வியாழன், 30 மார்ச், 2017

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில்...



பெண்களே! இது உங்களுக்கான கோவில்..  கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில்...

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும். இப்படி ஒரு சமயம் பார்வதிதேவிக்கே இடது கண் துடித்து பிரிந்த கணவர் சிவனுடன் இணையும் பாக்கியம் கிடைத்தது. இது நடந்த இடம் *கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில்.*

*தல வரலாறு :*

 பூலோகத்தில் வந்து தங்கி உயிர்களை ஆட்கொள்ள சிவன் விரும்பினார். இதற்காக ஒரு லீலையை நிகழ்த்தினார். ஒரு சமயம் பார்வதிதேவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் பெருமான் தோற்றார். ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறி அடம் பிடித்தார். அவருடன் ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை சிறிது நேரம் மூடினாள். சிவனின் கண்களாக சூரிய சந்திரர் உள்ளனர். அவை இருண்டதால், உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. தன் விளையாட்டான செயலால், உலக உயிர்கள் சற்று நேரம் பட்ட இன்னல் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு சிவன், “நீ பூலோகம் சென்று அங்குள்ள சிவத்தலங்களை பூஜித்து வா. எந்த தலத்தில், உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ அந்தத் தலத்திற்கு வந்து, உன்னோடு நான் இணைவேன்,” என்றார்.

 தேவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இங்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் அங்கே தங்கி சிவனை பூஜித்தாள். சிவனும் அங்கு வந்து அவளுடன் இணைந்தார்.

 *சிறப்பம்சம்:*

 இந்தக் கோவிலிலுள்ள சிவகரைத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டால் நினைத்தது நிறைவேறும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

 நாவுக்கரசரை மற்ற எந்தக் கோவிலிலும் உழவாரக் கருவியுடன் நின்ற நிலையிலேயே பார்க்க முடியும். இங்கு மட்டுமே சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இது கிடைப்பதற்கரிய காட்சியாகும்.

 சப்தமாதர்கள் சந்நிதி கோவிலை ஒட்டி இருக்கிறது.

*பள்ளியறை சிறப்பு:*

பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறை அம்மன் சன்னிதியை ஒட்டியே இருக்கும். இந்தக் கோவிலில் சுவாமி சன்னிதியை ஒட்டி உள்ளது. தினமும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. இங்கே சிவனுக்கே மதிப்பு அதிகம். அவர் ஆயிரங்கலைகளோடு கூடிய சந்திரனை தலையில் சூடி தங்கியுள்ள இடம். எனவே அவரை எண்ணி தவமிருக்க அம்பாள் தேர்ந்தெடுத்த தலம் இது. எனவே அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.

 இங்குள்ள விநாயகரின் கரங்களில் ஆயுதம் ஏதும் கிடையாது. பாதிரி மலர்க் கொத்துக்கள் மட்டுமே உள்ளது. இத்தகைய சிலையை பார்ப்பது அரிது.

*தெருவடச்சான் நிகழ்ச்சி:*

 இந்தக் கோவிலில் வைகாசி விசாகம் 10 நாட்கள் நடக்கும். இதில் ஐந்தாம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி நடக்கும். அதாவது இங்குள்ள தேர் அகலமாக இருப்பதால், யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லும். எனவே இந்த நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு பெயர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தை அமாவாசை, மாசி மகம் ஆகிய நாட்களில் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பவுர்ணமியன்று பஞ்சபிரகார வலம் வருதல் என்ற நிகழ்ச்சி நடக்கும்.

*திருநாவுக்கரசர் கரையேறிய கதை:*

 திருநாவுக்கரசரை, மகேந்திரவர்ம மன்னன் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அவர் *'கற்றுணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமசிவாயவே'* எனப் பாடித்துதிக்க அந்தக் கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கரையேறியது. மக்கள் பரவசமடைந்து அவரை வரவேற்கச் சென்றார்கள். நாவுக்கரசர் கடலிலிருந்து கரையேறிய இடம் *'கரையேறவிட்ட குப்பம்'* என்னும் பெயருடன்
விளங்குகிறது. அவரை முதன்முதலில் *'அப்பர்'* என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில் தான்.

சிவகரை தீர்த்த சிறப்பு :*

 இந்தக் கோவிலிலுள்ள தீர்த்தத்தை சிவகரை தீர்த்தம் என்கின்றனர். சிவன் சித்தராக உருக்கொண்டு வந்து கை வைத்த இடம் இது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். இங்குள்ள அம்மனை பெரிய நாயகி என்கின்றனர். கணவரைப் பிரிந்த பெண்கள், மீண்டும் இணைய இவளுக்கு பட்டு சாத்தி வழிபடுகின்றனர்.

 அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை பாடியுள்ளார்.

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

*இருப்பிடம்:*

 கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோவில்.

 *திறக்கும் நேரம்:*

 காலை 6:00 - 11:00, மாலை 4:00 - 8:30 மணி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக