திங்கள், 21 ஆகஸ்ட், 2017

வித விதமான விநாயகர்கள்



வித விதமான விநாயகர்கள்!

வெள்ளை விநாயகர்:

 திருச்செங்கோடு மலைமீது படிகள் ஏறும் இடத்தில் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள பெரிய வெள்ளை விநாயகரை வணங்கிவிட்டே பக்தர்கள் படி ஏறுகிறார்கள். பக்தர்களின் கோரிக்கை ஈடேறவும் தடை ஏதும் வராமலும் அருள்பவர் இவர் என்பது நம்பிக்கை.

கிராமத்து விநாயகர்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், சண்டிசாட்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள வரசித்தி விநாயகர் மிகவும் பழமையானவர். விநாயகரின் பக்கத்தில் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர் மற்றும் முருகன் திருஉருவங்கள் காணப்படுகின்றன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலின் வெளியே நவகிரகங்களையும் உள்ளே அம்மனையும் தரிசிக்கலாம்.

கல்வி விநாயகர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி செல்லும் மெயின் ரோடில் எழுந்தருளியுள்ள அரசமரத்துப் பிள்ளையார் மிகவும் பழமையானவர். அரசோடு வேம்பும் இணைந்து வளர்ந்துள்ள மரங்களின் அடியில் பிள்ளையாரோடு நான்கு நாகர் உருவங்களும் காணப்படுகின்றன. ஊத்தங்கரையின் முக்கிய அலுவலகங்கள், கடைவீதி அருகில் இப்பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். பொதுத் தேர்வுக்கு முன்பு அதிகாலையில் இந்தப் பிள்ளையாரை தரிசித்து விட்டு தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் மாநில அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதனால் இவர் கல்வி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

தொட்டிலாடும் விநாயகர்:

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுரத்தில் பெற்றோரின் நடுவில் தொட்டிலாடும் குழந்தையாய் விநாயகர் சித்திரிக்கப்பட்டுள்ளார் சோமஸ்கந்தர் போல் இவ்வடிவம் சோமகணபதி என்ற அமைப்பாகும். இவரை கும்பிட்டால் குடும்ப உறவுகள் மேம்படும்.

பிளாட்பார பிள்ளையார்:

 விழுப்புரம் ரயில் சந்திப்பில் முதலாம் எண் பிளாட்பாரத்தில் பெரிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பயணம் பத்திரமாக அமைய வேண்டி தினமும் இவரை வணங்கிச் செல்வோர் ஏராளம்.

இரட்டை விநாயகர்:

மதுரை அருகிலுள்ள வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியில் மந்தைத் திடலில் இரட்டை விநாயகர் கோயில் கம்பீரமாக எழுந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் கோபுரம், பீடம், மூஷிகவாகனம், முன் மண்டபத்தில் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோயில் வெளிப்புறச்சுவரில் ஒரு பக்கம் தெய்வீக உருவங்கள் அழகான ஓவியங்களாக பெரிய அளவில் தீட்டப்பட்டுள்ளன. மற்றொரு பக்கத்தில் விநாயகர் உருவம் காட்சி தருகிறது. பழமையான இந்த இரட்டை விநாயகருக்கு முதலில் பூஜை செய்த பிறகே வாடிப்பட்டியிலுள்ள மற்ற கோயில்களில் திருவிழாக்கள் துவங்குகின்றன.


வித விதமாய் விநாயகர்கள்

மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார். ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.
கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம். இவர் முன் பொய் சத்தியம் செய்தால் விநாயகர் தண்டிப்பார் எனும் ஐதீகம் நிலவுகிறது.


* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.
* கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை
தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.
* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.
* ஓசூர்-பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி
கொண்டுள்ளனர்.
* திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.
* கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.
* திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.
* தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
* தஞ்சாவூர் கீழவாசலில் வல்லபாம்பிகா சமேத ஸ்வேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.
* காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில் அம்மையப்பனுடன் அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம்.
* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரம் தணிக்க ஆதிசங்கரர் தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் பொறித்த தாடங்கங்கள் அணிவித்த பிறகும், உக்கிரம் தொடர்ந்தது. உடனே ஆதிசங்கரர் அன்னையின் முன்விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலாம்.
* சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில் புவனேஸ்வரி அன்னையின் எதிரே சுவாமிநாதன் எனும் பெயரில் முருகப் பெருமான் அருள, விநாயகர், கமலவிநாயகராகத் திகழ்கிறார்.
* திருப்பாதிரிப்புலியூர் எனும் கடலூரில் அன்னை பெரிய நாயகியின் தவத்திற்கு உதவிய விநாயகர் கையில் பாதிரி மலர்களை ஏந்தி தரிசனம்அளிக்கிறார்.
* ஆந்திர மாநில ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் கைகளில் எழுத்தாணி, ஏடு வைத்துக் கொண்டு சாட்சி கணபதி அருள்புரிகிறார்.
* காஞ்சிபுரம் - வேலூர் பாதையில் உள்ள திருவலம் திருத்தலத்தில் மாங்கனிக்காக அம்மையப்பனை வலம் வந்த விநாயகரையும் அந்த விநாயகருக்கு மாங்கனியை அளித்த தனுமத்யாம்பாளையும் தரிசித்து மகிழலாம்.

* சென்னை - நங்கநல்லூர் வழியில் உள்ள கரத்தில் விஜயகணபதி கோயில் கொண்டருள்கிறார். இந்த ஆலயத்தில் தினந்தோறும் கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
* பாற்கடல் தந்த அமிர்தத்தை தேவர்களும் அசுரர்களும் பங்குபெற முனைந்தபோது, தன்னை வணங்காததால் விநாயகர் அமிர்தத்தை மறைத்தார். தவறை உணர்ந்த தேவாசுரர்கள் அவரை வணங்க, அமிர்தத்தை காட்டியருளிய விநாயகரை திருக்கடவூரில் கள்ளவாரணப் பிள்ளையாராக தரிசிக்கலாம்.
* திருப்பூவனம் திருத்தலத்தில் மந்திர விநாயகர், கற்பகவிநாயகர், ஒட்டுக்கல் வெள்ளை விநாயகர் என மூன்று விநாயகப் பெருமான்கள் திருவருள் புரிகின்றனர்.
சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலை சென்ற போது, கணபதி பூஜையை நடத்திக் கொண்டிருந்த ஔவையாரை, கணபதி பெரிய விஸ்வரூபம் எடுத்து அவர்களுக்கு முன்பே கயிலையில் சேர்த்தார். அவரை திருக்கோவிலூரில் பெரியானை கணபதியாக தரிசிக்கலாம்.
* கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணியை மேற்கொண்ட கணக்குப்பிள்ளையிடம் மன்னன் சந்தேகப்பட்டு கணக்கு கேட்க, கணக்கெழுதாத அவர் கணபதியிடம் புலம்ப, கணபதி கணக்கு விவரங்களை துல்லியமாக அவனுக்கு அறிவித்தார். அந்த விநாயகர் கணக்கு விநாயகராக இன்றும் அருள்புரிகிறார்.
காஞ்சிபுரம் காமாட்சி ஆலயத்தில், சிந்தூர கணபதி, விக்ன நிவாரண கணபதி, பிரசன்ன கணபதி, இஷ்டசித்தி கணபதி, துண்டீர மகாராஜ கணபதி, சக்திகணபதி, சௌபாக்ய கணபதி, சந்தான கணபதி, வரசித்தி கணபதி, திருமஞ்சன கணபதி மற்றும் சந்நதி வீதியில் ஏலேல விநாயகர் என ஏகப்பட்ட கணபதிகள் அருள்கின்றனர்.
* தன் தந்தையை வழிபட்ட நீலகண்ட விநாயகரை சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தனி சந்நதியிலும் தன் தாயைப் போல் வடிவெடுத்த விக்னேஸ்வரி எனும் விநாயகரை ஆலய தூணிலும் தரிசிக்கலாம்.
* நாவல், பவளமல்லி, வில்வம், அரசு, நெல்லி, அத்தி, மந்தாரை, வேம்பு, வன்னி ஆகிய ஒன்பது தலவிருட்சங்கள் சூழ வீற்றருளும் விநாயகரை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவரை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.
* நாட்டரசன்கோட்டை அருகே, வாணியங்குடியில் அடைக்கலம் காத்த அம்மன் ஆலயத்தில் விநாயகப்பெருமான் அம்பிகை வடிவில் அருள்கிறார்.
* காஞ்சிபுரம் திருவோணகாந்தன் கோயில் விநாயகர் சந்நதி அருகில் காதை ஒட்டி வைத்துக் கேட்டால் ஓம் எனும் ஒலியைக் கேட்கலாம். அதனால் அவர் ‘ஓங்காரஒலி’ விநாயகர் என வணங்கப்படுகிறார்.
* ஓர் அங்குலம் முதல் ஓரடி வரை உள்ள வித விதமான விநாயகர்களை தரிசிக்க கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். சோழர் கால மன்னர்களின் அற்புதப் படைப்பு அவை.
* தன் இரு அன்னையர்களான கங்கையும் பார்வதியும் இருபுறங்களிலும் வீற்றிருக்க திருவருள் புரியும் விநாயகரை திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக்கரையில் தரிசிக்கலாம்.
* விடியல் முதல் இரவு வரை விநாயகப் பெருமானின் திருவுருமுன்னேயே சுடச்சுட நெய் அப்பம் ஊற்றி அதை கணபதிக்கு அபிஷேகம் செய்யும் ஆலயம், கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் உள்ளது. பின் அந்த அப்பம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக