ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

அழகரின் பதினெட்டாம்படியில் காவலனாக இருக்கும் கருப்பனின் கதை தெரியுமா?

அழகரின் பதினெட்டாம்படியில் காவலனாக இருக்கும் கருப்பனின் கதை தெரியுமா?

சித்திரைத் திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவபர் கள்ளழகர்தான். அழகர் கோயில் வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான தலம். 'ஆக்னேய புராணம்', 'ஹாலாஸ்ய (மதுரை) மஹாத்மியம் போன்ற பல்வேறு புராணங்களிலும், இந்தத் தலத்தின் கதையை அறிந்துகொள்ள முடியும். அதில் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்வார்கள், 123 பாசுரங்களில் இந்தத் தலத்தின் மகிமையைப் பாடியிருக்கிறார்கள்.

கதை
சிலப்பதிகாரத்தில், முக்திதரும் இந்தத் தல மகிமைகள் குறித்து கவுந்தியடிகள், கோவலன் கண்ணகிக்கு எடுத்துக் கூறுகிறார். பிற்கால இலக்கியங்களான, 'அழகர் கலம்பகம்', 'அழகர் அந்தாதி', 'அழகர் கிள்ளை விடுதூது', 'சோலைமலைக் குறவஞ்சி' ஆகிய நூல்கள் அழகர் கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன. இத்தனை சிறப்புகளை உடைய அழகர் கோயில், ஒரு வைணவத் தலம் மட்டுமன்று. அது, பதினெட்டாம்படிக் கருப்பன், விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு என்று பல்வகையான வழிபாடுகளையும் தன்னுள் அடக்கி, அனைத்துத் தரப்பு மக்களும் வந்து தொழும், பண்பாட்டுப் பொக்கிஷமாகத் திகழ்கிறது.   

அழகர் கோயில் மூலவருக்கு 'பரமஸ்வாமி' என்று பெயர். நின்றகோலத்தில் எழிலுற ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கும் இந்த இறைவனின் உற்சவருக்கே 'அழகர்' என்று பெயர். வடமொழியில் 'சுந்தரராஜன்.' பெயரில் மட்டுமல்ல, அவரின் தோற்றமும் கொள்ளை அழகு. உலகில் இவர் அழகுக்கு நிகரான உற்சவ மூர்த்திகள் இல்லை என்பது அனைவரின் கருத்து. அதனால்தான் அதைக் கவர்ந்துபோக நினைத்தான் மலையாள தேசத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன்.

ஆனால், பாதுகாப்பான கோட்டையிலிருந்து அழகரைக் கவர்ந்து வருவதென்பது இயலாத ஒன்றாக இருந்தது. எனவே, அந்தப் பணியை 18 மந்திரவாதிகளிடம் ஒப்படைத்தான். அவர்கள் அழகரைக் கவர்வதற்குமுன் அவரின் சக்தியை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆலயத்துக்குள் மறைந்திருந்து மந்திரம் ஜபிக்க, ஒரு மந்திர மையைப் பயன்படுத்தினர். அந்த மையைக் கண்களின் இமைகளில் பூசிக்கொள்ள அவர்கள் உருவம் மறைந்துவிடும். அப்படித் தந்திரமாக மறைந்திருந்து அழகரின் மூர்த்தத்தில் இருந்த சக்தியை களவாட முயன்றனர்.

கதை
கயவர்களின் திட்டத்தை முறியடிக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், கோயில் பட்டர் ஒருவரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் குறித்து எச்சரித்து மறைந்தார். கண்விழித்த பட்டரோ, மந்திரவாதிகளைப் பிடிக்க ஓர் உபாயம் செய்தார். மறுநாள் காலை நிவேதனத்துக்கு வழக்கமாகச் செய்யும் பொங்கலில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுவதும் உருட்டி வைத்தார். பொங்கலின் வாசனையால் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள், அதை எடுத்துத் தின்றனர்.

அடுத்த கணம், அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்த மிளகினால் உண்டான காரம் தாங்காமல் கண்ணீர் விட்டனர். கண்ணீரில், கண் இமைகளில் இட்டிருந்த மை அழிந்தது. மை அழிந்ததும், அவர்களின் மாய சக்தி மறைந்து அவர்களின் உருவமும் வெளிப்பட்டது. உடனே, அங்கிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்துக் கொன்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு படிக்கட்டில் புதைத்தனர். மந்திரவாதிகளுக்குத் துணையாக வந்த காவல் தெய்வத்தையும் மந்திர சக்தியால் பிடித்துக் கட்டினர்.

அந்தத் தெய்வமோ, அழகரின் அழகில் மயங்கி, தான் இனி இங்கிருந்து அழகருக்குக் காவல் செய்வதாகச் சொல்லியது. அதற்குக் கூலியாகத்  தினமும், அழகருக்குச் செய்யப்படும் அர்த்தஜாம நிர்மால்ய நிவேதனங்களைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அதற்கு எல்லோரும் சம்மதிக்க இன்றளவும் பதினெட்டாம்படிக் கருப்பாக இருந்து அழகரைப் பாதுகாக்கிறது.

ஆலயத்தின் சொத்துகள் முழுமைக்கும் அவர்தான் காவல். 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற ஒரு சொலவடை உண்டு. அந்த அளவுக்கு அழகருக்கு ஆபரணங்கள் உண்டாம். திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது பதினெட்டாம்படிக் கருப்பனிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியல் வாசித்துக் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேபோல திரும்பும்போதும், அதே நகைகள் வந்திருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்தே உள்ளே செல்ல வேண்டும். இன்றும், ஆலயம் மூடியதும் சாவியைப் பதினெட்டாம்படிக் கருப்பின் சந்நிதியில் கொண்டு வந்து வைக்கும் வழக்கம் உள்ளது.

பதினெட்டாம்படியின் வாசலாக இருக்கும் கருப்பனுக்கென்று உருவம் இங்கு இல்லை. பெரும் கதவே கருப்பனின் வடிவாக வணங்கப்படுகிறது. எப்போதும் மூடியே இருக்கும் இந்தக் கதவு, பிரம்மோற்சவத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளலுக்காக மட்டுமே திறக்கப்படும். மூடியிருக்கும் கதவுக்கே இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

பதினெட்டாம்படிக் கருப்பின் காவலைத் தாண்டி எதுவும் உள்ளே செல்ல இயலாது. தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்குக் கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கருப்பனின் சந்நிதியில் வைத்து, அது தூய்மையாகக் கொண்டுவரப்பட்டது என்று பிரமாணம் செய்தபின்னே உள்ளே கொண்டு செல்ல இயலும். கருப்பனிடம் செய்யும் பிரமாணம் நீதி தேவன் சந்நிதியில் செய்யும் பிரமாணத்துக்கு இணையானது.

சுற்றுப்பட்டு ஊர்களில் இருப்பவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகள் பலவற்றுக்கும் கருப்பன் சந்நிதியில் பிரமாணம் சொல்லித் தீர்க்கிறார்கள். கருப்பன் சந்நிதியில் பொய் சொன்னால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை.
அழகர் கோயிலின் மற்றொரு சிறப்பு, அங்கு இருக்கும் சைவம் சார்ந்த இறைவழிபாடு. 'திருப்பதிகளுக்கெல்லாம் முதன்மை திருமாலிருஞ்சோலை' என்று பெயர்பெற்ற அழகர் கோயிலில் விநாயகர் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் காணப்படுகின்றன.

இரு சந்நிதிகளிலும் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. வீர சைவரான, லிங்காயத்து ஒருவரின் பெரிய சிலை ஒன்றும் ஆலயத்துள் காணப்படுகிறது. அந்த அளவுக்குச் சைவ - வைணவ வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆதரிக்கப்பட்டத் தலமாக அழகர்மலை இருந்துவந்துள்ளது.

கருப்பன்
இந்த ஆலயத்தில் பஞ்சபூதங்களை மையமிட்ட பண்டிகைகள் விசேஷமாகக் கொண்டாடப்படும். பிருதிவி (மண்) நாளாகிய விநாயகர் சதுர்த்தியும், அப்பு (நீர்) நாளாகிய பதினெட்டாம் பெருக்கும், தேஜஸ் (அக்னி) நாளாகிய கார்த்திகை தீபமும், வாயு (காற்று) நாளாகிய சரஸ்வதி பூஜையும், ஆகாச நாளான மகரசங்கராந்தியும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இந்தத் தலத் தீர்த்தங்களின் அதிதேவதையான ராக்காயி அம்மனுக்கு அமாவாசையன்றும், பதினெட்டாம்படிக் கருப்புக்கு பௌர்ணமியன்றும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் புகழ்பெற்றது. அழகர் மலையிலிருந்து மதுரை செல்லும் வழியில் 400-க்கும் அதிகமான மண்டகப்படிகள் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக