செவ்வாய், 29 அக்டோபர், 2019

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.


கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு | Kanda Sasti History Tamil


முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.

வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.

ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.

#Kanda_Sasti_History திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.
முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்… என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்…!

அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள்…!

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.

அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.

அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.


                                #Murugan

இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்..!

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,

நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்….! இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது….!

முருகா போற்றி..! முருகா சரணம்..!

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கந்தசஷ்டி ஸ்பெஷல்... விழாக்கோலம் பூண்டது... முருகனின் அறுபடைவீடுகள்...!!


கந்தசஷ்டி ஸ்பெஷல்... விழாக்கோலம் பூண்டது... முருகனின் அறுபடைவீடுகள்...!!
முருகனின் அறுபடை வீடுகள் !!

கந்தனின் சிறப்பான விரத நாட்கள் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம் மற்றும் கந்தசஷ்டி விரதமாகும். இந்த மூன்று விரதங்களில் கந்தசஷ்டி விரதமே மிகச்சிறந்த விரதமாகும். இந்த கந்தசஷ்டி விரதத்தில் முருகனை வழிபடுதல் சிறந்தது.

திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த பெருமையை கொண்டாடும் விழாவையே கந்தசஷ்டி என்று கூறுகிறோம்.

சஷ்டி என்பதற்கு ஆறு என்று பொருள். அதாவது, ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்தசஷ்டி காலமாகும்.

அந்த வகையில் கந்தசஷ்டி விரதம் கடந்த திங்கட்கிழமை(28.10.2019) தொடங்கி, நவம்பர் 02ம் தேதி அன்று சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.

முருகப்பெருமான் சிறப்பாக வாழும் இடங்களான அறுபடை வீடுகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

திருப்பரங்குன்றம் :

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அசுரனை வென்ற முருகன் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று (28.10.2019) விமர்சையாக தொடங்கியது.

திருச்செந்தூர் :

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடமாகும்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று (28.10.2019) தொடங்கியது.

பழனி :

பழனி, முருகனின் மூன்றாம் படைவீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகன் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

பழனி முருகப்பெருமான் கோவிலில், காப்புக் கட்டுதலுடன் நேற்று (28.10.2019) கந்தசஷ்டி விழா தொடங்கியது.

சுவாமிமலை :

சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடாகும். முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று. சுவாமிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று (28.10.2019) தொடங்கியது.

திருத்தணி :

திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடாகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. திருவள்ள+ர் மாவட்டம் திருத்தணி மலை மீது உள்ள முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா கோலாகலமாக நேற்று (28.10.2019) தொடங்கியது.

பழமுதிர்சோலை :

பழமுதிர்சோலை, முருகனின் ஆறாம் படைவீடாகும். இதற்கு திருமலிருஞ்சோலை, குலமலை, கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவையாருக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்சோலை என்று பெயர் பெற்றது.

பழமுதிர்சோலை முருகன் கோவிலில், மேளதாளம் முழங்க காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா நேற்று (28.10.2019) தொடங்கியது. கந்தசஷ்டி விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் வந்து முருகப்பெருமான் அருள்பாலிப்பார்.


ஞாயிறு, 27 அக்டோபர், 2019

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்

மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.

கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத
விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம்
மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும்
வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித் த நாள்.

கந்த விரத மகிமை

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம்
விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும்
அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு
என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய
சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம்
கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த
சஷ்டியாகும்.

கந்தசஷ்டி விரத அனுட்டானம்

ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு
நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம்
மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும்
உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான
தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத்
தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்,
வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம்
தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்
வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை
எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை
அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு,
பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக
எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி
விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்
கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப
நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,
குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர்

சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்
துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது
சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச்
சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்
பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை
முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும்
நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக்
கிடைத்தது.

கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர்
மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்
ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும்
கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த
பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல்
இதுவாகும்.

கந்தசஷ்டி விரத பயன்கள்

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர்
அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப்
பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை
ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில்
எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண
படனப்படிப்பும் நடைபெறும். விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன்
போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை
நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி
உட்கொள்ள வேண்டும்.

கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்


கார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள்

*1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.*

*2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.*

*3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.*

*4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.*

*5. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.*

*6. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.*

*7. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.*

*8. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.*

*9. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.*

*10. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.*

*11. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.*

*12. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.*

*13. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.*

*14. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.*

*15. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.*

*16. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.*

*17. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.*

*18. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.*

*19. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.*

*20. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.*

*21. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.*

*22. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.*

*23. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.*

*24. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.*

*25. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.*

*26. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.*

*27. கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*

*28. கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.*

*29. கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.*

*30. கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.*

*31. தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.*

*32. கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.*

*33. கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.*

*34. நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.*

*35. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.*

*36. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.*

*37. கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரபசித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவசிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.*

*38. சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சாத்தி கவசம் போட்டிருப்பர்.கார்த்திகை பவுர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.*

*39. திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.*

*40. பாலக்காடு அருகே உள்ள ஊர் கல்பாதி. இங்குள்ள ஸ்ரீவிஸ்வ நாதஸ்வாமி ஆலயத்தில், கார்த்தி கைத் தேரோட்டம் விசேஷம். பூரி ஜெகநாத சுவாமி கோயில் தேரோட்ட வைபவத்தை அடுத்து, இங்குதான் பெரியளவில் தேரோட்டம் நடைபெறுகிறதாம். இங்கே, 6 சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேரினை யானைகள் இழுப்பது சிறப்பு!*

*41. குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!*

*42. கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம்.*

*43. கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ‘ர’ என்றால் நெருப்பு, ‘மா’ என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும்.*

*44. கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.*

*45. கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.*

*46. கார்த்திகை மாதம் அனங்க திரைபோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும்.*

*47. கார்த்திகை மாதப் பவுர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும்.*

*48. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.*

*49. கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.*

*50. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.*

*51. கார்த்திகை மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி பற்றிய 25 தகவல்கள்


தீபாவளி பற்றிய 25 தகவல்கள்
 
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பற்றிய 25 தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


1. ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை, இது தீபாவளிப் பண்டிகை என வழங்கப்படுகிறது.

2. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

3. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர். முதல் நாள் பண்டிகையை சோட்டா தீபாவளி (சிலு தீபாவளி) என்பர். இரண்டாம் நாள் பண்டிகையை 'படா தீபாவளி' (பெரிய தீபாவளி என்பர். மூன்றாவது நாளன்று 'கோவர்த்தன பூசை' செய்து கண்ணப்பிரானையும் பூசிப்பர். அன்று தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனைவதம் செய்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

4. தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். மிகவும் புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும் வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால் அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப் பயன்கிட்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

5. வடநாட்டில் தீபாவளித் தினத்தன்று செல்வத் திருமகளான லட்சுமிதேவியைப் பூஜித்து, புதுக்கணக்குத் தொடங்குவர்.

6. தீபாவளித் தினத்தன்று வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோல மிடுவர். தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணி கள் பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய் சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.

7. புதிதாக மணமுடித்தவருக்கு அமையும் தீபாவளி தலைத் தீபாவளி. மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குதல் வேண்டும். அடுத்து அவர்கள் பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக்கொள்ள வேண்டும்.

8. தீபாவளியின்போது பெரியோர்களை வணங்கி அவர் களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும். சாஸ்திரத்திற்காகப் பட்டாசு கொளுத்தவேண்டும்.

9. தீபாவளிச் சமையலில் சாம்பார், புளிக்குழம்பு போன்றவை இடம் பெறக்கூடாது. ஏனென்றால், தீபாவளிப் பண்டிகை யின் போது மழைக்கால மாகையால் அப்போது அவை செரிமானம் ஆகாது. இப்பருவத்திற்கேற்ற, உடலுக்கு இதமான, பக்குவமான உணவு மோர்க்குழம்பு மட்டுமே. எனவே, தீபாவளிப் பண்டிகைச் சமையலில் மற்ற உணவுகளுடன் மோர்க்குழம்பு முக்கிய பங்கைப் பெறும்.

10. இந்துக்கள் மட்டுமின்றி ஜைனர், பெளத்தர், சீக்கியர் ஆகியோரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

11. ஞான நூல்களுள் ‘பகவத் கீதை’ சிறப்பான இடத்தை பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தை பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் ‘பகவத் கீதையின் தம்பி’ என்று சொல்லியுள்ளார்கள்.

12. லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ‘செல்வம் வளரும்’ என்பது நம்பிக்கை.

13. தீபாவளி தினத்தன்று, ‘என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது இன்றும் நம் நாட்டில் பழக்கத்தில் இருந்து வருகிறது.

14. ‘தைலே லட்சுமி: ஜல கங்கா’ என்பது துலாபுராணத்தின் மணியான வாசகம். கங்கை, தீபாவளி அன்று எண்ணையிலும் வெந்நீரிலும் இருப்பதாக ஐதீகம்! சிலர் காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்வார்கள். தீபாவளி அம்மாவாசை காசியில் மிகவும் விசேஷம்.

15. கண்ணபிரானுக்கும் நரகாசுரனுக்கு நடந்த யுத்தத்தில் கண்ணபிரான் தேர்த்தட்டில் மயக்க முற்றார். சாரதியாக வந்த சத்தியபாமா வீரத்துடன் போராடினாள். அதனால் இப்பண்டிகை வீரலட்சுமியைப் போற்றி வணங்கும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

16. அஞ்ஞானத்தின் ஸ்தூல வடிவம் தான் நரகாசுரன். அந்த இருளைப் போக்குதவற்கு ஞான தீபங்களை ஏற்றுகிறோம் என்பதுவே தாந்தக்கருத்து.

17. எம் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகம் சென்ற மகாபலி சக்கரவர்த்தி எம் பெருமானிடம் ஆண்டிற்கு ஒரு முறை தாம் பூலோகம் வரவேண்டும் என்றும் அந்த நாளில் பூலோக வாசிகள் புத்தாண்டை உடுத்தி, எங்கும் விளக்கேற்றி கோலாகலத்துடன் தன்னை வரவேற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அந்த நாள் தான் தீபாவளி என்று கூறப்படுகிறது.

18. தீபாவளி பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன்.

19. சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

20. தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

21. வடநாட்டின் சில பகுதிகளில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். முதல்நாள் லட்சுமி பூஜை. இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி. மூன்றாம் நாள் தீபம் ஏற்றுவது. நான்காம் நாள் முழுக்கு. ஐந்தாம் நாள் எமனை வழிபடுவது.

22. எமனுக்கு யமுனை என்ற தங்கை உண்டு. எமன் தீபாவளியன்று அவளுக்கு பரிசுகள் வழங்குவானாம். அதனால் அன்று அண்ணன், தங்கையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும். தங்கைக்கு ஆபரணம் செய்து கொடுப்பர். வயதானவர்கள் யமுனா நதியில் ஸ்நானம் செய்வார்கள்.

23. தீபாவளியின் போது இளம் பெண்கள் தீபங்கள் ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்துவிடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

24. தீபாவளியின் போது வடநாட்டினர் மாடுகளையும் எருதுகளையும் கன்றுகளையும் குளிப்பாட்டி திலகமிட்டு அலங்காரம் செய்வர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் போதுதான் இப்படி செய்வார்கள்.

25. வியாபாரிகள் தீபாவளியை விக்ரமாதித்தனின் நினைவாக கொண்டாடுகின்றார்கள்.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தீபாவளி அன்று மகாலட்சுமி, குபேரனை கும்பிடுங்கள்


தீபாவளி அன்று மகாலட்சுமி, குபேரனை கும்பிடுங்கள்

தீபாவளி அன்று  மகாலட்சுமியை வழிபடும் போது குபேரனையும் வழிபட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமியை வழிபடும் போது குபேரனையும் வழிபட வேண்டும். குபேரன் யட்சர்களுக்குத் தலைவர் சாந்த குணம் கொண்டவர். இவர் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை எப்பொழுதும் ஜெபித்தவாறு இருப்பார். இதனால் எல்லா சக்திகளையும் தன் வசம் கொண்டு பக்தர்களுக்கு வாரி வழங்கும் குணம் கொண்டவர்.

மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்க நிதி, பதுமநிதியை குபேரன் ரட்சிக்கிறார். சங்க நிதி. பதுமநிதி இரண்டும் அளவில்லாத பொருட் செல்வத்தைக் கொண்டமையால் குபேரனின் இரு பக்கத்திலும் இவர்கள் எப்பொழுதும் வீற்றிருப்பார்கள். குபேரன், இலங்கேஸ்வரன் மற்றும் சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன், மிகச் சிறந்த சிவ பக்தன் குபேரனுடைய இடை விடாத தவத்தால் சிவபெருமான் மனம் குளிர்ந்து வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.

குபேர பட்டணமான அளகாபுரத்தில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர், மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபய முத்திரையுடனும், கிரீடம் முதலிய சொர்ண ஆபரணங்களுடனும், முத்துக் குடையின் கீழ் சிம்மா சனத்தில் குபேரன் வீற்றிருக்கிறார். அவரது வலது புறம் சங்கநிதி, தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வரத்திரையுடனும் இருந்து அருள் தருகிறார். இடது புறத்தில் பதுமநிதி தன் வலது கையில் பத்மத்துடனும், இடது கை வரத்திரையுடனும் அருள் தருகிறார்.

சங்கநிதி, பதுமநிதி இரண்டும் ஆண் உருவங்கள், குபேரனுடைய இடது புறம் அவரது தர்மபத்தினி இடது கையில் கருநெய்தல புஷ்பம் ஏந்திய நிலையில் வலது கையில் குபேரனை அணைத்தவாறு காட்சி கொடுக்கிறார். குபேரன் ராஜயோகத்தை அளிக்கக் கூடிய தனலட்சுமியும், தைரிய லட்சுமியும் சர்வ சக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால் குபேரன் தனத்திற்கும், வீரத்திற்கும் ராஜாவாக இருக்கிறார்.

எந்தப் பூஜையின் முடிவிலும் ராஜாதிராஜன் எனப்படும் குபேரனை வணங்கியே பூஜையை முடிப்பது வழக்கம். லட்சுமி செல்வத்தின் அதிபதி தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வரும். புது கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்துவிட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர் தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

வருத்தத்தால் மகா விஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

திருமால் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க உலகில் உள்ள எல்லா அழகுகளையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள் இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள். செல்வத்துக்கு அதிதேவதையாக இருப்பவள் மகாலட்சுமி அவளைப் பிராத்திப்பதால் நமக்கு தர்ம நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பவத்தைத் தந்து அனுக்கிரகம் செய்வாய். பணம் சம்பாதிப்பதில் தவறு இல்லை. அது கிடைக்கும் வழி நியாயமானதாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதைவிட அதை நல்ல வழிகளில் செலவிடுகிற, பிறர் நன்மைக்காகப் பணம் கொடுக்கிற மனப்பான்மைதான் முக்கியம். இந்த மனோபாவத்தை அருள வேண்டும் என்றும் மகாலட்சுமியை நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
நன்றி மாலை மலர்.
#Deepavali  #lakshmi #kubera #தீபாவளி #லட்சுமி #குபேரன்

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தீமையை அழித்து நன்மை பிறந்த நாள்... தீபாவளித் திருநாள்...


தீமையை அழித்து நன்மை பிறந்த நாள்... தீபாவளித் திருநாள்...
 
தீபங்களின் திருநாள் தீபாவளி. ‘தீபத்தின் ஒளி’ அதுவே தீபாவளி என்றும், தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளியைத் தருவதால் தீபாவளி என்றும் பல பெயர்க் காரணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது தீபாவளித் திருநாளாகும்.

தீமையை அழித்து நன்மை பிறந்த நாள்... தீபாவளித் திருநாள்...
தீபாவளி

தீபங்களின் திருநாள் தீபாவளி. ‘தீபத்தின் ஒளி’ அதுவே தீபாவளி என்றும், தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளியைத் தருவதால் தீபாவளி என்றும் பல பெயர்க் காரணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது தீபாவளித் திருநாளாகும்.

தீபாவளியின் வரலாறு

நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற நாட்டை ஆண்ட மன்னனே நரகாசுரன். இவன் மக்களுக்கும், தேவர்களுக்கும் பல கொடுமைகளைச் செய்து வந்தவனாவான். பூமாதேவியின் மகனான நரகாசுரனின் பெயர் பவுமன் ஆகும்.

திருமால் அசுரர்களை அழித்த அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர குணமானது இவனுக்கு அதிகமாகவே இருந்தது. மனிதனாகப் பிறந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் அவனை ‘நரகாசுரன்’ என்று அனைவரும் அழைத்தனர். அனைவருக்கும் அச்சுறுத்தலாகவும், மிரட்டலாகவும் அவனது செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தன.

அவனது கடும் தவத்தை மெச்சி, அனைத்து உலகையும், உயிர்களையும் படைக்கும் பிரம்ம தேவன் அவனுக்கு ஒரு வரத்தை அதாவது அவன் வேண்டிய வரத்தை வேறு வழியின்றி அளிக்கிறார். அந்த வரமானது அவனது தாயாரின் கையால் மட்டுமே அவனுக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் அவனை அழிக்க முடியாது என்பதாகும்.

இந்த வரத்தைப் பெற்ற பிறகு அவனது அட்டகாசம் மேலும் அதிகரித்தது என்றே சொல்லலாம். பல்வேறு கடவுள்களின் பதினாறாயிரம் மகள்களைக் கடத்தி வந்து அந்தப்புரத்தில் சிறை வைத்ததோடு அல்லாமல், கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையும் திருடியவன் நரகாசுரன் ஆவான். இதனால் அனைத்துக் கடவுள்களும், தேவர்களும் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டனர்.

நரகாசுரன் பிரம்மனிடமிருந்து பெற்ற வரத்தை அறிந்திருந்த கிருஷ்ணர், தனது ரதத்தின் சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவியின் மறு உருவம்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே கடும் சண்டை மூள்கிறது. சண்டையின்போது நரகாசுரன் விட்ட அம்பானது தாக்கப்பட்டு கிருஷ்ண பகவான் மயக்கமடைகிறார். இதைப் பார்த்த சத்தியபாமா கோபமடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தார்.

சத்தியபாமா பூமியின் அவதாரம் என்பதை உணராமல் அவரோடு நரகாசுரன் போர் புரியத் துவங்கினான். இதனையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறிபார்த்துத் தாக்குகிறார். நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரன் இறக்கும் தருவாயில் தனது தாய் சத்யபாமா என்பதை அறிந்து, அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட மக்களும், தேவர்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.

இதனால் கிருஷ்ணபரமாத்மாவும், சத்யபாமாவும் அவனுக்கு அவன் வேண்டிய வரத்தைக் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது என்று புராணங்கள் கூறுகின்றன.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்ததால், கிருஷ்ண பகவான் எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். இன்றளவும் இதுவே தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமாகத் தொடருகிறது. இதனைக் கிருஷ்ணலீலை என்று புராணங்களில் கூறியிருக்கிறார்கள்.

தீபாவளியானது, தீபத்திருநாள் என்று அழைக்கப்படுவதற்கு மற்றொரு புராணக்கதையும் உள்ளது.

ராவணனை வென்று சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார் ராமபிரான். அவர்கள் அயோத்திக்கு வந்த அன்று அமாவாசை இரவு நேரமாகும். இதனால், இருளில் வந்த அவர்களை வரவேற்கும் விதமாக அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளிகூட்டினர். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயர் வந்தது.

தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாமல் வங்காளதேசம், இலங்கை, பர்மா, மலேசியா ஆகிய வெளிநாடுகளிலும் வேறு பெயர்களில் வேறு முறைகளில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பண்டைய காலங்களில் பட்டாசுகளை இலை மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தயாரித்து வந்துள்ளனர்.

தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது கங்கையில் நீராடியதற்குச் சமமாகக் கருதப்படுகின்றது. குளித்த பிறகு புத்தாடை உடுத்தி, இனிப்புடன் காலை உணவருந்தி பின்னர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவதை அனைத்து வீடுகளிலும் பார்க்க முடியும்.

அந்த நன்னாளில் நம் வீட்டில் செய்த இனிப்பு, கார வகைகளை நம் உறவினர், தெரிந்தவர்களுக்கு கொடுக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கால்களில் விழுந்து ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம்.

ஆதரவற்ற சிறுவர், பெரியவர்கள் தங்கியிருக்கும் இல்லங்களுக்குச் சென்று நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களின் முகத்திலும் சந்தோசத்தையும், புன்னகையையும் கொண்டு வர நம்மால் முடியும் என்று நம்புவோம். இதுபோன்ற நல்ல செயல்களை இதுபோன்ற பண்டிகை நாட்களில் செய்யும்பொழுது நம்முடைய சந்தோசம் மட்டுமல்லாமல் அவர்களது சந்தோசமும் பன்மடங்காகப் பெருக வழி செய்வோம்.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு


தீபாவளி பண்டிகை உருவான வரலாறு

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்.

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஐப்பசி மாதத்தின் சிறப்புகள்

 ஐப்பசி மாதப் பிறப்பு
ஐப்பசி மாதத்தின் சிறப்புகள்

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.

காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.

இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தீபாவளி பண்டிகை🌺

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.

புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.

புதுமணத்தம்பதியர் தலைதீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிபாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

கந்த சஷ்டி திருவிழா🌺

இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தவிரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.

எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.

இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.

அன்னாபிஷேகம்🌺

ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.

தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.

வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.

ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது.

அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.

துலா ஸ்நானம்🌺

ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.

துலா ஸ்நானம் நிகழ்வு, ஸ்ரீரங்கத்திலும் மயிலாடுதுறையிலும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

காவிரியில் துலா ஸ்நானம் செய்வதால் நம்முடைய மற்றும் நம்முடைய முன்னோர்களின் பாவங்கள் நீங்குகின்றன.

அழகு, ஆரோக்கியம், உடல்நலம், செல்வம், கல்வி, வலிமை, குழந்தைப்பேறு ஆகியவற்றை துலா ஸ்நானம் தருவதாகக் கருதப்படுகிறது.

ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையில் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்றழைக்கப்படுகிறது.

தனத்திரயோதசி🌺

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது.

அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்கநகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

யம தீபம்🌺

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோச வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.

தன்வந்திரி ஜெயந்தி🌺

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவான் தோன்றினார். எனவே திரயோதசி வேளையில் தன்வந்திரி பகவானை வழிபட நோய் நொடி இல்லா ஆரோக்கிய வாழ்வு கிட்டும்.

யமத் துவிதியை🌺

ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும்.

எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ஒற்றுமை ஏற்படுவதுடன் சகோதர சகோதரிகள் நீடித்த ஆயுள் கிடைக்கப் பெறுவர். சகோதரிகள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

கோவர்தன தினம்🌺

ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார்.

கோவர்த்தன கிருஷ்ணரை வழிபட நம்முடைய கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசும்.

கோவத்ச துவாதசி🌺

ஐப்பசிமாதத்தில் தேய்பிறை துவாதசி கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து வழிபாடு செய்ய வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்சியுடன் இருப்பார்கள்.

முருகன் சுக்ரவார விரதம்🌺

முருகப்பெருமானுக்கு நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாள் விரதம் என்பது வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது.

நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும்.

முருகன் சுக்ரவார விரதம் என்பது ஐப்பசி மாத முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரத முறையானது பகலில் ஒரு வேளை உணவு உண்டும், இரவில் பழம் உண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையால் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கேதார கௌரி விரதம்🌺

இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரதமுறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொருபாகன், அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.

இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இவ்வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபடப்பட்டு இறுதியில் எல்லோர் கையிலும் அணிவிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என எல்லோரும் இவ்விரதமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது,ஏழு, ஐந்து, மூன்று நாட்களும், ஒரு சிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கின்றனர். கோவில்களிலும், வீடுகளிலும் கேதார கௌரி வழிபாடு நடத்தப்படுகிறது.

இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்தல், நல்ல வாழ்கைத்துணை, நற்புத்திரர், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும்.

பாபாங்குசா ஏகாதசி🌺

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இது பாவங்களைப் போக்கும் கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும். நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும்.

இந்திரா ஏகாதசி !

ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா என்று அழைக்கப்படுகிறது. இது மூதாதையர்களுக்கு நற்கதி அளிக்கும். இவ்விரத நாளில் பால் அருந்தக் கூடாது.

ஐப்பசி மாதத்தை சிறப்பு செய்தவர்கள்🌺

இம்மாதத்தில் திருமூல நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜெயந்தியும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ஐப்பசி மாதத்தில் விரதமுறையை மேற்கொண்டு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோம்.

புதன், 16 அக்டோபர், 2019

தீபாவளியை கொண்டாடுவது ஏன்?

தீபாவளியை கொண்டாடுவது ஏன்?

*தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் ?*

நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள், பட்டாசுகள், புத்தாடை என்ற ஆசையை ஏற்படுத்தும் இந்த தீபாவளியின் வரலாற்றைக் காண்போம்.

நரகாசுரன் என்ற அரக்கண் மரணம் அடையும் நேரத்தில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். அவனது ஆசையின் படி நாம் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடிவருகிறோம்.

*நரகாசுரன் என்பவர் யார்?*

நரகாசுரன் என்பவர் பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகன் தான். அவன் ஆரம்பத்தில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று கொண்டு சிறந்து விளங்கினான். ஆனால் அவனுக்கு வயது ஆக ஆக அவன் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. கெட்ட சகவாசத்துடன் சேர்ந்து எல்லோரையும் துன்பப்படுத்தினான்.

பெரிய மகரிஷி குருவை இகழ்ந்து பேசினான். எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான். அதற்காக போருக்குத் தேவையான எல்லாக் கலைகளையும் படித்து அறிந்து கொண்டான். பின் அவன் தாய்ச் சொல்லையும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்த தொடங்கினான். அதனால் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

*நரகாசுரனின் தவம்*

இதற்கிடையே அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யத் தொடங்கினான். பிரம்மாவும் மனம் நெகிழ்ந்து வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே நரகாசுரன் தனக்கு சாகா வரம் வேண்டும் என்று வேண்டினான். உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அதனால் வேறு எதாவது கேள் என்றார் அவர்.

பின் தன் தாயைத் தவிர வேறு யாராலும் சாகக் கூடாது. அதற்கு வரம் கொடுங்கள் என்று கேட்டான். 'நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்" என்று கூறிவிட்டு பிரம்மா மறைந்து விட்டார்.

*நரகாசுரனின் திட்டம்*

வரம் வாங்கிய பின் ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாச வேலை. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆசைப்பட்டான். முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட ஆரம்பித்தான். பல தேவர்களைச் சிறையில் தள்ளினான்.

இந்திரன் ஓடி ஒளிந்துக் கொள்ள, மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று நிலமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். 'கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர். நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூற, 'அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினது போல் தான்", என்பதற்கு ஏற்ப நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை.

*நரகாசுரனின் அட்டகாச வேலை*

*போர் ஆரம்பம் :*

கண்ணனுக்கு சாரதியாக சத்தியபாமாவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் அறிந்தவள். அவள் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது.

*மாயக் கண்ணனின் மாய வேலை :*

கடும்போர் தொடர, நரகாசுரன் தன் கடாயுதத்தை கண்ணன் மீது வீசினான். மாயக் கண்ணன் மயங்கி விழுந்தார். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர். ஆனால் காரணம் இல்லாமல் கண்ணன் மயங்கவில்லை. பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள். அவள் கையால் தானே மரணம் நிகழ வேண்டும்.

சத்தியபாமா கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் சீரிக் கொண்டு எழுந்தாள். 'என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பை நரகாசுரன் மேல் சரமாரியாக எய்தாள். அவனும் கீழே சாய்ந்தான். அதேசமயம் மயங்கியவர் போல் விழுந்திருந்த கிருஷ்ணர் எழுந்து வந்தார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். உயிர் பிரியும் நிலையில் பாமாவைப் பார்த்து 'அம்மா" என அழைத்தான்.

*கேட்ட வரம் பலித்தல் :*

அந்தக் குரல் கேட்ட பாமாவிற்கு தன் முன்பிறவி நினைவிற்கு வந்தது. பூமாதேவியின் வடிவமும் கொண்டாள். தன் மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு அழுதாள்.

'மகனே! நானே உன் இறப்பிற்கு காரணமாகிவிட்டேனே. நீ கேட்ட வரம் பலித்துவிட்டதே மகனே! இந்த அம்மாவை மன்னித்துவிடு மகனே" என்று அழுதாள். 'அம்மா! கலங்காதீர்கள். தங்கள் கையினால் நான் மடிவதில் எனக்கு மகிழ்ச்சியே" என்றான் நரகாசுரன்.

கிருஷ்ணர் நாராயணனாக வடிவம் தாங்கி அருகே வந்து நின்றார். 'நரகா! உன் வரத்தின் படியே நீ முடியவேண்டும் என்பதற்காகவே சத்தியபாமாவை உடன் அழைத்து வந்தேன். அவள் கையினாலேயே நீ மடியவேண்டும் என்ற உன் விருப்பம் நிறைவேறியதல்லவா" என்று கிருஷ்ணர் கூறினார்.

'தந்தையே, உலகில் தோன்றிய எந்த உயிரும் மறைந்தே தீரும் என்ற உண்மை என்னால் நிரூபிக்கப்பட்டுவிட்டது" என்று கதரினான்.

அவன் கேட்டபடியே அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணு காட்சி அளித்து மறுபடியும் அவனுக்குத் தேவையான வரத்தைக் கொடுப்பதாகச் சொன்னார். நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதன்படி நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம்இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டிகவசம்.

இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர்,மிகச்சிறந்த முருக அடியார் இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மடவிளாகம் என்ற ஊரில் பிறந்தவர் இந்த கந்தசஷ்டிகவசம் சுவாமிகள் இயற்றிய பின்பு முருகன் அவர்கள் இவருக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை மலைக்கோவிலில் இந்த கவசத்தை அரங்கேற்று மாறு உத்தரவிட்டார்கள்

இவருக்கு 250 வயது: எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சிலசொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது
கந்தசஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்துஎடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில்சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. மேலும், சஷ்டிகவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும்கணிக்கப்படுகிறது.

பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவைஅனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம்பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியைநோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்டகவசம்தான்.

சஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டிகவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது. ஒருசமயம்அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோசிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்குவந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.

ஏற்கனவேபாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்ததிருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழாமுடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்றுஎண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத்தொடங்கினார்.

முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனைவழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்குஅளித்தார்.
அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்திவெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தைமுதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு,முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலைதிருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களைஇயற்றி முடித்தார்.

6 சஷ்டிகவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது,அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய்இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னைமுருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதைஅறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன்முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

திருவாசகத்திற்குமனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்குதங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவுசக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலைமுருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அவ்வாறு அவர்பாடியதுதான் சண்முக கவசம்.

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டிகவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது.
முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள்மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமைதிதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தைநிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்பெருமானுக்குமுகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6 முருகனை வளர்த்தகார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்றமுருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம்இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றைகுறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமைகொண்டவரும் முருகப்பெருமான்தான்.

அதனால், நாம் வழக்கமாகபாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றியசஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தைநாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம்வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தைபாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டிகவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது

சனி, 12 அக்டோபர், 2019

கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை


கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை!

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு என்றால் அழகு என்று பொருள். ஆகவே கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறைகளை பார்ப்போம்:

* பொம்மைகளை படிகளில் அடுக்கும் முன் முதலில் படிகளை நன்றாக சரி பார்க்கவும். அதுபோன்று படிகளை அலங்கரிக்கும் வேலைகளையும் முதலில் செய்துவிடவும்.

* பட்டுத் துணிகள், பாலிஸ்டர் போன்ற துணிகளை பயன்படுத்தாமல் படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

* மேல் படியில் இருந்து கொலு பொம்மைகளை அடுக்கிக் கொண்டு வரவும் .

* நவராத்திரி நாட்களில் பொம்மைகளுக்கு சாம்பிராணி புகைகளை அதிகம் காட்ட வேண்டாம்.

* தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிகளை சுற்றி தின்பண்டங்கள் எதுவும் சிந்திக் கிடக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

* கொலுவைப் பார்க்க வருபவர்கள் கொடுக்கும் பொம்மைகளை கீழே உள்ள இரண்டு படிகளில் வைக்கவும்.

* கொலு முடிந்த பிறகு இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்ளவும்.

* கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடுக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதி பெட்டியின் மேல் ஒட்டிவிட்டால் அடுத்தமுறை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

* பழைய பொம்மைகள் இருந்தால் தனியாக ஒரு பெட்டியில் கட்டி வைத்தால் அடுத்தமுறை எடுக்கும் போது வர்ணம் பூச ஏதுவாக இருக்கும்.

* கொலு பொம்மைகளை கட்டிவைக்கும் போது காட்டன் துணியிலோ அல்லது காகிதங்களிலோ சுற்றி வைக்கலாம். பாலிதின் கவரில் வைத்தால் பொம்மைகளின் நிறம் மங்கி காணப்படும்.

* பொம்மைகளை பெட்டிகளில் அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிற்க வைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்கக் கூடாது.
பொம்மைகள் முறையாக பராமரித்தால், பல தலைமுறைகள் வரை பாதுகாக்கலாம்.

திங்கள், 7 அக்டோபர், 2019

குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு


1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது.
3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.
4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.
5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.
7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.
8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம்.
9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும்.
12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.
13). குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
14). அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
15). எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
16). ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்.
17). குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
18). குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.
19). இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.
20). குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
21). குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும்.
22). வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
23). தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.
24). குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பது.
25). குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம்.
26). குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம்.
27). குலதெய்வ வழிபாடு இல்லாமல் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவற்றின் பலன்கள் கிடைக்காது.
28). குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.
29). குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.
30). துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும்.
31). நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.
32). குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விசயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோசமாய் இருங்கள்.
33). ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.
34). குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. [ ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும்.
35). குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.
36). குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
37). குலதெய்வ வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால் தான் "குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது" என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது.
38). நாம் நம் குலதெய்வத்தை வழிபடும் போது நமக்கு வரும் வினைகள்[இன்னல்கள்] யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
39). உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
40). நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
41). மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள்.
குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள்.
42). குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது.
43). எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி வந்த குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு சந்ததியினருக்கும் நல்ல வாழ்க்கை அமையாது.
44). குலதெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது.
45). பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள்,குலதெய்வங்கள் ஆகாது.
46). இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான்.
47). மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
48). நாம் வணங்கும் இஷ்ட தெய்வம் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.
49). குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர்.
50). உங்களின் குலதெய்வம் அசைவம் வைத்து படைக்கும் குலதெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள். நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம்.
51). பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.
52). குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை.
53). ஆண்டியை அரசனாக்குவதும் அரசனை ஆண்டி ஆக்குவதும் நம் குலதெய்வமே.
54). அவரவர் குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.
55). குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல் காத்து நிற்கும்.
56). குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.
#பதினெட்டாம்படி கருப்பசாமி சரணம்

விஜயதசமி கொண்டாடுவது ஏன்?


விஜயதசமி கொண்டாடுவது ஏன் தெரியுமா?

சரஸ்வதி பூஜை முடிந்த அடுத்த நாளை அனைவரும் விஜயதசமி நாளாக கொண்டாடுகிறோம். ஏன் விஜயதசமி கொண்டாடுகிறோம் என்று தெரியுமா? இதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

🌟 பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் ஆழ்ந்தான். பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால், பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார்.

🌟 இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எண்ணினான் மகிஷன்.

🌟 தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டனர்.

🌟 தேவியும் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க போர் செய்ய முற்பட்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தை அன்னைக்கு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

🌟 அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். கொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள் அன்னை. அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.

🌟 அசுரனை வென்று அனைவருக்கும் நன்மையை அளித்த அன்னையை போற்றி வழிபட்டால் தீமைகள் ஏதும் நெருங்காது.

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை.


புரட்டாசி ஸ்பெஷல் !

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை”- இது ஒரு தெய்வீக விடுகதை.

        குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீஎன்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன்.

       குபேரன் கடனை கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீவராகப்பெருமாள்.

          அதானால் பன்றியாகிய ஸ்ரீவராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள்.

          திருப்பதி-வராக சுவாமி கோயில்: வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இது ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார். வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும்

பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது."பூ"என்றால் பூர்த்தி."ஜா"என்றால் உண்டாக்குவது.


பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது."பூ"என்றால் பூர்த்தி."ஜா"என்றால் உண்டாக்குவது.

தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக இருக்க வேண்டுமென்ற பொறாமை, உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டி படைக்கின் றான்.

இதையே சைவ சித்தாத்தத்தில் கர்மா,மாயை என்கிறார்கள். இதை அகற்றி ,ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை.

சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால்,அவளது விழாவை மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது .

சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும். பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன. அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள் பாலித்தாள். அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.

சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை. வானவில்லின் 7வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு. கற்றவர், மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளைஆடை அணிந்திருக்கிறாள்.

வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து,கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.

வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும்.

 தன் வாழ்நாளுக்குள்,ஒருவன் எல்லாக் கலைகளையும் கற்று விட முடியாது.இதைத் தான் கற்றது கைம்மண்ணளவு, கல்லாளது உலகளவு என்பர். படிப்பு தவிர பாடல், நாடகம், இசை போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்கு சிறப்புற கிடைக்க அருள்பாவிக்கிறாள்.

துர்காஷ்டமி


#துர்காஷ்டமி.

சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை.

 பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடியவள் துர்க்கை.

  துர்க்கம் என்றால் அகழி.அகழி எவ்வாறு பகைகளை நெருங்கவிடாமல் நம்மை காக்குன்றதோ, அவ்வாறு நம்மை #துன்பங்களில் இருந்து காப்பவள் ஸ்ரீ துர்க்காதேவி.

  #சிவபெருமானின் சக்திரூபம் நான்கு வடிவங்களில் அருள்புரிகின்றார்கள்.அவை,

"போகேச பவானி புருஷேச விஷ்ணு,
கோபச காளீ ஸமரேச துர்கா, "

 என்பதாகும்.அதாவது.சிவனின் அருள்சக்தியாக பவானியும், புருஷ சக்தியாக செயல்படும்பொழுது விஷ்ணுவாகவும், கோபசக்தியாக செயல்படும்பொழுது காளியாகவும், வீரசக்தியாக, வெற்றி சக்தியாக செயல்படும்பொழுதும் துர்க்கையாக செயல்படுகின்றாள்.

  எனவே துர்க்கை வழிபட #வெற்றி கிட்டும் என்பது உறுதி.

  துர்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்க்கை என்றும்,

 நம் துக்கத்தை போக்குவதால் துர்க்கா என்றும் பெயர் பெற்றாள்.

 தேவீ மஹாத்மியம்,

"ஸர்வ ஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே,
பயேப்பஸ் த்ராஹிநோ தேவி துர்கே தேவி நமோஸ்துதே "

 என்று புகழ்கின்றது.அதாவது அனைத்து வடிவமாகவும் விளங்குபவளே, அனைத்தையும் ஆள்பவளே, அனைத்து சக்தியும் பொருந்தியவளே, பயங்கரமான சூழ்நிலைகளில் இருந்து எங்களை காப்பாற்ற வரும் துர்கா தேவியே உனக்கு நமஸ்காரம்.

 எனவே ஆபத்தில் இருந்து நம்மை காப்பவள் துர்க்கையே.

  இவளை, துக்கஹந்தரீ -அதாவது துக்கத்தை போக்குபவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் புகழ்கின்றது.

  எனவே துர்கையை சரணடைபவன், எத்தகைய ஆபத்தில் இருந்தும்  காக்கப்படுகின்றான்.இதனை #வேதம்,

"துர்க்காம் தேவீம் சரணமஹம் பிரபத்யே
 ஸுதரஸிதரஸே நமஹ "
என்று கூறுகின்றது.

 துர்க்கா தேவி பல ரூபங்களில் அருள்புரிகின்றாள்.
சூலினி துர்க்கா.,
ஜாதவேதோ துர்க்கா,
சாந்தி துர்கா,
சபரி துர்கா,
ஜ்வாலா துர்கா,
லவண துர்கா,
தீப துர்கா,
ஆஸுரி துர்கா,
ஜெய துர்கா,
திருஷ்டி துர்கா,
மூல துர்கா

 என்று பல ரூபங்கள் உண்டு.

 முற்காலத்தில் நம் மன்னர்கள் போர்களில் வெற்றிபெற துர்க்கையை வழிபட்டுவந்தனர்.

 அரண்மனை கோட்டையை சுற்றி அகழி அருகே இருந்தவளுக்கு #ஜலதுர்க்கா என்றும்,

  நாட்டின் எல்லையில் உள்ள மலையில் இருந்தவளுக்கு #கிரிதுர்க்கா என்றும்.,

 கிராம எல்லையில் பாதுகாக்கும் அன்னையாக காட்டில் இருந்தவளுக்கு #வனதுர்கா என்றும் பெயர்.

  இன்றும் கிராமங்களில் வனதுர்கையை பலபெயர்களில் கிராம தேவதையாக வழிபட்டுவருகின்றார்கள்.இவளே கிராமத்தை காக்கும் தாய்  ஆவாள்.

  சோழர்களின் பழையாறை அரண்மனையில் இருந்து அருள்புரிந்த கோட்டை துர்க்கையே, இன்று பட்டீஸ்வரம் கோயிலில் மஹா துர்க்கையாக அருள்புரிகின்றாள்.

  இந்த நவராத்திரி  நன்னாளில் துர்க்கையை வழிபட்டு நம் துன்பங்களை போக்கிக்கொள்வோம்.

அருள்மிகு பந்கி ஆஞ்சநேயர், கான்பூர், உத்திர பிரதேசம்


இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு பந்கி ஆஞ்சநேயர், கான்பூர், உத்திர பிரதேசம்

கான்பூர்
கங்கையின் தென்கரையில் அமைந்துள்ள மிக அருமையான இந்நகரம் கான்பூர். உத்திர பிரதேசத்தில் முக்கியமான நகரம். கங்கை இங்கு மிக நளினமாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் நடைப்போடுகிறாள். கங்கை கரையில் உள்ள ஒவ்வொரு நகரமும் தனிதன்மையுடனும் அதற்கான தனி வரலாறும் பெற்றுள்ளன. கான்பூர் இதற்கு விதி விலக்கு அல்ல. மஹாபாரதத்துடன் சம்பந்தப்பட்ட இடம் மட்டும் அல்ல இது, இராமாயணத்துடனும் தொடர்புள்ள இடம் இது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு கண்னயா என்பதும் பெயர். கண்னயாவின் பெயரால் உருவானது கான்பூர் என்று ஒரு சிலர் கூறுவர். மற்றோர் இவ்விடம் துரியோதனனால் கர்ணனுக்கு கொடுக்கப்பட்டு ’கார்ணபூர்’ என்றிருந்து மருவி கான்பூர் ஆனதாக கூறுவர். எப்படியானாலும் அருகில் உள்ள ஜஞ்மு, [B]பித்தூர் ஆகிய இடங்களிலிருந்து ஆழ் ஆய்வில் கிடைத்த சாட்சியங்களினால் இது வேத காலத்திலிருந்தே இருப்பது உறுதிச் செய்யப் பட்டுள்ளது. சுமார் 600 கி.மு முதல் இவ்விடத்தில் மக்கள் வசித்து வருகிறார்கள். புராணங்களிலிருந்து இவ்விடத்தில் பிரம்மாவின் எட்டாவது தலைமுறையை சேர்ந்த யயாதி இங்கு கோட்டை கட்டி ஆட்சி புரிந்துள்ளார். அப்பொழுது சித்தாபுரி என்னும் பெயர் இருந்திருக்கிறது.

பித்தூர்
கங்கையின் கரையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பித்தூர் 52 ஸ்நான கட்டங்களை கொண்டு ’பாவன் [52] காட்டோங்கி நகரி’ என்று சிறப்பாக இருந்திருக்கிறது. தற்பொழுது 29 ஸ்நான கட்டங்களே உள்ளன. இங்கு கங்கையில் ஸ்நானம் செய்வது மிக விசேடமாக கருதப்படுகிறது. பிரம்மா இங்கு கங்கை கரையில் அஸ்வமேத யாகம் செய்திருப்பது மற்றொரு விசேடம். ஸ்ரீவால்மீகி முனிவரின் ஆஸ்ரமம் இங்கும் இருந்துள்ளது.

 பித்தூர்
கங்கையின் கரையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பித்தூர் 52 ஸ்நான கட்டங்களை கொண்டு ’பாவன் [52] காட்டோங்கி நகரி’ என்று சிறப்பாக இருந்திருக்கிறது. தற்பொழுது 29 ஸ்நான கட்டங்களே உள்ளன. இங்கு கங்கையில் ஸ்நானம் செய்வது மிக விசேடமாக கருதப்படுகிறது. பிரம்மா இங்கு கங்கை கரையில் அஸ்வமேத யாகம் செய்திருப்பது மற்றொரு விசேடம். ஸ்ரீவால்மீகி முனிவரின் ஆஸ்ரமமும் இங்கு உள்ளது. ஸ்ரீசீதாதேவியும் அவளது மகன்கள் லவனும் குசனும் இங்குதான் தங்கியிருந்தார்கள் என்பது மற்றொரு விசேடம்.

பந்கி
வேதகாலம் முதல் சரித்திரம் உள்ள கான்பூரில் பந்கி என்பது நகர எல்லையிலேயே உள்ள இடம். மிக பெரிய மின் உற்பத்தி [power generation]நிலையமுள்ள இடம். எப்படி பித்தூர் வால்மீகியுடன் தொடர்புள்ள இடமோ அப்படி பந்கி அனுமாருடன் தொடர்புடைய இடம். இராமயணத்துடன் தொடர்புடைய இடங்களில் அனுமார் இல்லாமல் ’பூரணம்’ ஆவதில்லை போலும். பந்கியில் அனுமாருக்கு தனிக் கோயில் உள்ளது, அவர் நமக்கு வலிமையை [power generation] உற்பத்தி செய்து தக்கவும் வைக்க வல்லவர்.

கோயில்
இங்குள்ள அனுமாரை பந்கி அனுமார் என்றே அழைக்கிறார்கள். உத்திர பிரதேசம் மட்டுமல்லாமல், பிகார், பஞ்சாப், டில்லி என்று பல ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். மிக பெரிய இடத்தில் சற்றே உயரமுள்ள இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில். தொலைவிலிருந்தே நீண்ட உயரமான கோபுரம் நம்மை அழைக்கிறது. கோயிலுக்கு கிழக்கு, வடக்கு, மேற்கு திசைகளில் நுழைவு வாயில்கள் உள்ளன.

தலபுராணம்
வடக்கு தேசங்களில் தலபுராணம் என்பது எழுதி வைக்கப் படாத ஒன்று. இப்பொழுதுள்ள மஹன்த் பத்தாவது தலைமுறையாக பூசை செய்பவர். பரம்பரயாக கூறப்படும் தலபுராணம். இக்கோயில் சுமார் நானுறு வருடம் பழமையானாதும் மஹன்த் ஸ்ரீ ஸ்ரீ 1008 புருக்ஷோத்தம் தாஸ் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஶ்ரீ ஹிந்துசிங் அரசன் ஶ்ரீகிருஷ்ணர் மீது உள்ள அபிமானத்தால் ’கானப்பூர்’ என்று பெயரிட்டு உருவாக்கி ’ஶ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி’ அன்று பிரவேசித்த நகரம் தான் இன்றைய கான்பூர். மஹன்த் புருஷோத்தம் தாஸ் காலம் இதற்கும் முன்தியது. அவர் ஒரு முறை சித்திரகூடம் சென்றிருந்தார். அங்கு காமகிரியை வலம் வந்து தனது தவத்தை முடித்துக் கொண்டு, பித்தூருக்கு புறப்பட்டார். மறுநாள் காலை தனது மாட்டு வண்டியில் புறப்பட்டார். சற்று தூரத்தில் வண்டி பெரிய கல் மீது மோதி நின்றது. கீழே இறங்கி கல்லை அப்புறப்படுத்த பார்த்தவர், அக்கல்லில் அனுமாரின் விக்ரஹம் இருப்பதை கண்டார். இதனை தனது பெரும் பேராக நினைத்து சித்திரகூடத்திலிருந்து அனுமார், வால்மீகி ஆஸ்ரமம் இருக்கும் பித்தூர் செல்ல விரும்புவற்கான அறிகுறியாகக் கொண்டார். தெய்வ இச்சையாகக் கொண்டு தனது மாட்டு வண்டியில் அனுமாரை பயபக்தியுடன் ஏற்றிக் கொண்டு பித்தூர் நோக்கி பயணமானார்.

பல நாட்கள் பயணித்த பிறகு, பித்தூருக்கு பத்து கோஞ் (சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள்) இருக்கும் போது, வண்டி நகர மறுத்தது. மாடுகள் சுமை அதிகம் இருப்பதுப் போல் சம்ஞைகள் காண்பித்தன. மஹன்த் வண்டியை நிறுத்திவிட்டு மாடுகளை இளப்பார விட்டுவிட்டு தானும் மரத்தடியில் இளைப்பாரினார். அப்பொழுது மஹன்த் ஹனுமார் இங்கேயே இருக்க விருப்பம் தெரிவிப்பதாக உணர்ந்தார். தெய்வ ஸங்கல்பமாக இதை அறிந்து அனுமாரை அந்த இடத்திலேயே பிரிதிஷ்டை செய்ய முடிவு செய்தார். ஊர் மக்களை கூட்டி அனுமாரை அங்கேயே பிரிதிஷ்டை செய்தார். இன்று இவ்விடத்துக்கு பெயர் பந்கி. அனுமார் பந்கி கிராமத்தில் இருப்பதால் அவரை பந்கி ஹனுமார் என்றே மக்கள் அழைக்கிறார்கள். நினைத்ததை நடத்தி வைக்கும் பந்கி அனுமாரின் பிரசுத்தம் அக்கம் பக்கத்திற்கு பரவலாயிற்று. இன்று வட இந்தியாவில் மிக பிரபலமானவராக உள்ளார் பந்கி அனுமார்.

அனுமாரின் விசேட ரூபம்
அஹிராவணன், ராம லக்ஷ்மணர்களை பாதாள லோகத்திற்கு எடுத்துச் சென்ற போது, அவர்களை மீட்டு, அஹிராவணனை வதம் செய்தவர் அனுமார். அப்பொழுது அவர் தோற்றம் எப்படி இருந்திருக்குமோ [பெருமிதம்-இராமரின் எதிரியை அழித்தது, நிம்மதி-இராமரை மீட்டது, கவலை- ராவணனின் வதம் நடக்க வேண்டுமென்று, சாந்தம்- இராமரால் அது முடியுமென்று] அப்படி பல உணர்ச்சிகளை கண்களில் கொட்டுகிறார் பந்கி அனுமார்.

பந்கி அனுமார் இறை அருளால் கிடைக்கப் பெற்றது என்பது தெளிவு. மற்றொரு ஆச்சரியாமான விசேடம்- காலையில் பால அனுமாராக, மதியம் யுவனாக, மாலையில் மஹாபுருஷராக அறியப்படுவதே.

அடுத்த முறை கான்பூர் சென்றால், பந்கி அனுமாரை தரிசனம் செய்யவும். அந்த முவுலகம் சுற்றும் முக்கால மஹாபுருஷரின் அருளை அள்ளிவாருங்கள்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

அருள்மிகு முக்திநாத் திருக்கோவில், நேபாளம்





இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு முக்திநாத் திருக்கோவில், நேபாளம்

முக்திநாத்- முக்தி நல்கும் வைணவ திருத்தலம். நேபாளத்தில் உள்ளது. திருச்சாளக்ராமம் எனும் பெயரும் உண்டு. நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு சென்று, அங்கிருந்து போக்ரா, ஸோம்சன் வழியாக முக்திநாத்தை அடைய வேண்டும். விமானத்திலும் செல்லலாம்.

முதலில் ஸ்ரீ நீலநாராயணன் சந்நிதிக்குச் சென்றோம். நீலநாராயணன் பெரிய ஆதிசேஷன்மீது, சிறு குளத்தின் ஜலத்தில் சயன திருக்கோலத்தில், முகத்தில் வசீகரப் புன்னகையுடன் தரிசனம் அளிப்பது நெஞ்சில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது. அனைத்தையும் பார்த்துவிட்டு, காட்மாண்டு விடுதிக்குத் திரும்பிய எங்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

'முதல்நாள் சென்ற அக்னி என்ற குட்டி விமானம் சாளக்கிராமம் செல்லும் வழியில் பனியினாலும் மேகக் கூட்டங்களாலும் மறைக்கப்பட்ட மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளாகிவிட்டது. அதனால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது’ என்ற செய்திதான் அது. எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது.

''நல்ல சந்தர்ப்பம் என்பது ஒருமுறைதான் கிடைக்கும். அதைத் தவறவிடாமல், நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். அப்படிக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்தனை தூரம் வந்தும், ஸ்ரீ முக்திநாராயணனைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என மனம் கலங்கினோம். 'இப்படித்தான் அடிக்கடி மேகக் கூட்டங்களாலும் பனியினாலும் மலைத்தொடர்கள் மறைக்கப்பட்டுவிடும். எப்போது விலகும் என்று சொல்ல முடியாது’ என விடுதி மேலாளர் கூறினார். எதுவும் யாத்ரீகர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றார்.

அன்றைய தினம், இரவு உணவு உண்ணாமல் அனைவரும் இறைவனை தியானித்துவிட்டுப் படுத்துவிட்டோம்.

எங்கள் அடி மனத்தின் கூக்குரல் அந்த இறைவனின் காதுகளில் விழுந்திருக்கும்போல! ஒரே இரவில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. நாங்கள் கண்ட பனிமூட்டம், மேகக்கூட்டம் எல்லாம் அடியோடு மறைந்தது. வானம் தெளிவாக மின்னியது.

இதுதான் இறைவனின் திருவிளையாடலோ?

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,

காலையில் நேபாள் ஏர்லைன்ஸ் மட்டும் இயங்க ஆரம்பித்தது. நாங்கள் நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் பதிவுசெய்து இருந்தோம். இறைவனுக்கு மனதார நன்றி கூறி, விமானத்தில் பயணித்தோம்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பனிமூடிய சிகரங்களுடன், 'அழகிற்கோர் அன்னபூர்ணா’ என்று கூறும்படி அன்னபூர்ணா மலைத்தொடரின் அழகை ரசித்த வண்ணம் ஜெம்சோம் விமான நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து கண்டகி நதி ஓடிவரும் வழியில், ஜீப்பில் சில கெஜ தூரம் பயணம் செய்தோம். நாங்கள் சென்றபோது கண்டகி நதி உறைபனியாக இருந்தது. வெயில் பட்டதும் பொன்னிறமாக மிளிரும் மலைச் சிகர அழகை ரசித்தபடி, அந்த நதி வழியே பயணித்தோம். ஓரிடத்தில் ஜீப் பயணம் முடிவுற்றது. அங்கிருந்து இரு சக்கர வாகனப் பயணம் தொடர்ந்தது. வாகன ஓட்டிகள் எங்கள் கழுத்தில் (குழந்தைகளின் ஸ்கூல் ஐ.டி. போன்று) ஐ.டி-யை மாட்டி, அழைத்துச் சென்றார்கள். ஒரு வண்டியில் இருவருக்கு மட்டுமே அனுமதி. பாதை என்று எதுவும் கிடையாது. மேடு, பள்ளம், கற்கள் நிறைந்த பாதை. சில நேரங்களில் பயங்கரமாகக் காற்று வீசியது.

வாகன ஓட்டியின் துணையோடு முக்திநாதன் வாயிலை அடைந்தோம். சந்நிதியை அடைய 80, 90 படிகள் ஏற வேண்டியிருந்தது. சுற்றிலும் சிகரங்களைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டம்; பச்சைப் பசேலென்று நெடிதுயர்ந்த மரங்கள்; அற்புதமானதொரு தேவருலகில் இருப்பது போன்ற உணர்வை அடைந்தோம்.

படிகள் ஏறி, சந்நிதியை அடைந்தோம். சிறு தொட்டிகள் போன்று இரண்டு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன. கோயிலை ஒரு பெண்மணி நிர்வகித்து வருகிறார். சிறிய சந்நிதிதான். கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். சங்கு- சக்ர கதா ஹஸ்தனாக, ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவியருடன் தரிசனம் தருகிறார் அவர். சப்தரிஷிகளும் சனகாதி மகரிஷிகளும் ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் கோடி எடுத்தாலும் கிடைத்தற்கரிய பெருமானும் ஆகிய ஸ்ரீமந் நாராயணன் தம்மைத் தரிசிப்பவர்களுக்குத் தவறாது முக்தி அளிப்பதால், 'முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இங்கே.

பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் இது.

கோயில் கருவறைக்குள் சென்று, ஸ்ரீசாளக்ராம நாராயணனை மிக அருகில் நின்று, தொட்டு வணங்கினோம். நாங்கள் வாங்கிச் சென்ற வஸ்திரங்களை நாங்களே அவருக்குச் சாற்றி, வழிபட்டோம். வாங்கிச் சென்ற வளையல்களை ஸ்ரீதேவி, பூதேவியர் கைகளில் அணிவித்து, வணங்கினோம். அந்த நேரத்தில், திடீரென்று பனிமழை பெய்யத் தொடங்கியது. உடன் வந்தவர்கள் விரைந்து கீழே இறங்க ஆயத்தமானார்கள்.

முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் கோமுகி தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.

சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில்  குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர். 

கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம். அப்போது படம் எடுக்கலாமென நினைத்து கேமராவைத் தேடினால், அது பையில் இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது, ராணுவப் பணியாளர் ஒருவர் என்னிடம் வந்து, ''உள்ளே சாமி பாதத்தில் வைத்துக் கும்பிட்டுவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டீர்களா என்று போய்ப் பாருங்கள்'' என்றார். அதன்படி, மீண்டும் கோயில் கருவறை உள்ளே சென்று, கடவுள் இருப்பிடத்திலேயே என் கேமராவைத் தேடினேன். ஆனால், அது அங்கும் இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியதைத் தொலைத்துவிட்டேனே என்ற வேதனையுடன், கோமுக தீர்த்தத்தில் தலையை மட்டும் நனைத்துக்கொண்டு சுற்றி வந்தேன்.

அப்போது என் பத்து வயதுப் பேத்தி என்னிடம், ''நீ இந்த முக்திநாராயணனைக் கல் என்று நினைத்தாயா? கடவுளாக நினைத்தாயா? கல் என்று நினைத்திருந்தால், கேமரா கிடைக்காது; கடவுளாக நினைத்திருந்தால் கிடைக்கும். வா, போகலாம்!'' என்று பெரிய மனுஷி தோரணையில் சொன்னாள்.

அந்த வார்த்தைகள் என் நெஞ்சத்தைத் தைத்தன. சந்நிதி வாசல் வந்தோம். ஆங்கிலோ இந்தியர் ஒருவர் எங்களை நெருங்கி, என்னிடம் கேமராவை நீட்டி, ''நீங்கள் உள்ளே சென்றபோது கேமரா விழுந்ததைப் பார்த்தேன். சுற்றி வந்ததும் தரலாம் என இருந்தேன். இந்தாருங்கள்!'' என்றார்.

பல ஆயிரம் வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி என் சரீரத்தில் அப்போது ஏற்பட்டது. அவருக்கு நன்றி சொல்லக்கூட இயலாதபடி என் வாய் அடைத்துப்போனது.

கருவறை முன் நின்று, அமானுஷ்யமான- அற்புதமான அந்த இடத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவுள்ளத்துக்கு மனத்தால் நன்றி கூறி வணங்கிவிட்டு, படி இறங்கினோம்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி இது!

மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.

காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமோ நாராயணாய நம: