உலகம் ஒன்று மட்டுமே உண்மை; கடவுள் என ஒரு பொருள் இல்லை எனில், கடவுள்’ என்னும் சொல் எவ்வாறு தோன்றியிருக்க முடியும்? பொருள் இல்லாமல் சொல் தோன்றியிருக்க முடியாதே! தொல்காப்பிய நூலில்
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ”
எனத் தொல்காப்பியர் கூறியுள்ளாரே! எல்லாச் சொற் களுமே பொருள் உடையன; குறிப்பிட்ட ஒரு பொருள் இல்லாமல் ஒரு சொல் தோன்ற முடியாது-என்பது இந் நூற்பாவின் கருத்து. எனவே, கடவுள் என்னும் ஒரு சொல் இருப்பதனால், அச்சொல்லால் குறிக்கப்பெறும் ஒரு பொருள் இருந்தே தீரவேண்டும்-என்ற வாதம் ஈண்டு எழுவது இயல்பே. இஃது உண்மைதான்! கடவுள் என்னும் பொருள் உண்டுதான்! ஆனால் அது கற்பனைப் பொருள் ஆகும்; மக்களால் இடையே படைக்கப்பட்ட பொருள் ஆகும். இயற்கை முறை வழிபாடுகள்
தொடக்க கால மக்களுக்குக் கடவுள் என்னும் ஒரு பொருளைப் பற்றிய அறிமுகம் இருந்திருக்க முடியாது. இப்போதும் ஒருவர் பிறப்பு முதல், இறப்பு வரை தனியிடத்தில் பிரித்து வைத்து வளர்க்கப்பெறின், அவருக்குக் கடவுள் பற்றிய அறிமுகமே இருக்க முடியாது. விலங்கு களைப் போல் காட்டுமிறாண்டிகளாக வாழ்ந்து வந்த தொடக்க கால மக்கள், வாழ்க்கையில் பல தொல்லைகளை எதிர் நோக்கினர் - சந்தித்தனர்; அத்தொல்லைகளை வெல்ல முடியாதவராய்த் திகைத்தனர். அந்நிலை யில், தம்மையும் மீறி-தமக்கும் மேலாக ஏதோ ஒர் ஆற்றல் இருப்பதாக உணர்ந்தனர்; உணர்வு நம்பிக்கை யாயிற்று. அந்த ஆற்றலின் உதவி கிடைத்தால் தொல்லைகளிலிருந்து - துன்பங்களிலிருந்து விடுபடலாம் -வெற்றி பெறலாம் என நம்பினர்; அந்த ஆற்றலையே கடவுள் என்னும் பொருளாகக் கற்பனை செய்தனர்; அதனால் கடவுள் உண்டாகிவிட்டார். கடவுள் பிறந்த வரலாறுகளுள் இஃது ஒருவகையாகும்.
நன்றி வழிபாடு
நமக்கு உதவி செய்தவர்களை நாம் மதிக்கிறோம்வணங்குகிறோம்-வாழ்த்துகிறோம். பிச்சைக்காரர்கள் சோறு இட்ட பெண்மணியைக் கும்பிட்டு வாழ்த்திச் செல்வது, இதற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டாகும். இன்னும் அரிய பெரிய எடுத்துக் காட்டுகள் பல தர முடியும். தொடக்க கால மக்கள், தமக்கு இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றை அளித்த இயற்கைப் பொருள்கள் ஆகிய மரம்-செடி-கொடி-புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கினர்வாழ்த்தினர். அப்பழக்கம் நாளடைவில் கடவுள் வழி பாடாக மாறியது. அவை இருக்கும் இடத்தில் ஏதோ ஒர் ஆற்றல் மறைந்திருப்பதாக உய்த்துணர்ந்தனர்நம்பினர். அது நாளடைவில் கடவுள் வழிபாடாக மலர்ந்தது. இப்போதுள்ள மக்களுள் சிலரும், மரஞ் செடி கொடி புதர் உள்ள குறிப்பிட்ட இடத்தில் படையல் போட்டு வழிபாடு செய்வதைக் காணலாம். இம்மாதிரி வழிபாட்டை வாழையடிவாழையாக அன்று தொட்டு இன்று வரை சில குடும்பத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். எங்கள் குடும்பத்திலும் என் தாயார் இருக்கும்வரை இத்தகைய வழிபாடு ஒன்று செய்து வந்ததை யான் அறிவேன். அரசு-வேம்பு மரங் களைச் சுற்றி வந்து வழிபடும் வழக்கம் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
கோயில் எழுந்த வரலாறு:
மக்கள், மரஞ்செடி கொடி யடர்ந்த புதரின் எதிரே முதலில் படையல் போட்டனர்; பின்னர், மண்ணாலோ சாணத்தாலோ கல்லாலோ ஒருவகை உருவம் அமைத் துப் புதரின் எதிரே வைத்து, அதைக் கடவுளாக எண்ணிப் படையல் போட்டு வழிபட்டனர். பின்னர் நாளடைவில் இத்தகைய இடங்களைச் சுற்றிக் கட்டடம் கட்டிச் சிறிய கோயில்களை உருவாக்கினர். பிறகு பிறகு சிறிய கோயில்கள் பெரிய கோயில்களாயின. இந்தியாவில்-தமிழ் நாட்டில் கடவுள் பிறந்த வரலாறும் கோயில்கள் எழுந்த வரலாறும் இந்த அடிப்படையிலே நிகழ்ந்தன. இதற்குத் தமிழ் நாட்டில் உள்ள பல சிவன் கோயில்கள் சான்று பகரும். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் மாமரத்தின் அடியிலிருந்து மலர்ந்தது. சிதம்பரம் கோயில் தில்லை என்னும் மரத்தையும் மதுரைக் கோயில் கடம்ப மரத்தையும் அடிப்படை யாகக் கொண்டு எழுந்தன. மேலும் சில ஊர்களும் மரங்களும் முறையே வருமாறு: திருப்பனந்தாளும் திருப் பனையூரும் - பனை திருப்பெருந்துறை - குருந்தம். திருமுல்லை வாயில்-முல்லைப்புதர். திருவாதவூரும் திருவொற்றியூரும்-மகிழமரம். திருவாலங்காடும் திருக் குற்றாலமும்-பலா. திருவாலம் பொழில்-ஆலமரம். திருவாவடுதுறை-அரசு. திருவானைக்கா-நாவல். திருவிடை மருதூர்-மருதமரம். திருவீழி மிழலை-விழிச் செடி. திருவைகாவூரும் திருவோமாம்புலியூரும் வில்வம். திருப்பாதிரிப் புலியூர்-பாதிரி மரம். திருநெல்வேலிமூங்கில்புதர். திருவாரூர் - புற்றிடம். அவ்வவ்வூர் மரத் தைத் தலவிருட்சம் (பதிமரம்) எனல் மரபு. அரசும் வேம் பும் இணைந்த அடியில் பிள்ளையார்கோயில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இற்றைக்குச் சுமார் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடிய புற நானூற்றுப் பாடல் (260) ஒன்றில் காணப்படும்.
“கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி”
என்னும் தொடர் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. கள்ளிச் செடியின் நிழலிலேகூட கடவுள் உரு அமைத்தது வியக்கத்தக்க தன்றோ? அடுத்து, அவரைப் போலவே பழம் பெரும் புலவராகிய மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல் (297) ஒன்றிலுள்ள
“சூர்முதல் இருந்த ஓமையம் புறவு”
என்னும் அடியும் ஈண்டு ஒப்புநோக்கற் பாற்று. காட்டில் ‘ஒமை’ என்னும் மரத்தின் அடியில் கடவுள் இருப்பதாகப் புலவர் கூறியுள்ளார்.
(சூர்=கடவுள்; முதல்=அடிமரம், புறவு=காடு.) மரத்தின் அடிப்பகுதியில் கடவுள் உரு அமைக்கப்பட் டிருந்தது என்பது இதன் குறிப்பு. கடவுள் சிலை செய்து வைத்த காலத்தைக் கண்டுபிடிக்கவியலாத மிகப் பழங் கோயில்களில் உள்ள கடவுள் சிலையைச் சுயம்பு’ என்று கூறிவிடுகின்றனர். சுயம்பு என்றால் தானாகத் தோன்றியது என்று பொருளாகும், சுயம்பு= தான்தோன்றி.
மலை வழிபாடு:
மற்றும், மக்கள் தமக்குப் பல பொருள்களைத் தரும் மலைகளிலும் தெய்வத் தன்மையைக் கண்டனர்; மலை மேலும் அடிவாரத்திலும் கோயில்கள் அமைத்தனர்; மலையைச்சுற்றி வந்து வழிபட்டனர்; மலைவலம் வருதலைக் கிரி பிரதட்சணம்’ என்னும் ஆரவாரமான சம்சுகிருதப் பெயரால் சுட்டினர். மலைக்கச் செய்யும் மலைக் கோயில்களின் மதிப்பு மலைபோலவே, உயர்ந்தது.
நீர் வழிபாடு:
தமக்கும் வயலுக்கும் நீர் தரும் ஆறுகளையும் தெய்வத் தன்மையுடையனவாகக் கருதி, கங்கை யம்மன், காவிரித்தாய் என்றெல்லாம் ஏற்றாற். போல் பெயர்கள் இட்டு மக்கள் வணங்கி வந்தனர்; ஆறுகளில் நீராடுவதைத் துாய செயலாகக் (புனிதமாகக்) கருதினர். ஆற்றங்கரைகளில் விழா எடுத்தனர். இந்தி, யர்கள் ஆறுகளைப் பெண் தெய்வமாக உருவகித்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒடும் பெரிய நீளமான நைல், (NILE) என்னும் ஆற்றை அங்குள்ள மக்கள் ஆண் தெய்வ மாகக் கருதி எங்கள் அப்பன் நீலன்’ என்பதுபோல் கூறி வழிபடுவார்களாம். மக்கள் ஆறுகளின் பெருமை கருதி ஆற்றங்கரைகளில் கோயில்கள் கட்டினர். இக் கோயில்கட்குப் பெருமை மிக உண்டு. தமிழ் மக்கள் தண்ணிரைத் தாயினும் மேலாக மதித்து வழிபட்டு வந்தனர் என்பது உண்மையே ‘தாயைப் பழித்தாலும் தண்ணிரைப் பழித்தலாகாது’ என்னும் பழமொழியும் எப்படியோ எழுந்து விட்டது’ இதனால், மக்கள் சிலர், நல்ல தண்ணீர்-கெட்ட தண்ணீர் என்று பார்க்காமல், எந்தத் தண்ணிராயிருப்பினும் உட்கொள்ளவேண்டும் எனத் தவறான கருத்து கொண்டுள்ளனர். இவ்வாறு தவறாக எண்ணிக் கண்ட கண்ட தண்ணிரை உட்கொண்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பழமொழியின் பொருளை இனி வேறு விதமாகக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு நல்ல கருத்துக்கள் பொதிந்துள்ளன. ஒன்று: நீர் நிலைகளிலும் நீரோட்டத்திலும் உள்ள தண்ணீரைக் கெடுக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் அறிவுரை முதலாவது கருத்து. இரண்டாவது: தண்ணீர் பயனற்ற இடங்களில் பாய்ந்தும் கடலில் போய்க் கலந்தும் வீணாவதற்கு இனியும் இடம் தர லாகாது. தண்ணிரை நீர்த்தேக்கங்களில் தேக்கியோ - குளம், குட்டை, ஏரிகளில் நிரப்பியோ வைத்துக் கொண்டு, வேண்டியபோது வேண்டிய அளவு வயலுக் கும் மற்ற மரம் செடி கொடி வகைகளுக்கும் பாய்ச்சிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - என்பது இரண்டாவது கருத்து. எனவே, தாயைப் போலவே, தண்ணீரையும் போற்றிக் காத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணிர் தருகின்ற மாமழை போற்றுதும்!
ஐயனார் கோயில்
தென்னிந்தியாவில் மலைப் பகுதியிலும் காட்டுப் பகுதியிலும் தோப்புகளிலும் சோலைகளிலும் ஐயனார் கோயில்களை அமைத்திருப்பதை ஈண்டு மறக்க முடியாது. ஞாயிறு வழிபாடு:
மக்கள் நிலத்திலே உள்ள ஆறு, மலை, காடு முதலிய வற்றோடு நின்றார்களா? மேலே தெரியும் ஞாயிறு, திங்கள், மேலிருந்து வரும் மழை ஆகியவற்றையும் அவை தரும் பெரும்பயன் கருதிப் போற்றி வணங்கினர். சிலப்பதிகாரம் என்னும் தமிழ்நூலில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகள்
“திங்களைப் போற்றுதும்-ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும்”
மாமழை போற்றுதும்”
என்று கூறியிருப்பது ஈண்டு கருதத்தக்கது, இம் முப்பொருள்களுள் ஞாயிறே முதன்மையாதலின், அதனைப் பெரிய கடவுளாக்கி விட்டனர். சூரிய பகவான், சூரிய தேவன், சூரியநாராயணன் முதலிய பெயர்களால் அதனைக் குறிப்பிடலாயினர். அதோ எரிந்து கொண்டு போகும் சூரிய பகவான் எல்லாம் அறிவான் - அவன் கேட்டுத் தீர்ப்பு வழங்கட்டும் - அவன் ஆணையாகக் கூறுகிறேன்’, என்று ஆணையிடும் அளவுக்கு ஞாயிற்றைக் கடவுளாக உயர்த்தினர். அதற்குச் சிலைகளும் கோயில் களும் அமைத்து வழிபட்டனர். தமிழ்நாட்டில் சூரியனார் கோயில்’ என்ற பெயரில் ஒர் ஊரும் உள்ளது. நாடோறும் காலையில் ஞாயிற்றை வழிபடுவதும் தைப் பொங்கல் நாளில் ஞாயிற்றுக்குப் படையல் போடுவதும் தமிழ் மக்களின் வழக்கமாகும்.
இங்கு மட்டுமா? உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முறைகளில் ஞாயிறு வழிபாடு நடைபெறு கிறது. சீனா, அமெரிக்கக் கண்டம், ஐரோப்பா முதலிய பகுதிகளில் ஞாயிறு கோயில்கள் சிதைந்த வடிவில் இன்றும் உள்ளனவாம். பாபிலோனியா, எகிப்து, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளிலும் ஞாயிறு வழிபாடு நடைபெற்றது. ஜப்பான் மன்னரும் இந்தியாவின் மன்னர் பலரும் தம்மை ஞாயிறு குலத்தவர் என்று பெருமை பேசினர். சம்சுகிருத இருக்கு வேதம் உட்பட இந்திய மொழி நூல்கள் பல வற்றில் ஞாயிறு வழிபாடு பேசப்பட்டுள்ளது. இந்து மதத்தின் பிரிவுகளுள் செளரம் என்பதும் ஒன்று. சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் செளர சமயம் எனப்படும்,
அன்றாட நடைமுறையில், சூரிய நமஸ்காரம்’ என்பது, இந்தியாவில் மிகவும் பெரிதுபடுத்தப்படுகின்ற ஒன்றாகும். அறிவியல் அடிப்படையிலும் ஞாயிறு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றதன்றோ? ஞாயிறு இன்றி நாம் வாழ முடியுமா? மரம் செடி கொடிகள் உட்பட மற்றவையும் வாழமுடியுமா? ஞாயிறு வெப்பமும் . ஒளியும் வீசுவதனாலேயே எல்லாம் வாழமுடிகிறது. காலையில் ஞாயிற்றை நோக்கி வழிபடின் கண் ஒளி பெருகும். வழிபடுவதனால் பெருகுவதில்லை; ஞாயிற்றை நோக்குவதால் பெருகுகிறது. கண் கெட்ட பின் பார்த்துப் பயன் இல்லை. இதனால், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?’ என்ற பழமொழியும் எழுந்தது. எனவே, பண்டைக்காலம் தொட்டு மக்கள் ஞாயிற்றை ஒரு தெய்வமாகத் தேர்ந்தெடுத்து வழிபட்டு வருவதில் வியப்பில்லை.
திங்கள் வழிபாடு:
மக்கள் ஞாயிறு வழிபாட்டோடு திங்களையும் வழி பட்டனர். முழு நிலா வழிபாடும் பிறைநிலா வழிபாடும் தொன்றுதொட்டு நிகழ்பவை. மணமாகாக் கன்னிப் பெண்கள் பிறை நிலாவைத் தொழுவது மரபு என்னும் செய்தி தமிழ் நூல்களில் சுவைபெறக் கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பிறை நிலாவை வழிபடுவது மக்களிடையே மிகவும் இன்றியமையாமை பெற்றுள்ளது. ஆயிரம் முறை மூன்றாம் பிறை நிலாவை வழிபட்டவர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஆயிரம் பிறை கண்டவர்’ என்று பெருமைப்படுத்தப் பெறுகிறார்.
ஒன்பான் கோள் வழிபாடு
மக்கள் ஞாயிறு, திங்கள் ஆகியவற்றோடு இன்னும் ஏழு கோள்களையும் (கிரகங்களையும்) இணைத் து : நவக்கிரக வழிபாடு (ஒன்பது கோள் வழிபாடு) என்னும் பெயரில் கோயில்களில் சிலைகள் செய்து வைத்து வழிபடு கின்றனர்: ஒன்பது கோள்களின் பெயர்கள் வருமாறு:1, ஞாயிறு (Sun), 2, திங்கள் (Moon), 3. செவ்வாய் (Mars), 4. புதன் (Mercury), 5. வியாழன் (Jupiter):6. வெள்ளி (Venus), 7. gads (Saturn), 8. இராகு (A Planet-caput Draconis), 9. கேது (A Planet—cauda Draconis) ஆகியவை ஒன்பான் கோள்கள் ஆகும். கோயில்களில் இந்த ஒன்பான் சிலைகளையும் மிகவும் நெருக்கமாக வரிசை மாற்றுமுறையில் அருகில்-அருகில் வைத்து, அந்தப் பகுதிக்குச் சனி ஈசுவரன் கோயில்’ என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த ‘சனி ஈசுவரன் கோயில் பகுதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்தக் கோள்களை (Planets) வழிபடும் மரபும் ஒருவகை இயற்கை வழிபாட்டு முறையாகும்.
பசு வழிபாடு:
மக்கள் தம்மைப் பால் தந்து வளர்க்கும் பசுக்களை அன்னையாகக் கருதி, கோமாதா என்பது போன்ற பெயர்கள் இட்டு வழிபடுவதும் இந்தியாவில் தொன்று: தொட்ட மரபு. வெள்ளிக்கிழமை தோறும் பசுவைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசிக் குங்குமப் பொட்டு இட்டுக் கர்ப்பூரம் கொளுத்தி வழிபடுவது வழக்கம். புது வீடு புகும்போது பசுவைப் பயன்படுத்துகின்றனர்; அவ்வாறே: மோட்ச வீடு புகுவதாக எண்ணிச் செய்யும் இறுதிச் சடங்காகிய கரும காரியத்தின் போதும் பசு பயன்படுத் கப்படுகிறது. நாடோறும் பசுக்களைத் தொட்டுக் கும்பிடுவது பலரது பழக்கம். தமிழ்நாட்டில் தைத் திங்கள் இரண்டாம் நாளை சனவரி 15ஆம் நாளை) மாட்டுப் பொங்கல் விழா நாளாகக் கொண்டு, மாடுகளைக் குளிப்பாட்டிப் பலவகையான ஒப்பனைகள் செய்து படையில் போட்டு வழிபடுவது தொன்று தொட்ட வழக்கம். பசுவதை கூடாது என இந்தியாவில் பலர் போராடுகின்றனர். பசு தெய்வமான வரலாறு இது.
பாம்பு வழிபாடு:
நன்மை தரும் மாட்டுக்கு நன்றி கூறும் வகையில் வழிபாடு நடக்கிறது. அவ்வாறே, தீமை செயயக்கூடிய பாம்புக்கும் வழிபாடு நடைபெறுகிறது. தீமை செய்யா திருக்க வேண்டும் - கடித்து இறப்பு நேராதிருக்கச் செய்யவேண்டும் என்று நயந்து கெஞ்சி வேண்டிக் கொள்ளும் முறையில் பாம்புக்கு அவ்வழிபாடு நடத்தப் பெறுகிறது.
பாம்புப் புற்றில் பால் வார்ப்பதும், புற்றெதிரில் படையல் போடுவதும், அங்கே பால், முட்டை போன்ற பொருள்களை வைத்து விட்டு வருவதும் இந்திய நாட்டுப் பழக்கம். வீடுகளில் நல்ல பாம்பைக் கண்டாலும், அதனை அடிக்காமல், கர்ப்பூரம் கொளுத்திக் காட்டிப் படைத்து, பகவானே, எங்களை ஒன்றும் செய்யாமல் இவ்விடத்தினின்றும் அகன்று மறைவாயாக’ என்று வேண்டிக் கொள்வது மக்கள் மரபு. ஐம்பொருள் வழிபாடு
இச்செய்திகள் எல்லாம் மக்களிடையே எப்படி கடவுள் பற்றிய உணர்வு ஏற்பட்டது என்பதை விளக்கு வதற்கு உரிய தக்க சான்றுகள் ஆகும். பண்டைக்கால மக்கள் இம்மட்டில் நின்றார்களா? ஐந்து மூல முதற் பொருள்களையும் மேற்கூறியவாறே வழிபடலாயினர். இம்முதற் பொருள்களை மக்கள் வழிபட்டதன் நோக்கம் மூன்று எனக் கூறலாம்: தம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதம்மால் கட்டுப்படுத்த முடியாத பொருள்களாக இவை இருப்பதனால் ஏற்பட்ட மதிப்பின் காரணமாக வழிபடுவது முதல் நோக்கம்; இரண்டாவது: இப்பொருள்களால் அடையும் நன்மைகள் காரணமாக ஏற்பட்ட நன்றியுணர்வு; மூன்றாவது: இப் பொருள்களினால் சில நேரத்தில் ஏற்படும் பேரழிவுக்கும் பேரிழப்புக்கும் அஞ்சி நடுங்கி, இனியும் அவை நேராதிருக்கச் செய்ய வேண்டும் என நயந்து கெஞ்சி வேண்டி விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.
மழை எவ்வாறு தோன்றுகிறது என்பதை அறியா மையாலும் அது விண்ணிலிருந்து கீழே வருவதாலும் விண்ணே மழையைத் தருகிறது என எண்ணி அதற்கு நன்றி பாராட்டும் வகையிலும், அளவுக்கு மிஞ்சி மழை யைக் கொட்டி அழிவு செய்யலாகாது என வேண்டு கோள் விடுக்கும் வகையிலும் விண்’ என்னும் மூலமுதற் பொருளை மக்கள் வழிபட்டனர். அவ்விண்ணைப் பெண் ணாக உருவகித்து ஆகாய வாணி’ (வான மங்கை) எனப் பெயரும் தந்தனர். இப்பெயர் இப்போது இந்தியாவின் வானொலி அமைப்பின் பெயராக (ஆகாஷ் வாணி என) வழங்கப்படுகிறது.
அடுத்து,-அளவான காற்றால் நன்மையும் அளவு மீறிய புயல் காற்றால் தீமையும் விளைகின்றன. அளவான தீயால் நன்மையும் அளவு மீறிப் பற்றிப் படர்ந்து எல்லாப் பொருள்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கும் போது தீயால் அழிவும் உண்டாகின்றன. அளவான நல்ல நீரால் நன்மையும் அளவு மீறி வெள்ளமாகப் பெருக்கு எடுக்குங்கால் நீரால் பேரழிவும் ஏற்படுகின்றன. மண்ணால் குடியிருப்பு, உணவுப் பொருள்கள் முதலியன விளைவு முதலான நன்மைகளும், மண் சரிவு நிலநடுக்கம்-நிலப்பிளவு முதலிய தீமைகளும் நேர் கின்றன. எனவே, இம்மூல முதற் பொருள்களால் உண் டாகும் நன்மைகட்காக நன்றி செலுத்தும் வகையிலும், தீமை விளைக்கா திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையிலும், இவற்றைக் கடவுளாகக் கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். விண்ணைப் பெண்ணாக்கி ஆகாய வாணி’ எனப் பெயர் தந்தனர். ஆனால் காற்றை ஆண் தெய்வமாக்கி வாயு பகவான் (காற்றுக் கடவுள்) எனவும், நெருப்பையும் ஆண் தெய்வமாக்கி அக்கினி பகவான்’(நெருப்புக் கடவுள்) எனவும் பெயர்கள் ஈந்தனர் நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் (நீர்க்கடவுள்) என்னும் பெயரைச் சூட்டினர் மண் என்னும் முதற் பொருளைப் பெண் தெய்வமாக்கி, பூமாதேவி, நில மடந்தை, மண்மகள் என்றெல்லாம் பெயர்கள் வழங்கினர். பொதுவாக நாடுகள் பெண்பால் பெயர்களாகவே சுட்டப்படுகின்றன. தத்தம் மொழியைத் தாய் மொழி’ (Mother Tongue) என அழைப்பது போலவே, தத்தம் நாட்டைத் தாய்நாடு’ (Mother Land) எனப் பெண்ணாக-அன்னையாக அழைப்பது மக்கள் மரபு. இத்தகைய செய்திகளால், மக்கள் இயற்கையின் அடிப்படையில் பல்வேறு கடவுள்களைப் படைத்து விட்டனர். என்பது புலப்படும். பழைய படையலின் தொடர்பு
மிகப் பழங்காலத்து மக்கள் கடவுள் பெயரால் என்ன படையல் போட்டார்களோ-எவ்வாறு படையல் போட்டார்களோ, அம்முறையினை வாழையடி வாழையாக இக்காலத்திலும் சில குடும்பங்கள் பின்பற்றி வருவதைக் காணலாம். சில வழிபாடுகளின் போது, தேனும் தினைமாவும் படைத்தலும், தினைமாவால் மாவிளக்கு போடுதலும் செய்கின்றனர் கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகை நாளின் (கிருத்திகை) மறுநாளாகிய நாட்டுக் கார்த்திகை நாளிலும், தைத் திங்களின் இரண் டாம் நாளாகிய மாட்டுப் பொங்கல் நாளிலும், முருங்கைக் கீரை துவட்டுதல்-வாழைக்காய் பொரித்தல்கீரைத்தண்டு கூட்டு செய்தல்-பறங்கிக்காய் பொரியல் செய்தல்-கொழுக்கட்டை செய்தல்-வடையும் சர்க்கரைப் பொங்கலும் செய்தல் முதலியன, ஆண்டு தோறும் விடாமல் நடைபெறுகின்றன. இந்த இரண்டு நாள் களிலும் மரக்கறி உணவை (Wegetarian) வழக்கமான இடத்தில் வைத்துப் படைப்பர். மற்றும், இவ்விரு நாள்களிலும், காத்தவராயன் என்னும் தெய்வத்திற்குப் படைத்தல் (காத்தவராயன் படையல்) என்னும் பெயரால், காயும் கருவாடும் குழம்பு செய்தும்-ஆட்டுக்கறி குழம்பிட்டும்-மதுவகை வாங்கி வந்தும், மரக்கறி உணவு வைத்திருக்கும் இடத்திற்குச் சிறிது அப்பால் வேறோர் இடத்தில் தனியாக வைத்துப் படைப்பது வாடிக்கையான வழக்கம். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்களும், வாழையடி வாழையாக வரும் வழக்கத்தை விடலாகாது என்பதற்காக மது வைத்துப் படைத்துப் பின்னர் அந்த மதுவை யாருக்காவது கொடுத்து விடுதல் மரபு. ஆக்கி அரித்துப் படைத்தல்
மேற்கூறிய இருவேறு நாள்களிலும் படைக்கும் படையலை ஆக்கி அரித்துப் படைத்தல்’ என்னும் ஒருவகை மரபுப் பெயரால் வழங்குதல், தமிழ்நாட்டுத் தென்னார்க்காடு மாவட்டத்தில் இன்றும் உள்ளது. ஆக்கி அரித்துப் படைத்தல்’ என்றால், பல வகைப் பச்சை உணவுப் பொருள்களைத் தீ மூட்டிய அடுப்பிவ் ஏற்றிப்பதம் செய்து-சமையல் செய்து-படைத்தல் என்று பொருளாகும். இந்தப் பெயரிலிருந்து அறியக் கூடியதாவது: :-மக்கள் ஒரு காவற்தில், உணவுப் பொருள்களைத் தீ மூட்டிய அடுப்பில் வைத்துப் பதம் செய்து படைக்காமல், பச்சையாகவே கடவுளுக்குப் படைத்தனர் என்பதாகும். கம்பங்கதிர், சோளக்கதிர் முதலியவற்றைப் பச்சையாகவே வைத்துப் படைப்பது இன்றும் உண்டு. ஈண்டு, மாங்குடிகிழார் என்னும் புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் (335) ஒன்றில் காணப்படுகின்ற
- “கெல் உகுத்துப் பரவும் கடவுள்”
என்னும் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. பச்சை நெல்லை வைத்துப் படைத்த பண்டைய பழக்கம் இதனால் புலப்படும். இவையெல்லாம் பண்டைக்கால இயற்கை வழிபாட்டு முறையாகும்.
கூழ் படைத்தல்:
அடுத்துக் ‘கூழ் படைத்தல்’ என்பது குறிப்பிடத்தக்கது. கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய கூலங்களை (தானியங்களை) மாவாக அரைத்து, நீர்விட்டுக் கரைத்துத் துழவிக் காய்ச்சிய உணவு கூழ்” எனப்படும். இதனைக் கரைத்துக் குடிப்பர். ‘கூழ் உண்ணுதல்’ என்று சொல்வது மரபு அன்று; கூழ் குடித்தல்’ என்று கூறுவதே மரபு பண்டைக் காலத்தில், சோறு உண்ணாமல், கூழ் குடித்தலே பெரும்பான்மையான வழக்கம். வசதியுள்ளவர்கள் பகலில் கூழ்குடித்து, இரவில் சோறு உண்பது வழக்கம். வசதியற்றவர் இருவேலைகளிலுமே கூழ் குடிப்பர். இன்றும், ஏழைகளும் சிற்றுார்களில் வாழும் மக்கள் பலரும் கூழ் குடிப்பதைக் காணலாம். பண்டு, கரைத்துக் குடிக்கும் கூழே பெரும்பாலும் உணவாக இருந்ததால், பின்பு தோன்றிய எல்லா வகை ஆரவார உணவுக்கும் கூழ்” என்னும் பெயர் இலக்கியங்களில் ஏறிவிட்டது. கோவூர் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் (10) ஒன்றில் உள்ள
- “கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்”
என்னும் பகுதியும், சமண முனிவர் பாடிய நாலடியார் என்னும் நூலின் பாடல் (62) ஒன்றில் உள்ள
“துகடிர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க”
பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க”
என்னும் பகுதியும்,
“எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”
“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”. (64)”
சிறுகை அளாவிய கூழ்”. (64)”
(அறத்துப்பால் - இல்லறவியல்-மக்கட்பேறு).
என்னும் திருக்குறள் பாடலும், கூழ் என்னும் சொல்லுக்கு உணவு என்னும் பொருளைத் தந்து கொண்டிருப்பதைக் காணலாம். சேந்தன் திவாகரநிகண்டு என்னும் நூலின் ஆசிரியராகிய திவாகரர் என்பவர், சொற்பொருள் கூறுகிற அந்நூலில், கூழ்” என்னும் செர்ல்லுக்குச்சோறு? என்றே பொருள் கூறலாயினர்:
“சொன்றி, கிமிரம், மடை கூழ், புழுக்கல்,
ஒன்றிய மூரல் சோறு எனஉரைப்பர்”.
ஒன்றிய மூரல் சோறு எனஉரைப்பர்”.
(சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்த் தொகுதி 78)
என்பது அவரது நூற்பாப் பகுதி. திருவள்ளுவரோ இன்னும் ஒரு படி மேலே போய். உணவு தொட்ர்பானஉணவுப்பொருள்கள் எல்லாவற்றிற்குமே பொதுப்பெயர் ராகவும் கூழ் என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்:
“படைகுடி கூழ் அமைச்சு கட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”. (381)
உடையான் அரசருள் ஏறு”. (381)
(திருக்குறள் - பொருட்பால் இறைமாட்சி)
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு”. (554) .
சூழாது செய்யும் அரசு”. (554) .
(திருக்குறள்-பொருட்பால்-கொடுங்கோன்மை) என்பன அவர் பாடல்கள்.
திருவள்ளுவரை அடியொற்றி,
‘படையும் குடியும் கூழும் அமைச்சும்
அரணும் நட்பும் அரசியல் ஆறே”. (12-90)
அரணும் நட்பும் அரசியல் ஆறே”. (12-90)
எனத் திவாகரரும் தம் நிகண்டு நூலில் கூறியுள்ளார். எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யாகிய (எள் +நெய்= எண்ணெய்) எண்ணெய் என்னும் பெயர், மற்ற எல்லா வகை நெய்களுக்கும் பொதுப் பெயராய் இன்றும் வழங்கப்படுவது போல, கூழ் என்னும் பெயரும், எல்லா வகை உணவுப் பொருள்கட்கும் பொதுப் பெயராயிற்று.
தமிழிலே யன்றித் தெலுங்கு இலக்கியத்திலும் ‘உணவு என்னும் பொருளில் கூழ்” என்னும் சொல் ஏறி விட்டது. கல், முள், மண் என்னும் சொற்களோடு ‘உ’ சாரியை சேர்த்துக் கல்லு, முள்ளு, மண்ணு, என்று சொல்வது போல, கூழ் என்பதோடும் ‘உ’ சாரியை சேர்த்துக் ‘கூழு' என்று தமிழில் வழங்குவது உண்டு. தமிழ் மொழியில் சில சொற்களில் (ழ) ழகரமா யிருப்பது, அதன் உடள் பிறப்புத் திராவிட மொழிகளாகிய கன்னடத்தில் (ள) ளகரமாகவும் தெலுங்கில்’ (ட) டகரமாகவும் ஒலிக்கப்படுவது ஆட்சியில் உள்ளது. தமிழில் உள்ள ஏழு என்பதைக் கன்னடத்தில் ஏளு, எனவும், தெலுங்கில் ஏடு” எனவும் ஒலிப்பர் மற்றும். தமிழில் உள்ள கோழி என்பதைக் கன்னடத்தில் கோளி எனவும், தெலுங்கில் கோடி எனவும் ஒலிப்பர். இவ்வாறே தமிழில் உள்ள கூழு உன்பதைக் கன்னடத்தில் ‘கூளு’ எனவும் தெலுங்கில் கூடு” எனவும் ஒலிப்பர். தெலுங்கு அறிஞராகிய வேமன்னர் என்பவர், தம் ‘வேமன்ன பத்தியம் என்னும் நூலின் பாடல்களில், கூடு (கூழு) என்னும் சொல்லைச் சிறப்பான உணவு என்னும் பொருளில் ஆண்டுள்ளார். பாடல் பகுதிகள் தமிழ் எழுத்தில் வருமாறு:-
“பப்பு லேனிகூடு பருலக ஸ்ஹயமெள
யப்பு லேணி வாடு யதிக பலுடு”
யப்பு லேணி வாடு யதிக பலுடு”
(அன்ன ரசம்-467)
என்பது ஒரு பாடலின் பகுதி. இதன் கருத்து. பருப்பு இல்லாத உணவு அயலவர்க்கு (இடப்படுதல்) ஆகாத தாகும்; கடன் இல்லாத மாந்தன் மிகவும் வல்லவனா வான்-என்பதாகும். மற்றுமொரு பாடல் பகுதி யினைக் காண்போம்:
“நெய்யி லேனி கூடு கிய்யான கனுவதி
ப்ரியமு லேனி கூடு பிண்டபு கூடயா”
ப்ரியமு லேனி கூடு பிண்டபு கூடயா”
(அன்ன ரசம்-469)
இதன் கருத்து நெய் இல்லாத உணவு ஒழுங்கற்றதாகும்; அன்பு இன்றி இடும் உணவு, பிண்டச் சோற்றுக்கு இணை யாகும்’-என்பதாகும். இவ்வாறு இலக்கிய ஆட்சிகள் இன்னும் பல தரலாம். பண்டு உணவாக இருந்த கூழே அன்று கடவுளுக்குப் படைக்கப்பட்டதால், அம்மரபை விடாமல், இன்றும் பல குடும்பத்தினர் கடவுளுக்குக் கூழ் படைக்கின்றனர். படைத்த கூழை ஏழைகட்கு அளிப்பதைக் கூழ் ஊற்றுத்ல் என்னும் தொடரால் குறிப்பிடுவது மரபு. தண்ணீர் விட்டுக் கரைத்த நீர்மப் பொருள் ஆதலின், ‘ஊற்றுதல்’ என்று கூறும் மரபு உண்டாயிற்று. இயற்கை வழிபாட்டு முறைக்கு இது பெரிய சான்றாகும். இனி, மேலும் சில படையல்களைப் பற்றிப் பார்ப்போம்.
பொங்கிப் படைத்தல் :
மிகப் பழங்காலத்தில் மக்கள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்தனர்; கஞ்சியில் உள்ள தண்ணீரைத் தனியாக இறுத்தும் குடித்தனர். தண்ணீரும் சோறுமாக உண்ட பழக்கத்தைத் தொடர்ந்து, பிற்காலத்தில் சிறப்பு உணவையும் நல்ல தண்ணீர் நல்ல கஞ்சி’ என்று கூறும் மரபு ஏற்பட்டது. ‘நல்ல தண்ணீர் இல்லாததனாலே-நல்ல கஞ்சி இல்லாததனாலே உடம்பு கெட்டு விட்டது'-என மக்கள் இன்றும் பேசிக்கொள்ளும் வழக்காற்றிலுள்ள நல்ல தண்ணிர்’, ‘நல்ல கஞ்சி’ என்பன, நல்ல சிறப்பு உணவையே குறிக்கின்றன. பண்டைக் காலத்தில் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கும் பழக்கத்திலிருந்து சிறிது முன்னேறி, கஞ்சி நீரை வடிக் , சோற்றைப் பொங்கித் தின்றனர். சோறு கொதிக்கும்போதே புளித் தண்ணிர், மிளகாய், உப்பு ஆகியவற்றை அதில் போட்டுப் பொங்கித் தின்றனர், சோறு பொங்கித் தின்னு, சொந்தக் கவி பண்ணு’ என்னும் முதுமொழியிலிருந்து, பொங்கித் தின்னுதல்’ என்னும் வழக்காற்றை அறியலாம். பண்டு ஏற்பட்ட :பொங்கித் தின்னுதல்’ என்னும் வழக்காறு, இப்போது: சிறப்பு உணவு செய்து உண்ணுவதைக் குறிக்கவும் பயன் படுத்தப்படுகிறது. பொங்கித் தின்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை கிடையாது’, ‘நான்தான் அவர்களுக்குப் பொங்கிப் போடுகிறேன்-என்னும் வழக்காறுகளில் உள்ள பொங்கி’ என்பது. சிறப்பு உணவு செய்தலையே குறிக்கிறது. பண்டு, சிறப்பு நாள்களில். கூழ் குடித்தலையும் கஞ்சி குடித்தலையும் நிறுத்தி, சோற்றைப் பொங்கித்தின்றனர். இன்றைய பொங்கல் விழாப் படையல், பழைய அடிப்படையில் எழுந்ததேயாகும்.
ஆண்டுதோறும் தைத்திங்களின் முதல் நாளில், இந்திய மக்களுள் பலர், ஏதாவது ஒரு பெயரில் ஒருவிழா எடுக்கின்றனர். தமிழர்கள் அன்றைக்குப் பெரும் பொங்கல் விழா என்று பெயரிட்டுப் படையல் செய்கின்றனர். இந்தப் பொங்கல் நாளன்று, சோற்றை வடிக்காமலோ அல்லது தண்ணிரைச் சரியாக நிறை கட்டி வைத்துச் சோற்றை நெற்றுப் பதமாக எடுக்காமலோ, சோற்றைக் கட்டியும் முட்டியும் ஆகப் பொங்குகின்றனர். வீட்டில் புதிய உலோகக் கல வகைகள் (பாத்திரங்கள்) எவ்வளவு இருப்பினும் அவற்றை விலக்கி, பழைய வழக்கப்படி புதிய மண்பாண்டங்கள் வாங்கி வந்து அவற்றிலேயே பொங்குகின்றனர்-குழம்பிடுகின்றனர். பண்டைக்கால மக்களுக்கு முதலில் புழுங்கல் அரிசி தெரிந்திருக்க முடியாது; பச்சை நெல்லைக் குத்தி எடுத்த பச்சை அரிசியே தெரிந்திருக்க முடியும்; நாளடைவிலேயே நெல்லைப் புழுக்கிப் புழுங்கல் அரிசி உண்டாக்கியிருப்பர். எனவே, பண்டைய மக்கள் அனைவரும் தொடக்கத்தில் பச்சையரிசியையே பொங்கித் தின்றிருப்பர். இந்தத் காலத்தில் புழுங்கல் அரிசியே உண்ணும் பெரும்பாலான தமிழர்கள். பெரும் பொங்கல் விழா நாளில், பண்டைக் கால வழ்க்கப்படி, பச்சையரிசியையே இட்டுப் பொங்கு கின்றனர். அந்தக் காலத்தில், குடியிருப்பு வசதி இன்மை யாலும், இது பெரிய படையல் ஆதலாலும், பெரும் பாலும் திறந்த வெளியிலேயே பொங்கியிருப்பர். அந்தப் பழக்கப்படி, இந்தக் காலத்திலும், பெரிய மாளிகை உடையவர்களும், திறந்தவெளி வாசலிலேயே பொங்குகின்றனர் - படைக்கின்றனர். திறந்தவெளி வாசல் வசதியில்லாதவர் சிலர், வீட்டுக்குள் பொங்கும் இடத்திற்கு மேலேயுள்ள சில ஒடுகளை எடுத்து விட்டுச் செயற்கை முறையில் தற்காலிகத் திறந்தவெளி உண்டாக்கிப் பொங்கியதை யான் பார்த் திருக்கிறேன். மற்றும் இக்காலத்துப் புதிய காய்கறி வகைகளை விலக்கிப் பழைய முறையில் வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், கருனைக் கிழங்கு, கரும்பு. மஞ்சள்கொத்து முதலியவற்றையே படையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்தக் காலத்தில் உணவுப் பொருள்களை வாழை இலையில் இட்டுப் படைக்கின்றோம். அந்தக் காலத்தில் பூசனி இலையில் இட்டுப் படைத்தனர். தமிழ்நாடு-தென்னார்க்காடு மாவட்டம்- கடலூர் வட்டப் பகுதியில், இந்தக் காலத்திலும், பெரும் பொங்கல் நாளில், உணவுப் பொருள்களைப் பூசனி இலையில் இட்டே பழைய வழக்கப்படி படைக் கின்றனர். பொங்கல் படையலின் வரலாறு இது. புரட்டாசித் திங்களின் சனிக் கிழமைகளில் திருமாலுக்குச் செய்யும் தளிகைப் படையல், புத்தாண்டு நாள் படையல் முதலியனவும் பண்டு தொட்டுவரும் அடிப்படையை ஒட்டியே நடைபெறுகின்றன.
இக்காலத்தில் புதுப் புதுப் பொருள்கள் தோன்றியிருப்பினும், அவற்றை விலக்கி, பழங்காலத்தில் பயன்படுத்திய பொருள்களையே இக்காலத்தும் தொடர்ந்து படையல் நாள்களில் மக்கள் பயன்படுத்துவதை நோக்குங்கால், பண்டைக்கால மக்கள், இயற்கையை ஒட்டியே கடவுள்களைப் படைத்தனர் - கடவுள்கட்குப் படையல் செய்தனர் என்பது வெளிப்படை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக