புதன், 10 ஜூன், 2020

அன்னை மூகாம்பிகை

அன்னை மூகாம்பிகை

தாய் மூகாம்பிகை சிறப்பு…

கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் சௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தியைக் குறித்து தவம் புரிந்தார். உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடசாத்ரி என்ற புனிதமலை. முனிபுங்கவர்களும் சித்தபுருஷர்களும் இன்றும் தவம் புரிந்து கொண்டிருக்கும் புண்ணிய பவித்ர இடம். அங்கு உற்பத்தியாகும் நதி சௌபர்ணிகா எனப்படும். அதன் கரையில் பெரிய திருவடியான கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்டார்.

கருடபகவானின் பெயர்

சுபர்ணன் என்பதால் அந்த ஆறு சௌபர்ணிகா எனப்பட்டது. அவ்வளவு மகிமை வாய்ந்த அந்த இடத்திலிருந்து கோலமாமுனிவரின் பக்தியை மெச்சி, சுயம்பு லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் பக்தி பரவசத்தோடும் பய பக்தியோடும் அந்த சுயம்பு லிங்க மூர்த்தத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். அந்த இடம் கோலாபுரம் என அழைக்கப்பட்டது. அந்த லிங்கம் ஜோதிர் லிங்கம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது. அச்சமயத்தில் கம்காசுரன் எனும் கொடிய அரக்கன் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவனுக்கு வரமருள ஈசன் புறப்பட்டார். அதைக் கண்டு திகைத்த தேவர்கள் நான்முகனிடம் சரணடைய, நான்முகன் தனது துணைவியான வாக்தேவியின் வடிவமான சரஸ்வதியை அழைத்து அந்த கம்காசுரனை பேச்சற்றவனாக்க ஆணையிட்டார்.

அதனால் வரம் எதுவும் கேட்க முடியாத அந்த கம்காசுரன் பேச்சிழந்ததால் மூகாசுரன் என்றானான். வரம் ஏதும் கேட்க முடியாத ஆத்திரத்தோடு அலைந்த அவன், கோலமாமுனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவரைத் துன்புறுத்தினான். அவர் தவத்திற்கு பல இடையூறுகளைச் செய்தான். அதனால் மனம் வருந்திய முனிவர் பரதேவதையிடம் முறையிட்டார். தன் பரிவாரங்களோடு தேவி, அஷ்டமி தினத்தன்று நடுநிசியில் மூகாசுரனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்தாள். அவன் இறப்பதற்கு முன் தேவியிடம், ‘‘அம்மா தங்கள் கையால் மடிவதால் என் பாவங்கள் தொலைந்து நான் சுத்த ஆத்மாவானேன். இந்த திவ்ய திருத்தலத்தில் உனது பெயர் நிலைத்திருக்கும்வரை எனது பெயரும் நிலைக்க வேண்டும்’’ என வரம் கேட்டான்.

தேவியும் அவனுக்கு அந்த வரத்தை அருளி மூகாம்பிகையாய் கோலமா முனிவர் பூஜித்த ஜோதிர் லிங்கத்தில் ஸ்வர்ண ரேகையாகக் கலந்தாள். இந்த ஸ்வர்ண ரேகையை அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இதன் இடது புறம் நான்முகன், ஈசன், திருமால்; வலது புறம் அலைமகள், கலைமகள், மலைமகள் உறைகிறார்கள். இந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவ தேவியர்களையும் வழிபட்ட பலன் கிட்டும். அபிஷேகம் அனைத்தும் இந்த சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. 51 சக்தி பீடங்களுள் இது ஒன்று இல்லை எனினும், இது அர்த்தநாரிபீடம் என வழிபடப்படுகிறது.

தேவியின் அருளாணைப்படி ஆதிசங்கரர் ஐம்பொன்னால் ஆன மூகாம்பிகை தேவியின் திருவுருவை கொல்லூரில் பிரதிஷ்டை செய்தருளினார். முக்கண்கள், சங்கு, சக்கரம், அபய, வரதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து முப்பெருந்தேவியரின் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது. மூகாம்பிகையை பூஜிக்க, பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மூகாம்பிகையின் பின்புறம் பஞ்சலோகத்தினாலான காளி, சரஸ்வதி தேவியர் அருள்கின்றனர். அக்கினி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.

இந்த அம்பிகையின் ஆபரணங்கள் விலை மதிப்பற்றவை. முகாபரணம் முழுதும் தங்கத்தால் ஆனது. அதில் மரகதம், கோமேதக ரத்னங்கள், ஒளிர்கின்ற அழகு செய்யும் இந்திர நீலக்கற்கள், அழகு செய்யும் பச்சைக் கல் மூக்குத்தி, வைரத் தோடுகள் என சர்வாலங்காரங் களோடு துலங்குகிறாள். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த மூகாம்பிகையிடம் நேர்ந்து கொண்டு தன் பிரார்த்தனை பலித்ததன் நன்றிக் காணிக்கையாக தங்க வாளை தேவிக்கு காணிக்கையாகச் செலுத்தினார். அதை இன்றும் ஆலயத்தில் காணலாம்.

பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா காண்கிறாள் அம்பிகை. அவ்விழாவின்போது மூகாசுரன் கேட்ட வரத்தின்படி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. அதுவே தேவியின் கருணை. துர்க்காம்பிகைக்கு செய்யும் அர்ச்சனைகள் அவள் திருவடியில் வீற்றிருக்கும் மகி ஷனுக்கும் செய்யப்படுவதுபோல் இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சந்நதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறாள்.

ஆதிசங்கரர் மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியைப் பாடி தேவியின் திருவருள் பெற்றார். எனவே கல்வி, கலை வளம் செழிக்க பக்தர்கள் மூகாம்பிகையை பிரார்த்தனை செய்து பயனடைகின்றனர். விஜய தசமி இத்தலத்தில் வித்யா தசமியாகக் கொண்டாடப்படுவது விசேஷம். தன் ஸௌந்தர்யலஹரியை ஆதிசங்கரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து எழுதியதாக ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை ஆதிசங்கரர் தேவியைக் குறித்து தவம் செய்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது மூகாம்பிகை தேவி அவருக்கு கஷாயம் செய்து தந்து அவரைக் குணப்படுத்தியிருக்கிறாள்.

அதை நினைவூட்டும் வண்ணம் ஆலயத்தில் இன்றும் இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பின் கஷாய பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுகிறது. பலவித மூலிகைகள், குறுமிளகு, இஞ்சிப்பொடி, ஏலம், கிராம்பு, நெய், வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து செய்யப்பட்டு தேவிக்கு நிவேதிக்கப்படும் அந்த கஷாயத்தை பக்தியுடன் அருந்த சகல உடற்பிணிகளும் மனப்பிணிகளும் நீங்குவதாக பக்தர் கள் நம்புகின்றனர். அதேபோன்று முதல்நாள் இரவு சுயம்புலிங்கத்திற்குச் சாத்திய சந்தனக் காப்பில் ஸ்வர்ணரேகை பதிந்திருக்கும். அந்த சந்தனமும் சகல நோய்களையும் தீர்க்கும். அந்தப் பிரசாதம் கிடைக்கப் பெறுபவர்கள் மகாபாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர்.

இந்த மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்டதேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருமேயானால், அவர்கள் இத்தலத்தில் ஓடும் சௌபர்ணிகை நதியில் நீராடி தூய மனதோடு தேவியை வழிபட அந்த பிரச்னைகள் தவிடுபொடியாகும். அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. . கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களுள் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்றாகப் போற் றப்படுகிறது.

மற்ற ஆறு தலங்கள் உடுப்பி, சுப்ரமண்யா, கும்பகாசி, கோடேச்வரா, க்ரோடசங்கர நாராயணா, கோகர்ணம் ஆகியவையாகும். குடசாத்ரி மலையில் இருந்து இரண்டு கணவாய்கள் வழியாக ஆறு உற்பத்தியாகி கொல்லூர் வரும்போது சம்பாரா என அழைக்கப்படுகிறது. பல்வேறு மூலி கைத் தாவரங்கள் கலந்து வரும் இந்த ஆற்றில் விடியற்காலையில் நீராடினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள ஆயிரத்தெட்டு தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வெள்ளியன்று இரவு தங்க ரதத்தில் மூகாம்பிகை திருவுலா வருகிறாள்.

அதைக் காண சகல தேவ தேவியரும் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்குத் தரும் என்பதைக் குறிக்கிறது.
தவி மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எ ழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம். பூர்வ புண்ணியம் மேலோங்கப் பெற்றவர்கள் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கியவர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பி கையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

அன்னை காளியிடம் பக்தி செலுத்தி நமக்கு உபாசனையின் மேன்மையை தன் புனித வாழ்வின் மூலம் நிரூபித்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர். அவர் தன் சீடர்களிடம், ‘‘என்னைப் போன்ற முட்டாள் குழந்தையை அன்னை காளியைத் தவிர யாரால் நேசிக்க முடியும்?’’ என்று சொல்வா ராம். மேலும் ‘ஆலோபகோபவிதிதா’ என்றும் ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு. அறிவு முதிர்ச்சியில்லாத சிறுவர்களாலும் இடையர்களா லும் கூட அறியப்படக்கூடியவள் என்று அது போற்றுகிறது. அவளுடைய குழந்தைகளாகிய நாம் அவளை எப்படி உபாசித்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்வாள். பக்தியும் சிரத்தையுமே முக்கியம்.
 
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் தாலூகாவில் கொல்லூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது அன்னை மூகாம்பிகை ஆலயம். மங்களூரில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், உடுப்பியில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது கொல்லூர்.

பசுமை படர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள் ஆகிய வற்றுக்கு மத்தியில் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் பத்மாசனத் திருக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் உலகம் அனைத்துக்கும் தாயான மூகாம்பிகை! தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீர வாள், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்தது. துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய அன்னை ஏந்தியிருக்கும் அந்த வாள், ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு, வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது.

மூகாம்பிகை என அம்பிகை பெயர் பெற்றது எப்படி? முன்னொரு காலத்தில் கம்ஹாசுரன் என்கிற அரக்கன் ஒருவன் இருந் தான். குடிமக்களுக்கும் தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்த அவன், சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தான். சாகாவரம் வேண்டி அவன் தவம் இருப்பதை அறிந்த பராசக்தி, அவன் வரம் பெறுவதற்கு முன்பே, அவனை (மூகன்) ஊமையாக்கி விட்டாள். இதனால் அவன் ‘மூகா சுரன்’ என்று அழைக்கப்பட்டான். இந்த அசுரனை வதம் செய்ததால் அம்பிகை, ‘மூகாம்பிகை’ எனப் போற்றப்படுகிறாள்.

குடசாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனி யாக உருவாகி, பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. அந்தக் காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். ஒரு முறை இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். (கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப் பட்டு பின்னர் கொல்லூர் ஆனதாகத் தகவல்!)

கோல மகரிஷியின் தவத்தை மெச்சிய பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி, ‘‘பக்தா, வேண்டும் வரம் கேள்!’’ என்றார்.

‘‘ஈசனே, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகில் மாதம் மும்மாரி பொழிய வேண்டும். பயிர்களும் உயிர்களும் செழிக்க வேண்டும். எல்லோரும் நிறைந்த ஆயுளுடனும், தேக சுகத்து டனும் வாழ வேண்டும். இவற் றைத் தவிர, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்!’’ என்று பதிலளித்தார் மகரிஷி.

ஈசன் மனம் மகிழ்ந்து, ‘‘கோல மகரிஷியே... இதோ, இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா!’’ என்று அருளினார்.

ஈசன் அருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி இறைவனிடம், ‘‘ஈசனே! சக்தி தேவி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது?’’ என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள ஸ்வர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதி, அறுபத்துநான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதி, செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப் பார்கள். வலப் புறம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன்!’’ என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியவாறு ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை, கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

இந்த நிலையில் மூகாசுரன், கோல மகரிஷி வாழும் இந்தத் தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அசுரர் குழாமுடன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வசிக்கும் அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந் தான். பாதிக்கப்பட்டவர்கள், கோல மகரிஷியிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டனர். அனைவரையும் சாந்தப்படுத்திய அவர், மூகாசுரனை சம்ஹரிக்க வேண்டி அம்பாளை நோக்கிக் கடும் தவம் இருந்தார்.

அம்பாள், கோலமகரிஷியின் முன் தோன்றினாள். முனிவரின் முறையீட்டைத் தொடர்ந்து கோபக் கனலைக் கண்களில் தேக்கி, கையிலே திரிசூலம் ஏந்தி, தேவ கணங்களில் திறமை வாய்ந்த வீரபத்ரனைப் படைத் தளபதி யாக்கி மூகாசுரனோடு போர் புரிந் தாள் அம்பிகை. முடிவில் அசுரன் மடிந்தான். மூகாசுரன் மடிந்த பகுதி, கொல்லூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ‘மாரண ஹட்ட’ என்னும் இடமாகும்.

இந்து தர்மம் செழிக்க ஆதிசங்கரர், சக்தி வழிபாட்டைச் சொல்லும் ‘சாக்தம்’ உள்ளிட்ட ஆறு வகை வழிபாடுகளை வழிப்படுத்தினார். பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட அவர், கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம், ‘‘ஸ்வாமி, தங்க ரேகை மின்னும் லிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால், மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே!’’ என்று முறையிட்டனர்.

ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அம்பாள் அவருக்குப் பிரத்தியட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரண டையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத் தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதி யிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது.

ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியதுதான் ‘சௌந்தர்ய லஹரி’ (சௌந்தர்யம்-அழகு; லஹரி- அலைகள்).

மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபி ஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு.

எம்.ஜி.ஆர். இந்தக் கோயிலைத் தேர்ந் தெடுத்து தங்கத்தில் வாள் செய்து வழங்கி னார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பெங்களூரில் ‘கூலி’ படத்தில் நடித்தபோது உடல் நலமில்லாமல் போயிற்று. அவர் மூகாம்பிகையிடம் வேண்டிக் கொண்ட பிறகு உடல் நலம் சரியாயிற்று. பின் நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இங்கு வந்து போயிருக்கிறார். இன்னும் பல பிர முகர்கள் மூகாம்பிகை அம்மன் மீது நம்பிக்கை வைத்துத் தொலைதூரத்திலிருந்து வந்து போகிறார்கள். மூகாம்பிகை கோயிலுக்குப் போக, புகழ் பெற்றவர்கள் பலரும் ஆர்வம் காட்டுவது ஏன்?

கோயில் தலைமைக் குருக்கள்களில் ஒருவரான ஸ்ரீநரசிம்ம அடிகாவிடம் கேட்டோம். அவர் சொன் னார்: ‘‘இது ஸித்தி க்ஷேத்திரம். மனதில் பக்தியுடன் வேண்டியதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள். இங்கு குத்து விளக்கின் பஞ்சமுகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடுவது விசேஷம். நித்திய உற்சவம், வாரத்தில் வெள்ளி உற்சவம், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி, மார்ச் இறுதி-ஏப்ரல் முதல் வாரத்தில் எட்டு நாள் ரதோற்சவம், ஜூன் முதல் வாரம் சுக்ல பட்சம், அஷ்டமி திதியில் அம்பாளின் ஜன்மாஷ்டமி திரு விழா, கட்டணம் செலுத்துவோருக்கு தங்க ரதத்தில் அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை மிகச் சிறப் பாக நடந்து வருகின்றன.’’

மூகாம்பிகை ஆலயத்துக்குச் சென்றால், திரும்பி வர மனமில்லாமல்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு அம்பாளின் தேஜஸ், அருள் பார்வை, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றால் மனதில் கிடைக்கிற பரவசம் நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறது. நாம் மனதில் நினைத்து வேண்டியதை அம்பாள், நமக்குக் கொடுத்தே தீருவாள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் அங்கிருந்து திரும்புகிறார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக