புதன், 8 ஜனவரி, 2020

#திருவாதிரைக்களியும்##-ஏழுகறிக்கூட்டும்#

#திருவாதிரைக்களியும்##-ஏழுகறிக்கூட்டும்#

களிசெய்யும் முறை (சுலபமானது)
தேவையான  பொருட்கள்.

1.அரிசி     -  ஒரு  ஆழாக்கு.
2. பயத்தம்பருப்பு    -  ஒரு  கைப்பிடி.
3. வெல்லம்-     ஒரு  டம்ளர் (நன்றாகப்  பொடித்தது)
4.ஏலக்காய்  பொடி, முந்திரி, திராட்சை, நெய்.
5. தேங்காய்  துருவல்    − ஒரு  மூடி  (சற்று  முற்றிய  தேங்காய்  துருவல்)

அரிசியை  வெறும்  வாணலியில்  போட்டு  நன்கு வறுத்துக்கொள்ளவும்.  அரிசி  பாதி வறுபடும்  போது  பயத்தம்பருப்பையும்  சேர்த்து  நன்கு  சிவப்பாக  வாசனை  வரும்  அளவு  வறுக்கவேண்டும்.

ஆறியவுடன்  இதை  மிக்ஸியில்  ரவையாக  உடைத்து  சலித்துக்  கொள்ளவும்.   (ரவை  மிகவும்  பெரியதாகவும்  இருக்கக்  கூடாது,  அதே போல  மாவாகவும்  இருக்கக்  கூடாது.  அப்போது  தான்  கட்டி தட்டாமல்  உதிர்  உதிராக  வரும்)

சலித்த  ரவை  ஒரு டமளர்  இருந்தால்  இரண்டு டம்ளர்  தண்ணீர்  ஒரு  வாணலியில்  ஊற்றி  நன்கு  கொதிக்கவைத்து,  தண்ணீர்  நன்கு  கொதித்ததும்,  இந்த  ரவையைக்  கொட்டி  உப்புமா  மாதிரி  கிளறிக்  கொள்ளவும்.

பிறகு  இந்தக் கலவையை  ஒரு  பாத்திரத்திற்கு  மாற்றி, பிரஷர்  குக்கரில்  மூன்று  விசில்  விட்டு  வேக வைக்கவும்.

மற்றொரு அடுப்பில்  எடுத்துக்கொண்ட  வெல்லத்தைப் போட்டு  சிறிது  தண்ணீர்  ஊற்றி  வெல்லம் கரைந்து  கொதித்ததும்  வடிகட்டிக் கொள்ளவும்.

பிறகு  இந்த  வெல்லத்தில்  ஏலப்பொடி , தேங்காய்  துருவல்  சேர்த்து  நன்கு  கொதிக்க வைத்து  பின்  வேகவைத்த  அரிசிக்கலவையை  சேர்க்கவும்  (  இந்த  வெந்த  அரிசிக்கலவையை  நன்கு  ஒரு ஸ்பூன்  நெய்  சேர்த்து நன்கு  உதிர்த்தபின்  சேர்த்தால்  கட்டி தட்டாது)

இப்போது  களி நன்கு  இறுகி வரும்.  அப்போது  இறக்கி வைத்து  முந்திரி, திராட்சை  நெய்யில்  வறுத்துப்  போட்டு  மேலும்  இரண்டு  ஸ்பூன்  நெய்  விட்டுக்  கிளறிக்  கொள்ளலாம்.  இப்போது  களி  ரெடி.

ஏழுகறிக்  கூட்டு.

இந்தக்களிக்கு  சற்று  காரமான  ஏழுகறிக் கூட்டு நல்ல  கூட்டணி.
;
மொச்சை, பரங்கி, பூசணி, அவரை,  சேப்பங்கிழங்கு,  சேனை,  பச்சைப்பட்டாணி  என  ஏழு அல்லது  ஒன்பது  காய்கறிகள்  சேர்த்து  வேகவைத்து  பின்பு  மிளகாய், தனியா, கடலைப்பருப்பு,  தேங்காய்  துருவல் இவற்றை  நன்கு  சிவக்க  வறுத்து  சிறிய  எலுமிச்சை  அளவு  புளியுடன்  சேர்த்து  அரைத்து  வெந்த  காய்கறிக் கலவையுடன்  சேர்த்து  (புளித்தண்ணீரிலும்  வேகவிடலாம்)  உப்பு, பெருங்காயம்  சேர்த்து  கடைசியில்  தேங்காய்  எண்ணையில்  கடுகு, கறிவேப்பிலை  தாளிக்கலாம்.

வேண்டுமானால்  சிறிது  வெந்த  துவரம்பருப்பையும்  சேர்த்துக் கொள்ளலாம்.  என்  அம்மா  துவரம் பருப்பு  சேர்க்காமல்  தான்  செய்வாள்.

இவற்றை  ஸ்வாமிக்கு  ஆறு  ஆறரைக்குள்  நைவேத்தியம்  செய்யணும். 

பி. கு.  அரிசி  ரவை  முதல்நாளே  மடியாகத் தயார் செய்யலாம்.  சாயந்திரம்  விளக்கு வைத்ததும்  அரிசியை  வறுக்கக்  கூடாது.
அதேபோல  காய்கறிகளை  முதல்நாள்  இரவே  நறுக்கி  வைத்துக்  கொள்ளலாம்.

வரும்  வெள்ளிக்கிழமை  ஆருத்ரா  தரிசனம்.

அனைவருக்கும்  " ஆருத்ரா நல்வாழ்த்துக்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக