சனி, 24 மார்ச், 2018

இன்ப வாழ்வு தரும் ராமநவமி விரதம்... ராமநவமி: விரதம் இருப்பது எப்படி?



இன்ப வாழ்வு தரும் ராமநவமி விரதம்... ராமநவமி: விரதம் இருப்பது எப்படி?

🙏 ராமநவமி நாளில் ராமர் கோவில்களுக்கு சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோவில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுவதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

ராமநவமி விரதம் இருக்கும் முறை :

🙏 மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக் கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

🙏 ராமநவமியான நாளை(25.03.18) அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும்.

🙏 பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்றவற்றை படைக்கலாம். ராமநவமி அன்று முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைபிடிக்க வேண்டும்.

🙏 இந்த விழா கொண்டாடப்படும் நேரம் கோடைக்காலம் என்பதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை தரக்கூடியது. ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், ம என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஐதீகம்.

🙏 ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

🙏 பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளி காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும்.

🙏 காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக