செவ்வாய், 27 ஜூன், 2017

ஆனித் திருமஞ்சனம்..



ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்!

சிவனாரை நினைக்கும் போதெல்லாம் சிவலிங்க வடிவம் தாண்டி நம் கண்களில் நிறைந்திருக்கும் திருவடிவம்… ஸ்ரீநடராஜர். சிவ வடிவங்களில் முக்கியமான வடிவம் என்று போற்றுகிறார்கள் சிவனடியார்கள். ஸ்ரீநடராஜர் என்றால் சிதம்பரம் நினைவுக்கு வரும். சிதம்பரம் என்றதும் நடராஜர் பெருமானுக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஞாபகத்துக்கு வரும். மார்கழித் திருவாதிரை ஒன்று. அடுத்தது… ஆனித் திருமஞ்சனம்!

‘வேனிற் காலம், ஆனி இலை அசங்க’ என்றொரு வாசகம் உண்டு. அதாவது, ஆனியில் மழை அடிக்கடி பெய்யுமாம். அப்போதுதான் காவிரி பெருக்கெடுத்து ஓடும். ஆடிப்பெருக்கெனக் கொண்டாடப்படும். அதுமட்டுமா. மாதங்களில், நீண்ட பகல் பொழுது கொண்டது ஆனி மாதம் எனும் பெருமையும் உண்டு.

பங்குனியைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது.
“மகா அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம். அதுவே தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப் பொழுது மாசி, உச்சிக்காலம் சித்திரை, மாலைப்பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன’’ என்கிறார் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

ஸ்ரீநடராஜருக்கு வருடத்துக்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வருஷத்தில் ஆறு முறை அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரம் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் ஆவணி மாதத்தில் பூர்வ பக்ஷ சதுர்த்தசி புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷ சதுர்த்தசி மார்கழி மாதம் திருவாதிரை என ஐந்து அபிஷேகங்கள் பிரசித்தம்.

இதில், மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் முக்கியமான திருவிழாக்கள். இதில் குறிப்பாக, ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில், தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா!
ஆனி திருமஞ்சனம் ஸ்ரீநடராஜருக்கு உரிய அற்புதமான நாள். ஆகவே சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது.

‘‘ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா அவர். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம். பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகிக்கிறோம்.

மேலும் கோடைக் காலம். அக்கினி நட்சத்திர தருணம் எல்லாம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதாவது அபிஷேகம் செய்யப்படுகிறது. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் யார் தெரியுமா. யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி’’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

சிதம்பரத்தில் நடராஜர் பெருமான் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. ஆரூர் எனப்படும் திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடுவதை அஜபா நடனம் என்று போற்றப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக