செவ்வாய், 16 ஜூலை, 2019

பக்தி மணம் கமழும் அற்புத ஆடி


பக்தி மணம் கமழும் அற்புத ஆடி

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பிறந்திருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிரவேசம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். திருமண பாக்யம் கைகூடிவரும். புதுமண தம்பதியருக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும். ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.
ஆடி மாதத்தின் 18-வது நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள். திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண பிராப்தம் கூடிவரும்.
இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுகிறதே. எதனால்? இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

நன்றி தமிழ் முரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக