ஞாயிறு, 19 மே, 2019

ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் ஜெயந்தி

 ஶ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் ஜெயந்தி... 17.05.2019

ஶ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின்  அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான்.

பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான்.

தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே போய் அந்தணர்கள், தேவர்கள் பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான்.

இரண்யனின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரிஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான்.

மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.

உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர்.

தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர்.

தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார்.

அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன் மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது.

அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும்.

எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.

யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான்.

தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான். 

மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார்.

விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

எவனுக்கு தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார்.

இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான்.

ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான்.

கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன்.

பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான்.

இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள். ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை.

ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள்,  அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர்.

நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய் அவனே மெய் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன்.

பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.

ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியை பின்பற்ற வேண்டும் என்று ஹரியை  புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர்.

உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான்.

இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை.

உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர்.

அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.  அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர்.

தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர்.

அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது.

இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார்.

நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே! அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.

அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.  இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான்.

அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான்.

ல்அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள்.

கருவிலிருந்த நான் அந்த உபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன். எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தல், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும்.

நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர்.

கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துவரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன.

தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.

தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல முடியும்.

இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான். தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன். இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான்.

டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா?  அதைப் பார்ப்போம். இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன்.

நீ சரண்புகுந்த அந்த ஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது.

அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார்.

அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான்.

அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.

ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான்.

எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை.

நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான்.

தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர். நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது.

துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார்.

மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்.

நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்ங்க....

வெள்ளி, 17 மே, 2019

வைகாசி விசாக திருநாள்



வைகாசி விசாக திருநாள்

வைகாசி விசாகம் முருக பெருமானின் பிறந்த தினமாகும். வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாளில் வருவது முருக பெருமானின் பிறந்த நாள். முருக பக்தர்களால் ஆனந்தமாகக் கொண்டாடப்படுவது.



வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும். முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள். அதன்படி கணக்கிட்டால் விசாகம் பதினான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது இருபத்தியேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். இதைத்தான் ‘ஒரு பதின்மேலும் ஒரு மூன்று சென்றபின்’ என்றும் ‘மீனத்து (நட்சத்திரங்களின்) இடைநிலை’ என்றும் மணிமேகலை கூறுகிறது. இதன்மூலம்  முற்காலத்திலும் வைகாசி விசாகம் சிறந்த விழாவாகக் கொண்டாடப்பட்டதை அறியலாம். 

வைகாசி என்பதை ‘விகாஸம்’ என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள்.  வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை ‘மாதவ மாதம்’ என்றழைப்பார்கள்.

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. விசாக நட்சத்திரத்தை ஞான நட்சத்திரம் என்பர். விசாக நக்ஷத்திரம் மூன்று நக்ஷத்ரங்களின் சேர்க்கை ஆகும்.  ஒரு தோரணம் போல அமைப்பு  கொண்டது. வானில் பிரகாசமாக ஒளிர்வது. இந்த நாளில் உலகிலுள்ள தீய சக்திகளை ஒழிப்பதற்காக உருவெடுத்தவரே முருகப் பெருமான். முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சேர்த்து சம்பந்தப்பட்டவை. முருகனது தனிப்பட்ட விழாக்களில் வைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டியுமே மிக முக்கியமானவை. இந்த நாளில் முருகன் தனது அற்புத சக்தியை முழுமையாக வெளிப்படுத்துகிறார். இந்த நாளில் நாம் அவரை வேண்டினால் இறை அருளும் ஆன்மீக பலமும் கிட்டும். முருகன் தீய சக்திகளை அழிக்க அவதாரம் எடுத்தவர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவர்.

முருக கடவுள் ஞானத்தின் இருப்பிடம் . அறிவின் உறைவிடம் . முருகனை வைகாசி விசாகத்தன்று வணங்கினால் வாழ்வு ஆன்மீக ஒளி பெற்று திகழும் என்பதில் ஐயமில்லை.

சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.

எனவே, இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும், உலகெங்கும் தமிழர்கள்  வாழும் பகுதிகளில் உள்ள மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும், கோலாகலமான விழாவும் தமிழ்கடவுளான முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.


*நாளை வைகாசி விசாகத்திற்கு விரதம் இருக்கும் முறை*


வைகாசி விரதம் என்பது கிட்டத்தட்ட ஏகாதசி விரதம் போன்றது. நாளை காலையில் இருந்தே உணவு உட்கொள்ளாமல்,  முழுமையாக எதையுமே சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் உண்ணலாம்.

இன்றைய தினம்  திருமணம் ஆகாதவர்களும் குழந்தை இல்லாதவர்களும் விரதமிருந்தால் திருமணப் பேறு ,   குழந்தை பேறு கிட்டுவது நிச்சயம்.

நாளை விரதமிருக்கும் பெண்டிர் குடை,  தண்ணீர், மோர்,  உணவு ஆகியவற்றை தானமாக அளித்தால் புண்ணியம்  உண்டு.

வைகாசி விசாகம் அன்று முருகனின் திரு உருவத்தை அரை நிமிடம் த்யானித்தால் நம் வாழ்வில் வளமெல்லாம் கிடைக்கும் என்கிறார் அருணகிரிநாதர்.

அகஸ்திய மாமுனி கூறுவது போல செவ்வரளி மலர்களை நாளை முருகன் திருவடியில் சமர்ப்பித்துவணங்கினால் நன்மை பல கிடைக்கும்.

நாகலிங்க மலர்கள் கொண்டும் முருகனை இந்த தினத்தில் வணங்கினால் மிகவும் விசேஷம்.  நாகலிங்க மலர்களை சமர்ப்பிப்பதோடு, உணவை சாப்பாட்டுக்கு வழியில்லாத, தேவையானவர்களுக்கு  அன்னதானம் வழங்குவது நன்மை பயக்கும். 

நாளை விரதம் இருக்கும்போது முருகனை வணங்கி கந்த புராணம், சுப்பிரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.

மேலும் நாளை முழுவதும் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. அதன் சக்தி நமது பாபங்களை தொலைக்க உதவும்.


மாலையில் முருகன் கோவிலுக்கு முருகனை வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தபின் இரவு உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது பௌர்ணமி நிறைவடையும் வரை விரதம் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை குளித்து விட்டு காலை உணவு உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.


*கோயில்களில் வைகாசி விசாகம் கொண்டாடும் முறை*

முருகன் கோயில் கொண்டுள்ள அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் பத்து நாள் திருநாளாக ப்ரம்மோத்சவமாக கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.

பக்தர்கள் முருகன்  கோயில்களை கிரிவலம் வருவது வழக்கம்.

இந்த நாளில் முருக ஸ்தலங்களில்  முருகன் வள்ளி திருமணம் நடத்துவது வழக்கம்.


வைகாசி விசாகத்தன்று தமிழ்கடவுள் முருகனுக்கு அனைத்து முருகதலங்களிலும் பாலாபிஷேகம் ஆனதும் வருடந்தோறும் வெயிலின் கடுமை குறைந்துவிடும் என்பது முருகபக்தர்களின் அனுபவப்பூர்வமான வைகாசி உண்மை. இதை இந்த வருடம் நீங்கள் அனைவரும் கவனித்து பாருங்கள்.


நாளை வைகாசி விசாகம் அன்று கந்த கடவுளை வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மை  பெறுவோம்.

வெள்ளி, 10 மே, 2019

இந்துக்களின் 16 சடங்குகள்


இந்துக்களின் 16 சடங்குகள்

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.

அகத்தின் எட்டு (8) சடங்குகள்:

1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை

புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:

1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.

2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.

5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.

6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.

7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.

8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.

9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.

12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.

13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.

14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.

(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)

16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.

இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.

“எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒருசில புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 6 மே, 2019

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?



அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?


பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.
என்ன செய்ய வேண்டும்?


அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள்.அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அட்சய திருதியை அன்று எதுவும் வாங்கலாம்!


அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கும்; பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம்.மகா விஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி இடம் பெற்றமை, பரசுராமர், பலராமர் போன்றவர்கள் அவதரித்த நாள் போன்றன இந்த அட்சய திருதியை நாள் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன. வறுமையில் வாடிய குசேலன் தனது நண்பனான கிருஷ்ணனை பார்க்கச் சென்ற பொது கொண்டு சென்ற மூன்று பிடி அவலை உண்டு பதிலாக கோடி கோடியாக செல்வங்களைக் அள்ளிக்கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நாள் என்றே கூறப்பட்டுள்ளது.பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது உணவுக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் அட்சய பாத்திரத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத உணவுப்பொருட்களைப் பெற்று புசித்ததாகவும் மகாபாரத கதையில் சொல்லப்பட்டுள்ளது.சிவபெருமான் தன் பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டதும், துச்சாதனன் பாஞ்சாலியின் புடவையை உருவிய பொது கண்ண பரமாத்மா அட்சய என்று கூறி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாள் என்றும் அதனால் அட்சய திருதியையில் எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது போன்றன அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும் எனவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக அன்னை லட்சுமி விளங்குகின்றாள்.அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். உப்பு, அரிசி மற்றும் தேவையான ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் போன்றனவற்றை இந்தநாளில் செய்வது நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அன்னதானம் செய்யுங்கள்!


அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வது சிறந்தது. ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். வெயில் வெம்மை தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும்.ஆடை தானம் செய்ய ஆரோக்கியம் கூடும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. அன்று, பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். அட்சய திரிதியையன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளைப் போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும். இது சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும். சாபம் பெற்று தேய்ந்துபோன சந்திரன், அட்சய திரிதியை தினத்தன்று அட்சய வரம் பெற்று மீண்டும் அட்சய திரிதியை தினத்திலிருந்து வளரத் தொடங்கினான்.பகீரதனின் கடுந்தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை, அட்சய திரிதியை நாளில்தான் பூமியைத் தொட்டது. பாண்டவர்கள் வனவாசத்தின்போது அட்சய பாத்திரம் பெற்றதும், மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் அட்சய திரிதியை நாளில்தான். திருமால் மார்பில் என்றும் நீங்காமலிருப்பதற்கான வரத்தை அட்சய திரிதியை தினத்தன்று தான் மகாலட்சுமி பெற்றாள். அட்சய திரிதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில், அட்சய திரிதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அச்சமயம் சிவனை தரிசித்தால் செல்வம் பெருகுமென்பது நம்பிக்கை.அட்சய திரிதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேருமென்பது ஐதீகம். எனவே அன்றைய தினம் செய்யப்படும் பித்ருக் கடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பராசக்தியின் அம்சமான சாகம்பரிதேவி இவ்வுலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. ஒரு அட்சய திரிதியை தினத்தன்றுதான் அவர் இவற்றை உருவாக்கினாராம்.அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம். பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.
தானம்


அட்சய திருதியை அன்று தானம், தர்மம் செய்வதால் மிகவும் புண்ணியம் கிட்டும், மேலும் அன்று பொன், பொருள், நிலம் வாங்க மிகவும் உகந்த நாளாகும்.
தானம் தர்மம் அட்சய திருதியை அன்று காலையில் துவரம் பருப்பு, மொச்சை, அரிசி ஆகிய தானியங்கள், சிவப்பு புடவை, வெள்ளை வேஷ்டி ஆகிய துணிகள் ஆகியவற்றை ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது மிகவும் பலன் தரும்.
கோபூஜை:


அன்று காலை பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் லக்ஷ்மி அருள் கிடைக்கும்.

ஏன் தங்கம் வாங்க வேண்டும்...?


அட்சயதிரிதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள்.அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது.நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது.தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.












எதுவும் வாங்கலாம்!

அட்சய திரிதியை நாளில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், புதிதாக தொழில் தொடங்கவும், புது முயற்சிகளில் ஈடுபடவும், கட்டடப்பணி துவங்கவும் இந்நாள் உகந்ததாகும். தங்க ஆபரணங்களை அட்சய திரிதியை நாளில் விருப்பத்துடன் வாங்குவர். மஞ்சள், உப்பு, பலசரக்கு சாமான்கள்,வழிபாட்டுக்குரிய பூஜை சாமான்கள், புத்தாடை, புத்தகம், டி.வி., வாஷிங்மிஷின், ஏ.சி., போன்ற மின் சாதனங்கள், டூவீலர், கார் போன்ற வாகனங்கள், கட்டுமான பொருட்கள், இப்படி எதையும் வாங்கலாம்.
அட்சய திருதியை நாளின் சிறப்புகள்


மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை நன்னாளில் தான். அதே போல பலராமரும் இந்த நாளில் தான் பூமியில் தோன்றினார்.பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது சூரியனை வேண்டி தருமர் அட்சயப் பாத்திரத்தைப் பெற்றதும் இந்த நாளில் தான். இது தொடர்பாக ஒரு கதை புராணத்தில் காணப்படுகிறது. துரியோதனன் பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டு தாய் மாமன் சகுனியின் யோசனைப்படி துர்வாச முனிவருக்கு மிகவும் நன்றாக பணிவிடைகள் பல செய்து அவரது நன்மதிப்பைப் பெற்றான்.அவன் எதிர்பார்த்தது போலவே அவரும், 'வேண்டும் வரத்தைக் கேள்' எனக் கூற, அவன் "சுவாமி! நான் தங்களுக்கு உபசாரங்கள் பணிவிடைகள் செய்து பெருபேறு பெற்றேன். அதே போன்ற கானகத்தில் உள்ள என் சகோதரர்களும் இதே பாக்கியத்தைப் பெறும்படி நீங்கள் திரு மனது வைக்க வேண்டும்' என்று வேண்ட அவரும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.பாண்டவர்களால் துர்வாச முனிவரைத் திருப்தி படுத்த முடியாது. அவர்கள் சாபத்துக்கு ஆளாகி துன்புறுவார்கள் என்பதே அவன் தந்திரம். அதற்கேற்றாற் போல துர்வாசர் தன் பரிவாரங்களுடன் காடு சென்றடைந்தபோது துரௌபதி உணவருந்தி முடித்து அட்சய பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டாள். அவ்வாறு செய்தால் அந்தப் பாத்திரம் அன்றைக்கு செயலிழந்து விடும்.மீண்டும் மறுநாளே அன்னம் தரும். கலக்கமடைந்த பாண்டவர்கள் முனிவரை ஆற்றுக்கு நீராட அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தனர். பாஞ்சாலி கண்ணனை மனதால் நினைத்துத் துதிக்க அடுத்த கணம் அவள் முன் தோன்றினான் பக்த வத்சலன். தங்களுடைய இக்கட்டான நிலையைக் கூறினார்கள் பாண்டவர்கள்.கொஞ்சம் கூட சஞ்சலப் படாமல் அந்தப் பாத்திரத்தை எடுத்து வரும்படி பணித்தார் பெருமாள். அவ்வாறே கொண்டு வரப்பட்டது.அதில் ஒரே ஒரு பருக்கை சாதமும், கொஞ்சம் கீரையும் ஒட்டி இருந்தன. அவற்றை எடுத்து வாயில் போட்ட அச்சுதன், வயிற்றைத் தடவிக்கொண்டு "அட்சய அஸ்து' என்றான். உடனே நதியில் நீராடிக் கொண்டிருந்த முனிவருக்கும் அவர் சீடர்களுக்கும் திரௌபதி உணவிட்டு வயிறு நிறைய உண்டது போன்ற திருப்தி ஏற்பட்டது.அவர்களால் இனி அன்னத்தை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது என்ற நிலை. அதனால் அவர்கள் பாண்டவர்கள் இருக்குமிடத்துக்கு வராமலேயே சென்று விட்டனர். இவ்வாறு பரந்தாமன் பாண்டவர்களைக் காத்த தினமும் இந்த அட்சய திருதியை தினம் தான்.
வழிபாட்டு அமைப்பு:


அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
அட்சய திருதியை பூஜை!


உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்களுக்கு அட்சய திருதியை பூஜை சிறப்பு. ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார். எனவே, உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் திருதியைத் திதி நாட்களில், ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியும். வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்.
லட்சுமி கடாட்சம் வரும்!


பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால் தான் திருமணம் முடிந்த நங்கைகள், முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் போது, மரக்காவில் பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கேற்றி, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வரச் சொல்வர்.அட்சய திருதியை அன்றைக்கு, முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.அதற்கடுத்து மஞ்சளில், எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில், கஸ்தூரி மஞ்சளுக்கு தனி சக்தி உள்ளது. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம்.
என்ன தானம் செய்யலாம்?


அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம்.
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.
அன்னபூரணி தீர்த்த உணவு பஞ்சம்:


ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். உண்பதற்கு வழியில்லாமல் பல உயிர்கள் செத்து மடிந்தன. பிரம்ம கபாலத்தை நிரப்பினால்தான் அந்தப் பஞ்சம் தீரும் என்பதால், சிவன் பிரம்ம கபாலத்தை எந்தியவராய் பிட்ஷாடன மூர்த்தியாய் திரிந்து கொண்டிருந்தார். அவரது கையிலிருந்த கபாலம் (திருவோடு) யார் வந்து என்ன பிட்சையிட்டாலும் நிரம்பவேயில்லை. அப்போது பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள். தன்னுடைய அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அன்னத்தை வாரி வழங்கி அனைவரின் பசிப்பிணி தீர்த்தாள்.சிவனார் எந்தியிருந்த பிரும்ம கபாலம் நிரம்பும் அளவுக்கு அதில் உணவினை இட்டாள். அதன் பிறகே அது இறைவனின் திருக்கரத்தில் இருந்து நீங்கியது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான். வியாச மஹரிஷி சொல்லச் சொல்ல பிள்ளையார் மஹாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான். குபேரன், மஹாலட்சுமியைத் துதித்து என்றும் வற்றாத செல்வம் நிறைந்த சங்க நிதியையும், பதும நிதியையும் பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான். புண்ணிய நதியான கங்கை நதி வானத்திலிருந்து பாரத மண்ணுக்கு வந்ததும் இந்த நாளில்தான்.வட மாநிலங்களில் அட்சயதிருதியை நாளை அலா தீஜ் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று புதிதாக தொழில் ஆரம்பிக்கவும், உழவுத் தொழிலைத் தொடங்கவும், முன்னோர்கள் பித்ருக்கள் காரியங்கள் செய்யவும் ஏற்ற நாளாக இந்த நாளைக் கருதுகிறார்கள்.எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அட்ச திருதியை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நாளில் புதியது தொடங்குதல், நீத்தோர் வழிபாடு செய்தல் ஆகியவற்றைச் செய்வது நன்மை பயக்கும். திருமகளின் அருள் அட்சயமாக நம் மனைகளில் நிறைந்திருக்க அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்தும் தயிர் சாதம், புதிய வஸ்திரம் முதலியவை தானம் அளித்தும் தெய்வங்களை வழிபடுங்கள். எளிமையானதும், ஏற்றம் தருவதுமான அட்சய திருதியை விரதத்தை அவசியம் கடைப்பிடித்து இயன்ற பொருளை தானம் செய்து திருமகள் அருளால், அளவற்ற செல்வம் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.
அட்சய திருதியை அன்று வெண்மைக்கு சிறப்பு

அட்சய திருதியை அன்று எதைச் செய்யத் தொடஙகினாலும் அது குறையாமல், மேலும் மேலும் வளரும் என்பது ஐதிகம்.இந்த நாளில்தான் திரேதா யுகம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. எனினும் ஒரு குறிப்பிட்ட நாளில் தான் இது தோன்றியது என்று வரையறுத்துக் கூற முடியாது.யுகம் யுகமாக இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அட்சய திருதியை தினத்தில் தானம் செய்வதும், தங்கம் முதலியன வாங்குவதும் கிருஷ்ணர் காலத்தில் இருந்தே தொடங்கியது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அட்சய திருதியை நாளில் விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளிதான் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளும் வாங்கலாம். குறிப்பாக வெண்மை நிறமாக இருந்தால் மிகவும் சிறப்பு. அட்சய திருதியை அன்று நாம் செய்யும் தானத்தின் பலன் கோடிப் பசுக்களை தானம் செய்ததற்கு ஒப்பானது என்று பாகவத புராணம் பேசுகிறது. அதனால் அந்த நாளில் நம்மால் இயன்ற அளவு தானம் செய்யலாம்.

வணங்க வேண்டிய தெய்வங்கள்

அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்
பரணி, பூரம், பூராடம்: ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி: ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்
உத்திரம், உத்திராடம், கார்த்திகை: முருகன்.

Advertisement