புதன், 17 ஜூலை, 2019

ஆடிமாத கொண்டாட்டம்


ஆடிமாத கொண்டாட்டம்

ஆடி மாதம்
ஆடி என்பது சிறப்பு மிக்க ஆன்மிக மாதம் ஆகும். இது தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாகும். வாத பாராயணங்கள், ஆலய சிறப்பு வழிபாடுகள், மந்திரங்கள், பூஜைகள் ஆகியவற்றிற்கு கூடுதல் சக்தி அளிக்கும் மாதமாக கருதப்படுகிறது.

தமிழ் மாதத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும். இது ஆன்மிக மனம் கமழும் ஆடி மாதமாகவே திகழ்கிறது.

ஆடி விவசாயிகளின் நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் மாதம். இம்மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் குறைந்து காற்றின் வேகம் அதிகரிக்கும். இது  தமிழகத்தில் ஒரு சிறப்பான பருவமழைக்காலத்திற்கு தொடக்கமாக இருக்கும். மேலும் இக்காலத்தில் வெளிப்படும் சூரியனின் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். இம்மாதத்தின் சிறப்பை ஒரிரு வரிகளில் கூறவேண்டுமென்றால் “ஆடிப்பட்டம் தேடி விதை”, “ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்” போன்ற பழமொழிகள் இம்மாதத்தின் சிறப்பையும் தன்மையையும் உணர்த்திவிடும். எனவே ஆடிமாதம் விவசாயிகளின் பொற்காலம் ஆகும்.

ஆடிமாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, செவ்வாய் விரதம், ஆடி ஞாயிற்றுகிழமை  என தொடர்ச்சியாக சுப தினங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஆடி பிறப்பு
ஆடி பிறப்பு என்பது பக்தி திருவிழாக்களின் துவக்கமாக உள்ளது. சூரியன் தென்புறம் நோக்கி பயணத்தை துவங்கும் காலம் இது. முற்காலத்தில் ஆடிபிரப்பை நமது முன்னோர்கள் சிறப்பாக கொண்டாடியதற்கான வரலாற்று பதிவுகள் உள்ளது. ஆனால் இது தற்காலத்தில் மிகவும் குறைந்தது விட்டது. இம்மாதத்தின் முதல் நாளில் புதுமண தம்பதிகளை பெண்வீட்டார் அழைத்து கௌரவிப்பர். பின் புதுப்பெண் இம்மாதம் முழுவதும் தனது தாய் வீட்டிலேயே தங்கி விடுவார்.

நாள் : ஜூலை - 17

ஆடிப்பெருக்கு (ஆடி 18)

ஆடிப்பெருக்கானது ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது பதினெட்டாம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது, ஆடிப்பெருக்கு விழாவானது நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளால் தங்களது ஜீவாதாரமாக விளங்கும் காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் தமிழக மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று காவிரி நதிக்கு பூஜை செய்து, புனித நீராடி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு திருமணம் ஆகவும், திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் செழிக்கவும் வழிபாடு நடத்துவர். பெண்கள் புதிய மஞ்சள் பூசிய கயிற்றை கட்டிக்கொள்வர்.

காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் பச்சை வாழை இல்லை இட்டு அதில் காப்பரிசி, கருகமணி, வாழைப்பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை ஆகியவற்றை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.

இதே போல புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது பயன்படுத்திய மாலைகளை வாழை இலையில் வைத்து ஆற்றில் விடுவர். இவ்விழா டெல்டா மாவட்டங்களை தவிர கொங்கு மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாள்: 03- ஆகஸ்ட்

அம்மன் வழிபாடு
ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதபடுகிறது. எனவே இம்மாதத்தின் அனைத்து வெள்ளி கிழமைகளிலும், அம்மன் ஆலயங்களிலும், சிவன் பார்வதி வீற்றிருக்கும் ஆலயங்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மன், வேப்பிலை, மஞ்சள், சாகை வார்த்தல் மற்றும் கூழ் ஊற்றுதல். பெரும்பான்மையான வீடுகளை வேப்பிலைகளை தோரணம் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும்.

இதன் அறிவியல் அடிப்படை என்பது கோடை காலம் முடிந்து பருவ நிலையில் ஏற்படும் மாற்றம் பல விதமான நோய்களையும் கொண்டுவரும். வேப்பிலை மற்றும் மஞ்சள் நோய் கிருமி தடுப்பனாக செயல்படுகிறது மேலும் கூழ் வகை உணவுகள் உடலுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.

அம்மன் கோவில் திருவிழாக்கள்
பெரும்பான்மையான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இவிழாக்களில் பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு என பலவகையான முறைகளில் அம்மனுக்கு வழிபாடு நடைபெறும்.

ஆடி வெள்ளி
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பதே சிறப்பான நாளாகத்தான் கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளி என்பது கூடுதல் சிறப்பு. இம்மாதத்தின் ஆனைத்து வெள்ளி கிழமைகளிலும் பெண்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள். ஆடி மாத இறுதி வெள்ளியன்று மாகலட்சுமி தேவிக்கு வழிபாடு செய்யும் விதமாக வரலட்சுமி விரதம் அனுசரிப்பார்கள்.

நாட்கள் : ஜூலை- 21,  ஜூலை- 28, ஆகஸ்ட்- 4,  ஆகஸ்ட்- 11.

ஆடி செவ்வாய் விரதம்
“ஆடி செவ்வாய் தேடி குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி” என்ற பாடலுகிணங்க ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசிக் குளித்து அம்மனுக்கு விரதம் மேற்கொள்வர். இது அவர்களின் மாங்கல்ய பலத்தை கூட்டும் என்பது நம்பிக்கை. ஆடி மத சேவையில் ஒளவையார்ஒவையார் அம்மனுக்கு விரதம் இருப்பார்கள். இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வர். ஆண் குழந்தைகள் கூட அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

நாட்கள்: 18- ஜூலை, 25- ஜூலை, 1- ஆகஸ்ட், 8- ஆகஸ்ட், 15-ஆகஸ்ட்

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை தினம் மிக சிறப்பான தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் புனித நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு திதி செய்வார்கள். இதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா மகிழ்ந்து ஆசி அளிப்பார்கள் என்பது நம்பிக்கை.

நாள்: 23- ஜூலை

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை நாள் முருக பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். ஆறுமுகனாக அவதாரம் எடுத்த முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளான திருவாவினங்குடி(பழநி), திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர்  மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கிணங்க பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல விதமான காவடிகளை எடுத்தும், பல சிறப்பு பூஜைகளை செய்தும் முருகப்பெருமானை வழிபடுவர்.

நாள் : 15- ஆகஸ்ட்

ஆடி பூரம்

ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திர நாளை ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம்.  அதே போல் கருவுற்றிருந்த பார்வதி தேவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட இந்நாளில் தான். பெரும்பாலான அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழாவானது பத்து நாட்கள் கொண்டாடப்படும். இத்திருநாளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு வழிபாடுகளை நடத்துவர். மேலும் வளை காப்பும் நடத்தப்பட்டு அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு அளிக்கப்படும். பூஜித்த வளையல்களை அணிந்து கொண்டால் வாழ்வில் நன்மைகள் பெருகும் என்ற நம்பப்படுகிறது.

நாள்: 26 - ஜூலை

வரலட்சுமி விரதம்

சுமங்கலிகளுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகம். இந்நாளில் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் வேண்டியும், செல்வம் செழிக்க வேண்டியும் பெண்கள் விரதம் மேற்கொள்வர். ஒரு கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, ஒரு வெள்ளிக்காசு அல்லது பொற்காசினை இட்டு, மாவிலையை கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைத்து, கலசத்தை அம்மனின் முன்பு வைத்து விளக்கேற்றி பொங்கல், பருப்புவடை, பாயசம், கொழுக்கட்டை கொண்டு நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.

நாள் : 4 – ஆகஸ்ட்

ஆடித்தள்ளுபடி

விழாக்களை தாண்டி இம்மாதம் தன்னகத்தே ஒரு வணிகத்தையும் கொண்டுள்ளது. சிறு, குறு, மற்றும் பெரு வணிகர்கள் இந்த ஆடி மாதத்தில் துவங்கி தனது வணிகத்தை பெருக்கி கொள்வர். தள்ளுபடி விலையில் தேக்கம் அடைந்துள்ள கையிருப்பு பொருட்களை பெருமளவு விற்பனை செய்துவிடுவார்கள்.

ஆடி மாதமானது ஆன்மிக மாதமாக பக்தி மனம் வீசி மக்களுக்கு நன்மையையும், மன நிம்மதியையும், தெளிந்த அறிவையும், மக்களுக்குள் ஒற்றுமையையும் கொடுக்கும் விதமாக விழாக்களுக்கு அச்சாரம் போடும் மாதமாக இருக்கிறது. அனைத்து விழாக்களும் ஆன்மீகப்பார்வை தாண்டி அதில் அறிவியல் அடிப்படையும், சமூகபார்வையையும் கொண்டுள்ளது. அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் பெற்று செல்வா செழிப்போடு சிறப்பான வாழ்க்கை அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக