புதன், 7 ஆகஸ்ட், 2019

சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா


சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா தமிழ்நாட்டின் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள சங்கர நாராயணர் கோயில்|சங்கர நாராயணர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.

புராண வரலாறு

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.

ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்:

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின . அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .

அன்னையின் அருள்ட்சொருபம்

ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது . தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் . யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்று கூறப்படுகிறது.

அன்னையின் சிறப்பு

அன்னை பராசக்தி கோமதி அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள் . ஆடி பௌணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது . இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாட்கள் அன்னையே காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா கண்டருள்கிறாள் . 11ஆம் நாள் இறைவன் , இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார் .


கொடியேற்றமும் , திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளும் :

ஆடி தபசுக்கான கொடியேற்றம் , ஆடி பௌர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யபடுகிறது . ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யபடுகிறது . கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும் , மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள் . இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள் . அம்பாளுக்கான விழ ஆகையால் 9ஆம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது . 11ம் நாள் காலையில் யாக சாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள் , ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி , ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்ட்சவ மூர்த்திகளுக்கு விசேச அபிஷேகம் , அலங்காரமும் சோடஷ உபசாரனையும் நடக்கிறது . தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள் . ஆடி பௌர்ணமி தினத்தில் மாலை உத்திராட நக்ச்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக , தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார் . பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார் . இது ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான மிக முக்கியமான விழா, இதுவே சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் சிறப்பு ஆகும் .

ஆடித்தபசு

"தபஸ்' என்றால் "தவம்' அல்லது "காட்சி' எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக