புதன், 6 செப்டம்பர், 2017

அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயில், மானூர்.




அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயில், மானூர்.
******************************************
*இறைவன்:* பாணலிங்கமாக இருக்கிற உடையவர் என்று பெயர் பெற்ற அருள்மிகு அம்பலவாணசுவாமி.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*இத்தல இதரப் பெயர்கள்:*
மானமாநகரம், மானவநல்லூர், மானையம்பதி, மானையூர்.

*சிறப்பு:*
இத்திருக்கோவிலுக்கென்று தலபுராணம் பாடப்படவில்லை.

இத்திருக்கோயிலின் வரலாறு திருநெல்வேலிக்கு தல புராணத்தில் இரண்டு சருக்கங்களில் அமைந்திருக்கிறது.

அவை *கருவூர்ச் சித்தர் சருக்கம்* (இருபத்தோர் திருவிருத்தங்களால் ஆனது)

*மானூர் சபையில் ஆச்சாரியார் நடனச் சருக்கம்* (ஐம்பத்தெட்டு திருவிருத்தங்களால் ஆனது.) என்பவை.

மேலும் இத்தலம், திருநடன சபை என்பதால் இத்தலத்தில் தலதீர்த்தமும், தலவிருட்சமும் கிடையாது.

*கருவூர் சருக்கம்:*
திருவளரும் கீரனூரில், அந்தணர் குலத்தில், சூரியன் அருளால் பிறந்த பிள்ளை கருவூர் சித்தர் ஆவார்.

இவர் கலைகள் முழுவதும் நன்றாகக் கற்று, தம்மையுமறிந்து, தலைவனைத் தம்முள்ளாக கண்ட பெருமையுடையவர்.

மெஞ்ஞானியான இவர் சிவபெருமானின் தலங்களுக்கெல்லாம் சென்று, நல்வரங்களை கேட்டுப் பெற்று, திருநெல்வேலியை அடைந்தார்.

நெல்லையப்பரைத் தரிசித்தார்.

நெல்லையப்பரிடமிருந்து மறுமொழி ஒன்றும் இவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கருவூரார் வெகுண்டார். அதோடு... *ஈசன் இங்கு இல்லை* அதனால் இங்கு *எருக்களெல்லாம் எழ* என்று சாபமிட்டார்.

அதன்பின் மானூருக்குச் சென்றுவிட்டார்.

நெல்லையப்பர், ஆவணி மூல நாளன்று ரிஷபவாகனத்தில் ஏறி அதிகாலை நேரத்தில் மானூருக்கு வந்து, சித்தருக்குக் காட்சி கொடுத்தார்.

*நெல்லை நாயகர் மானூருக்கு நண்ணும் பொருட்டு அடிக்கு ஓராயிரம் பொன் ஈந்தார்,*

சித்தரும் திருநெல்வேலியை அடைந்து *ஈசன் இங்கே உண்டு* ஆக, *எருக்குகள் அற்றுப் போகுக!* என மொழிந்தார்.

இதன் வரலாறாகவே, வருடந்தோறும் ஆவணி மூலத் திருநாள் அன்று, நெல்லையப்பர் பரிவார மூர்த்திகளும் மானூருக்கு எழுந்தருளி, கருவூர் சித்தருக்குக் காட்சி கொடுக்கும் நகழ்வு அளிக்கும் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

*ஈசன் சபையிலாடிய நடனங்கள்:*
தாமிர சபையில் *பரபிரம்ம நடனம்.*

வடவம்பலத்தில் *செளந்தர்ய நடனம்*

நெல்லையம்பலத்தில் *பிரதாப நடனம்*

ஆயிரங்கால் மண்டபத்தில் *சூரிய நடனம்*

சிந்துபூந்துறை தீர்த்த திருச்சபையில் *தீர்த்த நடனம்*

சித்திரை சபையில் (மானூர் அம்பலம்) *ஆச்சர்ய நடனம்.*

முன்பு தாருகாவனத்தில் மாதவர்களின் இல்லங்களுக்கு சிவபெருமான், கங்காளநாதராகி ஐயம் ஏற்பவர் போலச் சென்றதை அறிந்து, அங்கிருக்கும் முனிவர்கள் கங்காளநாதரை சபித்தார்கள்.

சிவனார் அப்போது *ராம் உங்களுக்கு ஞானம் தந்தோம் அதுகண்டு உண்மையை ஆராய்ந்து பாருங்கள். நாம் செய்யும் நடனத்தையும் காணுங்கள்*  என அருளிச்செய்தார்.


திருமாலும் சிவனார் மானையம்பதியை அடைந்து, திருமாலின் கட்டளைப்படி தேவதச்சன் அலங்கரித்த ஆச்சாரியார் சபையில் வந்து ஆச்சாரிய நடனம் ஆடி அருளிக்காட்டினார்.

ஒரு காலத்தில் நெல்லையப்பரின் நடன சபையாக மட்டுமே இருந்த இத்திருக்கோயிலில் பிற்பாடு விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி அம்மன் போன்ற தெய்வச் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

*கல்வெட்டு:*
சோழர்காலக் *குடவோலை முறை*யைக் குறிக்கும் உத்திரமேரூர் கல்வெட்டை விட காலத்தால் முந்தைய மானூர்க் கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கிறது.

மேலும் பல கல்வெட்டுகள் அம்பலவாணர் மண்டபத் தூண்களில் காணப்படுகிறது.

ஒரு கல்வெட்டில், மானூர் ஊர் சபையில் உறுப்பினர் ஆவதற்குரியத் தகுதியைப் தெளிவுறக் கூறுகிறது.

மானூர் அம்பலத்தின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கண்டதார்? என ஒரு வாக்கியம் இங்கே வழங்கி வருகிறது.

வடகிழக்கு மூலையில் இருந்து கொண்டு ஆமையும் அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடு பேறு பெற்றதாக கூறுவர்.

இக்கோயிலின் வடகிழக்கு மூலையில் ஆமையும் அன்னமும் கல்லில் சித்திரமாக வடிவக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இத்தலத்தைப் பற்றி திருநெல்வேலி தலபுராணத்தின்ஆசிரியர் அருட்கவிராயர் நெல்லையப்பபிள்ளை கூறுகின்றார்.

*சிறப்பான சந்நிதிகள்:*
அருள்மிகு விநாயகர் சந்நிதி.
அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் சந்நிதி.
அருள்தரும் காந்திமதியம்மன் சந்நிதி.
கருவூர் சித்தர் சந்நிதி.
அருள்மிகு முருகன் சந்நிதி.
திருவடிப் போத்தி சந்நிதி.


அம்பலவாணர் திருசந்நிதி முன்பு ஏழடியில் உயரமான கருங்கல்லான தூண் ஒன்று நிற்பதனைக் காணலாம். இதுதான் *திருவடிப் போத்தி* என்று வழிபடப்பட்டு வருகிறார்கள்.

முன்காலத்தில் பாண்டியன் ஒருவனால் மெக்காவிலிருந்து கொண்டு வரப்பெற்ற முகம்மதுவின் சக்தி இந்தூரில் பதிந்திருந்தால் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து H.R.பேட் துரை தொகுத்திருக்கும், திருநெல்வேலி கெசட்டியரில் குறிப்புள்ளது.

இத்தூணின் மேலுள்ள கல்வெட்டு கலப்பெழுத்துக்களால் ஆனவை. இதை படியத்தறிவது கடினம்.

*பூஜைகள்:*
தினமும் ஒரு கால பூஜை மட்டுமே.

*திருவிழாக்கள்:*
ஆவணி மூலத்திருநாள் விழா.
மார்கழித் திருவாதிரை திருநாள் திருவிழா.

*இருப்பிடம்:*
திருநெல்வேலியிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் வழியில், திருநெல்வேலியிலிருந்து சுமார் பதினைந்து கி. மி. தொலைவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவில் மார்க்கமாக திருவில்லிபுத்தூர் மற்றும் தேனி செல்லும் பேருந்துகளில் இத்தலத்திற்குச் செல்லலாம்.

*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு அம்பலவாணசுவாமி திருக்கோயில்,
மானூர்.
திருநெல்வேலி-627 201

*தொடர்புக்கு:*
0462 -2339910

             திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தல பதிவுகளில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில், மாறாந்தை.*

*****************************************
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக