பஞ்சபூதத் தலங்கள் - நிலம் - காஞ்சிபுரம்
**********************************************
திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்
*திருத்தல வரலாறு*
********************
இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.
*திருத்தலப் பெருமை*
************************
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
*கோயில் வரலாறு*
*********************
ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.
*ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்*
*****************************************
இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.
இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.
*பாடற் தொகுப்புகள்*
***********************
திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.
*கல்வெட்டுக்கள்*
*******************
1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.
2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.
3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.
4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.
5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.
6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.
7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.
*பரிநிர்வாண புத்தர் சிலை*
******************************
இக்கோயிலில் மதிற்சுவரில் புத்தர் பரிநிர்வாண கோலத்தில் உள்ள சிலை இருந்தாக மயிலை சீனி.வேங்கடசாமி கூறியுள்ளார். தற்போது அச்சிலை அங்கு காணப்படவில்லை. தமிழகத்தில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
*தொண்டை நாட்டுத் தலம்*
*****************************
சென்னை, செங்கற்பட்டு, அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்து வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்துகள் அடிக்கடி உள்ளன.
செங்கற்பட்டு - அரக்கோணம் இருப்புப் பாதையில், காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையம் - மத்தியில் உள்ளது.
காஞ்சிபுரம், வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும் சிறப்புடையது. கி.மு. 5- ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் சிறப்பாக இருந்த செய்தி, சீன யாத்ரிகர் யுவான்சுவாங் குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது. கி.மு. 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்துள் காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார்.
தொண்டை நாட்டின் தலைநகரமாக திகழும் காஞ்சிபுரம், A.H. 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களுக்குத் தலைநகராக விளங்கியது. சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர்களின் ஆட்சி முத்திரைகளும் இந்நகரில் பதிந்திருந்தன.
"கல்வியைக் கரையிலாத காஞ்சிமாநகர்" என்று அப்பர் தேவாரத்தில் புகழப்படும் இத்தலம் பண்டைக்காலத்தில் கல்விக்கு இருப்பிடமாக விளங்கிக் 'கடிகாஸ்தானத்தை'யும், புகழ் பெற்ற அறிஞர்களையும் பெற்றிருந்தது. ஹர்ஷர் காலத்தில் புகழுடன் விளங்கிய நாலாந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும், பேராசிரியர் தின்னாகரும், பௌத்த சமயத் தத்துவ நூல்களை எழுதி உதவிய போதிதர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே.
அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளக்கு உரை எழுதிய பரிமேலழகர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், வண்ணக் களஞ்சியம் நாகலிங்க முனிவர், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இசைமேதை நயினாப் பிள்ளை முதலியவர்களைப் பெற்ற தலம் காஞ்சியே.
காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள 'ஜின காஞ்சி' (ஜைன காஞ்சி) என்னும் பகுதி - தற்போது திருப்பத்திகுன்றம் என்று வழங்கும் பகுதி - பண்டை நாளில் சமணர்களுக்குக் (திகம்பரப் பிரிவினர்க்கு) கோட்டையாக விளங்கியதாகும். இங்குள்ள ஜைனக்கோயில் மிக்க சிறப்பு வாய்ந்தது. A.H. 14ஆம் நூற்றாண்டில் மல்லிசேனா, வாமனசூரி போன்ற சமணப் பெருமக்கள் காஞ்சியில் அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக வாழ்ந்தனர். இவையெல்லாம் நோக்குமிடத்துக் காஞ்சிபுரம் சமயப் பொதுவிடமாகத் திகழ்ந்தது என்பதையும் அறிகின்றோம்.
வைணவத்திலும் காஞ்சி அழியாத சிறப்பைப் பெற்றுள்ளது. பொய்கையாழ்வாரும் வேதாந்த தேசிகரும் வாழ்ந்த பதி. ஸ்ரீ ராமாநுஜர் இளமைக் காலத்தைக் காஞ்சியில் கழித்து அத்திகிரி அருளாளனாகிய ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் பேரருளைப் பெற்றார். திருமழிசையாழ்வாரும் சில காலம் காஞ்சியில் வாழ்ந்தார் என்பதும், அவர் தொடர்பான 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' வரலாறும் அனைவரும் அறிந்ததே. வரதராஜப் பெருமாளுக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த 'திருக்கச்சி நம்பிகள்' பெருமையை அறியாதார் யார்?
காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள் மலிந்து விளங்கும் நகரமாதலின் 'விழவறாக் காஞ்சி' என்று புகழப்படும் பெருமை பெற்றது,
பெரும்பாணாற்றுப்படை, தண்டியலங்காரம் முதலிய நூல்கள் இத்தலத்தின் புகழைப் பாடுகின்றன.
தற்கால உலகில் பட்டுப்புடவைகளுக்குப் புகழ் பெற்றது காஞ்சி. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பஞ்சபூதத் தலங்களுள் இது பிருதிவித் தலம்.
சக்தி பீடங்களுள் சிறந்ததாகிய காமகோடி பீடத்தலம் இதுவே. காமாட்சியம்பிகையின் ஆலயம் காமக்கோட்டம் எனப்படும். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய அற்புதத்தலம். கந்தபுராணம் தோன்றிய பெருமையுடைய தலமும் இதுவே. இந்நூலாசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார் தொண்டு செய்து வந்த குமரக்கோட்டமும் (முருகன் திருக்கோயில்) இங்குள்ளதே. கந்த புராணம் அரங்கேற்றப்பட்ட மண்டபம் இன்றும் இத்திருக்கோயிலில் கச்சியப்பர் பெயரில் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
'நகரேஷ காஞ்சி' 'முத்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சி' என்றெல்லாம் புகழ்ந்தோதப்படும் இத்தலத்திற்கு,
1. பிரளயசித்து 2. காமபீடம் 3. மும்மூர்த்திவாசம் 4. சிவபுரம் 5. விண்டுபுரம்
6. தபோமயம் 7. சகலசித்தி 8. கன்னிகாப்பு 9. துண்டீரபுரம் 10. சத்திய விரதக்ஷேத்திரம் 11. பூலோக கயிலாயம் 12. பிரமபுரம்
என்பன வேறு பெயர்கள். திருவேகம்பமும் குமரகோட்டமும் காமக் கோட்டமும் சோமாஸ்கந்த வடிவில் அமைந்திருப்பது இத்தலத்திற்குள்ள தனிச் சிறப்பாகும். தீர்த்தச் சிறப்பும் இதற்குண்டு. சர்வதீர்த்தத்தின் சிறப்பு அறியாதார் யார்? 'தரையிடங்கொளும் பதிகளிற் காஞ்சியந்தலம்' சிறந்தது என்பது கந்த புராணத் தொடராகும்.
சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வாழ்ந்த தெய்வப் பதி.
கண் பார்வையிழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் ஊன்று கோலைப் பெற்றவாறே இத்தலத்திற்கு வந்து காமக்கோட்டம் பணிந்து பின்னர்த் திருவேகம்பம் அடைந்து இறையருளால் இடக்கண்பார்வை பெற்ற அற்புதம் நிகழ்ந்த தலமிதுவே. உமை, திருமகள், வாணி ஆகிய மூவரும் முறையே வழிபட்ட ஏகம்பம், காயாரோகணம் கச்சபேசம், ஆகிய கோயில்கள் உள்ள தலம்.
இத்தலபுராணமாகிய காஞ்சிப் புராணம் - மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டது - தலபுராண வரலாற்றில் மிகச் சிறப்புடையதொரு இடத்தைப் பெற்றுள்ளதாகும். சிவஞான சுவாமிகள் காஞ்சியில் ஒரு பகுதியாக விளங்கும் பிள்ளையார் பாளையத்தில் மண்டபத் தெருவிற்குப் பக்கத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடாலயத்தில் தங்கிக் காஞ்சிப் புராணத்தை எழுதினர். பிரமன் வழிபட்ட தலமாகிய இக் காஞ்சி, நிலமகளின் உந்திதான் போன்றது என்று புகழப்படுகின்றது.
திசையனைத்தும் பக்தியுடன் போற்றிப் பணிந்து பரவப்படும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீ மடம் உள்ள தலம் இதுவே. அருளழுகு தவவிழிகள் அமையப் பெற்று, அண்டி வரும் அணைவருக்கும் அருள்சொரிந்து, உலகு வாழத் தவமாற்றி, உயர்ந்தோங்கு தவந்தனில் ஒப்பில்லா மாட்சிமையுடையவர்களாகத் திகழ்ந்துவரும் காஞ்சி மாமுனிவர்களின் அருளாட்சி நனிசிறக்கும் அருமைத் தலமும் காஞ்சியே.
சைவ ஆதீனங்களுள் மிகப் பழமையான ஆதீனமாகவும் மெய்கண்டதேவர் சந்தான பீடமாகவும் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனத் திருமடாலயம் இத்தலத்தில்தான் உள்ளது.
இத்தகு அளவற்ற சிறப்புக்கையுடைய இத்தலத்தில் கயிலாய நாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், கச்சபேசம் முதலிய எண்ணற்ற கோயில்கள் இருப்பினும் பாடல்பெற்ற திருமுறைக் கோயில்கள் எனப்படுபவை ஐந்தேயாகும். அவை 1. திருவேகம்பம் 2. திருமேற்றளி 3. ஓணகாந்தன்தளி 4. கச்சிநெறிக்காரைக்காடு 5. அநகதங்காவதம் என்பன.
இவற்றுள் 'பெரிய கோயில்' என்றழைக்கப்படும் ஸ்ரீ ஏகாம்பர நாதர் திருக்கோயிலே 'கச்சித் திருவேகம்பம்' என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது.
இத்திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. திருவேகம்பம், திருக்கச்சியேகம்பம், ஏகாம்பரநாதர் திருக்கோயில் எனப் பலவாறு அழைக்கப்படுவதம் இத்திருக்கோயிலே.
மாணிக்கவாசகர் இத்திருக்கோயிலைக் 'கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்' என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது. முற்றத் துறந்த பட்டினத்தாரின் 'திருவேகம்பமுடையார் திருவந்தாதியும்' கந்த புராணமும் இத்தலத்தின் சிறப்பையும், மூர்த்தியின் புகழையும் பலவாறு புகழ்கின்றன. மணிமேகலை, தக்கயாகப் பரணி, மத்தவிலாசப்பிரகசனம், தண்டியலங்காரம் முதலிய நூல்களிலும், பன்னிரு திருமூறைகளில் பலவிடங்களிலும் இத்தலச் சிறப்பு பேசப்படுகின்றது.
இறைவன் - திருவேகம்பர், ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்
இறைவி - ஏலவார்குழலி
தலமரம் - மா
தீர்த்தம் - சிவகங்கைத் தீர்த்தம்
மூவர் பாடலும் பெற்றது.
ஏகாம்பரேஸ்வரர் மூலவர் - மணல் (பிருதிவி) லிங்கம். உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து வழிபட, இறைவன் ஆற்றில் வெள்ளம் வருமாறு செய்ய, உமையம்மை இலிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்பது தலவரலாறு. தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இதனால் தழுவக் குழைந்த பிரான்' என்றும் பெயர்.
"எள்கலின்றி இமையவர்கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்
உள்ளத்துள்கி உகந்து உமைநங்கை வழிபடச் சென்றுநின்றவாகண்டு
வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
கள்ளக்கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே"
- சுந்தரர்
தற்போது 'கம்பா நதி' ஆலயத்துள் ஆயரக்கால் மண்டபத்திற்கு முன்னால் குளமாகிய நிலையில் உள்ளது.
தலமரம் மாமரம். ஆம்ரம் - மாமரம்.
ஏகம் + ஆம்ரம் = ஏகாம்ரம் - ஒற்றை மாமரம்
இம்மாவடியின்கீழ் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இறைவன், ஏகாம்அரநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பெரே ஏகாம்பரநாதர் என்று வழங்கலாயிற்று. "ஒரு மாவின்கீழ் அரையர்" என்னுந் தனிப்பாடல் தொடர் இங்கு நினைக்கத்தக்கது 'கம்பர்' என்பது தமிழில் வழங்கும் பெயர். ஊர்ப் பெயர் கச்சி, காஞ்சி என்றாலும் கோயிருக்குப் பெயர் ஏகம்பன் என்பதே.
காஞ்சிபுர மண்டலம் மூழுமைக்கும் தேவி, காமாக்ஷியே யாவாள். ஆதலின் காஞ்சியில் எச்சிவாலயத்திலும் தனியாக அம்பாள் (மூல) சந்நிதி கிடையாது. எனினும் ஒவ்வொரு கோயிலிரும் உற்சவமூர்த்தமாக ஓர் அம்பாள் சந்நிதி ஒரு பெயர் தாங்கி இருக்கும். அவ்வகையில் இத்திருக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு 'ஏலவார் குழலி' என்று பெயர். ஆயினும் தேவஸ்தானத்தின் பெயர் ஸ்ரீ காமாக்ஷயிம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானம் என்றே வழங்கப்படுகிறது.
மிகப் பெரிய கோயில். உயர்ந்த ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. நுழைவு வாயிலில் முன்னால் விநாயகரும் முருகப்பெருமானும் இடம் மாறிக் காட்சி தருகின்றனர். இக்கோபுரம் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால் A.H. 1509ல் கட்டப்பட்டதாகும். 'ஒன்பது நிலை தமீஇ ஓங்கும் கோபுரம்' என்பது காஞ்சிப் புராணம்.
இவ்வாயிலில் நின்றால் தண்ணென்ற காற்று எப்போதும் வீசுவதை அனுபவிக்கலாம். இவ்வாறு அனுபவித்த புலவரொருவர்தம் தனிப் பாடலில் 'கம்பத்தடி காற்று' என்று புகழ்ந்துள்ளார்.
உள்ளே நுழைந்தால் நேரே தெரிவது வாகன மண்டபம். இதற்குச் சரபேச மண்டபம் என்று பெயர். திருவிழாக் காலங்களில் சுவாமி இங்கெழுந்தருளி, உபாசாரங்களை ஏற்று, வாகனங்கள் மீது ஆரோகணிந்து திருவீதியுலாவுக்குப் புறப்படுவார்.
(பெரும்பாலான தலங்களில் வாகனங்களின் அமைப்பு பக்கவாட்டிலேயே அமைந்திருக்கும். சுவாமி நேராக நோக்குவார். ஆனால் இங்குச் சுவாமியின் நோக்கும் வாகனங்களின் முகமும் ஒரே திசையில் - நேராகவே இருக்கும்) .
விசாலமான உள் இடம். இடப்பால் நந்தவனம். அடுத்து குளமாகத் தேங்கியுள்ள நிலையில் கம்பையாறு உள்ளது. நேரே தெரிவது ஆயிரக்கால் மண்டபம். சற்றுப் பழுதடைந்துள்ளது. இக்கோபுரம் பல்லவகோபுரம் எனப்படும். இக்கோபுர வாயிலில்தான், தல விநாயகராகிய 'விகடசக்கர விநாயகர்' உள்ளார்.
சலந்தரணை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற சக்கராயுதத்தை, வீரபத்திரர்மேல் ஏவியபோது அவர் அணிந்திருந்த வெண்டலைமாலையில் உள்ள ஒருதலை அதை விழுங்கிவிட்டது, திருமால் பெரிதும் வருந்தினார். இதையறிந்த விஷ்வக்சேனர் வீரபத்திரரிடம் சென்று வேண்டி, அவர் சொல்லியவாறே பிரம கபாலம் சிரிக்கும் வகையில் விகடக் கூத்தாடினார். அக்கூத்தைக் கண்டு பிரமகபால சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர், அதை விரைந்து எடுத்துக்கொண்டு, மறுமுறையும் விகடக்கூத்து ஆடுமாறு பணிக்க, அவரும் அவ்வாறே ஆடினார். மகிழ்ந்து விநாயகரும் சக்கரப்படையைத் தந்தருளினார். ஆதலின் விகடக் கூத்தினை விரும்பிக்கொண்டமையால் 'விகடசக்கர விநாயகர்' என்று பெயர் பெற்றார். விநாயகரை வணங்கிக் கோபுர வாயில் கடந்து வலப்பக்கமாகத் திரும்பிக் கோயிலக்கு வரவேண்டும். இதுவே முறையான வழியாகும். பிற்காலத்தில் திருப்பணிகள் நடந்த காலத்தில் அமைக்கப்பட்ட மதில் 'வளைவு' ராஜகோபுரத்திற்கு நேராக இருப்பதால் இன்று மக்கள் பெரும்பாலும் இவ்வளைவின் வழியாகவே செல்கின்றனர்.
(சுவாமி புறப்பாடு இன்றும் இம்முறையான வாயில் வழியாகவே நடைபெறுவதை நேரில் காணலாம்) கோயிலுக்கு முன்புள்ளது 'திருக்கச்சி மயானம்' 'கோயிலாகும். இது வைப்புத் தலமாகும். அப்பரால் வைத்துப் பாடப்பட்டதாகும். அப்பாடல் -
" மைப்படிச்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லால்
ஒப்புடையன் அல்லன் ஒருருவனல்லன்
ஓரூரனல்லன் ஓர்உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே"
எதிரில் வள்ளல் பச்சையப்பர் கட்டிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண் ஒன்றில் அவருடைய உருவமும் உள்ளது.
ஏகம்பத்தின் நாற்புறத்திலும் நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் கச்சிமயானம் ஒன்று. மற்றவை வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் என்பன. மறுபுறம் சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது. அழகிய பெரிய குளம். நல்ல படித்துறைகள் உள்ளன. நாற்புறமும் கோபுரங்கள் உள்ளன, உயர்ந்துள்ள கொடி மரம் பணிந்து கோயிலுள் நுழையும்போது வாயிலில் இரு துவார பாலகர்கள் நம்மை வரவேற்கின்றனர். பக்கத்தில் உட்புறமாகக் கரிகாற்சோழனின் சிலையன்றுள்ளது.
உட்செல்லுகிறோம். வலப்பால் வாகன மண்டபம். இடப்பாலுள்ளது பவித்ர உற்சவ மண்டபம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். சற்று முன்னால் சென்று இடப்புறமாகத் திரும்பினால் அம்மூலையில் உள்ள தூணில் இறைவன், இறைவியைத் திருமணங்கொள்ளும் அழகான சிற்பம் உள்ளது, அதன் எதிர்த் தூணில் இறைவி, இறைவனின் கண்களைமூடும் சிற்பம் உள்ளது, இடப்பால் திரும்பிப் பிரகார வலம் வருகிறோம். வலப்பால் 'பிரளயகால சக்தி'யின் சந்நிதி உள்ளது, 'ஈறுசேர் பொழுதினும் இறுதியின்றியே காத்தூக காஞ்சியை மாறிலாது இருத்திடுகின்ற' அம்பிகை இவள். வழிபட்டுத் தொடர்கிறோம். பிரகாரம் மிக்க அழகுடையது. பக்கத்துத் தூண்களின் அமைப்பும் உச்சிப்பகுதியும் அற்புதமான அழகுடையவை, செல்லும்போதே வலப்பால் இருப்பது "சபாநாயகர்" மண்டபம். இது நாளடைவில் 'நாயகர்' மண்டபம் என்றாகி, இன்று மக்கள் வழக்கில் கொச்சையாக நாயர் மண்டபம் என்று வழங்குகிறது. இங்குத்தான் ஏகம்பரநாதரின் உற்சவத் திருமேனி உள்ளது. சந்நிதியுள் பெருமான் (இங்கு) சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இம்மூர்த்தம் இராசசிம்ம பல்லவனின் உபயமாகச் செய்துவைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இதன் பின்னால் பிரபாவளி செருகுமிடத்தில் சிங்கம் உள்ளது. பின்னால் உமாமகேசுவரர், சந்திரசேகரர், ஸ்ரீ கண்டசிவாசாரியார் முதலிய உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெருவிழாக் காலங்களில் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்படுவதும், பெருமான் உலாவுக்குப் புறப்படுகின்ற சிறப்புடையதும் இம்மண்டபத்தில்தான். இச்சந்நிதியில் இரு பக்கங்களிலும் பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் திருமேனியைப் பார்த்துத் தரிசிப்பதே தனியழகு, பிராகாரம் முழுவதிலும் இடப்பால் வரிசையாகச் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பஞ்சமுக விநாயகர் தரிசனம். இது பிற்காலப் பிரதிஷ்டை, (1-2-1979ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது) . அடுத்து வருவது மாவடி. தலத்திற்குரிய பெருமையுடையது. மாதவச் சிவஞான சுவாமிகள் "மருமலத்தனிமா" என்று இதைக் குறிப்பிடுகின்றார். மாவடியை வலம் வரும் அமைப்பில் பிரகாரமுள்ளது. துவார கணபதியையும், ஆறுமுகரையும் வணங்கி, மேலேறிச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசிக்கலாம். பீடத்தின் அடியில் பஞ்சாக்கினி தவம், இலிங்கோற்பவ வரலாறு. அம்பிகை தழுவும் கோலம் முதலிய சிற்பங்கள் உள்ளன.
மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள் அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக் கொள்ளும் நிலையை இன்றும் காணலாம்.
வேதமே மாமரம்: வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின்மீது ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச் சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர்.
தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார். 'ஒருமாவின்கீழரையர்" என்பது தனிப்பாடல். இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலப்பால் படிகளேறிச் சென்றால் 'ஏலவார் குழலி' - அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். அழகான திருமேனி.
பக்கத்தில் 'மாவடிவைகும் செவ்வேள்' சந்நிதி. குமரகோட்டம் என்னும் பெயரில் தனிக்கோயில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் இருந்தாலும், அப்பெருமானின் அருள் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம் இத்தலத்தில் தோன்றினாலும், அதில் மூவிரு முகங்கள் போற்றி' எனும் பாடலில் வரும் "காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி" என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார்.
இச்சந்நிதியில் உற்சவத் திருமேனி (வள்ளி தெய்வயானையுடன் கூடி) முன்னால் இருக்க, பின்னால் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன. அடுத்த தரிசனம் நடராச சபை - இடப்பால் உள்ளது.
11-12-1961ல் புதியதாக நிறுவப்பட்டது. முன் மண்டபம் அழகாக உள்ளது. சபையில் அம்பலக் கூத்தருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும் காட்சி தருகின்றனர். தரிசித்து வெளி வந்தால் பக்கத்தில் 'பைரவர்' சந்நிதி. அடுத்துள்ளது யாக சாலை. எதிரில் வலப்பால் நவக்கிரக சந்நிதி, கிரகங்கள் உரியவாகனங்கள் மீது அமர்ந்து உரிய திசைகளை நோக்கியிருக்கும் அமைப்பில் உள்ளன. நடுவில் சூரியன் உள்ளார்.
உள்வாயிலைத் தாண்டுகிறோம். இடப்பால் இத்தலத்து வாழ்ந்த நாயன்மார்களான திருக்குறிப்புத் தொண்டர், ஐயடிகள் காடவர்கோன், சாக்கிய நாயனார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அடுத்து நால்வர் சந்நிதி, தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள், முடிவில் சந்தானாசாரியர்களும் உளர். எதிரில் வலப்பால் 'வெள்ளக் கம்பர்' சிவலிங்கத் திருமேனி உள்ளது. அடுத்துப் பிரகாரத்தில் இடப்பால் சிவலிங்க பாணங்கள் மட்டும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் திருவுருவமும், பக்கத்தில் 'கள்ளக் கம்பர்' சிவலிங்கத் திருமேனியும், அடுத்து, 'மத்தள மாதவேசர்' சிவலிக்த் திருமேனியும் உள்ளன, சண்டேசவரர் உள்ளார். இத்திருக்கோயிலில் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் ஏதுமில்லை. அடுத்த இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் உள்ளன.
நேரே நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி. இச்சந்நிதியின் பக்கத்தில் 'நல்ல கம்பர்' சிவலிங்கத் திருமேனியும், அடுத்து சற்று உள்ளடங்கிய சூரியன் திருவுருவமும் உள்ளன. நாடொறும் ஆலய பூஜை இச்சூரிய பகவான் வழிபாட்டிலேயே தொடங்குகின்றது.
(நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்றது. இங்கு, தீர்த்தம் தரப்பெற்றுச் சடாரியும் சிவாசாரியாரால் சார்த்தப்படுகிறது. இச்சந்நிதியில் சிலாரூபமான திருமேனி வழிபாட்டில் உள்ளது. (பக்கத்தில் உள்ள சுதைரூபம் வழிபாட்டில் இல்லை.)
மூலவரைத் தரிசிக்கச் செல்லுகிறோம். ஆலந்தானகந்த அமுத செய்த பிரான் பிருதிவி (மணல்) லிங்கமாகக் காட்சி தருகிறார். பாணம் சற்று கூசாகவுள்ளது. இதன்மீது தண்ணீர் படக்கூடாது. அபிஷேகங்கள் முதலிய அனைத்தும் ஆவுடையாருக்கே. இலிங்கபாணத்திற்குப் புனுகுச் சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது. பின்னால் சுவரில் சோமாஸ்கந்தத் திருமேனி உள்ளது.
இலிங்க வகைகளுள் அம்பாள் அமைத்து வழிபட்ட இது 'தேவிக லிங்கமாகும்'. திங்கட்கிழமைதோறும் தல மகிமைத் தொடர்பான - அம்மை தழுவும் கோலமுடைய - கவசம் சார்த்தப்படுகிறது.
ஏலவார்குழலாள் என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனாம் கம்பன் எம்மானைக் கண்குளிரக் கண்டு மகிழ்கிறோம். தரிசனம் முடித்து பக்கவாயில் வழியாக இறங்கிச் சண்டேசவரரை வணங்க வழியுள்ளது. ராஜகோபுரம் தெற்கு நோக்கியிருப்பனம் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார்.
மூலவரைத் தரிசித்து, சண்டேசவரரின் அருள் பெற்று வெளியே வந்து கொடி மரத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்கிறோம். வெளியில் பெரிய நந்தி உருவம் உள்ளது. இதற்குப் பக்கத்தில் 'வாலீசம்' தனிக் கோயிலாகவுள்ளது.
செயல் அலுவலரின் அலுவலகத்திற்குப் பக்கத்தில் குளத்தையட்டி 'ரிஷபேசம்' கோயில் உள்ளது.
கச்சிமயானத்தின் முன்புள்ள தூணில் ஆதிசங்கரர், தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. சபாநாயகர் மண்டபத்தில் சந்நிதிக்கு எதிரில் உள்ள இருதூண்களில் ஒன்றில் அன்ன வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனும், அவ்வாறே எதிர்த் தூணில் AO வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம் மன்மதனம் சிற்ப வடிவில் உள்ளனர்.
நவக்கிரகம் வணங்கி, உள்வாயிருக்கு அருகில் இறங்கும் படிகளில் இறங்கும்பாது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் சிற்பமும் எதிர்த்தூணில் பிட்சாடனர் சிற்பமும் இருப்பதைக் காணலாம்.
நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பூஜை முறைகள் 'காமிக' ஆகம அடிப்படையில் அமைந்தவை. ரதசப்தமி நாளில் சூரிய ஒளி சுவாமி மீது படுதலைக் கண்டு தரிசிக்கலாம்.
திருப்பணிகள் 25 -10 - 76ல் தொடங்கப் பெற்று மகா கும்பாபிஷேகம் 1-2-79ல் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளுமே ஸ்ரீ காஞ்சி காமகோடி பிடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன. இக்கும்பாரிஷேகத்தை நகரத்தார்கள் செய்து தந்தது குறிப்பிடத்தக்கது.
இராசகோபுரமும் (1991ல்) திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இராசராச சோழதேவன், விசயகண்ட கோபாலதேவன், கம்பண்ண உடையார், அச்சுத உடையார், முதற்குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் 1. ஆராதனைக்கும் திருவமுதுக்கும் விடப்பட்ட நிபந்தங்கள். 2. கோயிலுக்குப் பசுக்களை வழங்கியது. 3. நந்தா விளக்கெரிய ஏற்பாடு செய்தது முதலிய செய்திகளை அறிகிறோம்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்பாக பதினான்கு நாள்களுக்கு நடைபெறுகின்றது. இவ்விழாவில் ஆறாம்நாள் விழாவாகப் பகலில் அறுபத்துமூவரும் இரவில் வெள்ளித் தேர்க்காட்சியும் நடைபெறுவதும், ஒன்பதாம் நாள் விழாவாக நடைபெறும் மாவடிச் சேவையும், பன்னிரண்டாம் நாள் விழாவாக நடைபெறும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாகத் தரிசிக்கத்தக்கன. பதினான்காம் நாள் இரவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் சார்பில் நடைபெறும் திருமுறைப் பெருவிழா மிகச் சிறப்புடையதாகும். (சிவ சிவ ஒலி மண்டபக் கட்டளையும் ஸ்ரீ காசி மடத்தின் சார்பில் நடைபெறுகிறது).
ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சுந்தரர் இடக்கண் பெற்றது. பவித்ரோற்சவம், தைப்பூசம், கார்த்திகைச் சோமவாரங்கள், (கடைசி சோமவாரம் லட்சதீபம்) மாசி மகம், சிவராத்திரி, திருவாதிரை முதலியவை இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும்.
யாத்ரிகர்களுக்குரிய வசதிகளாகத் தங்குமிடங்களும், உணவு விடுதிகளும் இந்நகரில் வசதியாக உள்ளன. அரசின் சுற்றுலாத்துறை பயண மாளிகையும் இங்குள்ளது.
மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருவேகம்பத் (து)
உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே.
(சம்பந்தர்)
கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறம் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
(அப்பர்)
பண்ணில்ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்
வண்ணமில்லி வடிவு வேறாயவன்
கண்ணிலுண்மணி கச்சியேகம்பனே.
(அப்பர்)
முந்தைகாண் மூவரினும் முதலானான்காண்
மூவிலைமேல் மூர்த்திகாண் முரகவேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தினாற்குத்
தாதைகாண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத்தார்க்குச்
சிவன் அவன்காண் செங்கண்மால் விடையன்றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன்காண் அவன்ª ன் எண்ணத்தானே.
(அப்பர்)
"ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே"
(சுந்தரர்)
காசணிமின்கள் உலக்கையெல்லாம் காம்பணிமின்கள் கறையுரலை
நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடிப்
பாசவினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுன்னம் இடித்து நாமே
(மாணிக்கவாசகர்)
"ஏகம்பத்துறை எந்நாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி"
(திருவாச, போற், திருவக)
"ஏகம்பத்தின் இயல்பாயிருந்து
பாகம் பெண்ணொடாயின பரிசும்"
(திருவாச, கீர்த்,திருவக)
மெய்த்தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிக நற்பணி செய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற
இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே.
(திருவேகம்பர் திருவந்தாதி)
முன்னுறு பொருள்கட்கெல்லாம் முற்படு பழையாய் போற்றி
பின்னறு பொருள்கட்கெல்லாம் பிற்படு புதியாய் போற்றி
புன்மதியாளர் தேறாப் பூரண முதலே போற்றி
சின்மயத் திருவேகம்ப சிவசிவ போற்றி போற்றி
(காஞ்சிப்புராணம்)
என்நெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ் செய்வாயாகில் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத்தானை யுரித்தானை வண்கச்சி
ஏகம்பத்தானை இறைஞ்சு.
(க்ஷேத்திரத் திருவெண்பா)
(ஐயடிகள் காடவர்கோன்)
பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டருச்சித்துச்
செங்கயற் கண்மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து
பொங்கிய அன்பொடு பரவிப் போற்றி ஆரூரர்க்கு
மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்.
(பெ. புரா)
"அற்றைக் கிரைதேடி
அத்தத்திலு மாசை
பற்றித் தவியாத
பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா
வெற்பைத் தொளைசீலா
கற்றுற்றுணர் போதா
கச்சிப் பெருமாளே"
(திருப்புகழ்)
"நாகம்பராந் தொண்டை நாட்டிலுயர் காஞ்சி
ஏகம்பமேவும் பேரின்பமே"
(அரும்பா, விண், கலி, வெ)
தொல்லை மறைதேர் துணைவன் பல்லாண்டு வரை
எல்லையிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள்
ஓங்குலகில் வாழும் உயிரனைத்தும் ஊட்டுமால்
ஏங்கொலிநீர்க் காஞ்சியிடை
(தண்டியலங்கார மேற்கொள் பாடல்)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம் - 631 502,
காஞ்சிபுரம் மாவட்டம்.