சனி, 13 ஜூலை, 2019

நெல்லையின் அடையாளமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் தேரோட்டம்!


450 டன் எடை, 85 அடி உயரம்… இன்று நெல்லையப்பர் திருத்தேர் பவனி!

நெல்லையின் அடையாளமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் தேரோட்டம்!

நெல்லையின் அடையாளமான நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் தேரோட்டம்,  இன்று (ஜூலை 14 -ம் தேதி) நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்ட நெல்லையப்பர் தேருக்கு எண்ணற்ற சிறப்புகள் உள்ளன.

தென் மாவட்டங்களில் மிகவும் பழைமையான சைவத் திருத்தலமாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் விளங்குகிறது. இந்தத் திருத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சைவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள மூலவர், `நெல்லையப்பர்’, `சுவாமி வேணுநாதர்’, `நெல்வேலி நாதர்’ என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.


நெல்லையப்பர்-காந்திமதி கோயில், கிழக்கு மேற்காக 378 அடி அகலத்திலும் வடக்கு தெற்காக 756 அடி நீளமும்கொண்டது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கோயில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் சந்நிதியில் ஆயிரம் கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்தில் வெள்ளை நிறத்தில் நந்தி சிலையை தரிசிக்கலாம். கோயிலில் மூன்று பிராகாரங்கள் உள்ளன.

இந்தக் கோயிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான வைபவங்களாக நடைபெற்றுவருகின்றன. கோயிலில் கொடியேற்றம் நடந்ததும், நெல்லையில் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். இந்த நாள்களில் குற்றால சீஸன் தொடங்கிவிடுவதால், நெல்லையிலும் சாரல் தலைகாட்டுகிறது. அதனால் பக்தர்கள் இந்த விழாவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் வந்து கலந்துகொள்கிறார்கள்.

நெல்லையப்பர் கோயிலின் முக்கிய நிகழ்வாக நடப்பது திருத்தேரோட்டம். விழாவின் 9-ம் நாளில் நடக்கும் தேரோட்டம் மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு 514-வது ஆண்டு தேரோட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் திருவாரூர், திருவில்லிபுத்தூர் கோயில்களின் தேர்களுக்கு அடுத்த 3-வது பெரிய தேர் நெல்லையப்பர் கோயில் தேர்தான். 450 டன் எடையும் 85 அடி உயரமும் கொண்ட இந்தத் தேர் காற்றில் அசைந்து வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

நெல்லையப்பர் கோயிலின் தேர் கடந்த 1505-ம் ஆண்டு செய்யப்பட்டது; தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்தது. திருவாரூர், திருவில்லிபுத்தூர் தேர்கள் இயந்திரங்களின் துணையுடன் இயக்கப்பட்டு வலம்வரும். ஆனால், நெல்லையப்பர் தேர் எந்தவிதத்திலும் இயந்திரங்களின் உதவி இல்லாமல், முழுக்கவே பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டுவரப்படுகிறது.


நெல்லையப்பர் கோயிலின் தேருக்கும் சுதந்திர போராட்டத்துக்கும்கூட தொடர்பு இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துக்காகப் பாடுபட்ட பலரும் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அத்துடன், 1948-ம் ஆண்டு சுதந்திர தின வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்ட சம்பவத்தையும் பக்தர்கள் நினைவுகூர்ந்து மகிழ்கிறார்கள்.

நெல்லையப்பர் தேரில் நான்கு வெளிச் சக்கரங்களும் நான்கு உள் சக்கரங்களும் இருக்கின்றன. இந்தத் தேரின் சக்கரங்களுக்கான இரும்பு அச்சுகள் லண்டனில் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வரையிலும் நெல்லையப்பர் தேர் 13 அடுக்குகள்கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால், தேரை இழுத்துச் செல்லும்போதும், அதைத் திருப்பும்போதும் சிரமம் ஏற்பட்டதால் அதன் உயரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு ஒன்பது அடுக்குகளாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், ரத வீதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், தேர் செல்லும் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மின்சார வயர்கள் போன்றவற்றின் காரணமாக மீண்டும் தேரின் உயரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு, இப்போது ஐந்து அடுக்குகளாக ஆக்கப்பட்டு அலங்காரத்துடன் தேர் இழுக்கப்படுகிறது. இப்போது அலங்காரத்துடன் இருக்கும் தேர், 450 டன் எடையும் 85 அடி உயரமும் கொண்டது. சதுர வடிவிலிருக்கும் இந்தத் தேரின் முன் பகுதியில், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலிருக்கும் சிற்பம் உள்ளது.

அதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கிறார்கள். இடப்பக்கம் கங்காள நாதர் சிற்பம், குண்டோதரன், மான், மோகினியுடன் இருக்கிறது. அடுத்து ராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம். வலப்பக்கத்தில் நடராஜரும் தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்களும் இருக்கின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் சிற்பம் இருக்கிறது. தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக இருக்கின்றன.

தேரின் பின் பகுதியில் அகத்தியர், முனிவர்கள், யானை, விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள்… எனப் பல சிற்பங்கள் உள்ளன. கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பங்கள் இருக்கின்றன். இப்படி நடமாடும் கலைக்கூடமாகத் திகழும் இந்த தேர் நாளை (14-ம் தேதி) காலை 9:30 மணிக்கு  வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ’ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி’ என்று பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தேர் இழுக்கப்படும்போது வானத்தில் கருடன் வட்டமிடுவது வாடிக்கையாக நடைபெறும் அற்புதம்.

தேருக்கு முன்பு மேள தாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்கும். யானை புறப்பட்டுச் சென்றதும், ஒரு வடத்தை பெண்களும், மீதி மூன்று வடங்களை இளைஞர்களும், பெரியவர்களும் பிடித்து இழுப்பார்கள். சிறிது நேரத்தில் பெண்களின் வடமும் ஆண்கள் வசம் வந்து சேர்ந்துவிடும். தேர் செல்வதற்கு சறுக்குக் கட்டைகளே முக்கியப் பங்காற்றுகின்றன. தேர் திரும்புவதற்கும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும்கூட சறுக்குக் கட்டைகளே பயன்படுத்தப்படுகின்றன.

சறுக்குக் கட்டைகளைப் போடுதல், தடி போடுதல் ஆகியவற்றின் மூலம் தேர் சிறப்பாக ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. நெல்லையப்பரின் தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகமும் சிறப்பான பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

உலகிலேயே 514 ஆண்டுகள் வருடத்திற்கு ஒருமுறை  தொடர்ந்து தடையின்றி  ஓடும் பழமையான ஒரே தேர்

ஆழி வடிவமைப்பில் உலகின் இரண்டாம் பெரிய தேர்
(முதலிடம் திருவாரூர்)

உலகிலேயே விநாயகர் முருகர் சுவாமி அம்பாள் சண்டிகேஸ்வரர் என தனித்தனியாக ஐந்து பெரிய தேர் ஓடும் ஒரே கோவில்

சுததந்தி போராட்ட காலத்தில் நந்தி கொடிக்கு பதில் தேசிய கொடி உச்சியில் பறந்து விடுதலை உணர்வூட்டிய தேர்

சுதந்திர போராட்ட மாவீரர் வ.உ.சிதம்பரனார் ரும் தேசிய கவி பாரதியும் வடம் பிடித்து இழுத்த தேர்

உலகிலேயே அதிக எடை கொண்டதும் உயரமானதுமான மூன்றாவது   (திருவாரூர் திருவில்லிபுத்தூருக்கு அடுத்தபடியாக) பெரிய தேர்

இதற்கும் மேல் பல பெருமை வாய்ந்த

திருநெல்வேலி டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அன்னை காந்திமதி

திருத்தேரோட்டம் காண
வாரீர் வாரீர் வாரீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக