கோயில் முகப்பில் சித்தி- புத்தியுடன் கூடிய சுதை வடிவிலான திருஉருவைக் காணலாம்.

ராமேஸ்வரம் கோயிலில் சித்தியுடன் அமர்ந்து தனிச் சன்னிதியில் விநாயகர் அருள்புரிகிறார். விநாயகருக்கு சித்தி - புத்தி என இரண்டு மனைவிகள் உள்ளதாக விநாயகப் புராணம் கூறுகிறது. இவர்களது திருமணம் சென்னை பாடியில் உள்ள திருவலிதாயம் எனப்படும், திருவலியநாதர் தலத்தில் நடந்ததாக தல வரலாறு கூறுகிறது. இத்தனை மெய்ப்படுத்தும் விதமாக திருவலிதாயநாதர் தலத்தில் சித்தி - புத்தியுடன் உற்சவ விநாயகர் அருள் புரிகிறார். மேலும் அவருக்கு ஐந்து, பதினான்கு எண்ணிக்கையிலும் மனைவியர் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் விநாயகர் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கஜமுகாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக விநாயகர், பெண்வடிவம் எடுத்ததாகவும், புராணம் கூறுகிறது. மிக அபூர்வமாகக் காணப்படும் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசித்து வழிபட்டால் மனதில் உற்சாகமும், வீரமும் சிறந்து விளங்கும்.

முழுமுதற்கடவுளே போற்றி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக