அனுமன் ஜெயந்தி! - ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் தெரியுமா?
அனுமன் ஜெயந்தி வட இந்தியாவில் சித்திரை பவுர்ணமி தினத்திலும், சில மாநிலங்களில் வைகாசி பவுர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி தினமான இன்று அனுமனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் .
அனுமனின் ஜாதகம், அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறிய கதை ஆகியவை இடம் பெற்றுள்ளது.
ஸ்ரீ ஹனுமான் ஜாதகத்தில் மேஷ லக்னமாகி லக்னாதிபதி ஆட்சி பெற்றதால் சூரியனையும் பழம் என நினைத்து நெருங்கும் வேகத்தை பெற்றிருக்கிறார். திரிகோணங்களில் சூரியனும் குருவும் பரிவர்தனை பெற்று நின்று குரு சூரிய சந்திரர்களை பார்த்து குரு சந்திர யோகம் பெற்றதால் கல்வியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார்.
சுக்கிரன் நீசமாகி புதன் உச்சம் பெற்று ராகுவுடன் சேர்ந்து நின்றதால் சிறந்த கல்விமானாகவும் கலா ரசிகராகவும் விளங்கினார். சுக்கிரன் நீச பங்கம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று நீச பங்க ராஜ யோகம் அடைந்ததால் ப்ரம்மசாரியாக விளங்கிய ஹனுமன் பிற்காலத்தில் ஸ்வச்சலா என்ற பெண்ணை மணந்ததாக கூறுவர்
இரண்டாமதிபதி சுக்கிரன் நீசம் பெற்று மூன்றாமதிபதி உச்சம் பெற்று புதன் வீட்டில் சேர்க்கை பெற்று நீசபங்க ராஜ யோகம் பெற்று ராகுவுடன் கூடி நின்றதால் இசையிலும் மாமேதையாக திகழ்ந்து மார்கழிக்கு பெருமை சேர்த்தது பெருமையன்றோ!!!
கர்ம ஸ்தானத்தில் சனி நின்று ஆறாமிடத்தில் ராகு நின்றதால் இவருடைய சேவையை உலகறியும். இவரை ராம தாச மாருதி என்றும் போற்றுவார்கள். ராகு 6/8/12 வீடுகளில் 6ம் வீட்டில் நின்றும் ஆறாம் வீட்டதிபதி ராகுவிற்க்கு கேந்திர திரிகோணத்தில் நின்றதால் அதியோகமும் பெற்று சிறந்து விளங்கினார். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை அவருடைய ஜென்ம நக்ஷத்திர தினமான இன்று வணங்கி வளம் பெறுவோமாக!
வடைமாலை சாற்றுவது ஏன் தெரியுமா?
ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர்மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, "என்ன சந்தேகம். கேளுங்கோ" என்றார்.
அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.
"ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்..."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா... கேளேன்" என்றார் ஸ்வாமிகள்.
"ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார்.
பெரியவா மெளனமாக இருக்கவே... அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல. பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.
பெரியவர் சொன்ன பதில்
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். "பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா...' என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.
அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.
வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
ராகு பகவான்
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.
உளுந்து தானியம்
இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.
இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
இனிப்பு ஜாங்கிரி
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே
பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.
எது எப்படியோ... அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன... சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி" என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக