செவ்வாய், 2 ஜூலை, 2019

பிள்ளையார் வழிபாட்டு பலன்கள்


பிள்ளையார் வழிபாட்டு பலன்கள்.

பலவித‌ மரங்களின் கீழே அமர்ந்திருக்கும் பிள்ளையாரை (விநாயகர்) வழிபடும் முறைகள் பற்றியும், அதனால் கிடைக்கப் பெறும் பிள்ளையார் வழிபாட்டு பலன்கள் பற்றியும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பிள்ளையார் வழிபாடு என்பது தலையில் கொட்டி கொள்ளுதல், காதைப்பிடித்து கொண்டு விக்கி போடுதல், எல்லா காரியங்களின் தொடக்கத்திலும் பிள்ளையார் பிடித்து வைத்து தொடங்குதல் என்பவை எல்லோரும் அறிந்ததே.

பொதுவாக பிள்ளையார் குளக்கரையிலும், மரத்தடியிலும் அருள்புரிவதைப் பார்க்கலாம். இதனால் அவர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

வன்னிமரப் பிள்ளையார்

இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது விசேசம். அவிட்டம் நட்சத்திரத்து அன்று இவரை நெல் பொரியால் அர்ச்சித்து அபிசேகம் செய்து வழிபாடு செய்து கன்னிப் பெண்களுக்கு தானம் செய்தால் திருமணம் ஆகாதாவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெறும்.

வில்வமரப் பிள்ளையார்

இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பு. சித்திரை நட்சத்திரம் அன்று மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக வழங்கி இந்த பிள்ளையாரை வலம் வந்தால் பிரிந்த கணவன்-மனைவி விரைவில் ஒன்று சேருவர். இதே பிள்ளையாருக்கு வியாழன், புதன் கிழமைகளில் சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

அரசமரப் பிள்ளையார்

இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிசேகம் செய்தால் விளைசல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும். பணக் கஷ்டம் தீரும்.

ஆலமரப் பிள்ளையார்

இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. மகம் நட்சத்திரத்தன்று இவருக்கு எலுமிச்சை சாதம், புளியோதரை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் என ஐந்து வகையான சித்திரான்னங்களை படைத்து வழிபாடு நடத்தி தானம் செய்தால் கடுமையான நோய்கள் விலகி விடும்.

வேப்பமரப் பிள்ளையார்

இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் கிழக்கு நோக்கி இருப்பது சிறப்பு. உத்திரட்டாதி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் , நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய் மற்றும் பசு நெய் ஆகிய ஐந்து வித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றி வழிபட மனதிற்கு பிடித்த வரன் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாக செயல்படும் நிலை அகலும்.

நெல்லிமரப் பிள்ளையார்

பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு 108 விளக்குகள் ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக நடைபெறும். பெண் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும். மன சாந்தி கிட்டும்.

மாமரப் பிள்ளையார்

கேட்டை நட்சத்திரம் அன்று இந்த விநாயகருக்கு விபூதி காப்பிட்டு 3 ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு, ஆடை தானம் செய்ய பிறரின் பகைமை, பொறாமையால் பாதிப்பட்ட வியாபாரம் மறுபடியும் சிறக்கும். விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும்.

 நாவல்மரப் பிள்ளையார்

இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. ரோகிணி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில் ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம் அளித்து இவரை வழிபட்டு வர பிரிந்த தம்பதியினர், குடும்பங்கள், உறவுகள் ஒன்று சேருவர்.

புன்னைமரப் பிள்ளையார்

ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவருக்கு இளநீர் அபிசேகம் செய்து ஏழை எளியவர்களுக்கு ஆடை தானம் செய்தால் கணவன்-மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும். தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.

இலுப்பைமரப் பிள்ளையார்

ரேவதி நட்சத்திரம் அன்றும், செவ்வாய் கிழமைகளிலும் இவருக்கு பசுநெய் கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள் நிற ஆடைகளை 10 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு அளித்து வர தனித்த வாழும் முதியவர்கள், பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும். மிகஉயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள், எந்தவித விபத்துக்கள் இன்றி- நஷ்டம் இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

சந்தனமரப் பிள்ளையார்

மிகமிக அபூர்வ விநாயகரான இவருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் பசும்பால் கொண்டு அபிசேகம் செய்து வழிபட அரிய அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும் வலிமை கிடைக்கும். புதியதாக ஆரம்பிக்கும் வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

பிள்ளையார் வழிபாட்டு பலன்கள் உணர்ந்து சிறப்புடன் வணங்கி அருள் பெறுவோம்; வாழ்வில் உன்னத நிலை பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக