ஞாயிறு, 6 மே, 2018

நெல்லையப்பர் கோவிலின் சிறப்புகள்...


நெல்லையப்பர் கோவிலின் சிறப்புகள்...

நெல்லையப்பர் கோவில் பற்றிய தகவல்களையும் படங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் .
கும்பாபிஷேகவிழாவில் கலந்து கொண்டு காந்திமதியம்மன் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி அருள்பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம் .நன்றி,சிவாயநம,திருச்சிற்றம்பலம்!
   
நெல்லையப்பர் கோவில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் தெப்பக்குளத்தில் இருந்து பிடிமண் எடுத்து வந்தனர்.

நெல்லையப்பர் கோவில் யாகசாலை பூஜை இன்று தொடக்கம்
கும்பாபிஷேகவிழா இன்று தொடங்குவதை முன்னிட்டு யாகசாலைக்கு சிவாச்சாரியார்கள் பிடிமண் எடுத்தனர்  .
நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகிறது.

இதையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் ஹோம பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 7 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட ஹோம பூஜைகளும் நடந்தன. இரவு யாகசாலையில் பயன்படுத்துவதற்கு வெளி தெப்பக்குளம் அருகில் உள்ள அங்கூர விநாயகர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. யானை முன்னே செல்ல சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக அருகில் உள்ள தெப்பக்குளத்துக்கு சென்றனர். அங்கு பிடிமண்ணை சேகரித்து எடுத்து கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு அவர்கள் கொண்டு வந்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 3 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜை தொடங்கி, 7.15 மணிக்கு கடம் எழுந்தருளுதல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 9.30 மணி முதல் 10.25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதுதவிர தேரடி திடலில் தினமும் மாலை 6 மணி முதல் 9 மணிவரை பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு வாசுகி மனோகரின் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இன்று 24-ந்தேதி மஹதி குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், நாளை 25-ந்தேதி சுகிசிவம் பக்தி சொற்பொழிவு, 26-ந்தேதி சீர்காழி சிவசிதம்பரம் குழுவினரின் பக்தி இசை கச்சேரி, 27-ந்தேதி திருச்செங்கோடு ஜெயக்குமார் குழுவினரின் சாக்சாபோன் இசை கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தலம் இருப்பிடம்
பாரதத்தின் கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரியிலிருந்து வடக்கில் 90 கி.மீ தூரத்திலும் , தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து சுமார் 35 கி.மீ மேற்கிலும் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகரின் நடுவில் அருள் தரும் காந்திமதியம்மன் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி திருக்கோவில் அழகுற அமைந்துள்ளது. சுமார் 800 அடி நீளம் 800 அடி அகலம் கொண்ட ஒரு பரந்த இடத்தில் அமைந்துள்ளது. இது 5 கோபுரங்களோடு விளங்குகிறது. இத்தலம் என்றும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள நடராஜரின் நடனசபை தாமிரசபை எனப்படுகிறது. எழுவகை தாண்டவத் தலங்களில் இது காளிகா தாண்டவம் என்னும் படைத்தல் தொழிலை குறிக்கும்.

தலத்தின் இதர பெயர்கள்

இத்தலத்திற்கு தென்காஞ்சி , சிவபுரம், திரிமூர்த்திபுரம், பிரம்மபுரம், வேணுவனம், நெல்லூர், தாருகாவனம் இன்னும் இது போன்ற பல பெயர்கள் புராணங்களிலும் , கோவில் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது அழைக்கப்படும் திருநெல்வேலி என்பது ஒரு காரணப் பெயர் ஆகும்.

பெயர்க்காரணம்
வேதசர்மா என்னும் ஒரு அந்தணர் , தான் பிச்சை எடுத்துக் கொண்டு வந்த நெல்லை,தரையில் பரப்பி உலர்த்த விட்டுவிட்டு ஆற்றிற்குச் சென்றிருந்த போது எதிர்பாராது பெரு மழை பெய்ய , இறைவனின் நிவேதனத்திற்காக என்று உலர்த்தியிருந்த இந்த நெல்லை மழை அடித்துக் கொண்டு போயிருக்குமோ என்று அஞ்சி ஓடி வந்துபார்க்க, ஒரு துளி நீர் கூட படாமல் , மழை நீர் நெல்லைச் சுற்றி வேலி போல் ஓடிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அவரும் சுற்றியிருந்த மக்களும் இவ்வதிசயத்தைக் கண்டு இறைவனின் திருவிளையாடலை நினைத்து மெய்சிலிர்த்தனர். நெல்லை வேலி போல் காத்தமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்றும் , தலத்திற்கு திருநெல்வேலி என்றும் பெயர் உண்டாயிற்று.

இறைவனின் திருவிளையாடல்கள்
1. முன்னொரு காலத்தில் இவ்விடம் மூங்கில் காடாக இருந்துள்ளது. இக்காட்டு வழியாக பாற்குடம் கொண்டு சென்ற இராமக்கோன் என்ற பக்தனை கால் இடறி விலச் செய்து , பால் முழுதும் வழிந்தோடச் செய்தார் இறைவன். இதே போல் தினசரி நடைபெற , அவன் அவ்விடத்தை வெட்டிப் பார்த்த போது , வெட்டுண்ட சிவலிங்கம் தோன்றியது. அவன் அஞ்சி அரசனிடம் தெரிவிக்க , அதுவே வேணுவன நாதராக மாறியது. அரசனும் அங்கு கோவில் கட்டி சிறப்பித்தான்.
2. இத்தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய கங்காள நாதராகிய பிச்சாடனமூர்த்தியின் எழில் மிகு தோற்றம் மிகுந்த சிறப்புடையது.
3. நான்மறைகளும் மூங்கில் மரங்களாக இருந்து நிழல் தர , அந்நிழலின் கீழ் இறைவன் லிங்கமாய் அமர்ந்துள்ளான் என்று தலபுராணம் கூறுகிறது.
4. இங்குள்ள கரி உருமாறிய தீர்த்தத்தில் தான், துருவாச முனிவர் இந்திரத்துய்மன் என்ற அரசனுக்கு இட்ட சாபம் நீங்கியது.
5. அந்திம காலத்திலே , இக்கோவிலிலேயே அமர்ந்து சிவ பூஜை செய்து கொண்டிருந்த சுவேத கேது என்ற அரசனுக்காக , அவனுடைய உயிரைக் கொண்டு செல்ல வந்த காலனை , இறைவன் தனது காலால் கடிந்து , அரசன் இஷ்டப்படும் காலத்தில் முக்தியடைய வரமளித்த புனிதத்தலம் ஆகும். மார்க்கண்டேய முனிவர் இறக்க வேண்டிய நாளில் இறைவன் காலனைக் கடிந்து என்றும் பதினாறு வயதுடன் இருக்க இறைவன் அருள் செய்த தலம் திருக்கடையூர். ஆனால் இத்தலத்தில் இறைவன் காலனைக் கடிந்து சுவேத கேது விரும்பும் வரை வாழ்நாளை நீட்டித்து , பக்தனை மரண பயத்திலிருந்து விடுவித்து , இறைவன் அருள் புரிந்துள்ளார். பிறந்தவர் இறக்க வேண்டும் என்ற நியதி உள்ள போது வாழ் நாளை நீட்டித்து , இஷ்டப்படும் காலம் வரை உயிர் வாழ அனுமதித்தது இறைவனின் திருவிளையாடல் ஆகும். எனவே இத்தலத்தில் திருமணம் , சஷ்டியப்த பூர்த்தி , பீமரத சாந்தி , சதாபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்ஜய மகா வேள்வி ஆகியவை செய்வது , திருக்கடையூரில் செய்வதைக் காட்டிலும் சிறந்தது என்பர். இந்த காலசம்காரமூர்த்தியின் கோலம் சுவாமி சந்நிதி முதலாம் பிரகாரத்தில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

சுவாமி சந்நிதி

கோவிலுக்குள் நுழைந்தவுடன் நாம் முதலில் சுதையிலான மிகப் பெரிய நந்தியம் பெருமானை வணங்கி , அவர் அனுமதி பெற்று பலிபீடம் , கொடிமரம் ஆகியவற்றை வணங்கி , இடது பக்கமுள்ள விநாயகரை வணங்கி , இரண்டாம் பிரகாரத்திற்குள் நுழைகிறோம். இடது கை பக்கமுள்ள திண்ணையில் அதிகார நந்தீஸ்வரர் , வேதசர்மா, விநாயகர், லிங்கம் ஆகியோரைத் தரிசிக்கிறோம். சூரிய பகவானை வணங்கி விட்டு , சுவாமி சந்நிதிக்குச் செல்ல படிக்கட்டுகளில் ஏறுகிறோம். இரண்டு பக்கமும் படிக்கட்டுகள் உள்ள மண்டபத்தில் உள்ள தூண்களைத் தனித்தனியாக தட்டிப் பார்த்தால் , தனித்தனி இசை எலும்புவதை நாம் உணர்கிறோம். ஒரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணும் வெவேறு வாத்திய ஒலியை எழுப்பும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன.

அடுத்து மகா மண்டபத்திற்குள் நுழைந்து பிரதோஷ நந்தீஸ்வரரை வணங்கி , அர்த்த மண்டபத்திற்குச் செல்கிறோம். அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் ஸ்வாமியின் வலதுகை பக்கம் மிகப் பெரிய விநாயகர் அமர்ந்துள்ளார். இவர் தனது வலது கையிலுள்ள மோதகத்தின் மீது தும்பிக்கையை வைத்துக் கொண்டு அதாவது வலம்புரி விநாயகராக அமர்ந்து கொண்டு இடது கையால் நம்மை வா வென்று அழைக்கிறார். நம்மை அருகில் அழைத்து , வலது கையிலுள்ள மோதகத்தைத் தரத் தயாராக இருக்கிறார் போலும். மறு பக்கத்தில் மயில் மீது அமர்ந்துள்ள ஆறுமுகரையும் , வள்ளி தெய்வானையும் வணங்கி அர்த்த மண்டபத்திற்குள் நுழைகிறோம். கருவறையில் வீற்றிருக்கும் சுவாமி நெல்லையப்பரை நாம் பிரதோஷ நந்தீஸ்வரர் அருகிலிருந்தே தரிசிக்கும் படியாக மிக உயரமான இடத்தில் அமர்ந்துள்ளார் . சுவாமி நெல்லையப்பரை ஸ்வாமிக்கு அபிஷேகம் ஆகும் போது உற்றுக் கவனித்தால் , பாணத்தில் அம்பாள் இருப்பதைக் காணலாம். பாணத்தின் உச்சியில் வெட்டுப்பட்டுள்ளதையும் , பாணம் சிறிது சாய்ந்திருப்பதையும் காணலாம். ஸ்வாமியின் எதிரில் இருபக்கமும் நின்று , மனங்குளிர நாம் தரிசிக்கலாம். ஸ்வாமிக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் உண்டு.

இவருக்கு இடது பக்கத்திலுள்ள கருவறையில் நெல்லை கோவிந்தர் என்ற பெயரில் பள்ளி கொண்ட பெருமாளைத் தரிசிக்கிறோம். இவர் இடது கையில் மலருடனும், வலது கையை சிவலிங்கத்தின் மீதும் வைத்துள்ளார். சிவலிங்கத்தை மலர் கொண்டு பூஜிப்பது போல் காணப்படுகிறார். இவரையும் தரிசித்து விட்டு படியிறங்கி முதல் பிரகாரத்திற்கு வந்தால் புடைப்பு சிற்பமான காலசம்ஹார மூர்த்தியையும் தென் பக்கத்தில் தட்சிணாமூர்த்தியையும் , விநாயகரையும் மேற்குப் பக்கத்தில் உற்சவ மூர்த்தியையும் அடுத்து பிட்சாடனர் மற்றும் மோகினியாக வந்த சிவனையும் , திருமாலையும் இவர்களை சுற்றி தாருகாவனத்து முனிவர்களையும் , முனி பத்தினிகளையும் காண்கிறோம். இந்த சிற்பங்கள் மிக அருமையான வேலைப்பாடாகும். அடுத்து மகாலட்சுமி , வள்ளி தெய்வானையுடன் முருகன் , சனீஸ்வரர், சண்டீகேஸ்வரர் ஆகியோரைத் தரிசித்து விட்டு , மூலமகாலிங்கம் சந்நிதிக்கு வருகிறோம். இச்சந்நிதி 10 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது.
அடுத்து நடராஜர், சிவகாமி அம்மை ஆகியோரையும் , பைரவரையும் , மகிஷாசுரமர்த்தினியையும் தரிசித்து விட்டு , படியிறங்கி , இரண்டாம் பிரகாரத்திற்குச் செல்கிறோம்.

இரண்டாம் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்கள், அகஸ்தீஸ்வரர் உடன் சப்தரிஷிகள் , அடுத்து சப்தமாதாக்களை நாம் தரிசிக்கிறோம். அடுத்து இராவணன் கயிலையை பெயர்க்கும் காட்சி , யாழில் இசை பாடும் சிற்பக் காட்சி ஆகியவற்றைக் காணலாம். அடுத்து தல விருட்சமான மூங்கில் மரத்தைக் காண்கிறோம். அதற்கு வடக்குப் பக்கத்தில் சந்தன சபாபதி அருகில் உமையுடன் காட்சி தருகிறார். இவர் எப்பொழுதும் சந்தன அலங்காரத்திலேயே உள்ளார். இவர் தான் மூலவர் என்றும், தாமிர சபாபதி இவருடைய உற்சவ மூர்த்தி என்றும் கூறுவர். அடுத்து அஷ்ட லட்சுமிகளையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு எதிர் வரிசையில் சகஸ்ரலிங்கத்தையும் , குபேர லிங்கத்தையும் தரிசிக்கிறோம். குபேரலிங்கத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்தில் தாமிர சபாபதியையும், சிவகாமி அம்மையையும் தரிசிக்கிறோம். இது பிரம்ம தாண்டவம் எனப்படும்.

இருவர் முகத்திலும் காணப்படும் குமின் சிரிப்பை நாம் நாள் முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேடையை விட்டு கீழே இறங்கினால் சந்திரனை தரிசித்து விட்டு வெளியே வருகிறோம். மூன்றாம் பிரகாரத்தில் முதலில் விநாயகர் சந்நிதி அடுத்து மீனாட்சி சொக்க நாதரை தரிசித்து விட்டு , மகா மண்டபம் வருகிறோம். அங்கு உள்ள சிலை வடிவங்கள் , நம் முன்னோர்களின் சிற்பக்கலை அறிவை பறைசாற்றுகின்றன. இவை இராமேஸ்வரம் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்திலுள்ள சிற்பங்களை நினைவூட்டுகின்றன. அடுத்து தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள மண்டபத்தின் எதிரில், சுவாமி கோவிலையும் , அம்மன் கோவிலையும் இணைக்கும் சங்கிலி மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வாலி, சுக்ரீவன், பீமன், அர்ச்சுனன், புருஷாமிருகம் ஆகியவை கண்ணைக் கவருகின்றன. அம்மண்டபத்திலுள்ள சிவலிங்கங்கள் , காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் ஆகியோருக்கு எதிர் வரிசையில் உள்ள மகிஷாசுரமர்த்தினி , துர்கை அம்மன் , ஐயப்பன் ஆகியோரைத் தரிசித்துக் கொண்டே அம்பாள் சந்நிதிக்கு செல்கிறோம்.

அம்பாள் சந்நிதி
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தீஸ்வரரை வணங்கி விட்டு , நுழைவாயிலின் இருபுரமுள்ள விநாயகர், முருகனை வணங்கி விட்டு அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். அருள் தரும் காந்திமதி அம்மன் வலது கையில் மலர்ச் செண்டுடனும், இடது கையைத் தொங்கவிட்டும் சிரித்த முகத்துடனும் காட்சி தருகிறார். உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி , இத்தலம் அடைந்து முப்பத்திரண்டு அறங்களை வளர்த்து , இறைவனை நினைத்து , தவமிருந்து இறைவனை மணமுடித்த தலம் இதுவாகும். மாமுனிவர் அகத்தியருக்கு திருமணக் கோலங்காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அம்மை, தான் படைத்த உலகைக்காத்தற் பொருட்டு இறைவனை இங்கு வேண்டித் தவம் இயற்றியதாகக் கூறுவர்.

இறைவி சந்நிதிக்கு முன் உள்ள கோபுரம் மிகவும் அழகு வாய்ந்தது. கோபுரத்திற்குச் செல்லும் வழியில் வடக்குப் பக்கம் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் இறைவன் நீர் வடிவிலும் , பிரம்மன் பொன்மலராகவும் இருப்பதாகக் கூறுவர். இத்தீர்த்தம் தவிர கரி உருமாறித் தீர்த்தம் , வெளித் தெப்பக்குளம் , சிந்துபூந்துறை என 30 க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. பஞ்ச மூர்த்திகளுக்கும் இங்கு தேர்கள் உள்ளன. அம்மன் தேரில் அற்புத மரச் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

தாமிர சபை
இறைவன் ஐந்து வகையான சபைகளில் நடனமாடுவதாகவும் , அவை பஞ்ச சபைத் தலங்கள் எனவும் அழைக்கப்படும். சிதம்பரத்தில் பொற்சபையிலும், மதுரையில் ரஜத சபையிலும் , திருவாலங்காட்டில் இரத்தின சபையிலும் , திருக் குற்றாலத்தில் சித்திர சபையிலும் , இத்தலத்தில் தாமிர சபையிலும் நடனமாடுகிறார். மேலும் இறைவன் எழுவகை தாண்டவங்களை நிகழ்த்துகிறார். இத்தலத்தில் படைத்தல் தொழிலைக் குறிக்கும் காளிகாதாண்டவம் ஆடுவதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தலத்தில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் ஆடுகிறார்.

இத்தாமிர சபையில் , கல்லாலான பீடத்தின் மீது மரத்தாலான மண்டபத்தில் அதன் கூரையில் தாமிர தகடுகள் பதியப்பட்டுள்ளன. இச்சபைக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளில் உற்சவர் தாமிர சபாபதி எழுந்தருளுவார். இவருடைய நடனக் காட்சியை மகா விஷ்ணு மத்தளம் இசைக்க, மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி, பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் ஆகியோர் தரிசிப்பது போன்று புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இச்சபையின் மேற்கூரையில் இறைவனின் திருமூர்த்தங்களும் , நடனக் காட்சியை பார்த்து ரசிக்கும் முனிவர் பெருமக்களும் மற்றும் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் மரத்தால் செய்யப்பட்டு அழகுற மிளிர்கின்றன.
இத்தாமிர சபையின் எதிரில் சந்தன சபாபதி சந்நிதி உள்ளது. இவரே மூலவர் ஆவார். இவருடைய நடனத்தைப் பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் , காரைக்கால் முனிவர் ஆகியோர் கண்டு களிக்கின்றனர். சந்தன சபாபதிக்கு பூசப்படும் சந்தனமானது வருடத்தில் 6 தடவை களையப்பட்டு , புதிதாக மீண்டும் பூசப்படுகிறது. திருவாதிரை நாளில் இச்சந்நிதி முன் ஒரு பசுவை , புறம் காட்டி நிறுத்தி வைத்து அபிஷேக ஆராதனைகள் நடை பெரும், ஆன்மாக்கள் இறைவன் திருவடியை காண முயலாமல், உலக இன்பத்தையே நாடுகின்றன என்பதை இது குறிக்கிறது. இறைவன் உயிர்களுக்கு தனுகரணம் முதலியன கொடுப்பது அவ்வுயிர்களுக்கு களிப்பைத் தருவதால் அக்குறிப்பை உணர்த்தவே மக்களுக்கு களி வழங்கப்படுகிறது.

மண்டபங்கள்

1000 தூண்கள் உடைய ஆயிரங்கால் மண்டபத்தில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவமும் , பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 96 தத்துவங்களைக் குறிக்கும் 96 தூண்களுடைய ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவத்தில் நடைபெறும் சுவாமி அம்மனை வைத்து ஆட்டும் ஊஞ்சல் நிகழ்ச்சியும் , ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் நடைபெறுகின்றன. சோம வார மண்டபத்தில் கார்த்திகை சோம வார நாளில் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகமும், நவராத்திரி உற்சவத்தின் போது பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. 100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடை கால வசந்த விழா நடைபெறுகிறது. தை பூச மண்டபத்தில் தீர்த்தவாரி அனைத்தும் நடைபெறுகின்றன. இம்மண்டபம் தாமிரபரணி ஆற்றின் கரையிலே சிந்துபூந்துறை என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்
வட்டெழுத்து , கிரந்தம், தமிழ், கன்னடம் , தெலுங்கு போன்ற எழுத்துக்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.

பாடிய அருளாளர்கள்
இத்திருக்கோவிலை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மூவரும் பாடியுள்ளதாக பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிட்டுருந்தாலும் திருஞான சம்பந்தரின் “மருந்தவை மந்திரம் ” எனத் தொடங்கும் பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. திருவிளையாடற்புராணத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அழகிய சொக்கநாதப் புலவர் என்பவர் காந்தியம்மை பிள்ளைத்தமிழும் , நெல்லையப்ப பிள்ளை என்பவர் திருநெல்வேலி தலபுராணமும், முத்துஸ்வாமி தீட்சிதர் “ஸ்ரீகாந்திமதிம் ” என்னும் கீர்த்தனையும் பாடியுள்ளனர்.

அணைத்து கலைகளின் வளர்ச்சி
சுவாமி சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ள கால சம்ஹார மூர்த்தியின் புடைப்புச் சிற்பம் , மகா மண்டபத்திலுள்ள சிலைகள், சேவல் சண்டை, 12 இராசிகளின் சக்கரம், ரதி மன்மதன் சிற்பங்கள், தாமிர சபையின் மேல் கூரையில் உள்ள மரச்சிற்பங்கள் , இராவணன் கயிலையை பெயர்க்கும் காட்சி , அப்பொழுது அம்பிகை பயந்து ஸ்வாமியை அணைக்கும் காட்சி , ஆயிரங்கால் மண்டபத்தை ஆமை ஒன்று தாங்குவது போன்ற வடிவமைப்பு , ஊஞ்சல் மண்டபத்திலுள்ள யாளி சிற்பங்கள் , சங்கிலி மண்டபத்திலுள்ள சிற்பங்கள் , மணி மண்டபத்திலுள்ள தனித்தனி வாத்திய ஒலி எழுப்பும் 48 சிறிய தூண்கள் , திருத்தேர்களிலுள்ள மரச்சிற்பங்கள் ஆகியவை அக்கால மக்களின் அனைத்து கலைகளின் மீது ஆர்வம் மற்றும் ஈடுபாட்டைக் காட்டுகின்றன.

திருவிழாக்கள்

ஆண்டின் 12 மாதங்களும் இக்கோவிலில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தை அமாவாசை அன்று பத்தாயிரம் விளக்குகள் ஏற்றும் பத்ரதீபமும், ஆறாண்டுக்கொருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் , ஏற்றப்படுகின்றன. இத்தலம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக