வியாழன், 26 ஜூலை, 2018

பிரதோஷ நாள் வழிபாடு


பிரதோஷ நாள் வழிபாடு

ஆன்மீக பக்த கோஷ்டிகளுக்கு வணக்கம்..

 அனைத்து சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு.

1. *பிரதோஷ வழிபாட்டின் போது ஆண்கள் - பெண்கள் எப்படி செல்ல வேண்டும்?*

ஆண்கள் வெள்ளை வேஷ்டி துண்டு மற்றும் பெண்கள் நமது கலாச்சார உடையாக புடவையில் செல்வது சிறப்பு.. அவையே பயனை தரும்..

2. *பிரதோஷ வழிபாட்டின் நேரம் ?* *எப்படி கணக்கில் கொள்ள வேண்டும்?*

பொதுவாக பிரதோஷம் என்பது வளர் - தேய்பிறை பதிமூன்றாவது நாள் (13) திரியோதசி திதியில் பிரதோஷம் கணக்கில் கொள்ள வேண்டும்.. வழிபாட்டின் நேரம் 4.30 to 6 என்று நமது முன்னோர்கள் கணித்து உள்ளனர்.. தொண்டீசா..

3. *பிரதோஷ வழிபாட்டிற்கு வரலாறு உள்ளதா?*

சுருக்கமாக சொல்வதானால் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார் . அதன் விஷம் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி சிவனின் (தொண்டீசனின்) தொண்டைக்குழியில்  தனது கைகளை மெல்லியவாறு வைத்தாள். உடனே விஷம் நின்று விட்டது. இதன் பொருட்டாக பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது..

4. *பிரதோஷ வழிபாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும்?*

(அ) நம் கண்கள் குளிர மௌனமாக அபிஷேகத்தை காண வேண்டும்..

(ஆ) வாயார இறைவனின் புகழை பாட வேண்டும்..

(இ) மனம் சாத்வீகத்துடன் அலங்கார தீபாரதனை காண

(ஈ) மறையவர்களும் - ஓதுவார்களும் பாடுவதை செவி கேட்க..

என முழுமனதோடு பிரதோஷ வழிபாட்டை செய்ய வேண்டும்..

5. *பிரதோஷ வழிபாட்டில் என்ன செய்யக் கூடாது?*

கைபேசி பேசக்கூடாது..
சிரிக்க கூடாது.
மற்றவர்களிடம் பேசக்கூடாது.
திருநீறு மற்றும் இறைவன் பிரசாதத்தை கீழே சிந்தக்கூடாது.
குப்பை போடக்கூடாது.
பூவை மிதிக்க கூடாது.

6. *பிரதோஷ நேரத்தில் நந்தி காதில் சொல்வது பலன் தருமா*?

*நிச்சயம் பலன் தராது*. மேலும் பக்தர்கள் நந்தி காதில் சொல்வது முறையாகாது.. பக்தர்களின் அறியாமையே..

7. *பிரதோஷ நேரத்தில் நந்தி வாகனத்தில் செல்லும் இறைவன் யார்?*

இறைவன் : சந்திரசேகர்.
இறைவி : தனதான்ய ப்ரதாயினி என்று குறிப்பிடுகின்றனர்..

8. *எந்த பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது?*

பொதுவாகவே எல்லா பிரதோஷங்களும் சிறப்பு தான்.. ஆனால் சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு எனவும் கூறுவர்..

9. *பிரதோஷ நேரத்தில் கோயிலில் என்ன செய்வார்கள்?*

சிவாச்சாரியார்கள் பிரதோஷ நேரத்தில் மூலவர் சிவலிங்கம் மற்றும் நந்திக்கு அபிஷேகம் செய்வார்கள் . அதுமட்டும் அல்லாமல் . சிவ பெருமானின் 64 வடிவங்களில் மிகவும் சிறப்பாக போற்றக்கூடியது 25 மகேசுவர மூர்த்திகளில் அதில் சந்திர சேகர்  பஞ்சலோக உற்சவசிலைக்கு அபிஷேகம் செய்து கோயிலை வலம் வரசெய்வர்.. பிறகு பிரசாதம் தருவர்..

10. *பிரதோஷ காலத்தில் இறைவனை வலம் வரும் முறை உள்ளதா*?

ஆம். உள்ளது. *சோமசூத்திர பிரதட்சனம்* என்கிற முறை உண்டு .. இவை கடம்வன புராணத்தில் குறிப்பிடுகிறது என அடியேன் படித்துள்ளேன். ஆனால் நடைமுறையில் இல்லை. ஒரு சில கோயில்களில் இருக்கலாம்..

11. *சோமசூத்திர பிரதட்சனம் எப்படி செய்ய வேண்டும்?*

முதலில் நந்தி அப்படியே இடப்புறமாக சென்று (நந்தியை தாண்டாமல்) சண்டேசுவரரு மீண்டும் அப்படியே திரும்பி நந்தி மறுமுறையும் அப்படியே தொடர்ந்து மூன்று முறை வலம் வரவேண்டும்.. இதிலு சுவாமியின் அபிடேக கோமுகத்தை தாண்டக்கூடாது  என்று சொல்வர்..

12. *பிரதோஷ வழிபாட்டின் பயன்?*

எத்தனையோ நன்மைகள் அடுக்கிக் கொண்டே போகலாம்.. குறிப்பாக பாவ விமோசனம் மற்றும் மோட்சம்..

13. *பிரதோஷ நாள் அன்று எப்படி விரதம் மேற்கொள்ள வேண்டும்?*

திரயோதசி திதி எப்பொழுது  தொடங்கியதோ அப்பொழுதே தங்கள் விரதம் ஆரம்பம்.. உடலையும் - மனதையும் தூய்மையடைய வேண்டும்.

எவர் இல்லத்திலும் உணவு உட்கொள்ளக்கூடாது.

தேவார திருமுறைகள் , இதிகாச புராணங்கள் படிக்க வேண்டும்.

பாலும் பழமும் மட்டுமே உண்ண வேண்டும்.

உத்தமம் , மத்திமம் , அதமம் என்று விரத முறைகள் உண்டு .

 14. *பிரதோஷ நேரத்தில் இறைவனிடத்தில் என்ன வேண்டுவது?*

அது இது என கேட்பதை காட்டிலும் நந்தி வேண்டிய பதினாறு பேறுகளும் கேட்டு பெறுங்கள்.

15. *பிரதோஷ நேரத்தில் கோயிலுக்கு செல்ல இயலாமல் போனால்?*

அபிஷேகத்திற்கு பொருள்.
பூ , மாலை தொடுத்து கொடுக்கலாம் அல்லது வாங்கி தரலாம்.
பக்தர்களுக்கு பிரசாதத்தை செய்து கொடுக்கலாம்.
விளக்குக்கு  நெய் கொடுக்கலாம்..என்பன.

16. *பிரதோஷ நேரத்தில் பொதுவாக என்ன செய்ய வேண்டும்?*

அவசரமாக மற்றும் கடமைக்கு வழிபடுதல் கூடாது.

கண்டிப்பாக சண்டேசுவரர் மற்றும் பைரவரை தரிசனம் செய்ய வேண்டும். என்பன..

பிரதோஷ வழிபாடு செய்து சிவபெருமான் அருள் பெறுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக