புதன், 23 ஆகஸ்ட், 2017

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு...


பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு...

பிள்ளையார் சுழி போட்டு எந்த செயலையும் தொடங்குவது இந்துக்கள் வழக்கம். வீட்டிலே, கோவிலிலோ எந்த விழா என்றாலும் முதல் பூஜை, ஹோமம் கணேசருக்குத்தான். இத்தகைய சர்வ வல்லமை பொருந்திய பிள்ளையார் திருவிழாவை இந்த நாடே கோலாகலமாக கொண்டாடுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா எப்படி வந்தது? ஏன் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விழா எடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு மத்ஸ்யபுராணம் பதில் கூறுகிறது.
சிவனின் மனைவி பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அதன் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். அவரையே தன் அந்தப்புர காவலராக நியமித்தாள். அவருக்கு கணபதி என்று பெயரிட்டாள்.
அப்போது, அவர் மனித முகம் கொண்டவராகவே இருந்தார். இந்நேரத்தில், பார்வதியைக் காண சிவன் அங்கு வந்தார். புதுக்காவலரான கணபதி அவரைத் தடுத்தார். தன் தாயின் உத்தரவுப்படி, யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார். கோபம் கொண்ட சிவன் அவரது தலையை வெட்டினார்.
பார்வதி இதைக் கண்டிக்கவே, தனது பூத கணங்களை அனுப்பி முதலில் காணும் உயிரினத்தின் தலையை கொய்து வருமாறு கூறினார் சிவன். பூதகணங்களுக்கு யானை தென்படவே அதன் தலையை வெட்டி எடுத்து வந்தனர். சிவ பெருமான் அந்த தலையில்லா குழந்தைக்கு யானைத் தலையைப் பொருத்தி உயிரூட்டினார். அவருக்கே முதல் பூஜை செய்ய வேண்டுமென ஆணை பிறப்பித்தார்.
விநாயகர் யானைமுகனாக அவதாரம் பெற்ற நன்னாள் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி என்கிறது புராணங்கள் இதன் அடிப்படையில், விநாயகரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.
நாயகன் என்றால் தலைவன். அவனுக்கு மேல் தலைவன் இல்லை. அவனே அகில உலகுக்கும் தலைவன் என்று பொருள்படுவதே 'வி+நாயகன்'. தன்னிகர் இல்லாத தலைவன் அவன். விக்னங்கள், தடை, தடங்கல், தாமதம் அனைத்தையும் நீக்குபவன். எல்லோருக்கும் மூத்தவன், முதல்வன், ஞான பண்டிதன் என்று பொருள்.
காலையில் நீராடி, பூஜைஅறையை அலங்கரிக்க வேண்டும். காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, மாவிலை, தோரணம் கட்டி ஒரு மனையில் கோலம் போட வேண்டும். அதில் அவரவர் வழக்கத்துக்கு ஏற்ப கற்சிலை பிள்ளையார், களிமண் பிள்ளையார் வாங்கி வந்து வண்ண குடையுடன் பல வண்ண மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும். விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் மாலையும், எருக்கம்பூ மாலையும் சாற்ற வேண்டும்.
விநாயகர் படமும் வைக்கலாம். அருகம்புல், எருக்கம் பூ மாலையை அணிவிக்க வேண்டும். அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, பழங்கள் படைத்து தூப, தீபம் காட்ட வேண்டும். இரவில் விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பூஜை முடித்த மூன்றாம் நாளில் களிமண் விநாயகரை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
மோதகம் எனப்படும் கொழுக்கட்டைதான் பிள்ளையாருக்கு பிடித்தமான உணவு பண்டம். இனிப்பு கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழவகைகள், விளாம்பழம், நாகப்பழம், கரும்பு ஆகியவற்றை படையலிட்டு சர்வ மங்களம் உண்டாகவும், தடைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கவும் மனதார வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம்.
விநாயகர் காயத்ரி மந்திரம், ஔவையார் அருளிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டோத்திரம் சொல்லி பூஜைகளை முடிக்கலாம். மாலையில் அவரவர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு சென்று விசேஷ பூஜைகள், அர்ச்சனை, அபிஷேகங்களில் கலந்து கொள்ளலாம்.
நம்மிடம் இருக்கும் தீவினைகளை சிதறுகாய் சிதறடித்துவிடும் என்பது நம்பிக்கை. அதன்படி, விநாயகரை மனதார பிரார்த்தித்து சிதறுகாய் உடைப்பது சிறப்பு.
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.
அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் கிட்டும். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக