ஞாயிறு, 1 மார்ச், 2020

பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி கோயிலுக்கு வரும், ""பெண்களின் சபரிமலை'" என்று சிறப்பித்து அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.


பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி கோயிலுக்கு வரும், ""பெண்களின் சபரிமலை'" என்று சிறப்பித்து அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.

*கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தென்பகுதியில் வசிக்கும் பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும் அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது நம்பிக்கை. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை' என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த கோவிலின் வரலாறு பல திடுக்கிடும் கதைகளை உள்ளடக்கியது ஆகும். வாங்க அது பத்தி தெரிஞ்சிக்கலாம்*


*பெயர்க் காரணம்*


*ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் இருந்ததால், 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டுள்ளது இந்த பகுதி. இதுவே, நாளடைவில் 'மண்டைக்காடு' என்று மருவியதாகக் கூறுகின்றனர் இந்த பகுதியின் வரலாறு குறித்து அறிந்தவர்கள். இந்தப் பகுதியில்தான் பகவதி அம்மன் புற்று வடிவில் பக்தர்களுக்குக் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள்*

*_உயிர்கொல்லும் நோய்_*

*முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவியுள்ளன. இந்த நோய்களைக் குணப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் கடும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊர் தேடி பிழைப்புக்காக மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.*

*_தேவதூதவனாய் வந்த சாது_*

*மண்டைக்காடு பகுதி மக்களின் துன்பத்தைப் போக்கி வெளிச்சம் தர விடிவெள்ளியாக மண்டைக்காட்டுக்கு வந்தார் ஊர் பேர் தெரியாத சாது ஒருவர் . இவரின் அரும் செயல்களால் மக்களின் மனதில் இடம்பிடித்தார். மக்களுக்கு ஏற்பட்டிருந்த பிணி போக்கினார். வேறு வழியில்லாமல் திண்டாடிய மக்களுக்கு, சாதுவின் வடிவில் தெய்வமே துணை வந்ததாக எண்ணிய கிராம மக்கள், அவரை பக்தியுடன் வழிபட்டனர்.*

*_பூசைகள் செய்த சாது_*

*இங்கு வந்த சாது 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சாது, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார். இதனால் இவரையும் மக்கள் கடவுளாக பாவித்து வழிபட்டனர்.*

*_சக்கரத்தில் வளர்ந்த புற்று_*

*சாது சக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருநாள் அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு ஒன்று சக்கரத்தில் வளர்ந்திருந்த புற்றை மிதித்ததும் அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வெளியானது.*

*_புற்றில் குடிகொண்ட தெய்வ சக்தி_*

*ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூற, புற்று இருந்த இடத்துக்கு வந்தவர்கள் இந்த தகவலை அரசருக்கும் தெரியப்படுத்தினர். பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்து அரண்மனை ஜோதிடரை அழைத்து இதுகுறித்து கேட்டறிந்தார். பின்*

*அன்றிரவு, மன்னரின் கனவில், அம்மன் தோன்றி, என்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிவேன். நான் குடிகொண்டுள்ள புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும் என்று கூறி மறைந்தார். இப்படியாக இந்த தொன் கதை இந்த பகுதியில் பேசப்பட்டு வருகிறது.*

*_கோவில் கட்டிய மன்னர்_*

*பகவதி அம்மன் தன் கனவில் தோன்றியதையும், புற்றில் பகவதி தேவி குடியிருப்பதையும் மன்னர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். இந்த இடம் புனிதத் தலம் என்றும். இங்கு தினமும் பூஜை மற்றும் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் மன்னர் உத்தரவிட்டார். அதன் பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.*

*_சமாதியில் சாது_*

*அம்மன் வந்ததை அடுத்து தான் சமாதியாக நினைத்த சாது அங்கு அருகில் தன் உயரத்துக்கு குழி ஒன்றை வெட்டி, அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்தார். தான் தியானம் செய்யப்போவதாகவும், இந்த குழியை மண்ணால் மூடிவிடும்படியும் கேட்டார். அதன்படி அவரை குழிக்குள் வைத்தே மூடினர் சிறுவர்கள். சாது சமாதியானார்.*

*_இருமுடியும், பக்தர்களும்:_*

*மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு கேரளப் பெண்கள், இருமுடி கட்டி புனிதப் பயணம் வருவதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு அங்கமாக அப்போது இருந்தது. கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை மண்டைக்காடு வழியாக கிழக்குப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். இதை தலையில் கட்டி வருவதையே வழி வழியாக செய்ததால் இருமுடி கட்டும் பண்பாடு வந்ததாக நம்பப்படுகிறது.*

*_கடற்கரை சமத்துவத்தை வலியுறுத்தும் கோயில்:_*

*சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சாதி,மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், அதிகமான பெண்கள் விரதமிருந்து மண்டைக்காட்டுக்கு இருமுடி கட்டி புனிதப் பயணமாகச் சென்றுவருகிறார்கள். ஓலையால் வேயப்பட்ட மண்டைக்காடு கோயிலின் மேற்கூரையை அடிக்கடி மாற்றி அமைக்கவேண்டிய நிலை அப்போது இருந்தது. சுயம்புவாக மண்புற்றில் எழுந்தருளிய அம்மன் வளர்ந்துகொண்டே போனதுதான் அதற்குக் காரணம்.*

*_ஒடுக்கு பூஜை:_*

*மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு இருமுடி கட்டி புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் முழு உருவத்தைத் துணியில் வரைந்து, கை, கால், கழுத்துப் பகுதிகளை அமைத்து தலைப்பகுதியில் கண், வாய், மூக்கு, காது எனப் பல வண்ணங்களில் அவர்கள் உயரத்துக்கு ஏற்ப அமைத்து அதைக் கொடியாக ஏந்தி 'சரணம்தா தேவி சரணம் தா தேவி பொன்னம்மே' எனக் கால்நடையாக மண்டைக்காடு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.*

*_மண்டைக்காடு கடற்கரை_*

*மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகில் உள்ள கடல்தான் பக்தர்களின் புனிதத் தீர்த்தம். பக்தர்கள் முதலில் கடலுக்குச் சென்று நீராடிவிட்டு அல்லது கால் நனைத்துவிட்டோதான் பகவதி அம்மனை தரிசிக்கக் கோயிலுக்குள் வருவார்கள். கடற்கரைக்கு வரும் பக்தர்கள் `கடலம்மே' என பக்திப் பரவசத்துடன் அழைத்தவாறே தேங்காய் மற்றும் சில்லறைக் காசுகளை கடலில் வீசுவார்கள். பின்னர் தங்கள் இருமுடிக்கட்டுகளில் உள்ள பொருள்களைக்கொண்டு கோயில் சந்நிதியில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.*

*_திருவிழா_*

*மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள்கள் கொடைவிழா நடக்கிறது. கடைசி செவ்வாய்கிழமை நிறைவுநாள் வருவதுபோல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.10-ம் நாள் விழாவாக நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடத்தப்படும். பலவகை நைவேத்தியங்களை அம்மனுக்கு ஊட்டும் நிகழ்வுதான் இந்த ஒடுக்கு பூஜையாகும்.*


*_மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் எப்படிச் செல்வது?:_*

*நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம்.*

*அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 7:30 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும்.*

*காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக