வைகாசி விசாக திருநாள்
வைகாசி விசாகம் முருக பெருமானின் பிறந்த தினமாகும். வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரமும் பௌர்ணமியும் கூடிய நாளில் வருவது முருக பெருமானின் பிறந்த நாள். முருக பக்தர்களால் ஆனந்தமாகக் கொண்டாடப்படுவது.
வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும். முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள். அதன்படி கணக்கிட்டால் விசாகம் பதினான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது இருபத்தியேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். இதைத்தான் ‘ஒரு பதின்மேலும் ஒரு மூன்று சென்றபின்’ என்றும் ‘மீனத்து (நட்சத்திரங்களின்) இடைநிலை’ என்றும் மணிமேகலை கூறுகிறது. இதன்மூலம் முற்காலத்திலும் வைகாசி விசாகம் சிறந்த விழாவாகக் கொண்டாடப்பட்டதை அறியலாம்.
வைகாசி என்பதை ‘விகாஸம்’ என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை ‘மாதவ மாதம்’ என்றழைப்பார்கள்.
சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. விசாக நட்சத்திரத்தை ஞான நட்சத்திரம் என்பர். விசாக நக்ஷத்திரம் மூன்று நக்ஷத்ரங்களின் சேர்க்கை ஆகும். ஒரு தோரணம் போல அமைப்பு கொண்டது. வானில் பிரகாசமாக ஒளிர்வது. இந்த நாளில் உலகிலுள்ள தீய சக்திகளை ஒழிப்பதற்காக உருவெடுத்தவரே முருகப் பெருமான். முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சேர்த்து சம்பந்தப்பட்டவை. முருகனது தனிப்பட்ட விழாக்களில் வைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டியுமே மிக முக்கியமானவை. இந்த நாளில் முருகன் தனது அற்புத சக்தியை முழுமையாக வெளிப்படுத்துகிறார். இந்த நாளில் நாம் அவரை வேண்டினால் இறை அருளும் ஆன்மீக பலமும் கிட்டும். முருகன் தீய சக்திகளை அழிக்க அவதாரம் எடுத்தவர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவர்.
முருக கடவுள் ஞானத்தின் இருப்பிடம் . அறிவின் உறைவிடம் . முருகனை வைகாசி விசாகத்தன்று வணங்கினால் வாழ்வு ஆன்மீக ஒளி பெற்று திகழும் என்பதில் ஐயமில்லை.
சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார். இவ்வாறு ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார்.
எனவே, இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும், கோலாகலமான விழாவும் தமிழ்கடவுளான முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்றன. இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.
*நாளை வைகாசி விசாகத்திற்கு விரதம் இருக்கும் முறை*
வைகாசி விரதம் என்பது கிட்டத்தட்ட ஏகாதசி விரதம் போன்றது. நாளை காலையில் இருந்தே உணவு உட்கொள்ளாமல், முழுமையாக எதையுமே சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் உண்ணலாம்.
இன்றைய தினம் திருமணம் ஆகாதவர்களும் குழந்தை இல்லாதவர்களும் விரதமிருந்தால் திருமணப் பேறு , குழந்தை பேறு கிட்டுவது நிச்சயம்.
நாளை விரதமிருக்கும் பெண்டிர் குடை, தண்ணீர், மோர், உணவு ஆகியவற்றை தானமாக அளித்தால் புண்ணியம் உண்டு.
வைகாசி விசாகம் அன்று முருகனின் திரு உருவத்தை அரை நிமிடம் த்யானித்தால் நம் வாழ்வில் வளமெல்லாம் கிடைக்கும் என்கிறார் அருணகிரிநாதர்.
அகஸ்திய மாமுனி கூறுவது போல செவ்வரளி மலர்களை நாளை முருகன் திருவடியில் சமர்ப்பித்துவணங்கினால் நன்மை பல கிடைக்கும்.
நாகலிங்க மலர்கள் கொண்டும் முருகனை இந்த தினத்தில் வணங்கினால் மிகவும் விசேஷம். நாகலிங்க மலர்களை சமர்ப்பிப்பதோடு, உணவை சாப்பாட்டுக்கு வழியில்லாத, தேவையானவர்களுக்கு அன்னதானம் வழங்குவது நன்மை பயக்கும்.
நாளை விரதம் இருக்கும்போது முருகனை வணங்கி கந்த புராணம், சுப்பிரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.
மேலும் நாளை முழுவதும் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. அதன் சக்தி நமது பாபங்களை தொலைக்க உதவும்.
மாலையில் முருகன் கோவிலுக்கு முருகனை வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தபின் இரவு உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது பௌர்ணமி நிறைவடையும் வரை விரதம் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை குளித்து விட்டு காலை உணவு உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
*கோயில்களில் வைகாசி விசாகம் கொண்டாடும் முறை*
முருகன் கோயில் கொண்டுள்ள அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் பத்து நாள் திருநாளாக ப்ரம்மோத்சவமாக கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.
பக்தர்கள் முருகன் கோயில்களை கிரிவலம் வருவது வழக்கம்.
இந்த நாளில் முருக ஸ்தலங்களில் முருகன் வள்ளி திருமணம் நடத்துவது வழக்கம்.
வைகாசி விசாகத்தன்று தமிழ்கடவுள் முருகனுக்கு அனைத்து முருகதலங்களிலும் பாலாபிஷேகம் ஆனதும் வருடந்தோறும் வெயிலின் கடுமை குறைந்துவிடும் என்பது முருகபக்தர்களின் அனுபவப்பூர்வமான வைகாசி உண்மை. இதை இந்த வருடம் நீங்கள் அனைவரும் கவனித்து பாருங்கள்.
நாளை வைகாசி விசாகம் அன்று கந்த கடவுளை வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக