ஆயுளை நீடிக்கும் காரடையான் நோன்பு!!
மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு...!
💫 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்பது பழமொழி. இல்லற வாழ்க்கையில் இணைந்த கணவன், எப்போதும் பிரியாமல் இருக்கவும், அவன் நீண்ட ஆயுளுடன் வாழவும் மனைவி நோற்கின்ற விரதம் இது.
💫 இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர். இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர். பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்து சென்றான். சாவித்திரி அவனை தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள். இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும்.
💫 காரடையான் நோன்பின் போது, சாவித்திரியின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம்.
💫 அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது, சத்தியவானை சந்தித்தாள். தன் கண் தெரியாத பெற்றோருக்கு அவர் செய்த பணிவிடை சாவித்திரியை மிகவும் கவர்ந்தது. அவள் சத்தியவானையே திருமணம் செய்ய விரும்பினாள். தந்தையிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்தாள். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது அங்கு வந்த நாரதர் சத்தியவானுக்கு இன்னும் 1 வருடமே ஆயுள் இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரியின் தந்தை, வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி, மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் வரத்தான் செய்யும் என்று தனது முடிவில் பிடிவாதமாக இருந்து சத்தியவானையே திருமணம் செய்தாள்.
💫 சத்தியவானின் ஆயுள் முடிவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக சாவித்திரி ஒரு விரதத்தை தொடங்கினாள். இரவும், பகலும் கண் விழித்து, உணவருந்தாமல் கடும் விரதம் இருந்தாள். அன்று சத்தியவான் பெற்றோருக்கு பழம் பறித்து வருவதற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்டான். அவனுடன் தானும் வருவதாக கூறி சாவித்திரியும் உடன் சென்றாள். அவர்கள் இருவரும் காட்டில் பழங்களை பறித்து கொண்டிந்தனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த சத்தியவானின் உயிர் பிரிந்தது. அப்போது அங்கே பாசக்கயிற்றுடன் எமன் தோன்றினான். பெண்ணே! உன் கணவரின் ஆயுள் முடிந்து விட்டது. பதிவிரதையானதால் உனது கண்களுக்கு நான் தெரிந்தேன் என கூறிவிட்டு, சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு புறப்பட்டான்.
💫 சாவித்திரியும் எமனை பின் தொடர்ந்து சென்று, நண்பரே! நில்லுங்கள் என்றாள். இதைக்கேட்ட எமன், நான் உனது நண்பனா? என கேட்டார். அதற்கு ஒருவன் மற்றொருவருடன் ஏழு அடிகள் நடந்து சென்றால், இருவரும் நட்புக்குரியவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நீங்கள் என் நண்பர் ஆவீர்கள் என சாவித்திரி பதில் அளித்தாள். இதைக்கேட்டு எமன் புன்முறுவலுடன், உனக்கு வேண்டும் வரங்களை தருகிறேன். உன் கணவனின் உயிரை தவிர, வேறு எதையாவது கேட்டு பெற்று கொள் என்றார். சாவித்திரி, என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும். மேலும் எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும் என்றாள்.
💫 நீ கேட்ட வரத்தை தந்தேன். இனியும் என்னை பின் தொடராமல் போய்விடு என்றார் எமன். ஆனால் சாவித்திரி தர்மராஜாவின் வாக்கு தப்பாது என்று நம்புகிறேன். எனக்கு 100 குழந்தைகள் பிறப்பதாக வரம் தந்தீர்கள். என் கணவன் இல்லாமல் எப்படி குழந்தை பிறக்கும்? என்றாள். இதைக்கேட்ட எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார்.
காரடையான் நோன்பு அன்று சாவித்திரியின் கதையை கேட்பவர்களுக்கு தீர்க்க ஆயுள் கிடைப்பதாக ஐதீகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக