திங்கள், 25 டிசம்பர், 2017

கல் கருடன் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் நாச்சியார்கோவில்



கல் கருடன் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் நாச்சியார்கோவில்

இறைவன்    ஸ்ரீநிவாசப் பெருமாள்
திரு நறையூர் நம்பி ,
தாயார்    வஞ்சுளவல்லி

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.

இது ஒருமாடக்கோயில்(யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும்

ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.

நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.

கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார்.
இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.
அம்மனின் இடுப்பில் சாவிகொத்து வைத்து இருப்பதையும் காணலாம்.
இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான்.

பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.

 கருவறையில் பெருமாளோடு, பிரம்மா, ப்ரத்யும்னன்,பலராமன், அநிருத்தன்,புருஷோத்தமன் ஆகிய ஐவரும் உடன் அருள்பாலிக்கின்றனர்


தலபுராணம்
கதை 1
சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில்,
மேதவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வாழ்ந்து வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் மணிமுத்தாறு நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.

அன்னை மகாலெட்சுமி இங்கு வந்து தங்கி வளர  திருவுளம் கொண்டார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டிப் பேணிக் காப்பாற்றி வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார். அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.

பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது.

கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.

தலபுராணம்
கதை 2
சைவ வைஷ்ணவ ஆலயங்களின்  ஒற்றுமை
விளக்கும்
சித்தநாதேஸ்வரம் சிவன் கோவில்

ராமாயண காலத்திற்கு பிறகு அனுமனுக்கே முதலிடமாக போனதில் கருடனுக்கு வருத்தம்
அவர் மன புழுக்கத்தை
ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சொல்ல
மகாலெட்சுமி நான் மனித உருவில் மறைந்து வளர்கிறேன் நீ கண்டுபிடித்து எம்பெருமானுடன் திருக்கல்யாணம் செய்து வை என கூறி
மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே அன்னை மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநரையூர் சித்தீஸ்வரம்.

மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் சிவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார்.

சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் மனைவி விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார்.

மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து  வந்தார்.

கருட பகவான் உலகத்தையே சுற்றி வந்து மகாலெட்சுமி இருக்கும் இடத்தை கண்டறிந்தார்.
கருடனின் விண்ணப்பத்திற்கு இணங்க மகாலெட்சுமியை
மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார் மகரிஷி.

சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது. மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.

குபேரன் வழிபட்ட தலம்

மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. குபேரன், தேவர்கள், இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர். சிவ ஆலயத்தினும் முனிவர் மகளாக மகாலட்சுமி அவதரித்து வளர்ந்த தலமாக இருப்பதால் இந்த ஆலயம் சைவ வைஷ்ணவ ஆலயங்களுக்கு ஒற்றுமையாக திகழ்கிறது.
பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை.

சித்தர்கள் வழிபட்ட தலம்

சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாமம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு.

சித்தநாதேஸ்வரம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்து ஐந்தாவதாகப் போற்றப் படுகிறது. திருநரையூரில் சித்தநாதேஸ்வராக எழுந்தருளியுள்ளார் ஈசன். இங்கிருக்கும் லிங்கம் மிகப்பழமையானவை.

கோரக்க சித்தர்

கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறினால் 10 நிமிடத்தில் திருநரையூரை அடையலாம். அருகிலேயே மகாலட்சுமி மணம் முடித்த நாச்சியார் கோவில் உள்ளது.

நாச்சியார் கோவில்
கருடனை பற்றி

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது தூண் மண்டபம் உள்ளது. அதனை அடுத்து படிகளில் ஏறிச்சென்று மூலவர் கருவறையை அடையலாம். மூலவர் கருவறைக்கு இடது புறம் உள்ள நாச்சியார்கோயில் கல் கருடன் சேவை புகழ்பெற்றதாகும்.

இந்த விழா வருடத்தில் மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் நடைபெறும். இந்த நிகழ்வின் பொழுது 4 டன் எடையுள்ள கல்லினால் செய்யப்பட்ட கருடாழ்வார் வீதிஉலா நடைபெறும்.

இதன் சிறப்பு என்னவெனில் இத்தனை எடையுள்ள சிலையை முதலில் 4 பேரும் பின்னர் 8,16,32,64 கடைசியாக 128 பேர் தூக்குவர் .
 முதலில் வெறும் 4 பேரால் தூக்க முடிந்த அதே சிலையை கோவிலை விட்டு வெளியே வரும்பொழுது 128 பேர் இல்லாவிடில் தூக்கமுடியாது.

இதுவே இக்கோவிலின் அதிசய சிறப்பாக கருதப்படுகிறது. நிகழ்ச்சி முடிவில் சிலையை மீண்டும் கோவிலுக்குள் எடுத்து செல்லும் பொழுது சிலை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16,8 என குறைந்து இறுதியில் 4 பேர் மட்டும் சிலையை கோவிலுக்குள் எடுத்துச்செல்வர்.

வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும்.

இவ்வாறு ஏன்நடைபெறுகின்றது.

ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம்,

தாயார் அன்னவாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில்எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்லவேண்டுமல்லாவா? எனவே கல்கருடனின் எடை கூடிக்கொண்டேசெல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .

இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

கருடாழ்வாருக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சாத்தி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். பட்டு வஸ்திரம் சாத்தி வழிபட்டால், எண்ணங்கள் ஈடேறும்.

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வாரை வணங்கினால், மகப்பேறு கிடைக்கும். திருமணம் கைகூடும். மேலும் வி‌ஷ ஜந்துக்களின் பயம் போகும்.

பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது.

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வாருக்கு சுவாமியே சமாச்ரயணம் செய்து வைத்ததால் ஆழ்வாரால் ‘நம்பி’ என்று மங்களாசாசனம் செய்யப்பட்டவர் பெருமாள்
சமாச்ரயணம் என்பது திருவிலச்சினைகளை (சமாச்ரயணம்) அருளி திருமந்திரம் சொல்லி தருவது.

கோச்செங்கட் சோழன்

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில் (யானை ஏற முடியாத கோயில்)

கோச்செங்கண் என்ற சோழ மன்னன் சிறந்த சிவபக்தன். ஒரு போரில் தோற்றபோது  இங்கு தெப்பகுளத்தில் நீராடி பெருமாளிடம் தெய்வவாளினைப் பெற்று எதிரிகளை வென்றான்.  வைணவ பக்தனாகவும் ஆனான். இந்த ஆலயத்தை கட்டுவித்தான் என்ற வரலாறும் உண்டு.

சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்:

அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்

கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர்

வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு

செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந் திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது.

அதிசயத் தலமாம் திருநறையூர் செல்லுவோம்! திருமாலின் அருள் பெறுவோம்!

கடைசியாய் பதிவிட்டுள்ள கோபுரம் மகாலெட்சுமி, சித்தர்கள் திருநரையூர் சிவன் கோவில் சித்தீச்சரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக