திங்கள், 7 அக்டோபர், 2019

அருள்மிகு முக்திநாத் திருக்கோவில், நேபாளம்





இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு முக்திநாத் திருக்கோவில், நேபாளம்

முக்திநாத்- முக்தி நல்கும் வைணவ திருத்தலம். நேபாளத்தில் உள்ளது. திருச்சாளக்ராமம் எனும் பெயரும் உண்டு. நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு சென்று, அங்கிருந்து போக்ரா, ஸோம்சன் வழியாக முக்திநாத்தை அடைய வேண்டும். விமானத்திலும் செல்லலாம்.

முதலில் ஸ்ரீ நீலநாராயணன் சந்நிதிக்குச் சென்றோம். நீலநாராயணன் பெரிய ஆதிசேஷன்மீது, சிறு குளத்தின் ஜலத்தில் சயன திருக்கோலத்தில், முகத்தில் வசீகரப் புன்னகையுடன் தரிசனம் அளிப்பது நெஞ்சில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது. அனைத்தையும் பார்த்துவிட்டு, காட்மாண்டு விடுதிக்குத் திரும்பிய எங்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

'முதல்நாள் சென்ற அக்னி என்ற குட்டி விமானம் சாளக்கிராமம் செல்லும் வழியில் பனியினாலும் மேகக் கூட்டங்களாலும் மறைக்கப்பட்ட மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளாகிவிட்டது. அதனால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது’ என்ற செய்திதான் அது. எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது.

''நல்ல சந்தர்ப்பம் என்பது ஒருமுறைதான் கிடைக்கும். அதைத் தவறவிடாமல், நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். அப்படிக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்தனை தூரம் வந்தும், ஸ்ரீ முக்திநாராயணனைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என மனம் கலங்கினோம். 'இப்படித்தான் அடிக்கடி மேகக் கூட்டங்களாலும் பனியினாலும் மலைத்தொடர்கள் மறைக்கப்பட்டுவிடும். எப்போது விலகும் என்று சொல்ல முடியாது’ என விடுதி மேலாளர் கூறினார். எதுவும் யாத்ரீகர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றார்.

அன்றைய தினம், இரவு உணவு உண்ணாமல் அனைவரும் இறைவனை தியானித்துவிட்டுப் படுத்துவிட்டோம்.

எங்கள் அடி மனத்தின் கூக்குரல் அந்த இறைவனின் காதுகளில் விழுந்திருக்கும்போல! ஒரே இரவில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. நாங்கள் கண்ட பனிமூட்டம், மேகக்கூட்டம் எல்லாம் அடியோடு மறைந்தது. வானம் தெளிவாக மின்னியது.

இதுதான் இறைவனின் திருவிளையாடலோ?

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,

காலையில் நேபாள் ஏர்லைன்ஸ் மட்டும் இயங்க ஆரம்பித்தது. நாங்கள் நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் பதிவுசெய்து இருந்தோம். இறைவனுக்கு மனதார நன்றி கூறி, விமானத்தில் பயணித்தோம்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பனிமூடிய சிகரங்களுடன், 'அழகிற்கோர் அன்னபூர்ணா’ என்று கூறும்படி அன்னபூர்ணா மலைத்தொடரின் அழகை ரசித்த வண்ணம் ஜெம்சோம் விமான நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து கண்டகி நதி ஓடிவரும் வழியில், ஜீப்பில் சில கெஜ தூரம் பயணம் செய்தோம். நாங்கள் சென்றபோது கண்டகி நதி உறைபனியாக இருந்தது. வெயில் பட்டதும் பொன்னிறமாக மிளிரும் மலைச் சிகர அழகை ரசித்தபடி, அந்த நதி வழியே பயணித்தோம். ஓரிடத்தில் ஜீப் பயணம் முடிவுற்றது. அங்கிருந்து இரு சக்கர வாகனப் பயணம் தொடர்ந்தது. வாகன ஓட்டிகள் எங்கள் கழுத்தில் (குழந்தைகளின் ஸ்கூல் ஐ.டி. போன்று) ஐ.டி-யை மாட்டி, அழைத்துச் சென்றார்கள். ஒரு வண்டியில் இருவருக்கு மட்டுமே அனுமதி. பாதை என்று எதுவும் கிடையாது. மேடு, பள்ளம், கற்கள் நிறைந்த பாதை. சில நேரங்களில் பயங்கரமாகக் காற்று வீசியது.

வாகன ஓட்டியின் துணையோடு முக்திநாதன் வாயிலை அடைந்தோம். சந்நிதியை அடைய 80, 90 படிகள் ஏற வேண்டியிருந்தது. சுற்றிலும் சிகரங்களைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டம்; பச்சைப் பசேலென்று நெடிதுயர்ந்த மரங்கள்; அற்புதமானதொரு தேவருலகில் இருப்பது போன்ற உணர்வை அடைந்தோம்.

படிகள் ஏறி, சந்நிதியை அடைந்தோம். சிறு தொட்டிகள் போன்று இரண்டு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன. கோயிலை ஒரு பெண்மணி நிர்வகித்து வருகிறார். சிறிய சந்நிதிதான். கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். சங்கு- சக்ர கதா ஹஸ்தனாக, ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவியருடன் தரிசனம் தருகிறார் அவர். சப்தரிஷிகளும் சனகாதி மகரிஷிகளும் ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் கோடி எடுத்தாலும் கிடைத்தற்கரிய பெருமானும் ஆகிய ஸ்ரீமந் நாராயணன் தம்மைத் தரிசிப்பவர்களுக்குத் தவறாது முக்தி அளிப்பதால், 'முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இங்கே.

பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் இது.

கோயில் கருவறைக்குள் சென்று, ஸ்ரீசாளக்ராம நாராயணனை மிக அருகில் நின்று, தொட்டு வணங்கினோம். நாங்கள் வாங்கிச் சென்ற வஸ்திரங்களை நாங்களே அவருக்குச் சாற்றி, வழிபட்டோம். வாங்கிச் சென்ற வளையல்களை ஸ்ரீதேவி, பூதேவியர் கைகளில் அணிவித்து, வணங்கினோம். அந்த நேரத்தில், திடீரென்று பனிமழை பெய்யத் தொடங்கியது. உடன் வந்தவர்கள் விரைந்து கீழே இறங்க ஆயத்தமானார்கள்.

முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் கோமுகி தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.

சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில்  குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர். 

கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம். அப்போது படம் எடுக்கலாமென நினைத்து கேமராவைத் தேடினால், அது பையில் இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது, ராணுவப் பணியாளர் ஒருவர் என்னிடம் வந்து, ''உள்ளே சாமி பாதத்தில் வைத்துக் கும்பிட்டுவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டீர்களா என்று போய்ப் பாருங்கள்'' என்றார். அதன்படி, மீண்டும் கோயில் கருவறை உள்ளே சென்று, கடவுள் இருப்பிடத்திலேயே என் கேமராவைத் தேடினேன். ஆனால், அது அங்கும் இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியதைத் தொலைத்துவிட்டேனே என்ற வேதனையுடன், கோமுக தீர்த்தத்தில் தலையை மட்டும் நனைத்துக்கொண்டு சுற்றி வந்தேன்.

அப்போது என் பத்து வயதுப் பேத்தி என்னிடம், ''நீ இந்த முக்திநாராயணனைக் கல் என்று நினைத்தாயா? கடவுளாக நினைத்தாயா? கல் என்று நினைத்திருந்தால், கேமரா கிடைக்காது; கடவுளாக நினைத்திருந்தால் கிடைக்கும். வா, போகலாம்!'' என்று பெரிய மனுஷி தோரணையில் சொன்னாள்.

அந்த வார்த்தைகள் என் நெஞ்சத்தைத் தைத்தன. சந்நிதி வாசல் வந்தோம். ஆங்கிலோ இந்தியர் ஒருவர் எங்களை நெருங்கி, என்னிடம் கேமராவை நீட்டி, ''நீங்கள் உள்ளே சென்றபோது கேமரா விழுந்ததைப் பார்த்தேன். சுற்றி வந்ததும் தரலாம் என இருந்தேன். இந்தாருங்கள்!'' என்றார்.

பல ஆயிரம் வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி என் சரீரத்தில் அப்போது ஏற்பட்டது. அவருக்கு நன்றி சொல்லக்கூட இயலாதபடி என் வாய் அடைத்துப்போனது.

கருவறை முன் நின்று, அமானுஷ்யமான- அற்புதமான அந்த இடத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவுள்ளத்துக்கு மனத்தால் நன்றி கூறி வணங்கிவிட்டு, படி இறங்கினோம்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி இது!

மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.

காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமோ நாராயணாய நம:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக