வெள்ளி, 2 நவம்பர், 2018

தீபாவளி பூஜை முறை


தீபாவளி பூஜை முறை.

அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் – இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி… அஷ்டலட்சுமியே போற்றி… குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நாணய வழிபாடு:

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார்.

சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்!
நரக சதுர்த்தசி: மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரி நாளாக எடுத்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.

அருளும் பொருளும் அள்ளித் தரும் அன்னபூர்ணா ஸ்தோத்திரம்: அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷõம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ
பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷõத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே… அன்னபூரணியே… பிச்சையைக் கொடு.

ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும்

கிருஷ்ணரை வழிபடுவோம்:

 தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். பெருமாளுக்கு முராரி என்ற திருநாமமும் ஒரு அசுரனின் பெயரால் ஏற்பட்டது. நரகாசுரனைக் கொல்ல கிருஷ்ணர் சென்ற போது, நரகாசுரனின் தளபதியான முரன் போருக்கு வந்தான். ஐந்து தலை கொண்ட அசுரன் இவன். அவனை அழிக்க கிருஷ்ணர் சக்ராயுதத்தை ஏவினார். சக்கரம் ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தது. முரனைக் கொன்றதால் பெருமாளுக்கு முராரி என்ற பெயர் ஏற்பட்டது.

வளம் தரும் குபேரலட்சுமி:

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி.தீபாவளியன்றோ, அதற்கு முந்தியநாளோ குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். தீபாவளி திருநாள் நீங்கலாக வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிரஓரை நேரம் மற்றும் திரிதியை திதிகளில்,குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்தநன்மை தரும். வேதமந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் ஏழாம்பாடலில், லட்சுமி குபேரனோடு வீற்றிருந்து செல்வவளம் அருள்வது பற்றி கூறுவதைப் படிக்கலாம்.

அம்மையப்பனின் அருள் கிடைக்கும்:

சிவபக்தரான பிருங்கி என்ற முனிவர், சக்தியாகிய தன்னை நீக்கி சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றதால், மனம் கலங்கினாள் உமையவள். சிவன் வேறு சக்தி வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பியவள், பூலோகத்தில் கவுதம மகரிஷி ஆசிரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கவுதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கவுதம மகரிஷி. உமையவளும் வெகு சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி தந்து, தனது திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். உமாதேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கவுரிதேவியாகிய உமையம்மை போற்றிய விரதம் ஆதலால் கேதார கவுரிவிரதம் என்றும் அழைப்பர். இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதை 5 வகையாக அனுஷ்டிப்பார்கள்.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது உத்தமம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமி துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் ஆகும். அதேபோன்று ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பது உண்டு. இந்த விரதத்தை சுமங்கலிகளே கடைப்பிடிக்க வேண்டும். முற்காலத்தில், நீர்நிலைகளின் கரைகளில் – ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜிப்பார்கள். விரத தினத்தன்று விநாயகரை வழிபட்டு, ஆதி ரிஷிகளான பிருங்கி, கவுதம முனிவர்களையும் வணங்கி சிவபூஜையை துவங்குவர். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்தும், 21 என்ற எண்ணிக்கையில் பட்சணங்கள் படைத்தும் வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர, தாம்பத்தியம் சிறக்க, மாங்கல்ய பலம் பெருக, நினைத்தது நினைத்தபடி நிறைவேற வரம் அருளும் வல்லமை இந்த விரத பூஜைக்கு உண்டு.

இறுதி நேரத்தில்தான் நரகாசுரனுக்கு அவனுடைய பிறப்பு ரகசியம் உணர்த்தப்பட்டது. அதாவது, ஒரு காலத்தில் கடலுக்குள் பூமி மறைக்கப்பட்டிருந்தபோது மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, கடலுக்குள் புகுந்து பூமியை வெளிக்கொண்டு வந்தார். அச்சமயம் அவருக்கும் பூமாதேவிக்குமான சங்கமத்தில்தான் நரகாசுரன் பிறப்பெடுத்தான்! மகாவிஷ்ணுவின் அவதாரமே கிருஷ்ண பகவான், பூமாதேவியின் அம்சம்தான் சத்யபாமா, இந்த உண்மைகளைத் தன்னுடைய உயிர் பிரியும் தருவாயில் தான் நரகாசுரன் தெரிந்துகொண்டான்.

தன்னுடைய ஜனனத்துக்கு காரணமான பெற்றோர்களாலேயே குறிப்பாக தன்னுடைய தாயின் கையாலேயே நரகாசுரனுக்கு மரணம் என்று விதி அமைப்பு இருந்தது! ஆகவேதான், கிருஷ்ண பகவான் ஒரு மயக்க நாடகத்தை நடத்தி, பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவின் ஆயுத்தாலேயே நரகாசுரனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டும்படியாகச் செய்தார்.

கிருஷ்ண பகவானினிடமும், சத்யபாமாவிடமும் பாவ மன்னிப்பு வேண்டிய நரகாசுரன், தன்னுடைய மறைவு நாளை உலகத்தில் உள்ள மக்கள் நினைவு நாளாக மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் வேண்டினான். கிருஷ்ண பகவான் அவ்வாறு வரம் அருளியபடிதான், ஐப்பசி மாதம் சதுர்த்தி திதியில் பின்னிரவு கடந்து நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்து, பொழுது புலர்ந்ததும் தீபாவளி கொண்டாடப்படும் வழக்கம் உண்டாகியது!

கிருஷ்ண பிரான் அவதாரம் செய்தது துவாபர யுகத்தில். அதற்கு முன் யுகமான திரேதா யுகத்திலேயே ராம பிரான் இராவணுடன் போரிட்டு ஜெயித்த நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிற்து. ஆகவே, அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலை நாட்டப்பட்ட வெற்றித் திரு நாளாகவே தீபாவளி விளங்குகிறது!

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி

108 குபேரா போற்றி போற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக