வெள்ளி, 29 மார்ச், 2019

திருவாரூர் தேர் வரலாறு..!


வருகின்ற 1.4.2019 தேரோட்டம் நடைபெறவுள்ள திருவாரூர் தேர் வரலாறு..!

*ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது  திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர்.*

தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி திருவாரூர். இங்குள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

*கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.*

திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது.

இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும்

தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது.

இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும்.

முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. அப்போதெல்லாம் தேர் நிலைக்கு வர வாரக்கணக்காகுமாம். பின்னர் அது படிப்படியாக குறைந்து 4 நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது 4 புல்டோசர்கள் கொண்டு இழுக்கப்பட்டு வருவதால் அன்று  மாலையே நிலைக்கு கொண்டு வரப்பட்டு விடுகிறது.

திருவாரூர் தேர் எனப்படும் ஆழித்தேரோட்டம்   காலை 7 மணிக்குமேல் தேர் தியாகராஜருடன் பவனி வருகிறது.

இதற்காக கடந்த 22ந்தேதியே  மூலவர் தேரில் வந்து அமர்ந்து விட்டார். அன்றிலிருந்து கடந்த ஒரு வாரமாக தேர் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

இன்று காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது.

ஏற்கனவே பல ஆயிரம் பக்தகோடிகள் திருவாரூர் தேரில் அமர்ந்துள்ள தியாகராஜரை தரிசித்து வந்துள்ள நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆழித்தேரை இழுக்க தயாராகி உள்ளனர்.

ஆழித்தேர்   ஆருரா, தியாகேசா முழக்கத்திற்கு நடுவில் அசைந்தாடி வருவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

*தேர் குறித்த மேலதிக தகவல்கள்:*

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளை கொண்டது.

இந்த தேரின் நான்காவது நிலையில்தான்  தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். இந்த பீடம் மட்டுமே31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது.

மூங்கில்களை கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது, தேரின் உயரம் 96 அடியாக இருக்கும். ஆழித்தேரின் எடை 300 டன்.

இந்த தேரை அலங்கரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.  தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும், 3,000 மீட்டர் அளவுக்கு தேர் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.

காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடையுடை கயிறுகள், 5 டன் பனமர கட்டைகளை பயன்படுத்தப்படுகிறது.

திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடக் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடக் கயிறு 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது.

ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும்.

ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்த தேரின் சக்கரங்களை இருப்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புகின்றனர்.

பண்டைய காலங்களில்  இந்த பிரம்மாண்ட தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர். அதன்பின், ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர்.

தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் 4 புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது.

முன்பு டிராக்டர்களில் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து, தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர்.

இதில், சில சமயங்களில் முட்டுக் கட்டை போடுபவர் விபத்தில் சிக்கும் ஆபத்து இருந்ததால், திருச்சியிலுள்ள பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு அதன்மூலமே தேர்தல் நிறுத்தப்படுகிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான தேர் என்ற பெருமை உண்டு.

      

செவ்வாய், 12 மார்ச், 2019

மதுரை சித்திரை திருவிழா 2019

 மதுரை சித்திரை திருவிழா 2019

 ஏப்ரல் 8, 2019 – திங்கள்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்

ஏப்ரல் 9, 2019 – செவ்வாய்கிழமை – பூத , அன்ன வாகனம்
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -2019

ஏப்ரல் 10, 2019- புதன்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

ஏப்ரல் 11, 2019 – வியாழக்கிழமை – தங்க பல்லக்கு

ஏப்ரல் 12, 2019 – வெள்ளிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்

ஏப்ரல் 13, 2019 – சனிக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

ஏப்ரல் 14, 2019 – ஞாயிறுக்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்

ஏப்ரல் 15, 2019 – திங்கள்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் 2019

ஏப்ரல் 16, 2019 – செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

ஏப்ரல் 17, 2019 – புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

ஏப்ரல் 18, 2019 – வியாழக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்

ஏப்ரல் 19, 2019 – வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
கள்ளழகர்

ஏப்ரல் 18, 2019 – வியாழக்கிழமை – தல்லாகுளத்தில் எதிர் சேவை
ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல் 2019

ஏப்ரல் 19, 2019 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப்ரல் 20, 2019 – சனிக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்

ஏப்ரல் 21, 2019 – ஞாயிறுக்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்

ஏப்ரல் 22, 2019 – திங்கள்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்.

ஆயுளை நீடிக்கும் காரடையான் நோன்பு!! மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு...!


 ஆயுளை நீடிக்கும் காரடையான் நோன்பு!!
மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு...!

💫 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்பது பழமொழி. இல்லற வாழ்க்கையில் இணைந்த கணவன், எப்போதும் பிரியாமல் இருக்கவும், அவன் நீண்ட ஆயுளுடன் வாழவும் மனைவி நோற்கின்ற விரதம் இது.

💫 இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர். இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர். பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்து சென்றான். சாவித்திரி அவனை தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள். இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும்.

💫 காரடையான் நோன்பின் போது, சாவித்திரியின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம்.

💫 அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது, சத்தியவானை சந்தித்தாள். தன் கண் தெரியாத பெற்றோருக்கு அவர் செய்த பணிவிடை சாவித்திரியை மிகவும் கவர்ந்தது. அவள் சத்தியவானையே திருமணம் செய்ய விரும்பினாள். தந்தையிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்தாள். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது அங்கு வந்த நாரதர் சத்தியவானுக்கு இன்னும் 1 வருடமே ஆயுள் இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரியின் தந்தை, வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி, மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் வரத்தான் செய்யும் என்று தனது முடிவில் பிடிவாதமாக இருந்து சத்தியவானையே திருமணம் செய்தாள்.

💫 சத்தியவானின் ஆயுள் முடிவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக சாவித்திரி ஒரு விரதத்தை தொடங்கினாள். இரவும், பகலும் கண் விழித்து, உணவருந்தாமல் கடும் விரதம் இருந்தாள். அன்று சத்தியவான் பெற்றோருக்கு பழம் பறித்து வருவதற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்டான். அவனுடன் தானும் வருவதாக கூறி சாவித்திரியும் உடன் சென்றாள். அவர்கள் இருவரும் காட்டில் பழங்களை பறித்து கொண்டிந்தனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த சத்தியவானின் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே பாசக்கயிற்றுடன் எமன் தோன்றினான். பெண்ணே! உன் கணவரின் ஆயுள் முடிந்து விட்டது. பதிவிரதையானதால் உனது கண்களுக்கு நான் தெரிந்தேன் என கூறிவிட்டு, சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு புறப்பட்டான்.

💫 சாவித்திரியும் எமனை பின் தொடர்ந்து சென்று, நண்பரே! நில்லுங்கள் என்றாள். இதைக்கேட்ட எமன், நான் உனது நண்பனா? என கேட்டார். அதற்கு ஒருவன் மற்றொருவருடன் ஏழு அடிகள் நடந்து சென்றால், இருவரும் நட்புக்குரியவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நீங்கள் என் நண்பர் ஆவீர்கள் என சாவித்திரி பதில் அளித்தாள். இதைக்கேட்டு எமன் புன்முறுவலுடன், உனக்கு வேண்டும் வரங்களை தருகிறேன். உன் கணவனின் உயிரை தவிர, வேறு எதையாவது கேட்டு பெற்று கொள் என்றார். சாவித்திரி, என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும். மேலும் எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும் என்றாள்.

💫 நீ கேட்ட வரத்தை தந்தேன். இனியும் என்னை பின் தொடராமல் போய்விடு என்றார் எமன். ஆனால் சாவித்திரி தர்மராஜாவின் வாக்கு தப்பாது என்று நம்புகிறேன். எனக்கு 100 குழந்தைகள் பிறப்பதாக வரம் தந்தீர்கள். என் கணவன் இல்லாமல் எப்படி குழந்தை பிறக்கும்? என்றாள். இதைக்கேட்ட எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.

காரடையான் நோன்பு அன்று சாவித்திரியின் கதையை கேட்பவர்களுக்கு தீர்க்க ஆயுள் கிடைப்பதாக ஐதீகம்.

திங்கள், 11 மார்ச், 2019

காரடையான் நோன்பு நோற்கும் முறையும், சொல்ல வேண்டிய ஸ்லோகமும்..




காரடையான் நோன்பு நோற்கும் முறையும், சொல்ல வேண்டிய ஸ்லோகமும்..

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான். இது காமாட்சி நோன்பு.  சாவித்ரி விரதம் என்றும் கூறுவர்.


காரடையான் நோன்பு எப்படி நோற்க வேண்டும்?

இதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.


இப்போது நம் வீடுகளில் செய்யப்படும் இந்த நோன்பிற்கு, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு சிறிய நுனிவாழை இலை போட்டு இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவற்றை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும் வெண்ணெய்யும் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலிகள் தங்கள் இலைகளில் அம்பிகைக்கு ஒரு சரடும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள்.

மூன்று இலை போடக்கூடாது. நான்கு இலையாகப் போட்டு சரடு கட்டிக்கொண்ட பின் மீதமுள்ள இலையில் வீட்டிலுள்ள ஆடவர்களைச் சாப்பிடச் சொல்லலாம். தீர்த்தத்தால் இலையைச் சுற்றி நைவேத்தியம் செய்த பிறகு அம்பாள் படத்தில் சரடை அணிவித்த பின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும்.

பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது "உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்' என்று வேண்டிக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். "மாசி சரடு பாசி படியும்' என்பது சொலவடை. அதாவது பாசி படிய வேண்டும் என்றால் எத்துணை பழைமையாக வேண்டும்....? அத்துனைக் காலம் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.

ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?

சங்கல்ப ஸ்லோகம்

மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்

மம பர்த்துச்ச  அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே


தியானம்

ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்

புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே

தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.


நோன்புச்சரடு மந்திரம்

தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா


மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'

காரடையான் நோன்பிற்கு சாவித்திரி விரதமென்ற பெயருண்டு. ஏன் என்று தெரிய வேண்டுமா?

காரடையான் நோன்பு பிறந்த கதை

"சாவித்ரி பாடம்'' என்ற கர்ண பரம்பரைப் பாட்டு ஒன்றில் இந்த நோன்பு தோன்றிய வரலாறும் அதன் மகிமையும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்தைப் பெறுகிறாள். பின்பு பக்தி சிரத்தையுடன் பல காலம் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய, கணவன் அச்வபதியும் விடாமல் காயத்ரி ஜெபத்தையும் செய்ய அதன்படியே அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

"சாவித்ரி' என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடைகிறாள். விதி வசமாய் ஒருமுறை சாவித்ரி, சத்யசேனன் என்ற சத்யவானைக் காண நேரிட்டது. அப்போது அவன் கண் பார்வையற்ற தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறான். அவன் தன் பெற்றோர்பால் கொண்டிருந்த பக்தியும் சிரத்தையும் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவனையே தன் கணவனாக மனதில் வரித்து விடுகிறாள்.

அவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதிக்கிறார். இந்த நிலையில் நாரதர் சாவித்ரியிடம் வந்து, "அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் காலகதி

அடைந்து விடுவான். எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்'' என்று உபதேசிக்கிறார். எனினும் சாவித்ரியும் தன் தந்தையிடம் மன்றாடி சத்யவானையே மணக்கிறாள்.

நாரதர் சொன்னபடியே சத்தியவான் காட்டில் விறகு வெட்டி வரச் சென்று அங்கு தன் கோடரியால் காலை வெட்டிக் கொண்டு கீழே சாய்கிறான். யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி அவன் உயிரைக் கவர்ந்து கொண்டு செல்கிறான். அவனை விடாமல் பின் தொடர்கிறாள் சாவித்ரி. தன் கணவன் உயிரை எடுத்துச் செல்ல
வேண்டாமென்று யமனிடம் மன்றாடி வேண்டுகிறாள். சாவித்ரியின் மன உறுதியையும், பதிவிரதா பக்தியின் மேன்மையையும் உணர்ந்த யமதர்மராஜன் அவளுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்கிறான்.

"தர்மபிரபுவே... என் கற்புக்குப் பங்கம் வராமல் எனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வரம் தாரும்'' என்கிறாள். யமனும் "இவ்வளவுதானே தந்தேன்'' என்று அவள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டான். அவள் கணவன் உயிரோடு இருந்தால்தானே அவள் கேட்டபடி குழந்தைகள் பிறக்கும்?

யமதர்மராஜனுக்கு இப்போது சத்தியவானின் உயிரைத் திரும்பத் தருவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், சத்தியவானை உயிர்ப்பித்துவிட்டு மறைகிறான்.

சாவித்ரி செய்த அந்த நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. சிலர் இதை, "ஸம்பத் கௌரீ'' பூஜை என்றும் சொல்கிறார்கள். எது

எப்படியோ... இந்த மாசி, பங்குனி நோன்பு நம் தேசத்தில் எல்லாச் சுமங்கலிகளாலும் புராண காலம் தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 10 மார்ச், 2019

குலதெய்வவழிபாடு பற்றிய 51குறிப்புகள்.


குலதெய்வவழிபாடு பற்றிய 51குறிப்புகள்.

பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

1. குல தெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.

2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.

3. மறைந்த முன்னோர் வழிபாடே காலப்போக்கில் குலதெய்வ வழிபாடாக மாறியதாக சொல்கிறார்கள்.

4. குல தெய்வ வழிபாட்டின் மகிமை பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. குல தெய்வ வழிபாடுதான் நாளடைவில் பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கலாம் என்று பிரபல அறிஞர் ஆறு.ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

6. இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.

7. குல தெய்வ வழிபாடு என்பது உலகின் பல நாடுகளிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

8. வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

9. குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.

10. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

11. மதுரை வீரன், கருப்பன் ஆகிய குல தெய்வங்கள் நடுகல் வழிபாட்டு முறையில் இருந்து வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

12. இஷ்ட தெய்வ வழிபாடு போல் அல்லாமல் குல தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையுடனும் பின்னி பிணைந்துள்ளது.

13. நீர் வளம் தரும் அய் யனாரையும் நோயில் இருந்து காக்க மாரியம்மனையும் குல தெய்வமாக கருதும் வழக்கம் பின்னணியில் ஏற்பட்டது.

14. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளுக்கு நீதி கேட்கும் வகையில் ஆங்காங்கு குலதெய்வ வழிபாடு முதலில் நடந்தது. தவறு செய்பவர்கள் குலதெய்வங்களுக்கு பயந்து ஒழுக்கமாக வாழ்ந்தனர்.

15. சாதிகள் தோன்றிய பிறகு குல தெய்வ வழிபாடும் சாதி வட்டத்துக்குள் சென்று விட்டது.

16. தமிழ்நாட்டில் சமய வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்த ராபர்ட் ரெட் பீல்ஸ் என்ற சமூகவியல் அறிஞர், தமிழ்நாட்டில் பெருந்தெய்வ வழிபாடு நடக்கும் அதே அளவுக்கு குல தெய்வ வழிபாடும் உள்ளதாக எழுதி உள்ளார்.

17. குல தெய்வ வழிபாடு அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதாக கருதப் படுவதால், அந்த வழிபாடு தமிழ்நாட்டில் தொய்வே இல்லாமல் நடந்து வருகிறது.

18. பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கரசம், கல், பெட்டி போன்ற அடையாள குறியீடுகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.

19. நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு.

20. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குலதெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன.

21. குல தெய்வம் இருக் கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வ மரம் இருக்கும்.

22. காணிக்கை அளித்தல், மொட்டை போடுதல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல், பொங்கலிடுதல் போன்றவை குல தெய்வங்களுக்காக நடத்தப்படுகின்றன.

23. தமிழ்நாட்டில் இன்றும் 90 சதவீத குலதெய்வ கோவில் வழிபாடுகளில் பலியிடுதல் நடைபெறுகிறது.

24. குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.

25. இடம், தோற்றம், வாழ்க்கை நிலை போன்றவற்றைக் கொண்டே குல தெய்வ வழிபாடு நிர்னையமாகிறது.

26. தென் இந்தியாவின் குல தெய்வ வழிபாடுகளை முதன் முதலாக ஹென்றி ஒயிட்ஹெட் என்பவர் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார்.

height ="212" width="377" layout="responsive">

27. குல தெய்வ வழிபாடு ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும்.

28. குல தெய்வ வழிபாடு களில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும்.

29. குல தெய்வங்களுக்கு கருவாடு, சுருட்டு, கஞ்சா, சாராயம் போன்றவற்றை படையல் செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

30. குல தெய்வ வழிபாடுகளில் உயர்சாதி இந்துக்கள் பூசாரிகளாக இருக்க மாட்டார்கள். உள்ளூர் பெண்களே பூசாரிகளாக இருப்பதுண்டு.

31. குல தெய்வ வழிபாடுகளின் போது சாமி ஆடுபவர்கள் அருள்வாக்கு சொல்வதுண்டு.

32. குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும்.

33. தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன.

34. குல தெய்வ கோவில்கள் ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும்.

35. குல தெய்வ கோவில் கள் ஆகம விதிப்படி கட் டப்பட்டிருக்காது. இடத்துக்கு ஏற்பவே அமைந்திருக்கும்.

36. குல தெய்வ கோவில்களில் திருவிழா நடத்துவது உள்பட எல்லா காரியங்களும் குல தெய்வத்திடம் உத்தரவு கேட்டே நடத்தப்படும்.

37. குல தெய்வ வழிபாடுகளில் மிகுந்த தீவிரமாக இருப்பவர்கள் தங்களை வருத்திக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.

38. குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் ‘வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.

39. குல தெய்வ கோவில்களில் பரிவார தேவதைகளுக்கும் இடம் கொடுப்பதுண்டு.

40. சில சமுதாயத்தினர் குலதெய்வ வழிபாட்டை ஆண்டுக்கு ஒரு முறையே நடத்துகின்றனர். ஆனால் குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தினமும் பூஜைகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.

41. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது.

42. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.

43. குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாடு, அசைவ வழிபாடு என இரு வகை உண்டு. பெரும்பாலும் அசைவ வழிபாடே அதிகம் நடைபெறுகிறது.

44. கிராமங்களில் இன்றும் குல தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

45. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.

46. குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப்புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறது.

47. சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, பூக்கட்டிப் போட்டு பார்த்தல் மூலம் முடிவு எடுப்பது வழக்கம்.

48. குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள்.

49. ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என் பது பல ஊர்களில் நடை முறையில் உள்ளது.

50. நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திரு விழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை.

51. குல தெய்வ வழிபாடே தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தது. தற்போதும் இருக்கிறது. இனியும் இருக்கும்.

ஞாயிறு, 3 மார்ச், 2019

மகாசிவராத்திரி


#மகாசிவராத்திரி

1)மஹா சிவராத்திரி எதனால் கொண்டாடபடுகிறது?
2) இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்?
3) இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்?

(காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.... இந்த பதிவை முழுமையாக படித்தாலே முழு சிவ ரகசியங்களும் தானாக புரியும்)

எல்லா கேள்விகளுக்கும்...
ஆன்மீக வழியில் ஒருபதிலும், அறிவியல் ரீதியான ஒரு பதிவும் ,
      புராண ரீதியாக ஒரு பதிலும் ,
      மருத்துவ ரீதியாக ஒரு பதிலும் ,
      வாழ்வியல் ரீதியாக ஒரு பதிலும் ,
ஆக எந்த விதத்தில் வேண்டுமோ அந்த வகையில் பதில் கிடைக்கும் .

இந்து மதம் என்பது மதம் இல்லை, அது வாழ்வியல் நெறிமுறை, எப்படி ஒரு மனிதன் வாழவேண்டும் என்று செல்லும் நெறிமுறை.

முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள்  மூலம் மக்களுக்கு இறைவனால் சொல்லப்பட்ட விதிமுறைகள். என்பதே நிதர்சனமான உண்மை. சரி இனி ஒவ்வரு ரீதியான பதில்களையும் பார்க்கலாம்.

சிவராத்திரி என்பது விழா அல்ல!  அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, 'அது எதற்கு? அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்துதான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.

இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர்.  லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும், முதலும், முடிவும் இல்லாதவர்.

மனிதர்களுக்கு  அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால்,

இருக்கிறது…

அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’  பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.

ப்ரதோஷத்தின் அடுத்தநாள் சிவராத்திரியைக் கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன ?
                         புராணம் சொல்லியிருப்பதை முதலில் பார்ப்போம். என்றும் அழிவே இல்லாமல் அமிர்தம்
கடையப்படுகிறது. கடைபவர்கள் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலை மத்து, கடையும்போது முதலில் ஆலம், காலம் என்கிற இரண்டு விதமான விஷம் வருகிறது. உலகமக்களை இரட்சிக்கும் பொருட்டு சிவன் அதை பருகுகிறார். உமையாகிய சக்தி அதைக்கண்டத்தில் நிறுத்தி வைக்கிறார். எனவே சிவன் திருநீல கண்டர் என்று போற்றப்படுகிறார். ஆனால் இதற்குப் பின்னால் தெளிவான யோக விஷயங்கள் மறைந்துள்ளன.

 முதலில்நந்தியின் கொம்பின் நடுவில் நின்று தாண்டவமாடுவது குறித்துப் பார்ப்போம்.

 திருமந்திரத்தில் ,
‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
                          இந்தபாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன்தானே? நந்தி  மகன் என்று போடப்பட்டிருக்கிறதே என்று. சிவபெருமானே நந்தி தேவனாக குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். அப்படி என்றால் வாகனமாகக் காட்டுவது எதனால் ?

இதில் உள்ள சூட்சுமத்த நந்தனாரின் பாடலில் ஒரு வரியில் கேட்கலாம். அதாவது அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் ஜாதியில் குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு ஈடு சொல்ல அன்று யாருமே இல்லை. சரி வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம் என்றால், இந்த நந்தி மறைக்கிறது. அதை அவர் ”நான் செய்த பாவங்களல்லவா இப்படி நந்தியாக வந்து குறுக்கே நிற்கிறது ” என்பார். ஆக சிவபெருமானை நாம் அடையத் தடையாக உள்ள வினைகள் எங்கே இருக்கும்? நம் உயிர் சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர் சக்தியே  நமக்குள் இருக்கும் நெருப்பாகிய குண்டலினி ஆகும். அதாவது நம் தீ என்பதே நந்தி  என்றழைக்கப்படுகிறது. அசையாமல் இருக்கும்
பேராற்றல் சிவம் அவரே இயக்கும் வல்லமையுள்ள சக்தியாகி நம் உடலில் உயிராக விளங்குகிறார். இதையே குண்டலினி சக்தியாகிய நந்தியின் மேலேறி அமர்ந்திருப்பது போல் காட்டப்படுகிறது. வினாயகர் பார்வதியின் பிள்ளைதான் என்று சொல்வார்கள்.

சிவத்தின் சக்தி அம்சமே குண்டலினியாகி நம் மூலாதாரத்தில் உறைகிறது. எனவேதான் மூலாதாரத்தின் தேவதையாக கணபதியைக் குறிப்பிடுவார்கள். வினாயகரின் உருவமே யோகத்தை உணர்த்துவது என்பதை வினாயகர் அகவல் மூலம் ஔவை நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

                   குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி
சிவத்தோடு கலக்கும் போது அமிர்தம் உண்ணலாம். குண்டலினி உச்சியில் இருக்கும் போது உச்சியில் சிவதாண்டவம் காணலாம். எல்லாமே யோக விஷயங்களின் குறிகாட்டிகளாகவே திகழ்கின்றன. பாற்கடல் நம் உடல், நம் முதுகுத் தண்டே மந்தாரமலை, வாசி எனப்படும் சுவாசமே வாசுகி, இடகலை, பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள். வாசி யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது குண்டலினியானவள் மேலேரும் போது முதலில் நமது பாவ வினைகள்தான் மேலேறும். அது அனாகதம் வரும் போதே அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே இறையாற்றலோடு கலக்கும், அவ்வாறு கலந்தால் எல்லா தவப்பலனும் வீணாகிவிடும் என்று குண்டலினி தேவியானவள் அதை விசுத்திக்கு மேலேறாமல் தடுத்து விடுவாள். விசுத்திக்கு மேலே பாவம் நீங்கிய சுத்த சக்தியே சிவத்தோடு ஒன்று சேர்ந்துசாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச்செய்யும். பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன்அஷ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்குஇன்னொரு பொருளும் உண்டு. அதாவது ஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும் ஓடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம், நீள் கண்டம் என்று சொல்வார்கள். அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறித்துசொல்வார்கள். பக்தர்களை இரட்சிக்கும் படிக்கு அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியானவள் அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள்.

ஆக பிரதோஷ வேளையில் (ஒடுங்கும் நேரத்தில்) நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள்வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் (நம் முன்னோர்களின்) பாவத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத் தேய்து வளரச் செய்து அருளியதற்காகவும், அவ்வாறு தேயும் போது அமாவாசையை ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை எற்படுத்தப்பட்டது.

நீங்கள் மேல் நாடுகளில் உள்ளவர்களைக் கேளுங்கள் பதிமூன்றாம் நாள், அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் முன்னோர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பதி மூன்றாவது நாளான (திதி) அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு வானில் இருந்து விஷத்தன்மையும், தீயசக்திகளும் வருவதாக நம்பிக்கை இருக்கிறது. அந்த வேளையில் பூஜை செய்து உலகை காக்க வேண்டுவதே பிரதோஷ பூஜை என்றும். அந்த நேரத்தில் முறைப்படி அதாவது ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோவிலில் இருந்தால் அந்த விஷத்தன்மை உள்ள தீயசக்தியின் பாதிப்பு ஏற்படாது என்றகருத்தும் நிலவுகிறது .

எது எப்படியோ எல்லா பாதைகளும் வழிபாடுகளோ, யோகமோ எதுவாயினும் பலன் இறைவனை அடைவதே. என்ன சற்று முன் பின்னாக அமையும்.

சிவராத்திரி எதனால் என்று புராணக்கதைகள் கேட்டிருக்கிறோம். ஒரு வேடன் புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி அமர்ந்திருந்ததும், அது வில்வ மரம் என்பதும், தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
                               மற்றொரு புராணமும் உண்டு. நான்கு முகம் கொண்ட அயனும், திருமாலும் தங்களுக்குள்சொற்போரிட்டுத் தன்னை தேடின பொழுது, சிவ பெருமான் திருவுளம் கொண்டு மாசித் திங்கள் பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நல்ல நாள் இராத்திரி பதினான்கு நாழிகையில் மகேஷ்வர மூர்த்தமாக அடியும் முடியும் காட்டாமல்  அவ்விருவருக்கும் காட்சி அளித்து, விசாரிக்கும் போது, பிரம்ம தேவன் சிவனாரின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யும், திருமாலானவர் திருஅடியைக் காணவில்லை என்று மெய்யும் விளம்பின படியால், நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது என்ற சாபமும், திருமாலுக்கு காத்தற்சிறப்புரிமை உண்டாகக் கடவது என்று வாழ்த்தும் அருளின தன்றி, அக்காட்சி ஒருமூன்றேமுக்கால் நாழிகை அளவு விளங்கி மற்ற தேவர்கள் எல்லோரும் கண்டுள்ளமையால், லிங்கோற்பவ காலமே முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன் மகேஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால் சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது. வேடனானவன் இதே நாளில் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்ததால் சிவதரிசனம் பெற்றான் என்பதே உண்மையாகும்.

 ஆனால்,இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது அனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன் (மன அழுத்தம்),  ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம்.  நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.

 மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கை கொள்வார்கள். துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள். திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம் 1.30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி திதிகளில் (மாத சிவராத்திரி) மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக் கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.

 மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹாசிவராத்திரி (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது (தியானம்). இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும்.

                      சைவசமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள்
கூறப்பட்டுள்ளன. பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான். அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் நம் முன்னோர்களால் தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதையோசித்துப் பார்க்கும் போது அவர்களின்
விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது. மேலும் மெய்ஞானத்தின் ஒருசிறு பகுதியே விஞ்ஞானம் என்பதுவும் புலனாகிறது. அதற்காக நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை
பொருள்உணர்ந்து அனுஷ்டித்தால் சிவனருளால் அனைத்து வரங்களும் கிடைக்கும்.

மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்!
*******************************************************

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று சிவனை  தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...

அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.

கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.

மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு?

மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி  முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது.

ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,

மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்
***************************************
'சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்'

இப்படி செய்வது ஒரு விதம்,

மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது இன்னொரு  விதம்,

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாற்றுதலும் செய்யவேண்டாம்.

ஒரு நாள் சிவராத்திரி விரதம்... ஓராண்டு சிவனுக்கு பூஜை செய்த புண்ணியம்!


ஒரு நாள் சிவராத்திரி விரதம்... ஓராண்டு சிவனுக்கு பூஜை செய்த புண்ணியம்!

இன்று மகா சிவராத்திரி திருநாள். இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளைச் செய்தால் சகல நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். கண்விழிப்பது என்றால், உறங்காமல் இருப்பது என்று பொருளல்ல. ஆன்மா விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆன்மா இறைச் சிந்தனையிலேயே லயித்திருக்க வேண்டும். அதுதான் மகாசிவராத்திரி புண்ணிய நாளின் நோக்கம். கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன. அதைப்போலவே இந்தத் திருநாளின் மகத்துவத்தைப் பற்றி, 'மகாசிவராத்திரி கற்பம்' என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. 39 குறட்பாக்களால் உருவான இந்த நூல் ஈசனை வழிபடும் நியமங்கள், வழிபடுவதால் பெறும் பேறுகள், இந்த நாளில் விரதமிருந்து பேறு பெற்றவர்கள் என அனைத்து விவரங்களையும் கூறுகிறது. வேளாக்குறிச்சி ஆதீனத்தைச் சேர்ந்த மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்டது இந்த நூல். `கற்பம்' என்றால் விரதம் என்ற பொருளைத் தரும். புராணங்களும், இலக்கியங்களும் கூறியபடி இந்த நாளின் மகிமைகள், விரத முறைகள், பலன்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வோம்


மகாசிவராத்திரி அன்று நடந்தவை ...

பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் (கழுத்தில்) தாங்கி நீலகண்டனாக நின்றது இந்த சிவராத்திரி நாளில்தான்.
அன்னை உமாதேவி ஈசனின் கண்ணைப்பொத்திய செயலால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான்.

சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அதுமட்டுமா? அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான். பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும், மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்ததும் இந்த நாளில்தான். இப்படிச் சொல்லச் சொல்ல நீண்டுகொண்டே செல்லும் இந்த மகத்தான நாளில் இரவு முழுவதும் சிவத் தியானமாக இருந்து வணங்கினால் சகல சம்பத்துகளையும் பெறலாம் என்று ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

மகாசிவராத்திரி விரதத்தின் பலன்கள் :

24 வருடங்கள் மகாசிவராத்திரி விரதமிருந்தால் பிறப்பிலா பெருமை அடைந்து சிவலோகப் பதவியைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதியை அடைவார்கள் என்றும்  சிவராத்திரி புராணம் தெரிவிக்கிறது. மேலும், மகாசிவராத்திரி விரதமிருந்த புண்ணிய சீலர்களைக் கண்டு யமன் அஞ்சுவார் என்றும், எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் கூறுகிறது.

மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

சகலத்தையும் அருளும் இந்த சிவராத்திரி விரதத்தினை உரிய நெறிகளோடு கடைப்பிடிக்க வேண்டும். விரதமிருப்போர்  மகாசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்தி சிவநாமம் ஜபித்துத் தயாராக வேண்டும். மகாசிவராத்திரியன்று அதிகாலையில் குளித்து, திருநீறு தரித்துக்கொண்டு, சிவாலயம் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும். பின்னர் எந்நேரமும் சிவ சிந்தனையுடன் தேவாரம், திருவாசகம் போன்ற திருமுறைகளைப் பாராயணம் செய்து இரவு முழுக்க  கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தகுந்த சிவாசாரியார்களை வைத்து வீட்டில் நான்கு கால பூஜைகளை செய்யலாம் அல்லது கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்துகொள்ளலாம். விரதம் முடித்த மறுநாள் காலையில் நீராடி, சிவனடியார்களோடு சேர்ந்து உணவருந்தி மகாசிவராத்திரி விரதத்தினை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

கூட்டம் அதிகமிருக்கிறதே, ஸ்வாமியை தரிசிக்க முடியவில்லையே என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். சிவனின் சந்நிதிக்கருகே அமர்ந்து ஐந்தெழுத்தை இரவு முழுக்க சொல்லிக்கொண்டிருந்தால்கூட போதும். ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். கோயிலுக்குச் சென்று கூட்டத்தில் தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே ருத்ராட்ச மாலையை கையில் வைத்து ஐந்தெழுத்தை ஓதலாம். சிவனின் படத்துக்கு வில்வத்தால் அர்ச்சித்து தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடலாம். நைவேத்தியமாக முடிந்ததை வைத்து வணங்கலாம்.

எளியோர்க்கு எளியோனான ஈசன், உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை கவனிப்பதே இல்லை. உங்களின் மனத் தூய்மையையும், அர்ப்பணிப்பையும்தான் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும், உள்ளமும் ஒருசேர விழித்திருந்து ஆன்ம பலத்தினை பெருக்கிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆண்டவனோடு இணைத்துவிடும்.

நம்முடைய உள்ளமாகிய மலர், இறைவனை அடைய சிவராத்திரி விரதம் என்ற நார் பயன்படலாம். பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணைய மகாசிவராத்திரி விரதம் பாலமாக அமையட்டும். ஜீவன் சிவனோடு லயித்திருப்பதே சிவராத்திரி நாளின் சிறப்பம்சமாகும்.

'நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...'