திங்கள், 4 மே, 2020

பக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

பக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

இந்துசமய அறநிலையத்துறை இணையதளம், யூடியூப், ஃபேஸ்புக் நேரலை மற்றும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருக்கல்யாண நிகழ்வை வீடுகளில் இருந்தே பார்த்த பக்தர்கள், மீனாட்சி, சுந்தரேஸ்வரரை வணங்கினர்.


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. எனினும், பக்தர்கள் காணும் வகையில் சமூகவலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது.


மதுரையே குலுங்கும் அளவிற்கு நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பாண்டிய நாட்டை நோக்கி படையெடுப்பர்.


திருக்கல்யாணத்திற்கு, மீனாட்சியின் உடன்பிறப்பான கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மதுரை வந்து, ஆற்றில் இறங்குவதை காண, வைகையில் மக்கள் வெள்ளம் கரைபுரளும்.


வருடமெல்லாம் உழைத்துக் களைத்த மக்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் விழாவான சித்திரை திருவிழா, கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.


ஆனால், மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும் என்றும் அது நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.



இதில் சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், பாதுகாப்புப் பணிக்காக 3 போலீசார் உள்பட 42 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.


சன்னதியின் முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வர் கல்யாண கோலத்தில் எழுந்தருளினர். வழக்கத்திற்கு மாறாக முதல்முறையாக பக்தர்களின் ஆரவாரமின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத்துறை இணையதளம், யூடியூப், ஃபேஸ்புக் நேரலை மற்றும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருக்கல்யாண நிகழ்வை வீடுகளில் இருந்தே பார்த்த பக்தர்கள், மீனாட்சி, சுந்தரேஸ்வரரை வணங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக