ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தை அமாவாசை.... முன்னோர்களின் ஆசி வாழ்வை சிறப்பாக்கும்...!!


தை அமாவாசை.... முன்னோர்களின் ஆசி வாழ்வை சிறப்பாக்கும்...!!

சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் நமக்கு தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை எல்லாம் தரவல்லவர்.

சூரியனைப் 'பிதிர் காரகன்" என்றும், சந்திரனை 'மாதுர் காரகன்" என்றும் ஜோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது பிதா, மாதாவாக வழிபடும் தெய்வங்களாக கருதுகின்றோம். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர்.

அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராணகாலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும். அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்திலுல் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

தை அமாவாசை :

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம்.

வீட்டில் செய்ய வேண்டியவை :

தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது.

தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை :

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் புண்ணியமும், செல்வமும் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக