திங்கள், 30 ஏப்ரல், 2018

முருகனின் 16 வகை கோலங்கள்

முருகனின் 16 வகை கோலங்கள்

1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள  திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர்,  திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.
















ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மாத பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்:



மாத பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்:

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.

1) சித்திரை பௌர்ணமி:
சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

2) வைகாசி பௌர்ணமி:
வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.

வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.

3) ஆனி பௌர்ணமி:
ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.

4) ஆடி பௌர்ணமி:
ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.

5) ஆவணி பௌர்ணமி:
ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.

6) புரட்டாசி பௌர்ணமி:
புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இன்றைய தினத்தில் அம்மை,அப்பர் வழிபாடு  கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.

7) ஐப்பசி பௌர்ணமி:
ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.

இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

8) கார்த்திகை பௌர்ணமி:
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில் தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.

ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

9) மார்கழி பௌர்ணமி:
மார்கழியில் பௌர்ணமி பொதுவாக திருவாதிரையில் வரும். இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

10) தை பௌர்ணமி:
தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.

11) மாசி பௌர்ணமி:
மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.

12) பங்குனி பௌர்ணமி:
பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.

எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

கிரிவலம்:
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும் போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.

கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

நாமும் வாழ்வினை வளமாக்கும் பௌர்ணமியில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை பெறுவோம்.


வெள்ளி, 27 ஏப்ரல், 2018

விருட்ச சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற மரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..


விருட்ச சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற
மரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..

ஆலயத்தில் தீபம் ஏற்றினால் அந்த தீப
ஒளி நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தரும் என்பதைபோல...., நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை நட்டு வைத்தால், நம் நட்சத்திர மரம் எந்த அளவுக்கு பசுமையாக வளர்கிறதோ அந்த அளவுக்கு நம் வாழ்வில் நல்ல பல திருப்பங்கள் ஏற்படும் என்கிறது விருக்ஷ சாஸ்திரம்...

ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும்
தனி தனி பாதங்கள் இருக்கிறது.
அதாவது, முதல் பாதம், இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம், நான்காம் பாதம் என்று பாதங்கள் இருக்கிறது. ஒருவேளை அந்த பாதங்கள் பலவீனமாக அமைந்துவிட்டால், அந்த நட்சத்திரம் நமக்கு கொடுக்க வேண்டிய நன்மைகளை கொடுக்காமல் தாமதம் செய்யும்.

அப்படிப்பட்ட அந்த தோஷத்தை போக்கும் ஆற்றல் நட்சத்திர மரங்களுக்கு இருக்கிறது.

உதாரணத்திற்கு செவ்வாய்தோஷம் இருந்தால் வாழை மரத்திற்கு தாலி கட்டினால் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் என்கிறது சாஸ்திரம்.

சரி இப்போது, உங்கள் நட்சத்திரத்திற்கு
ஏற்ற மரம் எது? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற மரங்கள்

அஸ்வினி – எட்டி
பரணி – நெல்லி
கிருத்திகை – அத்தி
ரோகிணி – நாவல்
மிருகசீரிஷம் – கருங்காலி
திருவாதிரை – செங்கருங்காலி
புனர்பூசம் – மூங்கில்
பூசம் – அரசு
ஆயில்யம் – புன்னை
மகம் – அல்
பூரம் – பலா
உத்திரம் – அலரி
ஹஸ்தம் – அத்தி
சித்திரை – வில்வம்
சுவாதி – மருதம்
விசாகம் – விளா
அனுஷம் – மகிழ்
கேட்டை – பிராய்
மூலம் – மரா
பூராடம் – வஞ்சி
உத்திராடம் – பலா
திருவோணம் – எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூராட்டாதி – தேமா
 உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை.

இப்படி நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு
ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.

விருட்ச சாஸ்திரத்தில் கூறிய படி
உங்கள் நட்சத்திரம் பாதம்  அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும்.
நாடும் நலம் பெரும்.

பாதங்கள் வாரியாக....

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் -  நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா


நரசிம்ம ஜெயந்தி - 28-4- 18


நினைத்தது உடனுக்குடன் நிறைவேற நரசிம்ம ஜெயந்தி...

நரசிம்ம ஜெயந்தி - 28-4- 18

விஷ்ணு எடுத்த
தசாவதாரங்களில் , மிக
உயர்ந்தது நரசிம்ம அவதாரம்.
ஏனெனில்,
ஒரு பக்தனின் சொல்லைக்
காப்பாற்ற விஷ்ணு இந்த
அவதாரத்தை  நிகழ்த்தினார்.

பிரகலாதனின் வார்த்தையைக்
காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு
வெளிப்பட்டார் நரசிம்மர்:

''அடேய் பிரகலாதா!
எங்கேயடா இருக்கிறான் உன்
விஷ்ணு? என்று கேட்கிறான்
இரண்யன்.
''தந்தையே! அவர் தூணிலும்
இருக்கிறார்,
துரும்பிலும் இருக்கிறார்.
ஏன்...
எங்கும் வியாபித்திருக்கிறார்.
ஒவ்வொரு  துகளிலும் அவர்
உட்கார்ந்திருக்கிறார்,
என்றான் பிரகலாதன்.

பிரகலாதன் தூணைக் கை
காட்ட,  இரணியன் அதை
உடைத்தான்.
மனித உடலும், சிம்ம முகமும்
கொண்டு நரசிம்மனாய் அவர்
வெளிப்பட்டார்.

'நரன் என்றால்  'மனிதன்.
'சிம்மம் என்றால் 'சிங்கம்.
இதனால் தான் அவரை 'நரசிம்மர்”  என்று சொல்வார்கள்.

இரணிய வதத்தை முடித்த
பிறகு,
பிரகலாதனிடம்,
''நீ ஏன் தூணைக் காட்டினாய்,
துரும்பைக் காட்டியிருக்கக்
கூடாதா? என்றார் .
''ஏன் இப்படி சொல்கிறீர்கள்?
என்ற பிரகலாதனிடம்,

தூண்  என்பதால்,  இரணியன்
அதை உடைக்கும் வரை
காத்திருக்க
வேண்டியிருந்தது.
துரும்பு என்றால் ,  அதைக்
கிள்ளி யெறிந்தவுடன்
பிரசன்னமாகி இருப்பேனே!
என்றார் .

ஆம்..
நாளை என்பது நரசிம்மருக்கு
இல்லை...!!! அவரிடம்
வைக்கும் கோரிக்கை
உடனுக்குடன் நிறைவேறும்.

“ ஶ்ரீ லட்சுமி நரசிம்மம்
சரணம்  பிரபத்யே “
என்ற மந்திரத்தை தினமும்
108 தடவை சொல்லி
வழிபடுவோர் , நினைத்தது நிறைவேறும் ...

வியாழன், 26 ஏப்ரல், 2018

நெல்லையப்பர் கோயிலில் 96 வகை திரவியங்களுடன் யாகசாலை பூஜை: மஹா கும்பாபிஷேகம்




நெல்லையப்பர் கோயிலில் 96 வகை திரவியங்களுடன் யாகசாலை பூஜை:  மஹா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் மஹா
கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 27) நடைபெறவுள்ளது. இதையொட்டி, 96 வகையான திரவியங்களுடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
 மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிவனடியாளர்கள், பக்தர்கள் திருநெல்வேலியில் குவிந்துள்ளனர்.
நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, 21ஆம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நின்றசீர்நெடுமாறன் கலையரங்கம் அருகே வெளிபிரகாரத்தில் 87 யாககுண்டங்கள், 49 வகை வேதிகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை க் கூடத்தில் முதல்கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
96 வகை திரவியங்கள்: புதன்கிழமை காலை விசேஷ சந்தி என்ற பூஜையும், தொடர்ந்து, 2 வது கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறப்பம்சமாக 96 வகை திரவியங்கள், மூலிகைகளை வைத்து யாகசாலைபூஜை நடைபெற்றது. பின்னர், மந்திர புஷ்பம் எனப்படும் ரிக், சுக்ல யஜூர், கிருஷ்ண யஜூர், ஜெய்மினி சாம வேதம், அதர்வண வேதம், இதிகாச புராணங்கள், சிவாகமங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறை, ராகம், தாளம் போன்ற உபசாரங்கள் செய்தல் நடைபெற்றது.
 மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜை, பிரதான மூர்த்திகளுக்கு மூலிகைப் பொருள்களை இடித்து மருந்து சாத்துதல் வைபவம், சுவாமி பீடத்திற்கும், விக்ரகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 யாகசாலை பூஜையில் சர்வசாதகம் தூத்துக்குடி ஆலால சுந்தர வேத பாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், கோயில் அர்ச்சகர் பிச்சையா பட்டர் தலைமையில் சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். பழனி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், கபிலர் மலை செல்வ கபில சிவாச்சார்யார், சர்வ போதகம் காஞ்சிபுரம் ராஜப்பா சிவாச்சார்யார், தாழையூத்து கணேசபட்டர், சிவகாசி விக்னேஷ் பட்டர், நெல்லையப்பர் கோயில் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 வியாழக்கிழமை (ஏப். 26) காலை 8 மணிக்கு 4ஆம் காலயாகசாலை பூஜை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப்.27) காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
 வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்: நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள் ராஜகோபுரங்கள், தெற்கு, மேற்கு, வடக்கு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் விமானங்கள், கோயில் உள்புறங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு யாகசாலை பூஜைகளைப் பார்க்க குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
மாலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவாச்சாரியார்கள், உழவாரப்பணிக் குழுவினர் புதன்கிழமை இரவு முதலே குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் திருநெல்வேலி நகரம், சந்திப்பு பகுதிகளில் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

நெல்லையப்பர் கோவில்

 நெல்லையப்பர் கோவில் பெருமைகள்

’தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்”

-என்கிறது திருநெல்வேலித் தல புராணம். 
 நெல்லையப்பர் கோவில் வரலாறை அறியுமுன் கோவிலின் சிறப்புகளைக் காண்போம்.
  • சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் தாமிர சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.
  •  திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ் மிக்க தலமாக விளங்குகிறது.
  •  அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
  •  இத்திருத்தலம் 32 தீர்த்தங்கள் கொண்டது என்கிற பெருமையுடையது.
  • இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.
  • ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
வேணுவனம் என்ற பெயரில் அழைக்கப்பெற்ற ஊர்தான் இன்று திருநெல்வேலியாக அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலியாக பெயர் மாற்றம் பெற ஒரு வரலாறு நடந்தேறியுள்ளது. 
 
திருநெல்வேலி பெயர்க்காரணம்: 
வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினார். தன் மேல் அளவு கடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான்,  வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தார். இப்படிப் பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
 
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்த்தார். நெல்லைச் சுற்றி இருந்த மழைநீர், நெல்லைக் கொண்டு செல்லாத படி இருப்பதையும், நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியந்தார்.
 
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். அரசன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண வந்தார். நெல் நனையாமல் இருந்தது. உலகிற்காக மழை பெய்வித்து, வேதபட்டரின் நெல் மட்டும் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றழைக்கப்பட்ட அப்பகுதி இந்நிகழ்வுக்குப் பின்னர் நெல்வேலி என்று அழைக்கப்பெற்றது.
நெல்வேலி என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது திருநெல்வேலியாக மாறிவிட்டது. நெல்வேலி நாதர் நெல்லையப்பர் என்று ஆகிவிட்டார்.
 
இங்குள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்று பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
 
கோவில் உருவான வரலாறு:
ராமக்கோனார் என்கிற சிவபக்தர் அந்த ஊரின் அரசருக்கு(ராம பாண்டியனுக்கு) வேணுவனம் என்கிற மூங்கில் காட்டைக் கடந்து சென்று தினமும் பால் கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் அந்தக்காட்டின் வழியே வரும் வரும்போதெல்லாம், ஒரு இடத்தில் கால் இடறி பால் குடம் கீழே விழுந்து பால் சிதறும். பானை மட்டும் உடையாது!. இப்படியே தினமும் நடந்து கொண்டிருந்தது. பால் குறைவதற்குக் ராமக் கோனார் சொன்ன காரணம் கேட்டு அரசர் கோபமடைந்து சத்தம் போட்டார்.
 
மறுநாள் பால் கொண்டு வந்த ராமக் கோனார் கையில் கோடாலி ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த இடத்திற்கு வந்ததும் வழக்கம் போல் இடறியது. பால் பானை கீழே விழுந்து பால் சிதறியது. பானை உடையவில்லை. பூமிக்குள் புதைக்கப்பட்ட அல்லது வெட்டி எடுக்கப்பட்டது போக எஞ்சி நிற்கும் மூங்கில் துருத்திகள்தான் தன் காலை இடறி விடுகிறது என்கிற எண்ணத்துடன் தன் கையில் கொண்டு வந்த கோடாலியால் அவற்றை அகற்ற வெட்டத் துவங்கினார்.
 
அப்போது வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறிப் பெருக்கெடுத்தது கண்டு பயந்து போனார். அங்கிருந்து ஓடிச் சென்று அரசரிடம் தான் கண்ட காட்சியைக் கூறினார். தினமும் பால் கொட்டுவதற்கான காரணம் கூறி வந்த கதையை நம்ப மறுத்த அவர் இந்தக் கதையைக் கேட்டு மிகவும் கோபமடைந்தார். இருப்பினும் ராமக்கோனார் சொல்லும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு முடிவெடுக்கலாம் என்கிற எண்ணத்துடன் தனது படை வீரர்களுடன் சென்றார்.
 
அங்கே துருத்திகள் வெட்டப்பட்ட இடத்தில் இரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.
அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
இந்தக் கோயில் தான் இன்று நாம் வழிபடுகிற நெல்லையப்பர் கோவிலாக உள்ளது.
 
கோயிலின் அமைப்பு:
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி இருக்கிறது. அதனைக் கடந்து சென்றால் கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய விநாயகர் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சிலைகளும் இருக்கிறது. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.
 
 
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இதன் துவக்கத்தில் “இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஏழு ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் போன்ற சிலைகளும் இருக்கின்றன.
 
 
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சன்னதிகள் உண்டு. கோயிலின் மிகப்பெரிய உள் தெப்பம் இங்கு உள்ளது. கோயிலுக்கு வெளியே 50 மீட்டர் தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.
 
 
இரண்டு கோயில்களுக்கும் கிழக்குப் பக்கத்தில் தனித்தனியே பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் ஒரு வாசலும், வடக்குப் பகுதியில் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் உள்ளது. இதைப் போலவே சுவாமி கோயிலுக்கு வடபுறமும், மேற்குப் புறமும் தனித்தனியாக இரு வாசல்கள் இருக்கின்றன.
 
காந்திமதியம்மன்:
இத்திருத்தலத்தில் நெல்லையப்பருக்கு இருப்பது போன்றே காந்திமதியம்மனுக்கும் சமமானப் பிரிவுகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
 
சிறப்புப் பூஜைகளும் கோவில் திருவிழா நாட்களும்:
 
தனித்தனி பூஜை:நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள்   இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக  ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது.
 
தன்னில் நீராடும் தாமிரபரணி :இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை     வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர்.  தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை   வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும்   துவாரபாலகிகளாகவும்  காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர்   நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின்       மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.
 
 
தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? :திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர்  வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம்  என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.
கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
ஆனிப் பெருந்திருவிழா:
ஆனிப் பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தேரோட்டம் மிகச் சிறப்பான ஒன்றாக உள்ளது. தேரோட்ட நாளன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசுப் பணிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  
ஆடிப்பூர உற்சவம், நவராத்திரி திருவிழா, ஐப்பசித் திருக்கல்யாண விழா போன்றவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.
 
நான் நெல்லை என்பதால் நெல்லையப்பர் கோவில் சுற்றிய பகுதிகளை நன்கு அறிவேன். ஆகையால் கோவிலைச் சுற்றியுள்ள சில சுவாராஷ்யமான தகவல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். 
  • நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள இடம் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள இடம் டவுன் அன்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் பேருந்துகள் ஜங்ஷனிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை டவுனுக்கு வந்து செல்கின்றன. ஒரு வழித் தடமாக உள்ளதால், ஜங்ஷனிலிருந்து செல்லும் போது கோவில் அருகில் இறங்கிக் கொள்ளலாம்.
  • வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பாளை வேய்ந்தான்குளம் பேருந்து  நிலையத்தில் இறங்கி டவுன் அல்லது ஜங்ஷன் சென்றும் இக்கோவில் செல்லலாம். தென்காசியில் இருந்து வருபவர்கள் கோவிலுக்கு பின்புறம் இறங்கி நடந்து வரலாம்.
  • நெல்லையப்பர் கோவிலுக்கு எதிராக 50 மீட்டர் தள்ளி, நெல்லையின் இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது.
  • நெல்லையப்பர் கோவிலின் இடப்பக்கத்தில்தான் RMKV மற்றும் போத்திஸ் கடைகள் உள்ளன. இக்கோவிலைச் சுற்றி கடைகள் உள்ளதால் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்வதில் சிரமம் உள்ளது.
  • இக்கோவிலைச் சுற்றியுள்ள கடைகள் பெரும்பாலும் மொத்த வியாபாரக் கடைகளாக உள்ளன. டவுன் சந்தையும் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது.
  • நெல்லைக்கு பல சிறப்புகள் இருந்தபோதிலும் நெல்லையப்பர் கோவிலும், தாமிரபரணி நதியும் மிக முக்கியமான ஒன்று.
 நன்றி லட்ஷ்மன பெருமாள்

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் சிறப்புகள்...

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் சிறப்புகள்...

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தரிசனம் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில்.

பொன்கொண்ட மலர்அயனும் நெடுமாலும்
அமரர்களும் புகழ்ந்து போற்ற
மின்கொண்ட மருங்குமையாள் இடம்பயில்
நடம்புரியும் விமல மேலோன்
கொன்கொண்ட ஐங்கரனும் அறுமுகனும்
புடைசூழுங் கோமான் எம்மான்
மன்கொண்ட நெல்வேலி நாதன் இரு
பாதமலர் மனத்துள் வைப்பாம்!!!


என வேணுவன புராணத்தில் நெல்வேலி நாதரைப் பற்றியும்,

ஏர்கொண்ட நெல்லை நகர் இடங்கொண்டு
வலங்கொண்டங் கிறைஞ்சு வோர்கள்
சீர்கொண்ட தன்னுருவும் பரனுருவும்
விளங்க அருள்செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும் வேய்ஈன்ற
முத்தைமிக விரும்பிப் பூணும்
வார்கொண்ட கபளமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வாம்!!!


என வேணுவன புராணத்தில் காந்திமதி அம்மனைக் குறித்தும் பாடப்பட்டுள்ளது.


இயற்கை எழில் கொஞ்சும் நெல்லை பூமிக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்பதால் வயல்வெளிகள் செழிப்போடு காட்சி அளிக்கின்றன. இவ்வூர் மக்கள் பேசும் நெல்லைத் தமிழைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர்களது தமிழிலும் சரி, பேச்சு நடையிலும் சரி அன்பு இழையோடுகிறது. அன்பு மட்டுமல்ல வீரம் விளைந்த மண்ணும் கூடத்தான். நம் நாட்டில் நிறைய இரட்டை நகரங்கள் உள்ளன. அவற்றுள் பெருமை மிகு திருநெல்வேலியும் ஒன்று. பாளையங்கோட்டையும் திருநெல்வேலியும் இரட்டை நகரங்களாக திகழ்வது கூடுதல் பெருமை.

இத்திருநெல்வேலி நகரம் சிவபிரான் ஆட்சி செய்யும் திருக்குற்றாலத்திற்கு கிழக்கு திசையிலும், மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு தெற்கு திசையிலும், ஆறுமுகன், வேல்முருகன் ஆட்சி செய்யும் திருச்செந்தூருக்கு மேற்கு திசையிலும், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாக்குமரியை அடுத்த சுசீந்திரத்திற்கு வடக்கு திசையிலும் அமையப் பெற்றுள்ளதாக நெல்லை தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

திருத்தலம் அமைவிடம்:
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 284 km தொலைவிலும், மதுரையில் இருந்து 154 km தூரத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் நடுநாயகமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி அல்வாவிற்கும் புகழ் கொண்டதல்லவா? இந்த அல்வா கிடைக்கும் இருட்டுக் கடை கூட இத்திருக்கோயிலின் எதிரே தான் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் காந்திமதி அம்மனுக்கும், நெல்லையப்பருக்கும் என இரு தனித்தனி கோயில்களாக அமைந்துள்ளன.

திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : நெல்லையப்பர் (வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர்)
தல இறைவி : காந்திமதி அம்மை (வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்)
தல விருட்சம் : மூங்கில்
தல தீர்த்தம் : மொத்தம் 32 தீர்த்தங்கள். முக்கியமான தீர்த்தங்கள் 9. திருக்கோயிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் பொற்றாமரை தீர்த்தம், கருமாறி தீர்த்தம், வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம். திருக்கோயில் வெளியே அமைந்த தீர்த்தங்கள் கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குதுறை.


திருத்தலச் சிறப்பு:
பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலி நகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென்காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடனும் விளங்குகிறது. சைவ சமயப் பெரியவர்கள் நால்வரில் திருஞானசம்பந்தர் அவர்களால் பாடி அருளப் பெற்ற பெருமைவாய்ந்த தலம் நெல்லையப்பர் திருத்தலம். அதற்கு திருநெல்வேலி பதிகம் என்றே பெயர். இத்திருத்தலம் பாண்டியநாட்டு பாடல் பெற்ற பதினான்கு தலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

திருவிளையாடல் புராணத்தில் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை, பன்னிரெண்டாம் திருமுறை நூல்களில் இத்திருக்கோயிலைப் பற்றி பாடப்பட்டுள்ளன.

நான்கு வேதங்களும் சிவபிரானிடம், ஈசனின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் வேண்டும் எனக் கேட்க, அதன்படியே இறைவன், தான் நடனம் புரியும் இருபத்தியோரு திருத்தலங்களில் தென்காஞ்சி எனப்படும் திருநெல்வேலியில், மூங்கில் மரங்களாய் வேதங்கள் தோன்ற லிங்க உருவில் சிவன் அருள்பாலிக்கிறார்.


ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து பின் பொதிகை மலையை அடைந்து
பூமியை சமன் படுத்தினார். இங்கே திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.

இராமபிரான், சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேரே சென்றால் நெல்வேலி நாதரை வழிபடலாம். பின்னர், வேணுவன நாதருக்கு வடப் புறமாக கிடந்த கோலத்தில் பெரிய உருவத்துடன் ரெங்கநாதரின் தரிசனம் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. உட்பிரகாரத்தில் பிள்ளையார், சந்திரசேகரர், பிச்சாண்டேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது தரிசனம். வட பிரகாரத்தில் பள்ளத்தில் திருமூலநாதரின் தரிசனம்.

நெல்லையப்பர், காந்திமதியம்மன் உற்சவ மூர்த்திகள், ஏழு கன்னியர், ஏழு முனிவர், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் சந்நதிகளையும் காணலாம். மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.

பஞ்சபூத ஸ்தல இறைவன் நடனமாடிய சபைகள் ஐந்து உள்ளன.
1. திருக்குற்றாலம் - சித்திரசபை
2. மதுரை - வெள்ளிசபை
3. திருவாலங்காடு - ரத்தின சபை
4. சிதம்பரம் - பொற்சபை

என இந்த வரிசையில்,
5. திருநெல்வேலி - தாமிரசபை
அமைந்துள்ளது.


தாமிர சபை மண்டபத்தின் உள்ளே சந்தன சபாபதியை வழிபடலாம். வடக்குப் பிரகாரத்தில் அஷ்டலெட்சுமி, சனீஸ்வர பகவான், சஹஸ்ரலிங்கம் போன்றோரது தரிசனம். நெல்லை நகரத்தின் நடு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் அம்மன் கோயில், சுவாமி கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளன. அம்மன் கோயில் தென்புறம், வடபுறம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது. அதேபோல சுவாமி கோயிலும் வடபுறம், மேற்க்குபுரம் என இரு வாயில்களுடன் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. அது போலவே, இத்திரு கோயில் சார்ந்த ஆறு சபைகள் உள்ளன. அவை,

1. சிந்துபூந்துறை - தீர்த்த சபை
2. மானூர் - ஆச்சர்ய சபை
3. அம்மன் கோயில் முன்புறம் வடப் பக்கமாக சிவன் ஆனந்த நடனம் புரிந்த - சௌந்திர சபை
4. அம்மன் கோயிலின் திருக்கல்யாண மண்டபம் - கல்யாண சபை
5. சுவாமி கோயிலின் முன்பக்கம் - அழகிய ராஜசபை
6. சுவாமி கோயிலின் மேல்புறம் - தாமிர சபை


அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். திருக்கல்யாண மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் சிறப்பாக அமைந்துள்ளது.


இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம் என்ற பெயர் வந்தது.


அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம்.

அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7-ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப் பட்டவையாகும். கி.பி. 1647-ம் ஆண்டு வாக்கில் வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இருந்து நமக்குத் தெரிய வரும் விஷயம் திருநெல்வேலி மாநகரம் அக்காலத்தில் இருந்தே சீரும் சிறப்புமாக விளங்கியுள்ளது என்பது. மதுரை நாயக்க மன்னர் தனது ஆட்சிகாலத்தில் தங்களது தெற்கு பிராந்தியப் பகுதிகளுக்கு திருநெல்வேலியையே தலை நகராகக் கொண்டிருந்தனர். நவாப் ஆட்சி காலத்திலும் திருநெல்வேலி தலைநகரமாக விளங்கியுள்ளது.

இத்திருக்கோயில் வேணுவன நாதரின் திருவிளையாடல்கள்:
மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன் என்னும் ஆயன். இவ்வாறு தினம் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அவ்விடத்திற்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார்.

திருமூலநாதருக்கும், வேயின் முளைத்த லிங்கத்திற்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் ஆகம விதிப்படி திருக்கோயில் அமைத்து விழாக்களும் நடத்தினார் அரசர். இத்திருவிளையாடல் பங்குனி மாதம் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாள் அன்று நடைபெறுகிறது.

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்:
முன்னொரு காலத்தில் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடினர். வேதசன்மா என்னும் சிவனடியாரிடம் அவரது பக்திக்கு இணங்கி, "நீ, நான் குடியிருக்கும் நெல்லை நகருக்கு வந்தால் உன் துயர் நீங்கும்", எனக் கட்டளை இட்டார் ஈசன். அவ்வண்ணமே அங்கு சென்றார் வேதசன்மா. அவ்வாறு வந்த சிவனடியாருக்கு இறைவன் நிறைய செல்வங்களை வழங்கினார். அதுமுதல் நாடு செழிப்புடன் விளங்கியது. தன்னிடம் இருந்த நெல்லைக் கொண்டு நாள்தோறும் இறைவனுக்கு பூஜை செய்து அமுது படைத்தார் வேதசன்மா. பஞ்ச காலத்தில் தனது அடியவரை சோதிக்க நினைத்தார் சிவபிரான். தான் வைத்திருந்த நெல் அனைத்தும் அமுது படைத்து தீர்ந்து போன நிலையில் அன்றைய பொழுதிற்கு மட்டும் மீதம் வைத்திருந்தார் வேதசன்மா.

பொருநை நதியில் நீராடிவிட்டு வந்து இறைவனுக்கு உணவு படைக்கலாம் என நினைத்து, அந்த நெல்லினை உலர வைத்துவிட்டு நீராடச் சென்றார் அடியவர். அந்த நேரத்தில் இறைவன் பெருமழையினைப் பொழியச் செய்தார். இதனைக் கண்ட வேதசன்மா ஒரு நாளைக்கு மட்டுமே மீதம் இருந்த நெல் இந்த மழையில் நனைந்தால் ஈசனுக்கு அமுது படைக்க முடியாதே என வேகமாக வந்து காய வைத்த நெல்லை அள்ள முயல, அவர் கண்ட அதிசயக் காட்சி இறைவனின் பேராற்றலை அவருக்கு உணர்த்தியது. சுற்றி மழை பெய்து கொண்டிருக்க நெல் காயும் இடத்தில் மட்டும் வேலி இட்டது போல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. இந்த அதிசய நிகழ்வைக் கண்ட சிவனடியாரும், அந்நாட்டு மன்னரும் வேணுவன நாதரின் தாள் பணிந்தனர். அன்று முதல் வேணுவன நாதர், நெல்வேலி நாதர் என்ற திருநாமத்துடனும் விளங்கினார்.

இத்திருக்கோயிலில் நிகழ்ந்த மற்றொரு திருவிளையாடல் சுவேதகேதுவுக்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல். இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென் கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலி நாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்ற சீர் நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல், என பல்வேறு திருவிளையாடல்களை இத்தலத்தில் புரிந்துள்ளார் இறைவன்.

திருவிழாக்கள்:
இத்திருக்கோயிலில் விழாக்களுக்கு பஞ்சமில்லை. ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்தான். ஆனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். வருடாபிஷேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள், ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா அம்பாளுக்கு பத்து நாட்கள், பௌத்திர உற்சவம் நான்கு நாட்கள், அம்மனுக்கு ஐப்பசி மாதத்தில் பதினைந்து நாட்கள் திருக்கல்யாண வைபவம், கந்த சஷ்டி திருவிழா, கார்த்திகை மாதத்தில் சோமவாரம் நான்கு நாட்கள், மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்கள், திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசத் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள், வைகாசி விசாகத் திருநாள் மூன்று நாட்கள், மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் என அடுக்கிக் கொண்டே போகலாம் இத்திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களை.

இத்திருக்கோயில் இறைவன், இறைவியைப் போற்றி சமயப் பெரியோர்களும், புலவர் பெருமக்களும் பதிகங்கள் பாடி பெருமை கொண்டுள்ளனர். நெல்லையப்பர் பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதிஅம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், அன்னையின் அருளினை சிறப்பித்துக் கூறுகின்றன.

வியப்பில் ஆழ்த்தும் சிற்பங்கள்:
நம் நாட்டு திருக்கோயில்களின் சிறப்பம்சமான சிற்ப வேலைப்பாடுகள் இத்திருக்கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்றன. திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற் கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. மேற்கூரையில் மட்டுமல்லாது இருபுறங்களிலும்.


உள்ளே சென்றால் கொடிமரத்தின் முன்னே நந்தி தேவரின் பிரம்மாண்ட தோற்றம்.


தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத் தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்துச் செல்லும் அக்கால கணவன் மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம்தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனைக் கொல்லவந்து, கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்யும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த சிற்பங்களில் எலும்பு தெரிகிறது. நரம்பு, நகம், மண்டை ஒட்டு மாலையில் ஒவ்வொரு தலையும் தனித்தனியாகத் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால் முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல, உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு.









ஓடுகளால் வேய்ந்தது போன்ற அமைப்பில் கருங்கற்களால் ஆன மேற்கூரை.


போர்காட்சியை கண்முன்னே நிறுத்தும் புடைப்புச் சிற்பம்.


இசைக்கு இவ்வுலகமே அடிமை என்பதை உணர்த்தும் இசைத் தூண்கள் நெல்லையப்பர் சன்னதி முன்பாக. ஏழு ஸ்வரங்களும் எழுகின்றன இந்த இசைத் தூண்களில்.


மல்யுத்த வீரர்கள் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி அப்படியே சாளர வடிவத்தில். மேல் புறம் ஒரு தலை, கீழ்புறம் ஒரு தலை வடிவம். ஒருவரது ஒரு காலால் மற்றவரது காலினையும், கையினால், கையினையும், துளி கூட நகர முடியாத அளவிற்கு கால் கைகளாலேயே கிடுக்கி பிடி பிடித்திருக்கும் மல்யுத்தக் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சிற்பக் காட்சி.


பிறை நிலவுகளை ஒன்று சேர்த்து கட்டி உள்ளார்களோ என்று எண்ணும் விதமாக தாமிர சபையின் முன்னே உள்ள மண்டபத்தின் தோற்றம்.


அக்காலத்திய சிவனடியார்களின் தோற்றத்தினை அப்படியே நம் கண் முன் காட்டும் சிலை வடிவம். தலையைச் சுற்றிய உத்திராட்ச மாலை. கழுத்தில் அணிந்திருக்கும் மாலையின் வடிவம் அனைத்தும் வடிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தூண்களின் அடிபாகத்தில் அக்கோயிலைக் கட்ட உதவியவர்களின் சிலைகளும், தூண்களின் மேற்புறத்தில் சிங்கங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கூரையில் வரிசையாக நீண்ட தூண்களை படுக்கை வாக்கில் அடுக்கியது போன்ற அமைப்பு.


தட்சிணாமூர்த்தி சன்னதியின் வெளிப்புறத்தில் எத்தனை அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முன் மண்டபம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இக்கோயிலில் அமையப் பெற்றுள்ள சிற்பங்களைக் காண ஒரு நாள் போதாது.


திருக்கோயிலில் உள்ளே மட்டுமல்லாது வாயிற் கதவுகளில் கூட அழகிய சிற்ப வடிவங்கள்.


நிலைக் கதவுகள் உயரமாகவும், கலை வண்ணத்துடன் காட்சி தருவது, எங்கு திரும்பினாலும், கோயிலுக்குள் எங்கு சென்றாலும் அங்கு வரும் பக்தர்கள் கட்டாயம் ஏதோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு சிற்ப வடிவத்தை கண்டாகவேண்டிய அளவிற்கு கணக்கிலடங்கா சிற்பங்கள்.

****************

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய திருநெல்வேலி பதிகம்:
மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றும் மெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருத்திசெம் பொன்மலர் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

என்றுமோர் இயல்பினர் எனநினை வரியவர் ஏறதேறிச்
சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே
தன்றுதண் பொழில் நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர் போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வேலியுறை செல்வர்தாமே !!

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவுரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார்
ஆனில்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதன் ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெல்லாம் புகழுறுந் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல் வேலியுறை செல்வர் தாமே !!

பைங்கண்வாழ் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அணைலார்தாம்
கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத்
திவருறு மதிதவழ் திருநெல் வேலியுறை செல்வர்தாமே !!

பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே !!

*** திருச்சிற்றம்பலம் *** நன்றி மரகதம்.