சனி, 11 ஜனவரி, 2020

இயேசு கூறிய 300 பொன்மொழிகள்


இயேசு கூறிய 300 பொன்மொழிகள்

1. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.

2. கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவது தான் முறை.

3. மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றிலும் வாழ்வர்.

4. உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்.

5. உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்.

6. மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது.

7. என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்.

8. ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

9. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

10. கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

11. நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

12. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

13. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

14. அமைதி ஏற்ப்படுதுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

15. நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

16. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

17. உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றி புகழ்வார்கள்.

18. திருச்சட்டத்தையோ இறை வாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறை வேற்றுவதற்கே வந்தேன்.

19. விண்ணும் மண்ணும் ஒழியாத வரை, திருச்சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை அச்சட்டத்தின் மிகச் சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது.

20. கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கு கற்ப்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவர்.

21. கட்டளைகளை கடைபிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவர்.

22. மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது.

23. தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

24. தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச்சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்.

25. தம் சகோதரர் சகோதரியை 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

26. ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.

27. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை பிடுங்கி எறிந்து விடுங்கள், உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

28. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள், உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்கு செல்வதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

29. தம் மனைவியைப் பரத்தமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்க்காகவும் விலக்கி விடக் கூடாது. அப்படி செய்வோர் எவரும் அவரை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.

30. விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

31. ஆணையிடவே வேண்டாம். நீங்கள் பேசும் போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாக சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

32. உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

33. உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.

34. உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.

35. உங்களிடம் கேட்பவருக்குக் கொடுங்கள்.

36. கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.

37. உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.

38. உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

39. தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

40. உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவரை இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

41. மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.

42. நீங்கள் தர்மம் செய்யும் பொது உங்களை பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.

43. நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

44. நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.

45. நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.

46. இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போல பிதற்ற வேண்டாம்.

47. மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

48. மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

49. நீங்கள் நோன்பு இருக்கும் போது வெளிவேடக்காரரை போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.

50. நீங்கள் நோன்பு இருக்கும் போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.

51. மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்து விடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.

52. விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

53. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் மனமும் இருக்கும்.

54. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்.

55. எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

56. உயிர் வாழ எதை உண்பது, எதை குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் .உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை.

57. கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்.

58. காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை.

59. நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

60. பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போது தன நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.

61. நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.

62. நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

63. முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன் பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்கு தெளிவாக கண் தெரியும்.

64. தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.

65. முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

66. பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்ன விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

67. அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.

68. வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.

69. போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால் உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.

70. நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.

71. நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

72. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.

73. என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

74. நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.

75. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள்.

76. நரிகளுக்கு பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை.

77. மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.

78. நோயற்றவர்களுக்கு அல்ல, நோயுற்றவர்களுக்கே மருத்துவர் தேவை. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

79. மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும், அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

80. அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

81. ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

82. என் பெயரின் பொருட்டு உங்களை எல்லோரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.

83. ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

84. மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்.

85. மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

86. நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

87. தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

88. என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என்று கருதப்படத் தகுதியற்றோர்.

89. என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

90. தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

91. தம் உயிரை காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர்.

92. என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

93. உங்களை ஏற்றுக் கொள்பவர் என்னை ஏற்றுக் கொள்கிறார்.

94. என்னை ஏற்றுக் கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.

95. இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவர்.

96. நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவர்.

97. இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்.

98. மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே.

99. தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

100. என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்.

101. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

102. நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

103. ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.

104. உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்து விட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டை விட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை.

105. தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்ற பாவங்கள்; பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராக ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவிக்கு எதிராக பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.

106. மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.

107. மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்.

108. உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.

109. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

110. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.

111. உள்ளவருக்கு கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார் மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை.

112. விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக் கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்.

113. தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவார்.

114. வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும்.

115. வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரை தீட்டுப்படுத்துகின்றன.

116. கொலை, விபச்சாரம், பரத்தமை, களவு, பொய் சான்று, பழிப்புரை ஆகியவற்றை செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீடுப்படுதுகின்றன.

117. என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.

118. பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்.

119. மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்.

120. மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

121. உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து 'இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' என்று கூறினால் அது பெயர்ந்து போகும்.

122. நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.

123. சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

124. பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு.

125. இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்.

126. உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

127. படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்'. இதனால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

128. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களை தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

129. கொலை செய்யாதே; விபச்சாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும் உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக.

130. செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

131. என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலப்புலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.

132. முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்.

133. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்கு பணியாளராக இருக்கட்டும்.

134. நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.

135. உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும் அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர்.

136. அழைப்புப் பெற்றவர்கள் பலர்; ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.

137. உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள்.

138. கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.

139. தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்.

140. தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

141. கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்.

142. தேடுவோர் கண்டடைகின்றனர்.

143. தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

144. நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக.

145. என்னைப் பின்பற்றி வாரும் இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்.

146. துணிவோடிரு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

147. நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்.

148. ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை (மன்னிக்கலாம்).

149. வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.

150. நீர் நலமடைந்துள்ளீர்; இதை விடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர்.

151. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

152. மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.

153. கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்.

154. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே.

155. வெளித் தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள், நீதியோடு தீர்ப்பளியுங்கள்.

156. பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை.

157. கடவுளைச் சாந்தவர் கடவுளின் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்.

158. என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்.

159. ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்.

160. நான் உலகில் இருக்கும் வரை நானே உலகின் ஒளி.

161. குளித்து விட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார்.

162. அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.

163. உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.

164. இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே, அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

165. உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

166. தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.

167. பலிப்பீடத்தின் மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின் மீதும் ஆணையிடுகிறார்.

168. திருக் கோவிலின் மீது ஆணையிடுகிறவர் அதன் மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர் மீதும் ஆணையிடுகிறார்.

169. வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணை மீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள் மீதும் ஆணையிடுகிறார்.

170. அந்த நாளையும் வேளையும் பற்றி தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.

171. விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.

172. ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவர்.

173. இதைப் பெற்று உண்ணுங்கள் இது எனது உடல்.

174. இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம்.

175. விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

176. நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

177. நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்.

178. உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்.

179. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது.

180. மேலிருந்து பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது.

181. ஒருவர் தண்ணீராலும் தூயஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது.

182. மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்கு சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றி சொல்லும் போது எப்படி நம்பப் போகிறீர்கள்.

183. விண்ணகத்திலிருந்து இறங்கிவந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

184. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.

185. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

186. உண்மைக் கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்.

187. இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.

188. நான் உண்பதற்கு உணவு ஒன்று உண்டு அது உங்களுக்கு தெரியாது.

189. என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறை வேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

190. என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்;நானும் செயலாற்றுகிறேன்.

191. மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்.

192. தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்.

193. தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்கு காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்கு காட்டுவார்.

194. தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பது போல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

195. தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பது போல மகனுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்.

196. மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

197. என் வார்த்தையை கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள்.

198. காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர். அதைக் கேட்போர் வாழ்வர்.

199. தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.

200. அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

201. காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர்.

202. நல்லன செய்தோர் வாழ்வு பெற உயர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயர்த்தெழுவர்.

203. நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீப்பிடுகிறேன்.

204. நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

205. என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும்.

206. மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெருவதக்காகவே இதைச் சொல்கிறேன்.

207. யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

208. யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.

209. நான் செய்து வரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

210. என்னை அனுப்பிய தந்தையும் எனக்கு சான்று பகர்ந்துள்ளார்.

211. நீங்கள் ஒருபோதும் அவரது (தந்தையின்) குரலை கேட்டதுமில்லை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை. ஏனெனில் அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.

212. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கின்றது.

213. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

214. கடவுள் ஒருவரே அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்கள்.

215. தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பவர் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.

216. நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள், ஏனெனில் அவர் என்னைப் பற்றித் தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்.

217. நீங்கள் அரும் அடையாளங்களை கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால் தான் என்னைத் தேடுகிறீர்கள்.

218. அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.

219. வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.

220. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது.

221. வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது.

222. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

223. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்.

224. என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல; என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் வின்னகத்திலிருந்து இறங்கி வந்தேன்.

225. அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர் தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.

226.மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.

227. என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

228. கடவுள் தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.

229. என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே.

230. முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

231. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.

232. எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

233. மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழியே நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

234. எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

235. எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

236. எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

237. வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

238. உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.

239. வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறியே வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

240. உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக் காட்டி வருகிறேன்.

241. நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது. அவரது திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் அப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.

242. தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்; அவரிடத்தில் பொய்மை இல்லை.

243. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே.

244. இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன். நீங்கள் என்னை தேடுவீர்கள்; ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது.

245. யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.

246. உலகின் ஒளி நானே; என்னை பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.

247. நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

248. நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.

249. என்னை அனுப்பியவர் உண்மையானவர்; நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கின்றேன்.

250. என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டு விடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்.

251. என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

252. தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்.

253. நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயரைக் கொடுப்பார்.

254. நான் என் உயரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே கொடுக்கிறேன்.

255. என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன்.

256. உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு.

257. உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

258. உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.

259. கோதுமை மணி மன்னில்விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

260. தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர், இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாக கருதாதோர் நிலை வாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

261. எனக்குத் தொண்டு செய்வோர் என்னை பின் பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்.

262. எனக்கு தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.

263. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.

264. என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

265. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.

266. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைபிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

267. என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவருக்குத் தீப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.

268. நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்ல வேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.

269. அவருடைய (தந்தையுடைய) கட்டளை நிலை வாழ்வு தருகிறது எனபது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.

270. ஒருவர் மாற்றாரிடம் அன்பு செலுத்துங்கள். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மாற்றாரிடம் அன்பு செலுத்துங்கள்.

271. வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.

272. என் கட்டளைகளை ஏற்றுக் கடைபிடிப்பவர் என் மீது அன்பு கொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார்.

273. என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து குடி கொள்வோம்.

274. என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.

275. நீங்கள் கேட்கும் வார்த்தை என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

276. அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்கு தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.

277. உண்மையான திராட்சைக் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.

278. என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் (தந்தை) தறித்து விடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.

279. கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.

280. நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்.

281. நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள்.

282. ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

283. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப்போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார்.அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

284. நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

285. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன்.

286. நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைபிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

287. நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

288. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

289. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

290. நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

291. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

292. என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.

293. உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.

294. என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல.

295. தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும் போது என்னைப் பற்றி சான்று பகர்வார்.

296. என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

297. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்.

298. அவர் (தூய ஆவியார்) தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

299. அவர் (தூய ஆவியார்) என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

300. தந்தையுடையவை யாவும் என்னுடையவையே எனவே தான் அவர் (தூய ஆவியார்) என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக