சனி, 29 ஜூன், 2019

வாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக நம்பப்படும் ‌காஞ்சிபுரம் அத்திவரதர்


வாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக நம்பப்படும் ‌காஞ்சிபுரம் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

உலகப் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த அத்திவரதர் திருவிழாவுக்காக தீவிர ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

அத்திவரதரை ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது எந்தச் சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட மாட்டாது. அதிகாலை 5 மணி முதல் மாலை‌ 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க மாவட்ட நிர்வா‌கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர ஜூலை 1,2,3 மற்றும் 12லிருந்து 24ஆம் தேதி வரையும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி மற்றும் 16,17ஆம்‌ தேதிகளில் மாலை நேரத்திலும் உள்ளூர் மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

மேலும் சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய காலை 11 மணியிலிருந்து 12 மணி வரையும், மாலை 5 மணிமுதல் 6 வரையும் அனுமதிக்கப்படுவர். சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என 2 வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். சிறப்பு தரிசன கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும். அவர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகச் சென்று அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர விஐபி தரிசனத்திற்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்கள் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். மூலவர் மற்றும் தாயார் சன்னதிகளுக்கு செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக