செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நவராத்திரி நாளில் அன்னை பராசக்தியின் 9 அவதாரங்கள்


நவராத்திரி நாளில் அன்னை பராசக்தியின் 9 அவதாரங்கள்

 நவராத்திரி பூஜை 9 நாட்கள் வீடுகளில் கொலு கொண்டாட்டம்... சுவையான சுண்டல்கள்... பாட்டு கச்சேரிகள் என களைகட்டும்.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.


#Navarathri: Nine Different Avatars of Goddess Durga Matha
மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார்.

சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் "படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்" என்று பிரம்மா கூற. அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான். தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள் என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான்.

பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர்.தேவர்களும் ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.

சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.

எனவேதான் நவராத்திரி பண்டிகையை 9 நாட்கள் கொண்டாடுகிறோம். அசுரர்களை அழிக்க அன்னை பராசக்தி அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.



நவராத்திரி வழிபாட்டு முறை:

•முதலாம் நாள்: சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.

•இரண்டாம் நாள்: இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

•மூன்றாம் நாள்: மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

•நான்காம் நாள்: சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.

•ஐந்தாம் நாள்: ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

•ஆறாம் நாள்: அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

•ஏழாம் நாள்: ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.

•எட்டாம் நாள்: அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

•ஒன்பதாம் நாள்:அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக