ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஆச்சரியம் அளிக்கும் சங்கரன் கோவில் சங்கரலிங்கனார்!

ஆச்சரியம் அளிக்கும் சங்கரன் கோவில் சங்கரலிங்கனார்!


திருமாலும் ஈசனும் நாங்கள் இருவரும் ஒருவரே என்று எல்லாம் வல்ல சக்தி வடிவம் அம்பிகைக்கு உணர்த்திய திருத்தலம் சங்கரன்கோவில் ஆகும். இங்குள்ள நாக சுனையில் நீராடினால் அனைத்து நோய்களும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை. இந்த தலத்தில் சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணர்,கோமதியம்மன் என மூன்று தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். துர்க்கை தெற்கு திசை நோக்கி வீற்றிருப்பதால் எம பயம் போக்கி அருள்கிறாள். மார்ச் மற்றும் செப்டம்பர் மாத 21 ,22 ,23 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள் சங்கரலிங்கத்தின் மீது விழும் அற்புதம் நிகழ்கிறது. இங்குள்ள வேண்டுதல் பெட்டியில் விஷ ஜந்துக்களின் உலோக வடிவங்களை நேர்த்திக்கடன் போட்டால் அவற்றால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அனைத்து தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் கோமதியம்மனுக்கு தங்கப்பவாடை சாத்தப்படுகிறது.


மரகதக்கல் பதிக்கப்பட்ட தங்க ஊஞ்சலில் தினமும் பள்ளியறை உற்சவம் நடக்கிறது. அம்மன் சன்னதியின் வாயு மூலையில் உள்ள புற்றுமண் அனைத்து சரும நோய்கள் மற்றும் விஷக்கடி மருந்தாகிறது. வசனக்குழி எனும் பள்ளத்தில் அமர்ந்து பூஜை செய்தால் பேய், பிசாசு மனநலப் பாதிப்புகள் நீங்குவதாக நம்பிக்கை. இங்கு சுவாமிக்கு பெரிய தேராகவும் அம்பிகைக்கு ஒரு தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. அம்மனுக்கு செவ்வரளி பூ பரப்பி மாவிளக்கு ஏற்றும் வழிபாட்டு முறை சிறப்பாக நடைபெறுகிறது. சிவா வழிபாட்டு முறைப்படி திருநீறும் வைணவ முறைப்படி தீர்த்தமும் வழங்கும் பாரம்பரிய வழிமுறை உள்ள ஸ்தலமாகும். அர்த்தஜாமப் பூஜைக்கு பின் தரும் பிரசாதப் பாலை முப்பது நாட்கள் தொடர்ந்து பருகினால் குழந்தை வரம் அற்றவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சங்கர நாராயணரைக் காண அம்பிகை புரிந்த தவம் ஆடித் தபசு விழாவாகவும், ஈசன் சுயரூபம் வேண்டி தேவி புரிந்த தவம் திருக்கல்யாண விழாவாகவும் கொண்டாடப் படுகிறது. சங்கன், பதுமன் என்ற இரண்டு நாக தேவர்களுக்கு ''ஹரிஹர'' ஒற்றுமை உணர்த்திய தலமாகும் சங்கரன்கோவில். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக