சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையாரின் வாக்கு. தமிழகம் எங்கும் சிவாலயங்கள் நிறைந்த பூமி. சிவ சிவ என்கையிலே நம் தீவினைகள் எல்லாம் ஓடிவிடும் என்பது பெரியோர் வாக்கு. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம்.
பிரதோஷம் என்பது மாதம் இரண்டுமுறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
எனவே சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினை மாதப்பிரதோஷமும் அதிலும் சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.
வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும். சிவபெருமானுக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.
எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-
1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் - பல வளமும் உண்டாகும்
3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் - விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
6. நெய் - முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் - சுகவாழ்வு
10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும்
பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
பிரதோஷ காலத்தில் சிவனுக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.
மாவினால் செய்த அகல் விளக்கில் நெய்விளக்கு ஏற்றவார்கள். அரிசியில் வெல்லம் சேர்த்து (காப்பரிசி) படைத்து வணங்குவார்கள். பொதுவாகச் சிவன் கோயில்களை இல்லறவாசிகள் வலம் இடமாக வலம் வந்து வணங்க வேண்டும். முற்றும் துறந்த துறவியர் இடம் வலமாக வந்து வணங்க வேண்டும்.
பிரதோஷ நாட்களில் மட்டும் சிவாலயத்தை வலம் வரும் முறையினைச் சோமசூக்தப் பிரதட்சணம் என்று கூறுவர். சோமசூக்தம் என்ற சொல் சிவலிங்க அபிஷேக நீர்வந்து விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியைக் குறிக்கும்.
இத்தீர்த்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே சோமசூக்தப் பிரதட்சணம் எனப்படும். இம்முறை சிவாலயத்தில் மட்டும் அதுவும் பிரதோஷ காலத்தில் மட்டும் மேற்கொள்ளப் பட வேண்டிய முறையாகும். பிரதோஷ காலத்தின் போது நந்தியை முதலில் தரிசனம் செய்ய வேண்டும்.
அங்கிருந்து இடது புறமாகச் சென்று சண்டிகேஷ்வரரைத் தரிசனம் செய்தல் வேண்டும். பிறகு சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்தல் வேண்டும். அங்கு நின்றும் வலமாச் சென்று பராசக்தியின் அம்சமாய் விளங்கும்.
அபிஷேகநீர் வரம் துவார வழியே சிவனைத் தரிசனம் செய்து சென்றவழியே திரும்பி வந்த நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்தல் வேண்டும். இவ்வாறு மேலும் இருமுறையாக, மும்முறை இடம் வலம், வலம் இடமாக, பிரதட்சணமாகச் சுற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
இப்படியாக வலம் செய்வதன் வாயிலாக அரிய பேற்றைப் பெறலாம் என்பது ஆகம விதியாகும்.
சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக