செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...


உலகம் வியந்த கோவில்ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்...

உலக மக்களை அசரவைக்கும் கட்டுமானங்களை உருவாக்குவதில், நம் முன்னோர்கள் அசகாயசூரர்கள். இந்தியாவின் அற்புத கட்டடக் கலை உன்னதத்தின் உச்சபட்ச படைப்பாக, எல்லோரா குகையில் அமைந்துள்ளது. அதனோடு கைலாசநாதர் கோவிலையும் குறிப்பிடலாம். இதனை மனிதர்கள்தான் உருவாக்கினார்களா? இல்லையேல் அமானுஷ்ய சக்தி வாய்ந்த அயல்கிரகவாசிகள் படைத்துள்ளார்களா? என, இன்றளவிலும் காண்போரை வியக்க வைக்கிறது கைலாசநாதர் கோவில்.

கல்லிலே கலைவண்ணத்தை இப்படியும் செதுக்க முடியுமா என்று இதனைப் பார்த்து மலைக்காதவர்களே இல்லை. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட எல்லோரா குகையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அப்படி என்ன அதிசயம்? அனைத்துமே அதிசயம்தான். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கோவில் இதுதான். மலையைக் குடைந்து அமைக்கப்படும் கோவில்களை குடைவரைக் கோவில் என்று அழைப்பார்கள். இந்தக் குடைவரைக் கோவிலோ, அதிலும் வித்தியாசமானது. மற்ற குடைவரைக் கோவில்கள் எல்லாம். மலைப் பாறையின் அடிப்புறத்தில் ஆரம்பித்து, பக்கவாட்டுகள் வழியாக, உச்சிவரை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளன.


ஆனால் இந்த பிரம்மாண்ட கோவிலோ, மலையின் உச்சியில் இருந்து தொடங்கி, அடிப்பாகம் வரை செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் கிரேன்கள், ராட்சத இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள இந்தக் காலத்திலேயே, இப்படியொரு கட்டடத்தை எழுப்புவதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அகழ்வாராய்ச்சியில் 34 குகைக் கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. அவற்றில் 16-ஆவதாக உள்ள கைலசநாதர் கோவில், கடந்த எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் முதலாம் கிருஷ்ண ராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது.


உச்சியில் தொடங்கி அடிப்பாகம் வரை செதுக்கப்பட்ட இந்த வித்தியாசமான குடைவரைக் கோவில், நூற்றுக்கணக்கான பணியாளர்களின் சுமார் 6 ஆண்டு கால உழைப்பில் உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. கைலாசமலையை நினைவுகூரும் வகையில் இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கொடிமரம், மிகப் பெரிய நந்தி, பிரகார மண்டபம், 5 சன்னதிகள், கருவறை - எனக் கோவில் முழுவதுமே ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவிலின் இருபுறச் சுவர்களிலும் ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசச் சம்பவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. மேலும், கைலாச மலையை ராவணன் தூக்க முயல்வதும், கால் பெருவிரலால் மலையை சிவபெருமான் அழுத்துவதும் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்று. மண்ணிலே சொர்க்கம் காண விரும்புவோர், தவறாமல் சென்று தரிசிக்க வேண்டிய இடம், எல்லோரா கைலாசநாதர் ஆலயம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக