புதன், 1 ஏப்ரல், 2020

ஸ்ரீராம நவமி 2020: குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் நோய் பயம் நீக்கும் ஸ்ரீராமர் ஜாதகம்


ஸ்ரீராம நவமி 2020: குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் நோய் பயம் நீக்கும் ஸ்ரீராமர் ஜாதகம்

சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர் ஸ்ரீராமர் அதைத் தான் ராம நவமி என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். சில வருடங்களில் இந்த நன்னாள் பங்குனியில் மாதத்தில் அமைவதும் உண்டு. இந்த ஆண்டு நாளைய தினம் ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்ரீ ராம நவமி கொண்டாடுகின்றனர். இந்த நாளில் யோகங்கள் நிறைந்த ராமரின் ராமரின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து விரதம் இருந்து வணங்கினால் நோய்கள் நீங்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.


அயோத்தி மன்னர் தசரதருக்கும் கவுசல்யாவிற்கும் சித்திரை மாதம் நவமி திதியில் மூத்த மகனாக அவதரித்தார் ஸ்ரீராமர். மக்களை காப்பதற்காக மகாவிஷ்ணு மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்கள் பட்ட துன்பங்களை எல்லாம் அனுபவித்திருக்கிறார். ஸ்ரீ ராமபிரான் அவதாரம் நிகழ்ந்த போது

மேஷத்தில் சூரியன் உச்சம், கடகத்தில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம், துலாம் ராசியில் சனி உச்சம், மகரத்தில் செவ்வாய் உச்சம், மீனம் ராசியில் சுக்கிரன் உச்சம் என மொத்தம் 5 கிரகங்கள் உச்சம் பெற்றும், மனோகாரகன் சந்திரன் ஆட்சி பெற்றும் அமர்ந்திருந்த அம்சமான நேரத்தில் அவரது அவதாரம் நிகழ்ந்தது.

அஷ்டமியும் நவமியும் ஆகாத திதிகள் என்றும் அந்த திதிகள் வரும் நாட்களில் எந்த நல்ல விசயங்களும் செய்யக்கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணராகவும், நவமி திதியில் பகவான் ராமராகவும் அவதரித்து அந்த திதிகளுக்கு நன்மை அளித்து மக்கள் கொண்டாடும்படி செய்துள்ளார் மகாவிஷ்ணு. பல சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும் பொருளையும் வாரி வழங்கும். நோய்கள் நீங்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.


ராமர் ஜாதகம்
நவமி திதியில் உதித்த சக்ரவர்த்தி திருமகனின் ஜாதகத்தில் நவகோள்களின் நிலையை பார்த்தால் ஸ்ரீ ராமர் பிறந்த போது சூரியன், செவ்வாய், சுக்கிரன், குரு, சனி ஆகிய ஐந்து முக்கிய கிரகங்கள் உச்சத்தில் இருந்ததாக ஜாதகம் கணிக்கப்பட்டுள்ளது. கடகம் ராசியில் சந்திரன் ஆட்சி பெற்றுள்ளார். இரண்டுக்குடைய சூரியன் மேஷத்தில் உச்சம். மூன்றுக்குடைய புதன் சூரியனுடன் சேர்க்கை பெற்று புத ஆதித்ய யோகம். நான்கிற்க்கும் பதினொன்றுக்கும் உடைய சுக்கிரன் உச்சம். ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் உச்சம். ஆறுக்கும் ஒன்பதுக்கும் உடைய குரு உச்சம். ஏழுக்கும் எட்டுக்குமுடைய சனி உச்சம். ஆக ஐந்து கிரகங்கள் உச்சமடைந்துள்ளன.


குரு மங்கள யோகம்
ஸ்ரீராமர் கடக லக்னம், கடக ராசி அவர் பிறந்த போது, நவ கிரகங்கள் எங்கெங்கு இருந்தன என்று பார்த்தால் ஐந்து கோள்கள் உச்சத்தில் இருக்க கடக லக்னம் புனர்பூச நட்சத்திரத்தில் சந்திரனும் பிரகஸ்பதியும் இணைந்து குரு சந்திர யோகத்தில் இருக்கிறார்கள். குருவும் செவ்வாயும் நேருக்கு நேராக பார்த்து குரு மங்கள யோகத்தில் இருக்கிறார்கள். சந்திரனும், செவ்வாயும் நேருக்கு நேராக பார்ப்பதும் யோகம்தான்.

ராமரின் வாழ்க்கை

ராமரின் வாழ்க்கையில் அவரது அம்மாவும், வளர்ப்பு தாயான சித்தியும் முக்கிய பங்காற்றியுள்ளனர். கடகம் கால புருஷத்திற்கு நான்காவது வீடு. ராமர் ஜாதகத்தில் நான்காவது வீடான துலாமில் சனி உச்சமடைந்து வக்ரமடைந்திருக்கிறார். சனி ஏழு மற்றும் எட்டிற்கு உரியவர். நான்கில் சனி உச்சம். சனி ஆயுள் காரகன், வேலைக்காரன், தசரதனின் இன்னொரு மனைவி கையேயி ராமரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர் அவரால்தான் ராமர் தனது மனைவியோடும் தம்பியோடும் வனவாசம் சென்றார்


என்னென்ன யோகங்கள்

யோகங்களிலேயே சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். பஞ்சமகா புருஷ யோகங்களில் நான்கு யோகங்கள் ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் அமைந்துள்ளன. லக்ன கேந்திரத்திலும் சந்திர கேந்திரத்திலும் குரு உச்சமாகி ஹம்ஸ யோகமும், சனி உச்சமாகி சச யோகமும், செவ்வாய் உச்சமாகி ருச்ச யோகமும், சுக்கிரன் உச்சமாகி மாளவியா யோகமும அமைந்திருக்கிறது. மேலும் ராகுவும் கேதுவும் குரு புதன் வீடுகளில் நின்று ராஜயோக அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

உதாரண புருஷர் ராமர்

ஸ்ரீராமர் ஜாதகத்தில் மாத்ரு ஸதானாதிபதி சுக்கிரன் பித்ரு ஸ்தானத்தில் உச்சம். பித்ரு ஸ்தானாதிபதி குரு மாத்ரு காரகன் சந்திரனின் வீட்டில் உச்சம். மேலும் பித்ரு காரகன் உச்சம், மாத்ரு காரகன் ஆட்சி எனும் அமைப்பை பெற்று தாயிற் சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..."என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர்.

அவதார புருஷன்

பொதுவாக களத்திர ஸ்தானாதிபதியோ அல்லது களத்திர காரகனோ உச்சமடைந்தால் அவர்களுக்கு பலதார அமைப்பு ஏற்படும். அவதார புருஷனான ஸ்ரீ ராம பிரான் ஜாதகத்தில் களத்திர காரகனும் உச்சம் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் என்றாலும் லக்னத்திலும் ராசியிலும் உச்சம் பெற்ற குரு நின்று 9ம் பார்வவையாக களத்திர காரகனை பார்ப்பதாலும் ஆன்மீக கிரகம் சூரியன் ஸம சப்தமமாக களத்திரஸ்தானாதிபதியை பார்பதாலும் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிவர் ராமர்.


ராவணனை வெல்ல காரணம்
ராமர் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் ராகு இருக்கிறார். நோய், கடன், எதிரி ஸ்தானம். ராகு அரக்கன். ராவணன் என்ற அரக்கனை கொல்ல வேண்டியதுதான் ராம அவதாரத்தின் நோக்கம். ராமரின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனது மனைவியை காப்பாற்ற அவர் போர் செய்தார். செவ்வாயின் ஏழாம் பார்வை லக்னத்தின் மீது விழுந்ததே வெற்றிக்கு காரணம்.


எதிரிகள் தொல்லை ஒழியும்
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அச்சத்தால் எல்லோரும் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் ஸ்ரீ ராமநவமியை வீட்டிலேயே கொண்டாடலாம். ராம நவமி நாளில் அதிகாலையில் குளித்து விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வரும் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லை தீரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும் என்பது நம்பிக்கை.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக