புதன், 28 மார்ச், 2018

ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.


ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். 

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன்.

மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து நித்யவாசம் செய்வதால், ‘மார்க்கண்டேய ஷேத்திரம்’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துழாய்காட்டில் பூமாதேவி இங்கு அவதரித்ததால் துளசி வனம் என்ற பெயரும் உண்டு.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், நாச்சியார் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் எழுந்தருளியுள்ளனர். மார்க்கண்டேயர் தெற்கு நோக்கி அமர்ந்து கன்னிகா தானம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல பெருமாள், நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களுடன் காட்சியளித்துள்ளார்.

இந்த ஆலயத்தில் உப்பு இல்லாமலேயே பெருமாளுக்கு சகல நைவேத்தியமும் செய்யப்படுகிறது. உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சந்நிதிக்கு அப்புறம் ஒருவரும் கொண்டு செல்லக்கூடாது.

அதனாலேயே இந்த பெருமாளுக்கு உப்பை விலக்கிய பெருமாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் தனியாக தாயாருக்கு சன்னிதி கிடையாது. பெருமாளுக்கு பக்கத்தில் பூமி நாச்சியார் மட்டுமே இருக்கிறார். பூமி நாச்சியாரை பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக ஆஸ்தானத்தை விட்டு எழுந்தருளும் வழக்கம் கிடையாது.

இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.

ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுகிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக