சனி, 29 ஜூன், 2019

ஜூலை 01 (1.7.2019 ) முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்


ஜூலை 01 (1.7.2019 ) முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்.

ஒன்றல்ல, இரண்டல்ல.. 40 ஆண்டுகளாக கோவில் குளத்து தண்ணீருக்குள் மூழ்கி தவம் இருக்கும் அத்திவரதர், அனைவருக்கும் வரம் அளிப்பதற்காக அந்தக் குளத்தில் இருந்து அத்தி பூத்தாற்போல வெளியே வர இருக்கிறார்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரே ஒரு முறை அல்லது அதிகபட்சமாக இரண்டுமுறை மட்டுமே காணக்கூடிய இந்த அற்புதமான, பரவசமூட்டும் ஆன்மிக நிகழ்வு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், வருகிற 1-ந் தேதி முதல் 48 நாட்கள் பக்திப் பெருக்குடன் கோலாகலமாக அரங்கேற இருக்கிறது.


பல்வேறு சிறப்புகளைத் தாங்கி இருக்கும் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான விஷ்ணு காஞ்சியில், பக்தர்களுக்கு இடையறாது வரங்களை அள்ளித் தரும் வரதராஜப் பெருமாள் கோவில் இருக்கிறது.

‘கோவில்’ என்றாலே அது ஸ்ரீரங்கம் கோவிலை மட்டுமே குறிக்கும் என்பார்கள்.

‘மலை’ என்றாலே, திருப்பதி வெங்கடாஜலபதி குடிகொண்டுள்ள திருமலையை அடையாளப் படுத்தும் என்பார்கள். எனவேதான் அந்த இடம் ‘திரு’ என்ற அடைமொழியையும் சேர்த்து ‘திருமலை’ என்று அழைக்கப்படுகிறது.

இதைப்போலவே, உலகம் முழுவதும் எத்தனையோ பெருமாள் கோவில்கள் இருந்தாலும், ‘பெருமாள் கோவில்’ என்றால், அது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலை மட்டுமே குறிக்கும் என்ற அளவுக்கு இந்தக் கோவில் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.


வரதராஜப் பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் 125 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கிறது. மேற்கு ராஜகோபுரத்தின் உயரம் 96 அடி. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் 19 விமானங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் வேண்டுகோள்களை ஏற்று அவர்களுக்குத் தாராளமாக வரங்களைக் கொடுக்கும் வரதராஜபெருமாள் கோவில், 1018-1053-ம் ஆண்டுகளில் சோழ மன்னர் களால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் தெலுங்கு சோழர்கள், பாண்டிய மன்னர்கள், ஹொய்சாள மன்னர்கள், சேர மன்னர்கள் உள்பட பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது.

கோவிலில் உள்ள 350 கல்வெட்டுகள் மூலம் இங்கு நடைபெற்ற சீரமைப்பு பணிகள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது, ராபர்ட் கிளைவ், கர்னல் லயோனஸ் பிளேசி ஆகியோரும், அதன் பிறகு, டெல்லி ஆலம் கீர் பாஷாவும் இந்தக் கோவிலால் அதிகம் கவரப்பட்டு, ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாகக் கொடுத்து இருக்கிறார்கள்.

இவற்றில் ராபர்ட் கிளைவ் கொடுத்த தங்க ஆரம், ‘கிளைவ் மகர்ஹண்டி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெறும் போது இந்த ஆரம், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது.


இந்தக் கோவில் உருவானது தொடர்பாகவும், கோவில் குளத்தில் 40 ஆண்டுகளாக அத்திவரதர் மூழ்கி இருப்பது பற்றியும் கூறப்படும் புராணச் செய்திகளில் பல ருசிகரமான தகவல்கள் அடங்கி இருக்கின்றன.

தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்த பிரம்மா, தான் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்த இருப்பதாகவும், அதற்குத் தகுந்த அழகிய நகரை அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டபடி உருவாக்கப்பட்டதுதான், இப்போது வரதராஜப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம்.

உலகைப் படைத்த பிரம்மா, இந்த உலகில் மகாவிஷ்ணு நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த கோரிக்கையை முன்வைத்தே பிரம்மா, அஸ்வமேத யாகம் நடத்தினார்.

அந்த சமயத்தில் பிரம்மாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சரஸ்வதி, “இந்த யாகத்தில் பங்குகொள்ள முடியாது” என்று கூறிவிட்டார்.

இதனால், பிரம்மா, தனது மற்ற துணைவியர்களான காயத்ரி, சாவித்ரி ஆகியோரை அழைத்து வந்து யாகத்தை மேற்கொண்டார். இதை அறிந்த சரஸ்வதி, கோபம் கொண்டு ‘வேகவதி’ ஆறாக பெருக்கெடுத்து வந்து யாகத்தை அழிக்க முயன்றார்.

அப்போது, யாகத்தை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு, அந்த ஆற்றின் குறுக்கே படுத்து அதனை தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் பிரம்மாவின் யாகம் எந்த பாதிப்பும் இல்லாமல் நிறைவேறியது.



யாகத்தின் இறுதியில், அந்த வேள்வித் தீயில் இருந்து மகாவிஷ்ணு, லட்சுமி தேவியுடன் வரதராஜ பெருமாளாகத் தோன்றினார். பிரம்மாவின் விருப்பத்தை ஏற்று இங்கேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை வழங்குவதாகவும் கூறினார்.

அந்த யாகத்தீயில் இருந்து, அத்தி மரத்தால் ஆன உருவத்துடன் தோன்றியவர்தான், இப்போது அனைத்து பக்தர்களாலும் போற்றி வணங்கப்படும் அத்தி வரதர் ஆவார்.

அந்த அத்தி வரதர், 40 ஆண்டுகளாக குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே எடுத்து பூஜிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

யாகத்தீயில் இருந்து வெளியே வந்தபோது அத்தி வரதர், தீயில் கருகி சற்று பின்னப்பட்டுவிட்டதாகவும், சேதம் அடைந்த சிலையை மூலவர் சன்னிதியில் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

யாக வேள்வியில் இருந்து வந்தபோது தன்னை அதிக வெப்பம் தாக்கியதால், தன்னை குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில் 40 ஆண்டுகள் மூழ்க வைத்து, அதன் பிறகு 48 நாட்கள் பூஜித்து மீண்டும் 40 ஆண்டுகள் குளத்தில் வைத்துவிட வேண்டும் என்று அத்தி வரதர் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.

அன்னியர்கள் படையெடுப்பின்போது, அத்தி வரதரை காப்பாற்ற, அந்த சிலையை கோவில் குளத்தில் பத்திரமாக மூழ்க வைத்து இருந்ததாகவும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டதாகவும், அதே முறை இப்போதும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

1688-ம் ஆண்டு அவுரங்கசீப் ஆட்சி காலத்தில், அத்தி வரதர் சிலையை பாதுகாக்க காஞ்சிபுரத்தில் இருந்து அதனை எடுத்துச் சென்று, திருச்சி அருகே உடையார் பாளையத்தில் மறைத்து வைத்து இருந்து, 1710-ம் ஆண்டு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், அத்தி வரதர் பல ஆண்டுகளாக வரதராஜப் பெருமாள் கோவிலின் மூலவர் சன்னிதியில் இல்லை என்பது மட்டும் உறுதி.

அத்தி வரதருக்குப் பதிலாக, காஞ்சிபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பழைய சீவரம் என்ற ஊரில் உள்ள மூலவரை எடுத்து வந்து வரத ராஜப்பெருமாள் கோவிலில் வைத்து இருக்கிறார்கள். இவரை ஆண்டுதோறும் தை மாதத்தில் பழைய சீவரம் ஊருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூஜைகள் செய்த பிறகு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு கொண்டுவந்து விடுகிறார்கள்.

யாகத்தீயில் உருவான அத்தி வரதர் சிலை 10 அடி உயரம் கொண்டது ஆகும். முழுக்க அத்தி மரத்தால் உருவான இந்த சிலை, பெரிய வெள்ளிப் பேழையில் வைத்து மூடப்பட்டு, வரதராஜப் பெருமாள் கோவிலின் குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆலயத்தில் அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம் ஆகிய இரண்டு குளங்கள் இருக்கின்றன. மேற்கு ராஜ கோபுரத்திற்கு வடமேற்கில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், சிறிய விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் உள்ளது. இதன் அருகே தான் அத்தி வரதர் வெள்ளிப்பேழையில் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, அங்குள்ள வெள்ளிப் பேழையை வெளியே எடுப்பார்கள்.

அதற்குள் இருக்கும் அத்திவரதர், 48 நாட்களில் 30 நாட்கள் சயனக் கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த அரிய நிகழ்வு மிகச் சரியாக 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடை பெறும்.

கடந்த 1939-ம் ஆண்டு திருக்குளத்தில் இருந்து வெளியே வந்த அத்தி வரதர், அதன் பிறகு 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி வெளியே எடுக்கப்பட்டார். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதரை திருக்குளத்தில் இருந்து எடுக்கும் பரவசமான நிகழ்வு ஜூலை 1-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்காக அந்தக் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வெள்ளிப்பேழையில் இருந்து வெளிப்படும் அத்தி வரதர், தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். அப்போது அவரது அருளைப் பெற, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு படையெடுப்பார்கள்.

நமது வாழ்வின் அரிய நிகழ்ச்சியான இதில் நாமும் கலந்து கொண்டு அத்தி வரதரின் அளவற்ற அருளையும், அவரிடம் இருந்து வேண்டிய வரங்களையும் கேட்டுப்பெறுவோம்.
நன்றி மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக