வியாழன், 16 ஜனவரி, 2020

மாட்டுப் பொங்கல்


மாட்டுப் பொங்கல்:

பொங்கலோ பொங்கல்
மாட்டுப் பொங்கல் ..

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையில் அந்த உழவனுக்கு உற்ற துணையாக விளங்கும் மாடுகளைக் கவனிக்காமல் விடலாமோ? அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து, வருடமெல்லாம் கடுமையாக உழைத்து, நமது உயர்வுக்கு உழைக்கும் மாடுகளை அன்று நன்கு குளிப்பாட்டப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசி, புதுக் கயிறு கட்டி, பொங்கலிட்டு அதை மாடுகளுக்குப் படைப்பர் விவசாயிகள்.
மாடுகளுக்கு பூஜையும் நடத்தப்படும்.

இதற்கும் ஒரு கதை உண்டு.

சிவபெருமான் தனது வாகனமான பஸவா எனப்படும் நந்தியிடம், நீ பூலோகத்திற்குச் சென்று, மக்களிடம், தினமும் எண்ணெய் குளியல் எடுத்து, மாதம் ஒரு முறை சாப்பிடும்படி கூறு என்று அனுப்பி வைத்தாராம்.

ஆனால் நந்தியோ அதை மாற்றி தினசரி சாப்பிட்டு, மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்கும்படி கூறி விட்டதாம்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான், என் பேச்சை கேட்காத நீ, பூலோகத்திலேயே இருந்து மனிதர்களின் விவசாயப்பணிகளுக்கு உழைத்து அங்கேயே இரு என்று சபித்து விட்டாராம்.
இதனால்தான் காளை மாடுகள், விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த ஐதீக செய்தி கூறுகிறது.

ஜல்லிக்கட்டு:

மாட்டுப் பொங்கலுடன் இணைந்த மற்றொரு விசேஷம் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல். அந்தக் காலத்தில் ஏழு தழுவுதல்என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும் ஒரு தனிப்பெரும் வரலாறு உண்டு.

அந்தக் காலத்தில் கன்னி ஒருவளை மணம் முடிக்க விரும்பும் ஆடவன், ஜல்லிக்கட்டு காளையை அடக்கியாக வேண்டும்.

அப்படிகாளையை அடக்கும் காளைக்குத்தான் தங்களது பெண்களை அந்தக்கால தந்தையர் மணம் முடித்துக் கொடுப்பார்களாம்.

இதற்காகவே வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்படுமாம்.
தமிழர்களின் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. இன்றும், தமிழக கிராமங்களில் எந்த விசேஷம், திருவிழா நடந்தாலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுவதைக் காணலாம்.

இனி நம் மாடுகள் எனப்படும் தெய்வம் பற்றி

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.

 அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை.

இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன.

இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன.

இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.

செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள்.

இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம்.

பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.

வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது.

பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது

பசுவின் சாணத்தை தலையில் சுமந்து சென்று கொட்டுவது, பசுவின் தொழுவத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை சிவனுக்கு தொண்டாற்றுவதற்கு சமமானது என இந்து மத நூல்கள் கூறுகின்றன.

 பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்

கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்

சிரம் - சிவபெருமான்

நெற்றி நடுவில் - சிவசக்தி

மூக்கு நுனியில் - குமரக் கடவுள்

மூக்கினுள் - வித்தியாதரர்

இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்

இரு கண்கள் - சந்திரர், சூரியர்

பற்கள் - வாயு தேவர்

ஒளியுள்ள நாவில் - வருண பகவான்

ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்

மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்

உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்

கழுத்தில் - இந்திரன்

முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்

மார்பில் - சாத்திய தேவர்கள்

நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு

முழந்தாள்களில் - மருத்துவர்

குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்

குளம்பின் நடுவில் - கந்தவர்கள்

குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்

முதுகில் - உருத்திரர்

சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்

அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்

யோனியில் - ஏழு மாதர்கள்

குதத்தில் - இலக்குமி தேவி

வாயில் - சர்ப்பரசர்கள்

வாலின் முடியில் - ஆத்திகன்

மூத்திரத்தில் - ஆகாய கங்கை

சாணத்தில் - யமுனை நதி

ரோமங்களில் - மகாமுனிவர்கள்

வயிற்றில் - பூமாதேவி

மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்

சடாத்களியில் - காருக பத்தியம்

இதயத்தில் - ஆசுவனீயம்

முகத்தில் - தட்சிணாக்கினி

எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்

எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

ஸ்ரீ காமதேனு பற்றி

பசுக்களின் தாய் காமதேனு ஆகும்.

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் பாற்கடலில் இருந்து கிடைத்தன,  கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது.

காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்யமளித்தது.

இதற்கு நந்தினி, பட்டி என இரு மகள்கள் உண்டு.

சிவன், முருகன், விநாயகன், பெருமாள்ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது

ஸ்ரீ நந்தி தேவர் பற்றி

உழவர்களுக்கு உற்ற தோழனான பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் அன்று ஸ்ரீ சிவபெருமானின் வாகனமான ஸ்ரீ நந்தி தேவரை பற்றி

சைவசமயத்தின் முதல் குரு.
சிவபெருமானின் வாகனம்
திருநந்தி தேவர்ஆவார்.

ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்

நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும்.

அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது.

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷபம் வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.

அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.

சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தியுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்

இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.

ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்ல கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரனே, தயவுசெய்து மூலவருக்கும் நந்திக்கும் இடையே செல்லாதீர்கள்.

நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

சிவபெருமான்
சிவாகமத்தை நந்தி தேவருக்கு உபதேசித்தார். பின்
உலகத்தவர்களுக்கு நேரடியாகத் அருளியவர் நந்தி தேவரே.

நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது.

நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.

பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

நந்தி பிறந்த கதை

தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார்.

ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார்.

அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திரங்களிலுமா புலமை பெற்வன் ஆனான்.

நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன்.

இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார்.

மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக