ஞாயிறு, 22 டிசம்பர், 2019

யார் இந்த சாண்டா கிளாஸ்...


யார் இந்த சாண்டா கிளாஸ்...

 
கிறிஸ்மஸ் நாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண்தாடி தாத்தாதான். இவரது ஆங்கிலப் பெயர் சாண்டா கிளாஸ். கிறிஸ்து பிறந்த பின்பு 270 வருடத்தில் (15 March 270), அந்த காலத்து ரோம சாம்ராஜ்யத்தில் இருந்த துருக்கியின் பாடாரா பகுதியில் லைசியா (Patara, Lyciay, Turkey) என்ற துறைமுக ஊரில் பிறந்தார் நிகோலாஸ். தனது இளம் வயதில் பெற்றோரை இழந்த நிகோலாஸ் ஏழை மக்களுக்கு உதவுவதே இயேசு அன்பை பிறருக்கு சொல்லும் எளியமுறையாக கருதி அநேக ஏழை மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்தார். கிறிஸ்துவ இறையியல் பணியை சிறப்பாக செய்த நிகோலாஸ், லைசியா பகுதியின் பிஷப் பதவியை ஏற்றார். பிஷப் பதவியில் இருந்த பொழுது, டிசம்பர் 6ம் தேதி இரவு வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை குழந்தைகளுக்கு பரிசாக கொடுப்பார்.

ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். பின்பு பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் ஏழை மக்களுக்கு உதவும் பணியை தொடர்ந்து பின்னர் தனது 73- ம் வயதில் (6 December 343) இறைவனடி சேர்ந்தார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் துருக்கியில் உள்ள மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் இன்றளவும் குழந்தைகள் மனதில் வாழ்ந்து வருகின்றார். செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.

அநேகர் பிரிவினர் கிறிஸ்மஸ் தினத்தை விமர்சையாக கொண்டாடுகின்றார்கள. ஒரு சில பிரிவினர் கொண்டாடுவதில்லை. ஒருவர் மற்றவர்களைப் பார்த்து குறை சொல்லக்கூடாது. பதினோரு மாதம் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள், வருடத்தின் இறுதி மாதத்தில் ஏழை மக்களை நினைவிற்க் கொள்ள வேண்டும். “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” லூக்கா 14:13. எத்தனை நாள் நாம் விருந்து உணவு சாப்பிட்டிருப்போம். டிசம்பர் மாதத்தில் அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லம் சென்று அவர்களோடு ஆறுதலாக பேசி ஒருநேர உணவை அவர்களுக்கு வழங்கலாமே. நம்மில் அநேகர் கிறிஸ்மஸ் நாளில் தான் அதைச் செய்ய விரும்புகின்றோம். ஒரே நாளில் அநேகர் சென்று அவர்களுக்கு உணவு கொடுப்பதால் அவர்களால் அதை சாப்பிட முடியாமல் வெளியே கொட்டுவார்கள். நான் ஒருமுறை அவ்வாறு ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற பொழுது அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை வாக்கிக் கொடுத்தேன். நாம் அவர்களது தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வேதம் சொல்கின்றது “தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்” (நீதிமொழிகள் 28:27).

நமது குழந்தைகளுக்கு நல்ல புத்தாடை அணிவித்து மகிழும் நாம், ஏழைக் குழந்தைகளுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” (நீதிமொழிகள் 19:17). ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் தரித்திரரையும் அன்போடு விசாரித்து நம்மால் இயன்ற அளவு உதவ வேண்டும். வருடத்தில் ஒரு முறையாவது நாம் குருடர்களையும், ஊனர்களையும், ஏழைகளையும் விருந்துக்கு அழைத்து உணவு கொடுப்போமா? அவர்கள் மீண்டும் நமக்கு விருந்து தர மாட்டார்கள். ஆனால் நமக்கு பலன் கர்த்தரிடத்திலிருந்து வரும். நீங்கள் அவ்வாறு ஏழை மக்களுக்கு உதவி செய்தால், இயேசு உங்களைப் பார்த்து சொல்வார், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு25:40). இதை வாசிக்கின்ற நீங்கள ஒவ்வொருவரும் டிசம்பர் மாதத்தில் சாண்டா கிளாஸ் போல ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். ஏழைகளை நேசிப்போம், அவர்களுக்கு உதவி செய்வோம் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உங்களுடைய பலன் மிகுதியாக இருக்கும். இதுவே நீங்கள் கொண்டாடும் உண்மையான கிறிஸ்மஸ்.
-------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக