வியாழன், 23 பிப்ரவரி, 2017

சிவ பித்தர்கள் சொன்ன சிவராத்திரி ரகசியங்கள்-14



சிவ பித்தர்கள் சொன்ன சிவராத்திரி ரகசியங்கள்-14
(சிவராத்திரி வழிபாடு பற்றி நமக்கு தெரியாத ஆழமான உண்மை ரகசியங்கள்..... படிக்க தவறாதீர்கள்...)
அன்பர்கள் அனைவரும் இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.. சொல்லியும் கொடுங்கள்..
இதுவும் ஒரு வகையில் சிவதொண்டு அனைவரும் இப்போதே தொடங்குங்கள்....
நன்றி நமசிவாய
திருச்சிற்றம்பலம்.
இம்மாதம் 24 அன்று மகாசிவராத்திரி விரதம் இருந்தால்
பல கோடி  விரத  பலன்  கிடைக்கும் !'
இதுகுறித்து,  மேலும் சித்த பெருமக்கள் சொன்னது கூறியதாவது:சைவ மதத்தில், சிவனை வேண்டியிருக்கும் விரதங்களில், மகா சிவராத்திரி விரதமே அதிக சிறப்புடையது. சிவராத்திரி விரதம், உத்தமம், மத்தியமம், அதமம் என, மூன்று வகைப்படும்.
சிவராத்திரி அன்று இரவில், நிசியில் சதுர்தசி திதி இருப்பது முக்கியம் என, பல ஆகமங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று திரியோதசி திதியும், அன்று இரவே சதுர்தசி திதியும் இருப்பது,
உத்தம சிவராத்திரி என்பதாகும்.
அந்த நாள், இவ்வாண்டு  அன்றைய தினம், திரியோதசி திதி பகலிலும், சதுர்தசி திதி இரவு முழுவதும், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும் இருப்பதால், இது உத்தம சிவராத்திரி ஆகும்.
எனவே, அனைவரும் அவரவர் வழக்கப்படி, இந்த சிவராத்திரி விரத நாளில், கோவிலுக்கு சென்று வழிபடுவதும், இரவு முழுவதும் கண் விழித்து, சிவ நாமத்தை உச்சரித்தும், சகல சவுபாக்கியங்களையும் அடைய வேண்டும்.
சிவராத்திரியன்றுசிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும்.
இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது.
நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால்,அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவம் என்பதன் பொருள்
**************************
சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள்.சிவராத்திரி விரதம்அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை.இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன? யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே.
லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
லிங்கோத்பவரின் அடியும் முடியும்
புதைந்த ரகசியம்.....
சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில்புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள்.
அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.
உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா?
சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும்,முடியும் இடமும் உண்டு. ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.
சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது.
நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.
மகாபாரதத்தில் சிவராத்திரி
*******************************
மகாபாரதத்தில் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. பீஷ்மர் அம்புபடுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்
போது சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகா சிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான். இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை நினைவுகூறும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்தபிறவியில் அவன் சுச்வரன் என்ற பெயரில் வேடனாக இருந்தான். இந்த பெயருக்கு இனியகுரல் என்று பொருள்.
ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அது ஒரு வில்வ மரம். இரவு முழுக்க காத்திருந்தும் எந்த மிருகமும் அகப்படவில்லை. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது. பசியும் தாகமும்அவனைவாட்டி எடுத்தது. குடும்பத்தினரை நினைத்து கண்ணீர்விட்டான்.
பொழுதுபோகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த வில்வ இலைகளை பறித்து தரையில் போட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் ஒரு மான்சிக்கியது. அப்போது ஒருவன் வேடன் எதிரே வந்தான். அவன் அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான். பசியால் அவன் முகம் வாடி உள்ளது என்பதை அறிந்த வேடன், அவனுக்கும் தன்னிடம் இருந்த மான் இறைச்சியின் ஒரு பகுதியை கொடுத்தான். பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட்டான். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் இறந்ததும் சிவலோகத்திற்கு சென்றான்.
வேடன் ஆனாலும் காட்டில்மரத்தின் மீது அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், சிவபதம் கிடைத்துவிட்டது. அன்று இரவில் வில்வ இலைகளை கீழே போடும்போது மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை கவனிக்கவில்லை.இடுப்பில் கட்டியிருந்த குடுவையிலிருந்து மிச்சம் மீதி இருந்த தண்ணீர் லிங்கத்தின் மீது பட்டது. அபிஷேமாகவும், அர்ச்சனையாகவும் ஏற்றுக்கொண்டார். விரதத்தின் முடிவில் தானமும் செய்துவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது.
சிவராத்திரி பூஜை  வீட்டில் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும். மாலை 6.30. இரவு 9.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 3மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். விழிக்கிறோம் என்ற பெயரால் சினிமா, டிவி பார்க்கக்கூடாது.
சிவராத்திரி  கொண்டாட்டம் ஏன்?
பார்வதிதேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கி உயிர்கள் . அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர்.
திரயோதசியன்று மாலையில் சிவபெருமான் பிரதோஷ நடனம் ஆடினார். அன்றிரவு தேவர்கள் பாற்கடலை கடைந்து பெற்ற விஷத்தை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தனர். சிவபெருமான் நஞ்சையும் விரும்பி உண்டு தேவர்களைக் காத்தார். விஷத்தைக் குடித்ததால் மயக்கமடைந்தார்.
அன்றிரவு சிவபெருமானைத் துதித்து தேவர்கள் யாவரும் வணங்கி நின்றனர். அந்நாளே சிவராத்திரி. மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் விரைந்து வந்தான். உயிரைக் காத்துக் கொள்ள அவன் சிவலிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டான். ஆனாலும், தர்மவானான எமதர்மன் பாசக்கயிற்றை வீசினான். கயிறு லிங்கத்தையும் பற்றிக் கொண்டது. சிவபெருமான் எமனை காலால்உதைத்தார். அதன்பின், தேவர்கள் சிவனை வேண்டி எமனை உயிர்ப்பித்தனர். அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர்.
அதனால், மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டோருக்கு மரணபயம் நீங்கும் என்பது ஐதீகம்.
நான்கு காலம் ! நான்கு கோலம்!
**************************************
மகாசிவராத்திரியன்று இரவுப்பொழுதில் நான்குகாலஅபிஷேகம் சிவபெருமானுக்கு நடைபெறும். ஒவ்வொரு காலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு கோலத்தை வழிபடவேண்டும்.
முதல்காலத்தில் முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரை வழிபடுவர்.
இரண்டாம்காலத்தில் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும்.
3ம் காலத்தில் கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை தரிசிக்கவேண்டும்.
நான்காம் காலத்தில் ரிஷபவாகன சிவனான சந்திரசேகரரை வழிபடவேண்டும்.
சிவராத்திரிக்கு வெந்நீர் அபிஷேகம்
************************************
உக்கிரசேன மன்னன் சிவபெருமானை வேண்டி பார்வதிதேவியை மகளாகப்பெற்றான். மன்னன் மகளுக்கு தேவிகாஎன்று பெயரிட்டு வளர்த்தான். அவள் சிவபக்தியோடு இறைவனைப் பூஜித்து வழிபட்டாள். அப்பெருமானுக்கு பொன்மலைநாதர் என்று பெயர்.
இவர் ஆரணிக்கும் பேரூருக்கும் இடையில் அமைந்துள்ள தேவிகாபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 64 சக்திபீடங்களில் இத்தலம் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
இங்கு அபிஷேகத்தின்போது வெந்நீரையே பயன்படுத்துவதும் மாறுபட்டதாகும்.
பஞ்ச சிவராத்திரி
*****************
சிவராத்திரி ஐந்து வகைப்படும்.
அவை நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி.மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம். ராத்ர என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள். இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு நாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன.
அதனையே நித்திய சிவராத்திரி என்று குறிப்பிடுவர். தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது மாத சிவராத்திரி.
சோமவாரமான திங்கட்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி என்பர். மாசிமாத சிவராத்திரி மகாசிவராத்திரி.
எல்லாம் இங்கு ஐந்து நாள்
****************************
சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் பஞ்சாட்சரம். பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை இறைவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது.
விருத்தாசலம் என்பதற்கு பழமையான மலை என்பது பொருள். பூலோகத்தில் இம்மலையே மிகப்பழமையானது என்று இக்கோயில் புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில்ஐந்து கொடிமரங்கள் உள்ளன.
பிரம்மோற்ஸவத்தின் போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது. வலப்புறம் தலைசாய்த்தபடியே ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும்.
மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் இங்குண்டு. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர்.
ஜாக்கிரதையா இருங்க!
**************************
பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?
ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும்.
வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும். அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். நம் எதிரிக்குகூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்றால், நீ பார்த்துக்கொள் என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு.
ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.
நமசிவாய என்று சொல்வோமே! நன்மைகள்ஆயிரம் கொள்வோமே
கயிலாயத்தில் பார்வதி சிவபெருமானிடம் உயிர்கள் உய்யும் வழி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். அப்போது தேவி இறைவனிடம், நாதா! உங்களை வழிபாடு செய்வதில் எந்தநாள் மிகவும் உகந்தது? என்று கேட்டாள். சுவாமியும் அன்னையின் விருப்பமறிந்து, உமா! மாசி மாதத்தேய்பிறையில் வரும் சிவராத்திரியே எனக்கு மிகவும் உகந்தநாளாகும்.
அந்நாளில் செய்யும் தீர்த்த ஸ்நானம், தூபதீபம், நிவேதனம், அபிஷேகம் ஆகிய வற்றைக் காட்டிலும் விரதம் மேற்கொள்வதே சிறப்பாகும்.
சிவபெருமானின் உள்ளம் அறிந்த உமையவள் மிகவும் பரவசமுற்றாள். தானும் சிவராத்திரி நோன்பிருக்க எண்ணம் கொண்டாள். தன்னுடைய தோழிகளுக்கும் விஷயத்தை தெரிவித்தாள். அவர்கள் பூலோகத்திற்கு தெரியப்படுத்தினர். இப்படியே சிவராத்திரி விரதமகிமை உலகெங்கும் பரவியது
.மனிதனுக்கு சத்வ, ரஜோ, தமோ என்னும் மூவித குணங்கள் இருக்கின்றன.
இதில் சாதுக்களிடம் இருக்கும் உயர்ந்த குணமே சத்வகுணம். ரஜோ, தமோ குணங்கள் நம்மை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்பவை. காமம், கோபம், பொறாமை கொண்டு செயலைச் செய்பவன் ரஜோ குணம் பொருந்தியவன். சோம்பல், தாமதம் ஆகிய குணங்களைக் கொண்டவன் தாமச குணம் பொருந்தியவன்.
சிவராத்திரி விரதத்தின் மூலம் இவ்விருகுணங்களையும் போக்கிக் கொள்கிறோம். சோம்பல் தரும் தூக்கத்தை வெல்லவேண்டும் என்பதால், இந்நாளில் இரவு முழுவதும் விழிக்கவேண்டும் என்பதை விரத நியமமாக ஏற்படுத்தினர்.சிவனை அபிஷேகம் செய்வது புற வழிபாடு. உண்மையில் சிவபெருமான் ஒளிவடிவமானவர். தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார்.
அவரிடம் நாம், இறைவா! பால் தண்ணீர்,பால் போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம்.
நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக. பாவம் அனைத்தையும் போக்கி புனிதமாக்குவீராக. உமது அருளால் அநீதியும், அக்கிரமமும் ஒட்டுமொத்தமாக அகற்றப்படட்டும். இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்
டும் என்று வழிபட வேண்டும்.
ஆன்மிக சாதகர்கள் அனைவருமே இருக்கவேண்டிய விரதம் சிவராத்திரி. தண்ணீரைக் கூட அருந்துவதைத் தவிர்ப்பது சிறப்பு. உலக அமைதி மற்றும் சுபிட்சத்திற்கா
க சிவனுக்குரிய ஹோமம் செய்ய வேண்டும் அல்லது அதில் கலந்துகொள்ள வேண்டும்.
நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும். என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன்,என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும்.
சிவபெருமானே! நீரே என் உயிர்.
என் மனமே பார்வதி. என் கருவி கரணங்களே உமது சேவகர்கள்.
என் உடலே உமது வீடு. என்அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு. என் உறக்கத்தில் உம்மோடுஇரண்டற கலந்து விடுகிறேன். என் கால் நடக்கும் பாதை எல்லாம் உமது கோயில் பிரகாரம். என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை மொழி. இவ்விதம் என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்றும் பிரார்த்திக்கலாம்.
சிவராத்திரி நாளன்று மனவீட்டில் விளக்காக திகழும் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாயத்தை இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோம்.
மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?
பிரளய காலத்தின் போது பிரம்மனும்,அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு,அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
சரி விரதம் இருப்பது எப்படி?
மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம்.
உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு (வயது முதிர்ந்தோர், வியாதியஸ்தர்கள் ஆகியோர்) விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய இரவை சிவாலயத்தில் கழிப்பது சாலச் சிறந்தது.
சிவாலயங்களில் நடைபெறும் மூன்று கால பூசையிலும் பங்கேற்று சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.
சிவராத்திரிக்கு முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும்.
துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று
இரவு (ஞாயிறு இரவு) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் திங்கள் (அதாவது அன்று இரவு தான் சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோட சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது.
இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும்,
பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.
சுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான திரயோதசி அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் காலை ஏழைகளுக்கும் தகுதியுடையோருக்
கும் அன்னதானம் செய்யவேண்டும்.
சிவராத்திரி அன்னைக்கு விரதம் இருந்தா போதாதா? அது எதுக்கு முந்தின நாளும் இருக்கணும் ?
அப்படி கேளுங்க…..
வேளா வேளைக்கு நேரம் தவறாம உண்டு உறங்கும் நம்மால், திடீரென்று மகாசிவராத்திரி அன்னைக்கு கண் விழித்து உபவாசம் இருந்து பக்தி செலுத்துவது சிரமமாக இருக்குமல்லவா? எனவே நம் உடலையும் மனதையும் அதற்கு தயார் செய்வதன் பொருட்டே பெரியோர்கள் முந்தைய நாள் திரயோதசி அன்றும் விரதம் இருக்க சொல்லியிருக்கிறார்கள்.
திரயோதசி அன்று விரதம் இருக்கும்போது நம் மனமும் உடலும் ஓரளவு அதற்கு பழகிவிட, அடுத்த நாள் சிவராத்திரி
அன்று குறைகள் இன்றி முழு திருப்தியுடன் விரதம் இருந்து, பூரண பலனையும் அடைய முடியும்.
*மற்றபடி சிவராத்திரியன்று
சிவராத்திரியன்று கோவிலில் இருக்கும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை (கோவில் மடப்பள்ளியில் தயார் செய்தது) சாப்பிடலாம்.
தரிசனத்திற்கு வரும் சேவார்த்திகள் சேவை நோக்கோடு தரும் பால், சுண்டல் முதலியவற்றை உட்கொள்வது அவரவர் விருப்பம்.
போகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.
தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால்
அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.
சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.
சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
மஹாதேவனின் சிவராத்திரி ரகசியங்கள் இன்னும் ஆழமாய் தொடரும்....

சனி, 18 பிப்ரவரி, 2017

கார்த்திகை- சோம வாரம் 1008

கார்த்திகை- சோம வாரம் 1008

சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.

🔹 *புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும்.*

🍄 ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.

💥 தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.

🐚 மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

🎠 *தேவாரப்பதிகம்:*🎠

*சடையுடை யானும்நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும் கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர் தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டானத் தரனல்லனே.* -
திருஞானசம்பந்தர்

🅱 *தல சிறப்பு:*🅱

🌻 *சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

👉🏽 *அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம்.*

👉🏽 *கருவறைக்குள் இருக்கும் மூலவர் ஒரு லிங்கம் தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும்.*

👉🏽 *இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.*

🍄 *கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.*

⭕ *சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும்.*

🌷 *அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்.*

🅱 *திறக்கும் நேரம்:*🅱

🔑 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 *பொது தகவல்:*🅱

⛅ பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் *"குகாம்பிகை'*யாக இருக்கிறாள். இங்குள்ள *"கள்ளவாரண பிள்ளையார்'* துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார்.

🔵 பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது.

🍁 விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று.

💦  இத்தலத்து உற்சவரின் திருநாமம் *காலசம்ஹாரமூர்த்தி.* இவரை வணங்கினால் எமபயம் நீங்கும்.

🌸 *இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும்.*

🅱 *பிரார்த்தனை:*🅱

🍄 சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது.

⭕ 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.

🌷 50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.

🦆 இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

💦 உடல் பலம் பெறும். நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

🅱 *நேர்த்திக்கடன்:*🅱

🔵 அங்க பிரதட்சணம் , கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர்.

🔴 இருதய சம்பந்தமான நோய்கள் குறிப்பாக ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

⭕ அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்தி கடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.

🔹 மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

🔵 மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

🅱 *தலபெருமை:*🅱

🍁 அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.  சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

🍄 மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக் கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.

🌷 பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.

🔵 அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

🅱 *காலசம்ஹார மூர்த்தி:*🅱

🌸 மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.

🦆 தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.

🌷 எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது,  எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.

💦 சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, *""மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,''* என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.

🍄 தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.
சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை *"சம்ஹார கோலம்'* என்றும், எமனுடன் இருப்பதை *"உயிர்ப்பித்த கோலம்'* என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் *"சம்ஹார'* மற்றும் *"அனுக்கிர மூர்த்தியை'* தரிசிக்கலாம்.  இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

🎀 சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, *"திருக்கடையூர் ரகசியம்'* என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.

🅱 *தீர்த்த சிறப்பு:*🅱

🐚 மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன்ஏ அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.

⭕ மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்த போது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது. இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது. இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.

🅱 *சதாபிஷேகம்:*🅱

🔵 திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்ம புரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.

💥 திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது.

🍁 திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கிய பின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும் போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.  இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.

🌤 எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.

💦 நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள். ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.

🅱 *தல வரலாறு:*🅱

💐 *பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.*

🍄 *சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச் சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.*

🌷 *பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், "அமிர்தகடேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.*

🅱 *சிறப்பம்சம்:*🅱

🌿 *அதிசயத்தின் அடிப்படையில்:*

👉🏽 *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

👉🏽 *அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம்.*

👉🏽 *கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும்.*

👉🏽 *அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.*

👉🏽 *விநாயகரின் மூன்றாவது படை வீடு.*