சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி பற்றிய 25 தகவல்கள்


தீபாவளி பற்றிய 25 தகவல்கள்
 
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பற்றிய 25 தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


1. ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை, இது தீபாவளிப் பண்டிகை என வழங்கப்படுகிறது.

2. வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

3. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர். முதல் நாள் பண்டிகையை சோட்டா தீபாவளி (சிலு தீபாவளி) என்பர். இரண்டாம் நாள் பண்டிகையை 'படா தீபாவளி' (பெரிய தீபாவளி என்பர். மூன்றாவது நாளன்று 'கோவர்த்தன பூசை' செய்து கண்ணப்பிரானையும் பூசிப்பர். அன்று தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனைவதம் செய்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

4. தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். மிகவும் புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும் வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால் அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப் பயன்கிட்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.

5. வடநாட்டில் தீபாவளித் தினத்தன்று செல்வத் திருமகளான லட்சுமிதேவியைப் பூஜித்து, புதுக்கணக்குத் தொடங்குவர்.

6. தீபாவளித் தினத்தன்று வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோல மிடுவர். தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணி கள் பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய் சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.

7. புதிதாக மணமுடித்தவருக்கு அமையும் தீபாவளி தலைத் தீபாவளி. மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குதல் வேண்டும். அடுத்து அவர்கள் பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக்கொள்ள வேண்டும்.

8. தீபாவளியின்போது பெரியோர்களை வணங்கி அவர் களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும். சாஸ்திரத்திற்காகப் பட்டாசு கொளுத்தவேண்டும்.

9. தீபாவளிச் சமையலில் சாம்பார், புளிக்குழம்பு போன்றவை இடம் பெறக்கூடாது. ஏனென்றால், தீபாவளிப் பண்டிகை யின் போது மழைக்கால மாகையால் அப்போது அவை செரிமானம் ஆகாது. இப்பருவத்திற்கேற்ற, உடலுக்கு இதமான, பக்குவமான உணவு மோர்க்குழம்பு மட்டுமே. எனவே, தீபாவளிப் பண்டிகைச் சமையலில் மற்ற உணவுகளுடன் மோர்க்குழம்பு முக்கிய பங்கைப் பெறும்.

10. இந்துக்கள் மட்டுமின்றி ஜைனர், பெளத்தர், சீக்கியர் ஆகியோரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

11. ஞான நூல்களுள் ‘பகவத் கீதை’ சிறப்பான இடத்தை பெறுவதைப்போல தீபாவளி, பண்டிகைகளுள் உயர்ந்த இடத்தை பெறுவதால் இதனை ஆசார்ய சுவாமிகள் ‘பகவத் கீதையின் தம்பி’ என்று சொல்லியுள்ளார்கள்.

12. லட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ‘செல்வம் வளரும்’ என்பது நம்பிக்கை.

13. தீபாவளி தினத்தன்று, ‘என்ன கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது இன்றும் நம் நாட்டில் பழக்கத்தில் இருந்து வருகிறது.

14. ‘தைலே லட்சுமி: ஜல கங்கா’ என்பது துலாபுராணத்தின் மணியான வாசகம். கங்கை, தீபாவளி அன்று எண்ணையிலும் வெந்நீரிலும் இருப்பதாக ஐதீகம்! சிலர் காசிக்கு சென்று கங்கையில் ஸ்நானம் செய்வார்கள். தீபாவளி அம்மாவாசை காசியில் மிகவும் விசேஷம்.

15. கண்ணபிரானுக்கும் நரகாசுரனுக்கு நடந்த யுத்தத்தில் கண்ணபிரான் தேர்த்தட்டில் மயக்க முற்றார். சாரதியாக வந்த சத்தியபாமா வீரத்துடன் போராடினாள். அதனால் இப்பண்டிகை வீரலட்சுமியைப் போற்றி வணங்கும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

16. அஞ்ஞானத்தின் ஸ்தூல வடிவம் தான் நரகாசுரன். அந்த இருளைப் போக்குதவற்கு ஞான தீபங்களை ஏற்றுகிறோம் என்பதுவே தாந்தக்கருத்து.

17. எம் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகம் சென்ற மகாபலி சக்கரவர்த்தி எம் பெருமானிடம் ஆண்டிற்கு ஒரு முறை தாம் பூலோகம் வரவேண்டும் என்றும் அந்த நாளில் பூலோக வாசிகள் புத்தாண்டை உடுத்தி, எங்கும் விளக்கேற்றி கோலாகலத்துடன் தன்னை வரவேற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அந்த நாள் தான் தீபாவளி என்று கூறப்படுகிறது.

18. தீபாவளி பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன்.

19. சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

20. தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

21. வடநாட்டின் சில பகுதிகளில் தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். முதல்நாள் லட்சுமி பூஜை. இரண்டாம் நாள் நரக சதுர்த்தசி. மூன்றாம் நாள் தீபம் ஏற்றுவது. நான்காம் நாள் முழுக்கு. ஐந்தாம் நாள் எமனை வழிபடுவது.

22. எமனுக்கு யமுனை என்ற தங்கை உண்டு. எமன் தீபாவளியன்று அவளுக்கு பரிசுகள் வழங்குவானாம். அதனால் அன்று அண்ணன், தங்கையுடன் சேர்ந்து உணவருந்த வேண்டும். தங்கைக்கு ஆபரணம் செய்து கொடுப்பர். வயதானவர்கள் யமுனா நதியில் ஸ்நானம் செய்வார்கள்.

23. தீபாவளியின் போது இளம் பெண்கள் தீபங்கள் ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். அவை அமிழ்ந்துவிடாமலும் அணையாமலும் மிதந்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

24. தீபாவளியின் போது வடநாட்டினர் மாடுகளையும் எருதுகளையும் கன்றுகளையும் குளிப்பாட்டி திலகமிட்டு அலங்காரம் செய்வர். தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் போதுதான் இப்படி செய்வார்கள்.

25. வியாபாரிகள் தீபாவளியை விக்ரமாதித்தனின் நினைவாக கொண்டாடுகின்றார்கள்.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக