வியாழன், 23 மார்ச், 2017

"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"



"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"

இடம்: அரியலுர் மாவட்டம், திருமழபாடி(திருமானுர் வழி)

நாள் : 04/ 04 /2017

"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்" என்பது, நம் முன்னோர்களின் நம்பிக்கையுடன் கூடிய சொல்வழக்கு.

நந்தியெம்பெருமாள் கயிலையில் சிவபெருமானின் வாயிற்காவலனாக இருப்பவர். திருமழபாடி என்னும் தலத்தில் அவதரித்தவர்.

திருவையாற்றீசன் ஐயாறப்பர்மீது மிகுந்த பக்திகொண்டவர் சிலாத முனிவர். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்தும் புத்திரப் பேறின்மையால் வருந்திய முனிவர், ஐயாறப்பரை வழிபட்டு அருந்த வமியற்றினார்.

முனிவரின் தவத்துக்கிரங்கிய ஈசன், "சிலாதனே, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயாக. அதன் பின் யாகபூமியை உழும்பொழுது, பெட்டகம் ஒன்று தோன்றும். அப்பெட்டகத்தில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக்கொள். அவனுக்கு ஆயுள் 16 ஆண்டுகள் மட்டுமே' என்று அசரீரி வாக்காகக் கூறினார்.

அதன்படியே யாகபூமியிலிருந்து ஒரு பெட்டகம் வெளிப்பட்டது. அதற்குள் நான்கு தோள்களும், மூன்று கண்களும், பிறையணிந்த முடியும் கொண்ட ஒரு மூர்த்தியைக் கண்டார். அம்மூர்த்தியை வணங்கினார். மீண்டும் ஐயாறப்பர்அசரீரியாய் "பெட்டியை மூடித்திற' என்றார். அவ்வாறே சிலாதர் பெட்டியை மூடித்திறந்ததும், பெட்டிக்குள் அழகிய குழந்தையொன்று காணப்பட்டது. அதைக்கண்ட முனிவரும், அவரது மனைவியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு செப்பேசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். செப்பேசர் 14 வயதுக்குள் சகலகலைகளையும் கற்று வல்லவராயினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது ஆயுள் முடிந்து விடும் என்று பெற்றோர் வருந்துவதைக் கண்ட செப்பேசர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை வணங்கி, அங்குள்ள அயனரி தீர்த்தத்தில் நீராடி, கால்மேல் காலையூன்றிக் கடுந்தவம் மேற்கொண்டார். நீர்வாழ் உயிர்கள் அவரது உடலை அரித்துத் தின்றன. மனந்தளராத செப்பேசர் பலநாள் தவமிருந்தார்.

அவரது பக்திக்கு இரங்கிய இறைவன் செப்பேசருக்கு தீர்க்காயுளையும் 16 பேறுகளையும் தந்தருளினார். செப்பேசரின் புண்பட்ட உடலை நலமுறச் செய்ய மனங்கொண்ட ஈசன் கங்கை நீர், பிரம்மன் கமண்டல நீர், அம்மையின் கொங்கைப்பால், கொண்டல் (மேகம்) நீர், இடப நந்தியின் வாய்நுரை நீர் என்னும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார். செப்பேசரின் புண்கள் நீங்கின; உடல் பிரகாசம் கொண்டது.

ஈசன் அருள்பெற்ற செப்பேசருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் சிலாதர். அதன்படி வசிஷ்ட முனிவரின் பௌத்ரியும், வியாக்ரபாத முனிவரின் புத்ரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம் பிரகாசையை செப்பேசருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார். திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவும், திருமணஊர்வலமும் மிகச்சிறப்பாக நடந்தேறின.

திருவையாற்றைச் சுற்றியுள்ள தலங்களான திருவேதிக்குடியிலிருந்து வேதியர்களும், திருப் பூந்துருத்தியிலிருந்து பூக்களும், திருப்பழனத்திலிருந்து பழங்களும், திருச்சோற்றுத் துறையிலிருந்து உணவு வகைகளும், திருநெய்த்தானத்திலிருந்து நெய்யும், திருக்கண்டியூரிலிருந்து செப்பேசருக்கான நகைகளும் வரவழைக்கப்பட்டன.

செப்பேசர் ஐயாறப்பரிடம் உபதேசம் பெற்று கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியையும், சிவபெருமானுக்கு வாயில் காப்போனாகும் பதவியையும், சைவாச்சார்யார்களுள் முதல் குரு என்ற தன்மையையும் பெற்றார். இத்தகைய பெரும் பேறுகளைப் பெற்ற செப்பேசர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார்.



நந்திதேவருக்கும் சுயம் பிரகாசைக்கும் நடந்த திருமண நிகழ்வு திருமழபாடியில் ஆண்டுதோறும் திருவிழாவாகக் கொண் டாடப்படுகிறது. திருவையாற்றிலிருந்து பஞ்சநதீஸ்வரர் வந்து திருமணத்தை நடத்திவைப்பது வழக்கம்.

காவிரியின் இருமருங்கிலும் அமைந்துள்ள திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு தலங்களும் சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படுகின்றன.

சித்திரை பௌர்ணமியை அடுத்துவரும் விசாக நட்சத்திரத் தன்று, திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர்த்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நந்திதேவர் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு தலத்து மூர்த்திகளுக்கும் நன்றி தெரிவிக்கும்பொருட்டு ஐயாறப் பரும் அறம்வளர்ந்த நாயகியும் கண்ணாடிப் பல்லக்கிலும்; நந்தியெம்பெருமான் வெட்டிவேர் பல்லக்கிலும் ஆறு தலங்களுக்கும் எழுந்தருள்வர்.

அந்தந்த தலத்து மூர்த்திகளும் இவர்களை எதிர்கொண்டழைப்பர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அம்மூர்த்திகளும் உடன்வர, நந்தியெம்பெருமானும் ஏழூர் மூர்த்திகளும் திருவையாற்றில் எழுந்தருள்வர். இவ்விழாவை திருநந்தி தேவர் திருமண ஊர்வலம் என்பர். பல்லக்குகளின் அலங்காரமும் வீதிகளில் அவை உலாவருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு திருமுறைப்பாராயணம், சிவஸ்துதிகள் செய்தபடி பல்லக்குகளைப் பின் தொடர்ந்து வலம்வருவதன் மூலம் நலன்கள் பல பெறுகிறார்கள்.

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஏழூர்த்திருவிழா பக்தர்கள் கண்டு களித்துப் பலன்பெறவேண்டிய சிறப்பான விழாவாகும்.

கந்தனின் தந்தையை தான் கவனமாய் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
நந்தியே உம்மை துதித்தேன் நாடி வந்து எமை காப்பாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக