ஞாயிறு, 13 ஜனவரி, 2019

108 திரு விளக்கு போற்றி


108 திரு விளக்கு போற்றி

நெருப்பு என்பது தீயவற்றை பொசுக்குவது. அதை தீபமாக ஏற்றும் போது இருளை போக்கி வெளிச்சத்தை தருகிறது. எனவே தான் தீபம் அல்லது விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நமது மதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செயலாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பூஜை தான் “திருவிளக்கு பூஜை”. இப்பூஜை பெண்களால் மட்டுமே செய்யப்படுகிறது. வீட்டிலோ அல்லது கோவிலிலோ திருவிளக்கு பூஜை செய்யப்படும் போது கூற வேண்டிய மந்திரம் இது. இதை கூறுவதன் மூலம் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

108திருவிளக்கு போற்றி

1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4. மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10. பேரருட் கடலாம் பொருளே போற்றி
11. முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
13. அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15. ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
17. மங்கள நாயகி மாமணி போற்றி
18. வளமை நல்கும் வல்லியை போற்றி
19. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
20. மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22. தையல் நாயகித் தாயே போற்றி
23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
24. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26. சூளாமணியே சுடரொளி போற்றி
27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
38. ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44. உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54. தில்லைப் பொது நட விளக்கே போற்றி
55. கருணையே உருவாம் விளக்கே போற்றி
56. கற்பனை கடந்த ஜோதி போற்றி
57. அற்புதக்கோல விளக்கே போற்றி
58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59. சிற்பர வியோம விளக்கே போற்றி
60. பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64. பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
66. அருவே உருவே அருவுரு போற்றி
67. நந்தா விளக்கே நாயகியே போற்றி
68. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
69. தீபமங்கள் ஜோதி போற்றி
70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
71. பாகம் பிரியா பராபரை போற்றி
72. ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
75. ஆழியான் காணா அடியோய் போற்றி
76. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82. இருநில மக்கள் இறைவி போற்றி
83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
89. தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
90. ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94. புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
96. பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99. செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102. நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103. தாயே நின்னருள் தருவாய் போற்றி
104. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம். இந்த விளக்கு பூஜை மூன்று தேவியரின் அருளை பெற்று தருவதாகும். வீட்டிலோ அல்லது கோவிலிலோ விளக்குக்களை ஏற்றி, வழிபாடு செய்யும் போது செய்பவர்களின் குடும்பத்தில் வறுமை நிலை நீங்கும். நோய் நொடிகள் அண்டாது. தீய சக்திகள் எதுவும் அவர்களை அண்டாது. விரும்பிய காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும்.


திருவிளக்கு என்பது பொதுவாக செல்வகடவுளான லட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதில் சரஸ்வதி மற்றும் பார்வதி தேவிகளின் அம்சமும் இருக்கிறது. திருவிளக்குகளை நன்றாக சுத்தம் செய்து, அதற்குரிய பீடத்தில் வைத்து, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை போட்டு தீபமேற்றிய பின்பு இந்த 108 போற்றி மந்திரங்களை உச்சரித்து வணங்க வேண்டும். இந்த திருவிளக்கு பூஜையை கோவிலில் செய்வதால் அந்த ஊருக்கு நன்மைகளையும், உலகிற்கு அமைதியையும் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக