திங்கள், 20 மார்ச், 2017

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகுமலை தூத்துக்குடி மாவட்டம்.



அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகுமலை
தூத்துக்குடி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை .


மூலவர்– கழுகாசல மூர்த்தி(முருகன்)
அம்மன்– வள்ளி,தெய்வானை
பழமை– 500 வருடங்களுக்கு முன்



இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு, இராமனிடம்,தன்னால் “என் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே; இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும்? எங்கு போய் இதைக் களைவது?” என்றார்.

அதற்கு இராமன், “நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி, பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்”என்றார்.

இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. சம்பாதி முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார்.


அந்நேரத்தில் முனிவர்களையும்,மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார்.இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது.

கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை‘ எனப் பெயர் பெற்றது.

கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்பர்
   *குமரன்மேற்கு* *முகமாக உள்ள *தலங்கள் மூன்று* என்றும் அதில் *இராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் *கழுகுமலை*என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான். இந்தக் குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது.இக்கோயிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.

இந்த கழுகாசலமூர்த்திக்கு முகம் ஒன்று,கரம் ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலைத் ‌தொங்க விட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார்.

பிற கோயில்களின் அசுரன் தான் முயலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும். ஆனால், இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது.

எனவே *சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும்*

  இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகனும்(‌செவ்வாய்) இருப்பது சிறப்பு. எனவே *குரு மங்கள ஸ்தலம்* என்கிறார்கள்.

கழுகாசலமூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம். இங்கு முருகனுக்குத் தனி பள்ளியறையும்,சிவபெருமானுக்குத் தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிசிறப்பாகும். இராமாயண கால தொடர்புடையது. இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும்,வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அமர்ந்த நிலையில் 4 அடி உயரத்தில் பெரிய திருமேனி.

திருவிழா:

வைகாசி விசாகம் 10 நாள் திருவிழாவாக ‌‌‌கொண்டாடப்படுகிறது.கந்த சஷ்டியில் 13 நாளும்,தைப்பூசத்தில் 10 நாளும், பங்குனி உத்திரம் 13 நாளும் திருவிழா ‌கொண்டாடப்படுகிறது.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம் :

‌‌கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் இவ்வழியாகச் செல்லும்.




சகல பாவங்களையும் நீக்கும் கழுகுமலை கழுகாசல மூர்த்தி

கோவில்பட்டியிலிருந்து 21.5 கிலோ மீட்டர் தொலைவில் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில். இத்திருத்தலம் பிறந்தார்க்கும் வாழ்ந்தார்க்கும் இறைவனை மனமார நினைத்து கசந்துள்ளம் உருக வழிபடுவோர்க்கும் வீடுபேறு அளிக்கும் திருத்தலமாக உள்ளது. அதாவது முக்தி அளிக்கும் திருத்தலமாகும். முற்காலத்தில் வனமாக இருந்த 300 அடி உயரமுள்ள உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே பழங்கோட்டை என்ற ஊரில் அதிமதுரபாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தார், அவர் வேட்டையாட வந்தபோது வனத்தில் இருந்து வேங்கை மரத்தடியில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நண்பகலில் பூஜை மணி ஒலி கேட்டு விழித்துப் பார்த்தபோது பசு ஒன்று பாறையில் தானாகப் பாலை சுரந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பாறையை அகற்றிப் பார்த்த போது அங்கே குகையும் அதனுள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகனும் காட்சியளிப்பதை கண்டு மகிழ்ந்து வழிபட்டார்.
மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்படாமல் தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என்றும் தேவர்கள் வந்து பூஜிக்கின்ற கடவுள் என்றும் உணர்ந்து மக்கள் வழிபட மன்னர் வசதி செய்து கொடுத்தார். ராமபிரானும் சீதா பிராட்டியாரும் வனத்திலிருந்த போது ராவணன் சீதையை கவர்ந்து சென்றான்.
அதனை தடுத்த சடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். நடந்தவற்றை ராமனிடம் கூறிவிட்டு சடாயு உயிர்விட்டது. ராமன் மிக வருந்தி சடாயுவிற்கு சடங்குகளை தானே செய்தார். இதை கேள்விப்பட்ட சடாயுவின் உடன்பிறப்பான சம்பாதி முனிவர் உடன்பிறந்தவனுக்கு செய்யவேண்டிய ஆமக்கிரிகைகளைகூட செய்ய இயலாத பாவியாகிவிட்டேனே என புலம்பினார். அது கண்ட ராமர் அவரை தேற்றி, தென்னாட்டில் 300 அடி உயரமுள்ள மலையடிவாரத்தில் ஒரு கையில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கி உன் பாவத்தை போக்கிக்கொள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்.
கழுகு முனிவராகிய சம்பாதி இந்த கோயிலுக்கு வந்து மலையிலேயே தங்கியிருந்து ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு விளங்கும் முருகப்பெருமான் சுப்பிரமணியரை வணங்கி தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார். சகல பாவங்களையும் நீக்கும் வல்லமை கொண்ட முருகன் குடிகொண்டிருக்கும் இத்தலத்தில் கழுகு முனிவர் வசித்து வந்ததால் இம்மலைக்கு கழுகுமலை என்று பெயர் வந்தது. கழுகுமலை முருகன் குறித்து 13ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் மூன்று திருப்புகழ் பாடல்களை இயற்றியுள்ளார். கோயில் மற்றும் மலைக்குன்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன. இதனை தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து தென் இந்திய கல்வெட்டுகள் என்ற நூலில் தொகுதி 4 மற்றும் 14ல் வெளியிட்டுள்ளனர்.
கோயில் தொடர்புடைய கல்வெட்டுகள் கோயிலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதியின் தெற்கு சுவரில் உள்ளது 11ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். தெற்கு வாசலில் 1902ம் ஆண்டு எட்டயபுரம் மன்னரால் நிறுவப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது 6வது நாள் சூரசம்ஹாரமும், 9ம் நாள் தெய்வானைத் திருக்கல்யாணத்தோடு 10 நாட்கள் நடக்கிறது. வைகாசி விசாகம் வசந்த விழாவாக 10 நாட்கள் நடக்கிறது. தினமும் 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலின் அமைப்பை வெளிநாட்டினரும் வந்து பார்த்து வியந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு செல்ல விரும்பும் வெளியூர் நபர்கள் தங்குவதற்கு கோவில்பட்டி மற்றும் சங்கரன்கோவிலில் தங்கும் தனியார் விடுதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக