புதன், 12 செப்டம்பர், 2018

விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி 2018: ஹேப்பி பர்த்டே கணேசா! - பிள்ளைகள் கொண்டாடும் விழா

சென்னை: மனிதர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி, இனிப்புகள் கொடுத்து கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். அதை விட மேலாக ஆட்டம் பாட்டம் அமர்களத்துடன் முழுமுதற்கடவுளான பிள்ளையாரின் பிறந்தநாளை 10 நாட்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே விநாயகர் சதுர்த்தி விழா நாடெங்கிலும் தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட பிள்ளையார் சிலைகளை முக்கிய இடங்களில் வைத்து கணபதி ஹோமம் செய்தனர்.
இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி நாளை செப்டம்பர் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.
ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதி நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் களி மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபடுவது சிறப்பு.
பிள்ளையாரின் மகிமை
யானை தலை, பானை போல தொந்தி வயிறு தும்பிக்கை, என பிள்ளையாரை பார்த்தாலே போதும் எல்லா பிள்ளைகளும் குஷியாகிவிடுவார்கள். இப்போது பிள்ளையாரின் சரித்திரத்தை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதே பிள்ளைகள் உற்சாகமடைகின்றனர். காரணம் பிள்ளையாரின் உருவம் மட்டுமல்ல தேவர்களைக் காக்க அவர் செய்யும் ஹீரோயிசம்தான். எலியாருடன் இணைந்து அவர் சண்டை போடும் காட்சிகள் குஷி படுத்துகின்றன. தன்னை கேலி செய்தவர்களை எல்லாம் வாயடைக்கச் செய்து தன்னை முழு முதற்கடவுளாக ஏற்றுக்கொள்ள வைத்த சாமர்த்தியசாலி பிள்ளையார். எனவேதான் எல்லா பிள்ளைகளுக்கும் இந்த பிள்ளையாரை பிடித்துப்போகிறது. அவரது பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி நாளாக உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
பிள்ளையாருக்கு படையல்
விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் சிலர் இருந்தாலும் கொழு கொழு பிள்ளையாருக்கு படைக்க பல வீடுகளில் கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, பழங்கள், வசதிக்கு ஏற்ப இனிப்புகள் என பட்சணங்களை தயார் செய்வார்கள். இதுவே பிள்ளையாரை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்துப்போக காரணமாகிறது.
பிணி நீக்கும் பிள்ளையார்
பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைத்தால் கூட போதும் எழுந்தருளுவார். விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். விநாயகர் சதுர்த்தி நாளில் அவருக்கு பிடித்தமான கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
பார்வதி கடைபிடித்த விரதம்
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும். புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும். பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார் என்பது ஐதீகம்.
நன்மைகள் நடக்கும்
விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். நன்றி ஒன் இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக